ஒரு இனிய சந்திப்பு

நேற்று மாலை பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தவுடனே வரவேற்றது வோட்கா.  Pug இன நாய்.  தரையில் அமர்ந்து அதோடு கொஞ்சி விளையாடி விட்டுத்தான் பார்த்திபனுக்கு ஹலோ சொன்னேன்.  பிறகு பாரதிராஜா வீட்டுக்குச் சென்ற போது மணி எட்டரை.  பனிரண்டு வரை பாரதிராஜாவும் பார்த்திபனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.   ”சிங்கத்தில் நல்ல சிங்கம் கெட்ட சிங்கம் என்றெல்லாம் உண்டா, சிங்கம் சிங்கம் தானே, நான் சிங்கம்” என்பது போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாகோடு பேசினார் பாரதிராஜா.  மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் பேசுவதை இடையிலேயே நுழையாமல் கூர்ந்து கேட்கிறார்.  ஒரு வாக்கியத்தை நான் எப்படிப் பேசுவேனோ அதேபோல் வடிவமைக்கும் அழகை நினைத்து மலைத்துப் போனேன்.  அதாவது இரண்டு வார்த்தைக்கு ஒரு expletive போடுவது.  அதிலும் நான் என்னென்ன expletive போடுவேனோ அச்சு அசலாக அதே expletives.  ஆனால் அந்த expletives-ஐ நீக்கி விட்டால் அந்தப் பேச்சு ஏதோ ரமண மகரிஷி, பாபா போன்றவர்கள் பேசுவது.  நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, அகந்தை, அதிகாரம் ஆகியவற்றை மனதில் இருந்து நீக்கி விட்டால் நம் எல்லோருடைய பேச்சும் அப்படித்தான் இருக்கும்.  நான் 30 ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் கதையைச் சொன்னேன்.  அட, அடா என்று ஒரு மாபெரும் ரசிகனின் மனோநிலையுடன் கேட்டார்.  அவருடைய கருத்தம்மா, என்னுயிர்த் தோழன், புது நெல்லு புது நாத்து போன்ற படங்களைப் பற்றி நான் சிலாகித்து எழுதியிருப்பது அவருக்குத் தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றார்.  ஆனால் நான்கு நாட்களுக்கு முன் அவர் பேச்சை சிலாகித்து எழுதியதை அவரிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  சாருஆன்லைனின் வீச்சு பற்றி ஆச்சரியம் கொண்டேன்.  மேலும் ஒருவரைப் பற்றி சிலாகித்து எழுதும் போது அதை அவரிடம் சொல்லும் அளவுக்குக் கூட நல்லவர்கள் இருக்கிறார்களே என வியந்தேன்.  இரண்டு விஷயங்கள்.  ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட ஒரு அனுபவம் வாய்ந்த கிராமத்துப் பெரிசிடம் பேசிக் கொண்டிருந்தது போல் இருந்தது.  இன்னொன்று, என்னைப் போல் ஒருவர்.  ஆம், என்னையே கண்ணாடியில் பார்ப்பது போல் தான் உணர்ந்தேன்.  அகந்தை, கர்வம் ஆகியவற்றின் நிழல் கூட படாத ஒரு ஆத்மாவைப் பார்ப்பது இப்போதெல்லாம் மிக மிக அரிதாக உள்ளது.  கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை.  இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன, கலைஞனின் பணி எத்தகையது என்பதை ஆங்கிலமும் தமிழும் கலந்து உணர்ச்சிவசப்பட்டு பேசி முடித்த ஒரு கணத்தில் அவரது கரத்தை எடுத்து முத்தமிட்டேன்.  இந்த அளவுக்கா ஒரு மனிதன் அகந்தையை அழித்து விட முடியும் என நம்ப முடியாத தருணம் அது.

பனிரண்டரைக்குக் கிளம்பும் போது நாங்கள் எதிர்பார்த்த டாக்ஸி வரவில்லை.  சரி விடு, நானே கொண்டு வந்து விடுகிறேன் என்று தன் காரை எடுக்கப் போனார்.  வலுக்கட்டாயமாக அவரை மறுக்க வேண்டியிருந்தது.  பிறகு ஒரு நண்பரின் காரில் ரோட்டுக்கு வந்தோம்.  ஏதாவது ஆட்டோ கிடைத்தால் போய் விடலாம் என்றார் பார்த்திபன்.  ஒரு காலி ஷேர் ஆட்டோ இருந்தது.  அதில் போகலாம் என்றார் பார்த்திபன். ஆனால் பத்து பேராவது இல்லாவிட்டால் அது ஆகாயத்துக்கும் தரைக்கும் தூக்கித் தூக்கிப் போடும் என்றேன்.  பிறகு ஒரு டாக்ஸி கிடைத்தது.

காலையில் அவந்திகா கேட்டாள், பாரதி ராஜா எப்படி?  என்ன சொன்னார்?

அது ஒரு தெய்வக் குழந்தை.

அப்படியா?

ஆம், இந்த அளவுக்கு நற்பண்புகள் வாய்ந்த ஒரு மனிதனை இதுவரை என் வாழ்வில் சந்தித்தது இல்லை.

Parthiban, Barathirajaeb8b0134c5f9505632d4f8c6f0194510