பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற புத்தகத்தின் அலையில் அதோடு வந்த மற்ற புத்தகங்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டன போல் தோன்றுகிறது. இன்றைய தினமலரில் எங்கே உன் கடவுள்? என்ற தொகுப்புக்கான மதிப்புரை வந்துள்ளது. மதிப்புரை எழுதியவர் க.சீ. சிவகுமார். தினமலருக்கும் சிவகுமாருக்கும் நன்றி. நொச்சிக்குப்பத்தில் மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மதிப்புரை பற்றி குறுஞ்செய்தி அனுப்பியவர் இறையன்பு ஐஏஎஸ். எங்கே உன் கடவுள் கட்டுரைகள் துக்ளக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. துக்ளக் அலுவலகத்தில் மின்னஞ்சல் வசதி கிடையாது. அதனால் கணினியில் டைப் செய்து அதை கணினி மையம் சென்று – அதற்காக தெருத்தெருவாக அலைய வேண்டும்; அப்படியே ஒரு கணினி மையம் கிடைத்தாலும் கரண்ட் இருக்காது; திமுக ஆட்சி; அப்படியே கரண்ட் இருந்தாலும் தமிழ் ஃபாண்ட் இருக்காது; பல பாடு பட வேண்டும்; கடைசியாக ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு க்ரீன்வேஸ் ரோட்டில் உள்ள துக்ளக் அலுவலகத்தில் கொண்டு போய் கொடுப்பேன். இவ்வளவு சிரமமும் எதற்கு என்றால், அப்போது எழுதுவதற்கு எனக்குப் பத்திரிகைகள் இல்லை; மேலும், துக்ளக்கில் எழுதுவது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அதில் அரசியல் எதுவும் எழுதவில்லை. துக்ளக்கில் எல்லாமே அரசியல்தான் என்பதால் வேறு விஷயங்கள் எழுதலாமே என்றார் சோ. அவர் சொன்னது நல்ல யோசனையாக இருந்ததால்தான் அரசியல் இல்லாமல் வேறு விஷயங்கள் எழுதினேன். ஒவ்வொரு வாரமும் சோவை சந்தித்து கொஞ்ச நேரம் எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லாமல் அளவளாவிக் கொண்டிருந்தது மிக இதமான விஷயம். சோ எனக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். அவரோடு பேசிக் கொண்டிருப்பது மிகவும் இனிமையான விஷயமாக இருந்தது. அப்படி ஒரு மனிதரை இந்தக் காலத்தில் பார்ப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
எங்கே உன் கடவுள்? மிகச் சிறிய புத்தகம். கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.