நுழைவுச் சீட்டு

 

நான் புத்தக விழாவுக்குச் செல்வது புத்தகம் வாங்க அல்ல.  நான் தேடும் புத்தகங்கள் சர்வதேசப் புத்தக விழாக்களில்தான் கிடைக்கும்.  மற்றபடி என் வீட்டுக்கு மிக அருகில் உள்ள உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, நற்றிணை பதிப்பகங்கள் மூலமே எனக்கு வேண்டிய தமிழ் நூல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  நண்பர்களும் ஆன்லைன் மூலம் வாங்கித் தருகின்றனர்.  நான் தினந்தோறும் புத்தக விழாவுக்குச் செல்வது என் நண்பர்களைப் பார்ப்பதற்கும் வாசகர்களுக்குக் கையெழுத்துப் போடுவதற்காகவும்தான்.

ஒருநாள் டிக்கட் வாங்கப் போனேன்.  500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  நியாயம்தான்.  எனக்கு உயிர்மை ஸ்டாலுக்குப் போய் அங்கே உள்ள வாசகர்களின் புத்தகங்களில் கையெழுத்துப் போட வேண்டும்.  நுழைவாயிலில் உட்கார்ந்திருந்த இளைஞர் – 25 வயது இருக்கும் – பலரையும் நுழைவுச் சீட்டு இல்லாமலேயே அனுமதித்துக் கொண்டிருந்தார்.  நான் ஒரு எழுத்தாளன், உயிர்மை ஸ்டாலுக்குப் போய் அங்கே எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வாசகர்களின் புத்தகங்களில் கையெழுத்துப் போட வேண்டும்; உள்ளே போக அனுமதியுங்கள் என்று விளக்கமாகச் சொன்னேன்.  அவர் மிகக் கடுமையான தொனியில் முடியாது, பாஸ் வேண்டும் என்று சொல்லி விட்டார்.  கிட்டத்தட்ட வார்த்தைகளை என் முகத்தில் துப்பினார் என்றே சொல்ல வேண்டும்.  அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பலர் சர்வ சகஜமாக நுழைவுச் சீட்டு இல்லாமல் உள்ளே போய்க் கொண்டிருந்தனர்.

நான் மனுஷ்ய புத்திரனுக்கு ஃபோன் போட்டேன்.  போன் போகவில்லை.  அந்த இளைஞரிடம் என் நிலையை விளக்கினேன்.  அவர் இன்னும் காட்டமான தொனியில் பாஸ் இல்லாவிட்டால் வெளியே போங்கள் என்று சொல்லி விட்டார்.  அந்த நேரத்தில் அங்கே தற்செயலாக வந்த கிருஷ்ண பிரபு வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

மறுநாள் பத்து ரூபாயோடு போனேன்.  க்யூவில் ஐம்பது பேர்.  எனக்கு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் நெஞ்சு வலி வந்து விடும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  நுழைவாயிலில் அதே ஆள்.  வேறு நுழைவாயிலில் சென்று வேறு ஒருவரிடம் அவமானப்பட விருப்பமில்லை.

அப்புறம்தான் இது இந்தியா என்று ஞாபகம் வந்தது.  இந்தியாவில் எல்லா சட்டத்துக்கும் எல்லா விதிகளுக்கும் ஒரு practical route இருக்கும்.  அந்த வழியைத் தேடினேன்.  கக்கூஸ் தெரிந்தது.  கக்கூஸ் வழியாகவே போனேன்.  இடதுகைப் பக்கம் ஒரு வாசல் இருந்தது.  உள்வாசல்.  நுழைந்தேன்.  எதிரே உயிர்மை.

இன்று எப்படி நுழையலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  என்னதான் இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு காரியத்தைச் செய்ய மனம் வர மாட்டேன் என்கிறது.  ஏதோ வைரமுத்து வந்ததாகக் கேள்விப்பட்டேன்.  அவர் எப்படி நுழைந்தார்? டிக்கட் வாங்க பெரிய க்யூ ஆயிற்றே?