உமா ஷக்தி முகநூலில், 28.2.16 அன்று எழுதிய பதிவு:
புகைப்படம்: பிரபு காளிதாஸ்
சாரு எழுதிய அத்தனை புத்தகங்களையும் நான் படித்ததில்லை. ஆனால் ராஸ லீலா உட்பட முக்கியமான புத்தகங்களை படித்துள்ளேன். சாருவின் எழுத்தில் என்னை எப்போதும் கவர்வது தங்குதடையில்லாத எவ்வித மனத்தடையும் (inhibitions) இல்லாத ஒரு மொழிநடை. பிரவாகமாக, எளிமையாக, மிகவும் நேரடியாக நம்முடன் உரையாடும் மொழி அவருடையது. அவருடைய புதிய எக்ஸைல் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு முழுவதும் படித்துவிட முடிவு செய்தேன்.
நான் எழுத வந்த புதிதில் என்னைப் பற்றி அவருடைய வலைத்தளத்தில் சார்லஸ் ப்யூக்கோவஸ்கி போல எழுதுகிறாய் உமா என்று மனம் திறந்து பாராட்டினார். அதற்கு அவருக்குக் கிடைத்த வசவுகளைப் பற்றி நானறிவேன். அதற்கு சரியான பதிலை தாந்தேவின் சிறுத்தை என்ற கட்டுரையில் மிக அருமையாக பதிவு செய்தார் சாரு. அந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பும் அதுதான். அதற்கு பின் கவிஞராகவும் ஒரு பத்திரிகையாளராகவும் சாருவை சந்தித்த போதெல்லாம், “இப்ப தினமணியில இருக்கீங்களா வெரி குட். நல்ல இடம் அங்கேயே கொஞ்ச காலம் இருங்க… அப்பறம் எழுதறதை விட்டுதாதீங்க… தொடர்ந்து எழுதுங்க உமா, நிச்சயம் ஒரு நாள் அது உங்களை ஒரு இடத்துக்கு தூக்கிட்டு போய் விடும்,” என்று ஊக்கப்படுத்துவார். என் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். அவர் எழுதுவது பேசுவது எல்லாம் தவிர்த்து, ஒரு சூஃபி ஞானியைப் போலத்தான் சாரு எனக்கு எப்போதும் தோன்றுவார். உள்ளொளி இல்லாமல் முகத்தில் ஒரு அமைதியும் தேஜஸும் தோன்றாது. சாருவிடம் உள்ள charisma நடிகர்களிடம் உள்ள ஒன்று.
உடல் நிலை சற்று குறைவாக இருந்தாலும் சாருவின் நிகழ்ச்சியை தவற விடக் கூடாது என்று சனிக்கிழமை மாலை கிளம்பிச் சென்றேன். திடிரென்று சாரு என்னைப் பேச அழைத்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துவிட்டேன். ஆனால் நன்றி சொல்வதற்கு அழகான வார்த்தைகள் தேவையில்லை. அந்த உணர்வைக் கடத்திவிட்டால் போதும்தானே? அப்படித்தான் செய்தேன்.
நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக நடத்தியவர்கள் சாருவின் வாசக வட்டத்தினர். அந்த மாலையை அழகாக்கிய சாருவுக்கும் அவரது வாசகர் வட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.
கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள ‘பழுப்பு நிற பக்கங்களின் விலை 240 ரூபாய் தான். நல்ல விஷயங்களை தேடிப் படிக்க நீங்கள் ஆர்வமுள்ளர்வர்கள் எனில் நிச்சயம் வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.
Special thanks to Sriram and Prabhu Kalidas for kind courtesy and photographs.