மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் தேவடியாள் மகனாகத் தோன்றினால் அப்படிச் சொல்லி விட்டுப் போகட்டுமே, இதற்காக நானும் வெறுப்பில் இறங்கினால் அவர் அல்லவா என் சூத்திரதாரி ஆகி விடுகிறார்?  அவர் மீது எனக்கு மிகுந்த அன்பும் இரக்கமும் பரிந்தோடுகிறது.  என்னுடைய அன்னை அவருடைய அன்னையும் அல்லவா?  எல்லா தாய்களும் ஒரே தாய் அல்லவா?  ஒரு மனிதனை குடி எவ்வாறெல்லாம் சீரழிக்கும் என்றுதான் வருந்த முடியும்.  வேறு என்ன?  தேவடியாள் மகனே என்று தன் பெயரையும் புகைப்படத்தையும் போட்டுக் கொண்டு என்னை ஒருவர் திட்டுகிறார் என்றால் அவரது பதற்றத்தை நான் புரிந்து கொள்கிறேன்.  அவரை அப்படிப் பதற்றம் கொள்ளச் செய்ததற்காக வருந்துகிறேன்.  ஆனால் அதற்காக நூறு நாற்காலிகள் கதையை விமர்சிக்காமல் இருந்தால்தான் அவர் பதற்றம் அடையாமல் இருப்பார் என்றால் அது என்னால் ஆகாது.  எழுத்துதான் எல்லா கலைகளையும் விட வலுவானது என்பதையே கவிஞரின் பதற்றம் நிரூபிக்கிறது.  என் வார்த்தைக்கு அத்தனை வலு இருக்கிறது என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

தேவடியாள் மகனே என்பது ஒரு வசை.  அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.  இது போன்ற வசைகளால் என்னைக் கோபப்படுத்த முடியாது.  என் அன்னையை நான் தனியாகப் பார்க்கவில்லை.  ஜெயமோகனின் அன்னையும் இப்படிச் சொன்ன கவிஞனின் அன்னையும் என் அன்னையும் எனக்கு ஒன்றே ஆனவர்கள்தான்.  நான் எல்லாப் பெண்களையுமே அம்மு என்று அழைப்பது அந்தக் காரணம் கொண்டுதான்.  அம்மு என்றால் அம்மை.  கவிஞரை நாளையே நேரில் பார்த்தால் மகனே என்றுதான் அழைப்பேன்.  அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  என்னை முகத்தில் குத்துவேன் என்று ஆவேசப்படும் பெண்களும் என் அன்புக்குரியவர்களே.  அவர்கள் கோபம் நீர்க்குமிழி போன்றது.  என்னை நேரில் அறியாத பெண்கள் அவர்கள்.  கீழே உள்ளது செல்வகுமார் கணேசன் எழுதியது.  கவிஞரின் பெயரை மட்டும் நீக்கியிருக்கிறேன்.  மேலும் மேலும் அவரைப் பதற்றம் கொள்ள வைக்க நான் விரும்பவில்லை.

“2000-2001 வருடம், நாங்கள் சென்னைக்குப் புதிதாக வந்த இளைஞர்கள், மந்தைவெளி அருகில் அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தோம். இரவு உணவுக்கு நல்ல சாப்பாடு என்றால் மைலாப்பூர் கற்பகம் ஹோட்டல் போவோம்.

இரவு பதினொன்றரை வரை விளக்கு அணைக்காமலும், பிறகு அரைமணி நேரம் விளக்கு அனைத்தும் வியாபாரம் பறக்கும். பந்தி போட்டு பரிமாறுவார்கள். எருமைக்கு தீனி வைப்பது போல சாப்பாட்டை அள்ளி போடுவார்கள்.

ஒரு இரவில் நாங்கள் சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்பில் பொடிநடையாக, சந்து சந்தாக புகுந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஆட்டோ ஒன்று எங்களைத் தாண்டி சென்று நின்றது. அதிலிருந்து எங்கள் சம வயது உள்ள இளைஞன் ஒருவன் இறங்கி எங்கள் எதிரில் வந்து நின்றான். பிறகு திரும்பி ஆட்டோ நோக்கி சென்றான். “அவனுங்க இல்லை” என்றவனின் பின்பக்கம் கோர்த்திருந்த கைகளில் நெளிநெளியான வடிவத்தில் ஒரு கத்தி இருந்தது. நாங்கள் இருவரா, மூவரா என்று நினைவில்லை. அசைய முடியாமல் நின்றிருந்தோம். அந்த கத்தி கண்ணில் படும் வரை அவனை பைத்தியம் என்றே கருதியிருந்தோம்.

அவன் கையில் கத்தியை கண்டதும் அந்த இரவில் உண்டான மரணபயம் இப்போது கூட நினைவில் வருகிறது. மரணபயம் என்பதை விட ஒரு மனிதனால் நான் கொல்லப்பட முடிந்திருக்கும் என்ற எண்ணம், நம் மீது பிரயோக்கிக்கபடும் வன்முறை, அதன் அநீதி, வன்முறையின் முன்பு நம்மால் ஸ்தம்பித்து நிற்க நேரிடும் அப்பாவித்தனம் போன்றவை கலந்துகட்டி இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கையில் நமக்கென்று ஒரு துப்பாக்கி வாங்கிகொண்டால் தேவலாமே என்று தோன்றும்.

சாருவை பற்றிய கவிஞரின் வசவைப் படித்த போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. மரணத்தை ஒருவன் மற்றொருவனுக்கு அவ்வளவு எளிதாகப் பரிசளித்துவிட முடியாது. அதன் கனம் அத்தனை இலகுவானதல்ல. நீங்கள் என்ன ஹிட்லரா? அல்லது அணு ஆயுதத்தை ஏந்தி பறக்கும் விமானியா?

ஜெயமோகனை சாரு விமர்சிக்கிறார். அதைச் சாக்கிட்டு வாசகர் வட்டத்தில் எவரும் மரியாதை இன்றியோ, அவதூறாகவோ ஜெமோவை பேசுவதில்லை. சொல்லபோனால் ஜெயமோகன் துணிந்து முன்வைக்கிற சில கட்டுரைகளுக்காக வாசகர் வட்டம் நல்ல முறையிலியே எதிர்வினை செய்துள்ளது.

ஆனால் ஜெயமோகனின் வாசகர்கள் சாருவை எப்போதுமே மிகத் தரக்குறைவாக நடத்தத் தயங்கியதில்லை. குறிப்பாக ஆசான் என்று ஜெமோவை ஏற்கிற போதே அவர்களின் ஆகாத மனிதனாக சாருவை ஒப்புகொள்கிறார்கள். அதிமுக-வில் இணைந்தவுடனேயே கருணாநிதி பரம வைரியாக ஆகிவிடுவதை போன்றது இது. இதற்க்கான நிறைய முன்மாதிரிகள் உள்ளன.

மேலும், எங்களுக்கு அதாவது வாசகர் வட்டத்தில் உள்ளவர்களுக்கு ஜெமோ தேவையில்லை. அவரிடம் கற்க எங்களுக்கு ஒன்றுமில்லை. இங்கு எவ்வளவு கடைநிலை மாணவனாக இருந்தாலும் கல்லூரியிலிருந்து ஐந்தாம் வகுப்புக்கு திரும்பவேண்டிய இறக்கம் எங்களுக்கு நேர போவதில்லை. (வேண்டுமானால் அங்கே ஆசிரியராக வருவோம்) என்றாலும் ஜெயமோகனுக்கு எங்கள் அன்பு உண்டு. அது ஒரு எழுத்தாளனுக்கு உரிய மரியாதை.

மாறாக கைகளில் மறைத்துக் கொண்டிருக்கிற கத்தியுடன் ஒருவரை நோக்கி சிரித்தபடி செல்லும் கயமையான சில மாணவர்களை கொண்ட ஒரு குருகுலம், அதன் கடும் உழைப்பாளியான ஒரு ஆசான். அத்தனை உழைப்பும் இப்படிப்பட்டவர்களை உருவாக்கதானா என்று அந்த ஆசான் என்றாவது துக்கித்தால்… அது நீங்கள் பரிசளிக்க நினைக்கும் மரணத்தை விடவும், அதிக வன்மையான பேராயுதம் என்பதை அறிக குருகுல செல்வங்களே. அந்த ஆயுதத்தின் முன் ஒருபோதும் பலியாக நிற்க தேவையில்லாதபடி நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

புகைப்படத்தில் அ. மார்க்ஸ் மற்றும் கணேஷ் அன்புடன்.

12516926_1175078345859020_208036300_o