விழா பதிவுகள் – 5

அன்புள்ள சாரு,
இதை எங்கு பதிப்பது என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன்.

சென்னை ஒரு சுவாரஸ்யமான நகரம். எல்லோர் ஆசாபாசங்களுக்கும், அபிலாஷைகளுக்கும்,  ஆர்வத்துக்கும் எப்பொழுதும் தீனி போடுமிடம்.

நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றம் சாருவின் வாசக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது!

அசோகமித்திரன் தன் தள்ளாத வயதிலும் தடியூன்றி நடந்து வந்தார். எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சமஸ், திருப்பூர் கிருஷ்ணன், எடிட்டர் லெனின், டாக்டர் சிவகடாட்சம், அவர் மனைவி, நாகூர் ரூமி என்று ஏகப்பட்ட கூட்டம்.

பொதுவாக, எழுத்தாளர்கள் என்றால் தனியன்கள் என்ற என் எண்ணத்தை முறியடிக்கும் வண்ணம், சாரு பட்டியலிட்ட அவரது நட்பு வட்டாரம் எத்தனை பெரியது எனப் புரிந்து பிரமிப்படைய நேர்ந்தது.

நூல் வெளியீட்டுவிழா என்றாலும், ஏறத்தாழ ஒரு இலக்கியவிழா போலவே நடந்து முடிந்தது.

சாரு, கடைசியாக பேருரையாக ஆற்றாமல் சிறிதுசிறிதாக நடுநடுவே பேசி கலகலப்பூட்டியது நல்ல யுக்தியாகப்பட்டது எனக்கு. பலமுறை, அவர் பேச்சை பல இளைஞர்கள் விசிலடித்துப் பாராட்டிய விதம் ஆச்சரியமாயிருந்தது!

வெளியுலகப் பாசாங்குகளும், பசப்பல்களும் இல்லாத சூழ்நிலையில் மூன்று மணிநேரம் கழிந்தது மனதிற்கு இதமாய் இருந்தது!

S.Thiruvengadam