விழா முடியும் போது மணி 9.35. நான் எட்டு மணிக்கும் பிறகு ஒன்பது மணி அளவிலும் பேசினேன். எட்டரை மணிக்கு நான் பேசி முடித்ததும் கணேசன் அன்பு வட பழனி கிளம்பி விட்டார். அவர் கிளம்பியது எனக்குத் தெரியாது. அங்கே நாங்கள் பத்தரைக்கு வருவதற்குள் பதினைந்து பேருக்குக் கோழி பிரியாணி தயாரிக்கும் வேலையில் இறங்கி விட்டார். அவருக்கு உதவி முருகன் கடற்கரை. நான் பனிரண்டு மணிக்கே உறங்கச் சென்று விட்டதால் பிரியாணிக்கு முன்னதாக சோறும் கோழிக் குழம்புமாகப் பிசைந்து சாப்பிட்டேன். அப்படி ஒரு குழம்பை இதுவரை ஆயுளில் சாப்பிட்டதில்லை. ஈரோடு பக்கத்தில் ஒரு கிராமத்தில் – ஊர் பெயர் மறந்து விட்டது – சாப்பிட்டது மட்டுமே விதி விலக்கு. மதுவை விட்ட பிறகு இப்படி குழுவாக அமர்ந்து நீண்ட நேரம் பேச முடியவில்லை. அப்படிப்பட்ட பேச்சுக்களால் பயன் இல்லை என்றும் தோன்றுகிறது. மதுதான் கொண்டாட்டமா என்ற கேள்வி எழுகிறது. மலை சூழ்ந்த இடத்தில் காலை நேரத்தில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருப்பது போல் வருமா? இன்றைய தினம் தபாலில் Censoring an Iranian Love Story (by Shahriar Mandanipour) வந்தது. அதைப் படிக்கும் கொண்டாட்டத்துக்கு மது ஈடாகுமா? தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். ஆனால் கணேசன் அன்புவின் கோழிக் குழம்பு அற்புதம். கொஞ்ச நேரம் கழித்து அவரே சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து எல்லோருடைய உள்ளங்கையிலும் கொடுத்தார். பல நண்பர்கள் கண் கலங்கி விட்டனர். பெயருக்கேற்ற உள்ளம். கணேசன் அன்பு. சினிமா துறையில் இருக்கிறார்.
விழா பற்றி அவர் எழுதியிருக்கும் முகநூல் குறிப்பு:
சாரு நிவேதிதாவின் ஒன்பது புத்தகங்கள் வெளியியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ் போன்றோர் வளைகுடா நாடுகளில் இருந்து வந்திருந்தனர். தம்பி கருணாநிதி அர்ஜித் திடீரென திட்டமிட்டு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி வந்தான்.
இந்தியாவில் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்குபெற வெளிநாடு வாழ் இந்தியர்கள் ( இளைஞர்கள் ) அணி திரண்டு வந்து கொண்டாடும் ஒரு எழுத்தாளர் சாருவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
2010 -ஆம் ஆண்டு எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழின் வட இந்திய பதிப்புகளில் Top 10 personalities of the decade என்று தேர்வு செய்யப்பட்டவர்களில் தமிழகத்தைச் சார்ந்த இருவரில் சாருவும் ஒருவர். இன்னொருவர் ரஜினிகாந்த்.
2020 -ஆம் ஆண்டிலும் சாரு இடம் பிடிப்பார் என்பதில் துளியும் ஐயமில்லை… லவ் யூ நண்பர்களே…
***
புகைப்படத்தில் கணேசன் அன்பு. இமயமலைப் பயணம் பற்றி மோட்டார் விகடனில் தொடர் எழுதினார். எல்லோருக்கும் இனியவர். அவருக்குக் கோபம் வந்து இதுவரை நான் பார்த்ததில்லை. யாரும் பார்த்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன். வாசகர் வட்டத்தின் முக்கியமான புள்ளி. இவரோடு வாழும் பெண் கொடுத்து வைத்தவர்.