என் மூன்று பிள்ளைகள். வெளிநாடுகளில் வசிக்கும் நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ் மூவரும் இந்த விழாவுக்காகவே வந்திருந்தனர். நிர்மல் முந்தின இரவு அங்கிருந்து கிளம்பி மாலை சென்னை வந்து விழா முடிந்ததும் அன்று நள்ளிரவே திரும்பவும் கிளம்பி விட்டார். தூங்கி 24 மணி நேரம் ஆகிறது என்றார். இவர்களுக்கெல்லாம் என் எழுத்தைத் தவிர தருவதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதேபோல் தில்லியிலிருந்து வந்திருந்த தரணீஷ்வரும் நிகழ்ச்சி முடிந்ததுமே தில்லிக்கு ரயில் பிடிக்கக் கிளம்பி விட்டார். மூன்று மணி நேர நிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் பயணம். ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்த அவரை நிறுத்தி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படத்தில் நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ். ஒரு காலத்தில் கார்ல் மார்க்ஸ், சரவணன் ஆகியோர் சென்னையில் ஏழ்மை நிலையில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது எஸ்.ராமகிருஷ்ணன் அடிக்கடி அவர்களது அறைக்கு வருவாராம். தினமும் இலக்கியம், காசு இருக்கும் போது குடி. அப்புறம் எஸ்.ரா.வோடு பத்து ஆண்டுகளாக கார்ல் மார்க்ஸுக்குத் தொடர்பு இல்லை. இப்போது இந்த விழாவில் பார்த்து விட்டு, ”டேய் நீதானா சாரு எழுதுகிற அந்தக் கார்ல் மார்க்ஸ்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம் எஸ்.ரா. உலகம் சிறியது என்று நினைத்துக் கொண்டேன். புகைப்படங்கள் அனைத்தும் பிரபு காளிதாஸ்.