உயிர்மையின் கோவை புத்தக வெளியீட்டு விழா:
விழா மிக அருமையாக நடந்தது. குறிப்பாகச் சொல்லவேண்டியது, சரவணன் சந்திரனின் நண்பர்கள். அட்டகாசம். பலரும் வக்கீல்கள். இவ்வளவு நல்ல வக்கீல்களை நான் பார்த்ததே இல்லை. விழா முடிந்த மறுநாள் மசினக்குடிக்கு அவரது நண்பர் பிரசன்னாவின் காரில் நான், சாரு, பிரபு காளிதாஸ் ஆகியோர் சென்றோம். முதல் நாளிரவு கொண்டாட்டம், இலக்கிய விவாதம் என தூங்கும்போது 4.30 மணி. சாரு என்னை எழுப்பி கிளம்பலாம் என்று சொன்னபோது 6.30 மணி. வெறும் இரண்டு மணி நேரத் தூக்கமும், தூக்கக் கலக்கத்தில் விழுங்கிய பொங்கலும் பயணத்தைக் கெடுத்தது. பிரபுதான் முதலில் வாந்தியெடுத்தது. பிறகு வழி முழுக்க நான். கொலைவெறியை அடக்கிக்கொண்டு, சாரு ஜென் குருவைப் போல இதைப் பார்த்துக்கொண்டே வந்தார்.
காட்டேஜில் தூங்கி எழுந்ததும் அன்றைய மாலை, ‘வன விலங்குகளைப் பார்த்து வரலாம்’ என்று சரவணனின் இன்னொரு நண்பர் எங்களை காரில் அழைத்துப் போனார். நண்பருக்கு, வன விலங்குகள் காரை மறித்து பீதியூட்டிய அனுபவங்கள் நிறைய இருந்தது. பயப்படாதது போல நடித்துக்கொண்டே கேட்டுக்கொண்டோம். ஒரு இடத்தில் சாலையை ஒட்டி கூட்டமாக நான்கைந்து யானைகள். அதில் ஒன்று தந்தம் பெரிதாக இருந்த ஆண் யானை. மிக மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டே நெருக்கத்தில் பார்த்தோம்.
கொஞ்ச தூரம் போனதும், நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி ‘இங்கே இறங்கி ஒரு தம் போடலாமா’ என்றார் அவர். வண்டியை விட்டு இறங்கி ஆளுக்கொரு திசையை நோக்கி எச்சரிக்கையாக நின்று கொண்டு தம்மடிதோம். காட்டின் பிரம்மாண்டம் குறித்து சிலாகித்துக் கொண்டிருக்கும்போதே அந்த நண்பர், ‘காரின் விளக்கை அணைத்துவிட்டால் இன்னும் செம்மையாக இருக்கும்’ என்று பதிலை எதிர்பார்க்காமல் அதைச் செய்தார். சுற்றிலும் இருட்டு. தூரத்தில் வரும் லாரியொன்றின் வெளிச்சத்தில் உயரமான சில மரங்களின் பட்டைகள் மினுங்கின. அதுவொரு பேரனுபவம். அச்சத்தில் உறையும் களிப்பு.
திரும்பி வரும்போது பெரிய ஒற்றை ஆண் யானையைப் பார்த்தோம். அவர் அதனருகில் வண்டியை நிறுத்தினார். யானை எங்களைப் பார்த்துவிட்டு அசையாமல் இலையைத் தின்றுகொண்டே இருந்தது. அவர் சொன்னார், ‘யானை நமக்கு இணையாக சாலையை ஒட்டி நடந்து சட்டென்று சாலையின் மீதேறி நம்மை மறிக்கும்’ என்றார். அப்படியா என்று நாங்கள் கேட்கும்போதே, அது இணையாக நடக்கத் தொடங்கியது. வண்டியை எடுங்கள் என்று சொன்னோம். அவர் சாகஸ மனநிலையில் இருந்தார். ‘அது இன்னும் கொஞ்சம் சாலையின் ஓரத்தை நெருங்கட்டும்’ என்றார். நாங்கள் பதறிப் போய்விட்டோம். ஒரு கட்டத்தில் நானும் குமாரும், ‘காரை எடுங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று கத்தவே செய்தோம். யானை எங்களை நெருங்கும் கணத்தில் அதைக் கடந்தோம். பிறகு அந்தப் பதற்றம் நீண்ட நேரம் இருந்தது.
இரவு கேம்ப் ஃபயர். மீண்டும் இலக்கிய விவாதம். அதிகாலையில் தூங்கப்போனோம். மதியம் 3.30 மணிக்கு கோவையிலிருந்து திருச்சிக்கு ரயில். இரவு பத்து மணிக்கு திருச்சியிலிருந்து வேறோர் ரயிலில் கும்பகோணம். அது திருப்பதி செல்லும் ரயில். பெட்டி முழுக்க மூத்த குடிமக்கள். ‘கொஞ்சம் தயவு செய்து நீங்கள் மேலே உள்ள பெர்த்தில் படுத்துக்கிறீங்கலா?’ என்று வழக்கம் போல ஒரு வயதான பெண்மணி. பரவால்லங்க.. நான் கும்பகோணத்துல இறங்கிடுவேன் என்று பையை வைத்துவிட்டு கதவின் ஓரமாக நகர்ந்தேன்.
கொஞ்சம் இந்த ஜன்னல் கதவை இறக்கி விடுறீங்களா..? என்னால முடியல.. என்றார் அவர். சரி என்று உதவினேன். அடுத்தடுத்த மூன்று பெட்டிகளிலும் மூத்த குடிமக்கள் அழைத்தார்கள். எல்லா சன்னலையும் மூடிவிட்டு நகரும்போது ‘ரொம்ப நன்றி தம்பி’ என்றார் முதல் சன்னல் முதிய பெண். சரி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு விடலாம் என்று பொட்டலத்தைப் பிரித்து ஒரு இட்டிலியை விண்டு வாயில் வைக்கும்போது, விளக்கை அணைத்துவிட்டு போர்வையை இழுத்து மூடிக்கொண்டார். அவரிடமிருந்து இறுதி நன்றிக்கு மட்டும் குறைவில்லை.
எது சட்டினி, எது சாம்பார் என்று தெரியாத குழப்பத்தில் பக்கத்து பெட்டியில் இருந்து வந்த விளக்கொளியை வைத்து ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு கதவோரம் வந்து நின்றுகொண்டேன். வீட்டிற்கு வரும்போது இரவு பன்னிரெண்டு மணி.
விழா உரைகளை எல்லாம் ஸ்ருதி டிவி அருமையாக பதிவு செய்து வலையேற்றியிருக்கிறார்கள். பாருங்கள்.