சீரழிவுக் கலாச்சாரம் – ஜி.கார்ல் மார்க்ஸ்

முகநூலில் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது:

எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் கட்சிகளின் “கொள்கை நீக்கத்துக்கு” பெரும் பங்கு இருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் அபிமானியாக இருப்பதற்கு, முன்பு அந்தக் கட்சியின் கொள்கைகள் காரணமாக இருந்தன. கூடவே தலைவர்களின் மீதான வசீகரம் மற்றும் நம்பிக்கை. சமீப காலங்களில், இதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தம்மை மக்களின் முன்னால் கம்பீரமாக நிறுத்திக்கொள்ளும் தலைவர்கள் அருகிவிட்டார்கள். இருக்கும் பழைய ஆட்களும் மிகவும் சீரழிந்திருக்கிறார்கள். இதற்குச் சமமாக, மக்களும் லட்சிய நோக்கங்களைக் கைவிட்டு குறிப்பிட்ட அளவு உதிரி மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்த எதார்த்தத்தை உணரும் அரசியல் கட்சிகள், கொள்கைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. இலவசங்களையும், கிளுகிளுப்பான சலுகைகளையும் முன்வைக்கின்றன. மேலும் தேர்தலுக்காக மட்டுமே அமையும் முரண்பாடான கூட்டணிகள் “எந்தக் கட்சிக்குமே கொள்கைகள் இல்லை” என்று மக்களை நினைக்க வைக்கின்றன.

கொள்கைகள், அதன் மீதான ‘உறுதியான நிலைப்பாடு’ என்பதை அரசியல் கட்சிகள் கைவிடுகிறபோது, மக்களும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையைக் கைவிடுகிறார்கள். மேலும் மேலும் தனி மனிதர்களாகி தங்களை அரசியல் மனநிலையில் இருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். இந்த சலிப்பு தான் வாக்குக்குப் பணம் வாங்கும் சூழலுக்கு அவர்களைத் தள்ளுகிறது. இதுவொரு ஆழமான அவநம்பிக்கை. இது அமைப்பின் மீதான கசப்பாக மட்டும் அல்லாமல் தனிமனிதர்களின் சிதைவிற்கும் காரணமாகிறது.

தேர்தல் என்பது வியாபாரம் போலவும், பிரச்சாரங்கள் என்பவை விளம்பரம் போலவும், வாக்காளர் என்பவர் வாடிக்கையாளர் போலவும் மாறுவது அதனால்தான். இலவசங்களில் கூட கவர்ச்சியான இலவசம்தான் தேவைப்படுகிறது. ஆக, கட்சிகள் கம்பெனிகள் ஆகின்றன. ஆட்சி அதிகாரம் என்பது கட்சிகள் நிலைப்பதற்கான கருவி என்றாகிறது. “என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும்” என்று வேட்பாளர்கள் நினைக்கிறார்கள். எளிய மக்களின் முன் பணத்தைக் கொட்டி அவர்களை நிலவும் கொடுமையில் பங்குபெற பெற வைக்கிறார்கள். ‘மக்கள் நலன்’ என்பது குப்பைக்குப் போகிறது.

இதே ‘விலகல் மனநிலை’ கட்சிப் பிரதிநிதிகளிடம் வேறு வகையில் செயல்படுகிறது. ‘அதிகாரக் குவிப்பு’ என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஆனால் தலைமையின் முடிவுகளை எல்லாரும் ஏற்றுக்கொண்டு,அதை செயல்படுத்துவது தான் நம் சூழலில் அரசியல் என்று ஆகியிருக்கிறது. ஒரு வகையில் தலைமை, தனது உறுப்பினர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த அதிகார மனநிலை உதவும் தான். ஆனால் இன்னொரு வகையில், பதில் சொல்லும் பொறுப்பில் இருந்து கட்சிப் பிரநிதிகள் தப்பித்துக்கொள்வதற்கும் இதுவே காரணம் ஆகிறது. அதனால்தான் தமது பொறுப்பில் உள்ள துறையில் ஊழல்கள் வெளிவரும்போது, தங்களுக்கு அதில் பங்கில்லாதது போலவும், தங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது போலவும் காண்பித்துக் கொள்ள முயல்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் தந்திரம்.

இந்த விவகாரத்திலும் கூட பணப்பட்டுவாடாவை, ஒரு நிறுவனத்தின் பணியாளரைப் போல கட்சிப் பிரதிநிதிகள் கையாள்வது அதனால்தான். பல நேரங்களில் மாற்றுக்கட்சியினருக்குக் கூட தயக்கமின்று பணத்தைத் தருகிறார்கள். மக்கள் மீது கொஞ்சமும் மரியாதையற்ற அலட்சியம் அது. அதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி மிகவும் ஆபத்தானது. “நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பதற்கு பணம் வாங்கியிருக்கிறீர்கள்; ஆகவே அரசிடம் கோரிக்கைகள் வைக்கும் தகுதி உங்களுக்கு இல்லை” என்பதே அந்த செய்தி. மக்களாட்சியின் சட்டகத்துக்குள் லாவகமாக சர்வாதிகாரத்தை செயல்படுத்தும் காரியம் இது.

மக்கள் இதில் யோசிப்பதற்கு ஒன்று இருக்கிறது. வாக்கிற்குப் பணம் வாங்குவது என்பது, அப்பட்டமான ஊழல் ஒன்றில் தாமும் ஈடுபடுவதுதான். இது வெறும் தார்மீக வீழ்ச்சி மாத்திரமல்ல. அந்தப் பணம் சுமந்திருக்கும் கறைகள் மிகவும் அழுத்தமானவை. சமீபத்தில், விவசாயம் பொய்த்துப்போய் முப்பத்திரெண்டு வயதில் தற்கொலை செய்துகொள்கிறான் ஒரு விவசாயி. அப்போது பையில் வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே இருந்திருக்கிறது அவனிடம். இறந்தவனை வழியனுப்ப வந்த உறவினர்கள் கொண்டுவந்த அரிசியில் தான் பசியாறுகிறோம் என்கிறாள் அவன் மனைவி. மக்களுக்கு கையூட்டாக தரப்படும் பணம், அவளைப் போன்றவர்களிடம் இருந்து திருடப்படுவது தான்.