விழா பதிவுகள் – 20

ஃபெப்ருவரி 27 அன்று இளையராஜா விழா மட்டும் அல்லாமல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியும் இருந்திருக்கிறது.  அதையும் விட்டு விட்டு நம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.  என்ன, தேர்த் திருவிழா ஊர்த் திருவிழா கூட்டமாமே என்று கேட்டார் ப்ரஸன்னா ராமசாமி.  அரங்கில் மேடை சம்பந்தமான வேலைகளைச் செய்யும் போது ஜெகா கீழே விழுந்து கை மணிக்கட்டில் வீக்கம், கடும் வலி.  என்னிடம் சொல்லவில்லை.  அந்த வலியுடனேயே விழா முடியும் வரை அமர்ந்திருந்து விட்டு அருகில் உள்ள மருத்துவமனை சென்று பார்த்தால் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது.  ஒரு மாதத்துக்குக் கையில் ஊஞ்சல் கட்டு கட்டி விட்டார்கள்.

இரண்டாவது புகைப்படத்தில் உள்ளவர் லண்டனில் வசிக்கும் குரு.  இந்த விழாவுக்காகவே லண்டனிலிருந்து வந்தார்.  விழா முடிந்து அன்றைய இரவு கூட எங்களுடன் தங்கவில்லை.  விழா முடிந்ததுமே மீனம்பாக்கம் கிளம்பி விட்டார்.  அதிகாலை விமானம் என்பதால் அங்கேயே பக்கத்தில் தங்கி விட்டார்.  குரு தான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் – அவர் அப்போது பெங்களூரில் இருந்தார் – நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முதல் முதலாக வாசகர் வட்ட சந்திப்பை ஏற்பாடு செய்தார்.  என்னோடு பழகும் நண்பர்கள் ஒரு விஷயத்தில் என்னை மன்னித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  லண்டன் குருவோடு வாரம் ஒருமுறை பேசுகிறேன்.  எனக்குத் தேவையான புத்தகங்களையும் அவர்தான் வாங்கி அனுப்புகிறார்.  அவரைப் பார்த்ததும் எப்படி இருக்கிங்க ராபின், சிங்கப்பூர்லேர்ந்து எப்போ வந்தீங்க என்று அன்பொழுக விசாரித்தேன்.  அவரும் எல்லாவற்றுக்கும் முறையே பதில் சொன்னார்.  மன்னியுங்கள் குரு…

IMG_3974 (1)IMG_3998

 

விழாவில் வெளியான கடைசிப் பக்கங்கள் என்ற நூலுக்கு அழகிய சிங்கர் எழுதியுள்ள மதிப்புரை:

சமீபத்தில் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூடட்டத்திற்கு நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன் மூவரும் சென்றோம். 7 புத்தகங்களின் வெளியீட்டுக் கூட்டம். ராஜா அண்ணாமலை மன்றம் என்ற இடத்தில். அவ்வளவு பெரிய இடத்தில் கூட்டம் எவ்வளவு வரும் என்ற சந்தேகம் கூட்டம் நடக்கப் போகும்வரை என்னால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் 500 அல்லது 600 பேர்கள் கூடி இருந்தார்கள். கூட்டத்தில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தார்கள். சாருநிவேதிதாவின் சாதனையாகத்தான் இதை நினைக்கிறேன். அவருடைய வாசகர்கள் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று கூட்டத்தினரை வரவேற்றனர்.

அந்த விழாவில் வெளிவந்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன. 1. கடைசிப் பக்கங்கள் 2. எங்கே உன் கடவுள் 3. பழுப்பு நிறப் பக்கங்கள். இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். முதலில் நான் கடைசிப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன். 120 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 2 நாட்களில் முடித்து விட்டேன். உண்மையில் இன்னும் சீக்கிரம் கூட முடித்திருக்க முடியும். ஆனால் விட்டுவிட்டுத்தான் புத்தகத்தைப் படித்தேன். என் கவனம் எல்லாம் இதைப் படித்து முடிப்பதிலேயே இருந்தது.

தொடர்ந்து படிக்க:

http://www.navinavirutcham.in/2016/03/18.html