இறைவி விமர்சனம்?

இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல்.  இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல.  தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம்.  ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும்.  அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும்.  ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.

ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம்.  அந்த இதழில் சினிமா பற்றியும் எழுதச் சொன்னதால்தான் இறைவியை முதல் காட்சியே பார்த்தேன்.  இல்லாவிட்டால் பிரபு காளிதாஸ் போன்ற நண்பர்களைக் கேட்டு விட்டுத்தான் போவது வழக்கம்.  எனவே இறைவி விமர்சனம் முதலில் ஏஷியாநெட் மின்னிதழில்தான் வரும்.  அதற்குப் பிறகுதான் சாருஆன்லைனில் வரும்.  பல நண்பர்களுக்கு இறைவி பிடித்திருக்கிறது.  இறைவி பிடித்தது என்று சொல்பவர்களிடம் என் நட்பை முறித்துக் கொள்வது என்ற அளவுக்கு முடிவு செய்திருக்கிறேன்.  ஏனென்றால், இறைவி ஒரு மட்டமான படம் மட்டும் அல்ல; மட்டமான படம் எடுக்க எல்லோருக்கும் உரிமை உண்டு.  நான் கூட ஒரு படம் இயக்கினால் அது மட்டமாகப் போக எல்லா வாய்ப்பும் இருக்கிறது.  ஆனால் இறைவி சமூக விரோதக் கருத்துக்களை முன்வைக்கிறது.  அதிலும் heroic ஆக.  கடைசி காட்சியில் தண்டனை கொடுத்து விட்டதாக இயக்குனர் சொல்லலாம்.  அது சரோஜாதேவி புத்தகங்களில் எல்லா போர்னோவையும் எழுதி விட்டு, எனவே சகோதரர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் கவனமாக இருங்கள், நான் செய்த தப்பை நீங்கள் செய்து விடாதீர்கள் என்று ஒரு வரி வரும்.  அது போலத்தான் இறைவியில் கடைசியில் வந்திருக்கலாம்.  இந்தப் படத்தை இளைஞர்கள் பார்த்தால் சமூகம் இப்போது இருப்பதை விட நூறு மடங்கு கிரிமினலாக மாறி விடும்.

மோசமான படங்கள் எத்தனையோ வருகின்றன.  ஆனால் நாங்கள் ஏதோ செய்தி சொல்லுகிறோம் என்று வரும் போதுதான் இறைவி போல் சமூக விரோதமாக ஆகி விடுகிறது.  இந்தப் படத்தில் ஃபெமினிஸம் சொல்ல வந்து என்னென்னவோ ஆகி விட்டது.  பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்தும் படம் இறைவி.  அதனால்தான் இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்பவர்களோடு நான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.   ஏஷியாநெட்டில் பின்வரும் இணைப்பில் என் கட்டுரைகளைக் காணலாம்.

http://newsable.asianetnews.tv/search/?q=charu+nivedita