சிக்கன் பஜ்ஜியும் சில தேவ கணங்களும்…

தடம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில்:

தடம் இதழை இன்று மாலை தமிழ்மகன் தந்தார். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் செம்மையாக இருந்தது. என்னைப்பற்றி சாரு ஒரு கட்டுரை எழுதியிக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அதை படிக்கவிரும்பினேன். ஒரு சிநேகிதி காலையில் போன் செய்து ‘ தடத்தில் சாரு உன்னைப்பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நானே சாரு உன் கவிதைகளைப் பற்றி அவர் ப்ளாக்கில் எழுதியதை படித்துதான் உன்னைத் தேடி வந்தேன். அதுபோன்ற ஒரு துன்பியல் சம்பவம் இதைப் படிக்கிற வேறு எந்தப் பெண்ணுக்கும், யாருக்கும் நடந்துவிடக்கூடாது ’ என்றாள் விசனத்துடன்.

ஒரு பதினைந்து வருட நட்பைப் பற்றிய சித்திரத்தை எழுதுவது கடினமானது, இந்த 15 வருடங்களில் நாங்கள் பரஸ்பரம் அளித்துக்கொண்டதும் இழந்ததும் எண்ணற்றவை. என் எழுத்துக்களுக்கு அப்பால் என்னை தனிப்பட்ட முறையில் நன்கறிந்த அரிதான சில நண்பர்களில் சாருவும் ஒருவர். முரண்பட்ட எண்ணங்களும் நம்பிக்கைகளும் நடத்தைகளும் கொண்ட இருவர் சந்தித்துகொள்ளும் புள்ளிகளை மட்டுமே தேடித்தேடி கழிந்தவை இந்த 15 வருடங்கள். அவை சொல் தரும் அன்பின் நிமித்தங்களிலானனவை.

சாரு எனது காலர் ட்யூனில் துவங்கி எனது அரசியல் வரை என்னை கிண்டல் செய்யாத விஷயங்களே இல்லை. ஆனால் சிலரின் கிண்டல்கள் நமக்கு மனதிற்கு உகந்ததாகிவிடும். முரண்பட்டும் விலகியும் சென்ற தருணங்களில்கூட வருத்தம் இருந்திருக்கிறது, கோபம இருந்திருக்கிறது. ஆனால் ஒரு உறவுக்குள் மறுபடி திரும்புவதற்கான பாதைகளை அடைக்கும் வன்மம் இருந்ததில்லை.

என் கவிதைகளை சாரு இடைவிடாமல் கொண்டாடி வந்திருக்கிறார். அவர் என்னை விட்ட சமயத்தில்கூட என் கவிதைகளை கைவிட்டதில்லை. அவற்றைப்பற்றி அவர் திரும்பத் திரும்ப பேசியிருக்கிறார். மிக அதிகபட்சமான வார்தைகளால் கொண்டாடி இருக்கிறார். நெரூடாவுடன் அவர் என்னை ஒப்பிட சமயத்தில் நான் அவரை கடுமையாக மறுத்தேன். ஆனால் அவர் ‘ இல்லை நெரூடாவைவிடவும் நீதான் முக்கியமான கவிஞன் ‘’ என்றார் பிடிவாதமாக.
அன்னியன் நிலத்தின் பெண் வெளியீட்டு விழாவில் என் கவிதைகளைப் பற்றி அவர் ஆற்றிய உரை இன்றும் என் நினைவில் இருக்கிறது.

தடத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை என் கவிதைளைத்தாண்டி என்னுடனான உறவை பற்றி ஒருவர் எழுதும் முதல் கட்டுரை எனலாம். அது எனக்கே என்னைபற்றிய ஒரு வினோதமான சித்திரத்தை அளிக்கிறது. நான் இந்தக் கட்டுரையின் ஊடாக கடந்து சென்ற நாட்களைப் பற்றி எவ்வளவோ நினைக்கிறேன். அன்பு என்பதும் நட்பு என்பதும் வெறு தருணங்கள் அல்ல, அது ஒரு இயக்கம். எப்போதும் கவனமாக வளர்தெடுக்கப்படவேண்டிய இயக்கம். கொண்டாடப்படுவது ஒரு கொடுப்பினை. கொண்டாடத் தெரிவது ஒரு கலை.

என் பைத்திய நிலவுகளை அவர் கொண்டாடுவதன் வழியாக அந்த பைத்திய வெளிச்சத்திலிருந்து நீங்கமுடியாமல் நான் முடிவற்று நடந்துகொண்டேயிருக்கிறேன்.

சாரு என்றாவது நீங்கள் எனக்கான ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதுவீர்கள். அப்போது நீங்கள் எழுதுவதே சிறந்த கட்டுரையாக இருக்கும்.

மனுஷ்ய புத்திரன்

***

சாரு நிவேதிதா:

தடம் என்னும் இலக்கிய இதழை விகடன் கொண்டு வருகிறது என்று அறிந்த போது இன்னும் ஒரு இலக்கிய இதழா என்றே சலிப்புடன் எண்ணினேன்.  காரணம், எழுத்தாளர்களின் லௌகீக வாழ்க்கை.  எனக்கு வரும் ராயல்டி தொகை எனக்குப் பற்பசை வாங்கவே பத்தாது.  பதிப்பாளர் என்ன செய்வார்?  புத்தக விற்பனை ஆயிரம் ரெண்டாயிரத்தைத் தாண்ட மாட்டேன் என்கிறது.  ஆயிரம் ரெண்டாயிரம் என்பது கூட நாவலுக்குத்தான்.  கட்டுரைத் தொகுப்பு என்றால் நூறு இருநூறுதான்.  கவிதை என்றால், கவிஞர்களே இருநூறு பிரதிகள் காசு கொடுத்து வாங்கி நண்பர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.  இந்த லட்சணத்தில் இலக்கியத்துக்கு என்று இன்னொரு பத்திரிகை வேண்டுமா என்றே சலிப்பு தோன்றியது.

ஆனால் முதல் இதழ் தடம் வந்து விட்டது என்று தெரிந்தவுடன் மைலாப்பூர் பூராவும் பத்துப் பதினைந்து கடைகளில் ஏறி இறங்கியவனும் நான் தான்.  அப்படியும் கிடைக்காததால் விகடனிலிருந்தே கொடுத்து அனுப்பினார்கள்.  இவ்வளவுக்கும் தடத்தில் என்னுடைய எழுத்து எதுவும் வரவில்லை.  வர வேண்டும் என்று விரும்பி என்னிடம் கேட்டார்கள்.  நானும் சிரத்தையாக ஒரு சிறுகதை எழுதினேன்.  என் முதல் வாசகர் டாக்டர் ஸ்ரீராம்.  அனுப்பினேன்.  சூப்பர் என்றார்.  மருத்துவத்தைத் தவிர வேறு எந்தப் பேச்சையும் அவர் சொல்லி நான் நம்ப மாட்டேன் என்பதால் இன்னொரு நண்பருக்கு அனுப்பினேன்.  சே, தண்டம், அனுப்பாதீர்கள், உங்கள் பஞ்ச்சே இதில் இல்லை என்றார்.  புரியவில்லையே என்றேன்.  ரஜினியின் லிங்கா மாதிரி இருக்கிறது என்றார்.  உடனேயே அந்தக் கதையை பிறகு நல்லபடியாக எழுதலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், நம்முடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.  ஒரு பத்திரிகையின் முதல் இதழில் நம் எழுத்து வெளிவருவதென்பது ஒரு கௌரவம் இல்லையா?  அதைக் கூட நான் முக்கியமாக நினைக்கவில்லை.  என் எழுத்து எப்போதுமே அதன் வீர்யத்தை இழந்து விடக் கூடாது.

இப்போது விகடனின் தடம் இரண்டாவது இதழ் வெளிவந்துள்ளது.  இதில் மனுஷ்ய புத்திரன் பற்றிய என் கட்டுரை ஒன்று இருக்கிறது.  இந்த இதழுக்காகவும் மைலாப்பூரில் கடை கடையாக இரண்டு தினங்கள் ஏறி இறங்கினேன்.  (ஆட்டோ சார்ஜே நூறு ரூபாய் ஆகி விட்டது.)  கடைசியில் லஸ்ஸில் உள்ள பெரிய கடையில் கிடைத்தது.  ஹமீதிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஆனானப்பட்ட விகடனே போட்டாலும் இலக்கியம் என்றால்  கிடைப்பதில்லை பாருங்கள் என்றார்.  விலை ஐம்பது ரூபாய் அதிகம் என்றார்கள்.  அப்படிச் சொல்பவர்கள் இலக்கியத்தின் எதிரிகள் என்பேன்.  நான் இப்போது எழுதும் ArtReview Asia ஒரு பிரதியின் விலை 500 ரூ.  இலக்கியம் என்றால் விலை அதிகம்தான்.  லட்சக் கணக்கான பேர் இலக்கியம் படிக்கத் தயாராகி விட்டால் இருபது ரூபாய்க்குக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

***

பஜ்ஜி உங்களுக்குத் தெரியும்.  வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜியெல்லாம் பிரசித்தம்.  ஆனால் அசைவ உணவுப் பிரியர்களுக்கே அவ்வளவாகத் தெரிந்திராத ஒரு வஸ்து சிக்கன் பஜ்ஜி.  அதை சிக்கன் பக்கடா என்று சொல்கிறார்கள்.  அது தவறு.  பக்கடாவின் texture வேறு; இது வேறு.  சிக்கன் துண்டுகளைக் கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுப்பது சிக்கன் பஜ்ஜி.  ஹமீதுடன் மது அருந்தும் போது (அந்த துரதிர்ஷ்டம் யாருக்கும் வர வேண்டாம்!) அந்த சிக்கன் பஜ்ஜியை நீங்கள் உண்டு துய்க்கலாம்.  ஆனால் ஒரு மாதம் தொடர்ந்து உண்டால் மேலே டிக்கட் வாங்கி விட வேண்டியிருக்கும்.  ஏனென்றால், ஹமீது ஏரியாவில் சிக்கன் பஜ்ஜி செய்யும் கடையில் அந்த எண்ணெயைப் பல ஆண்டுகளாக மாற்றியதே இல்லை என்பதை அந்த சிக்கன் பஜ்ஜியைத் தின்னும்போதே நீங்கள் உணரலாம்.  இன்னும் இது போன்ற பல்வேறு விஷயங்களில் ஹமீது ஒரு ப்ராலிடேரியட்டைப் போலவே வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் விசனப்பட்டிருக்கிறேன்.  இன்னொரு நாள் பார்த்தேன், கிழிந்து ஓட்டை ஓட்டையாக இருந்த பேண்ட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.  ஜீன்ஸ் கிழிந்திருந்தால் அது ஃபேஷன்.  சாதாரண பேண்ட் கிழிந்திருந்தால்?  என்னங்க இது என்றால் பேண்ட் வாங்கக் காசு இல்லை என்றார்.  நண்பர்களிடம் வந்து சொல்லி ஆச்சரியப்பட்டதற்கு, நீங்க ரொம்ப வெகுளி என்றனர்.  எல்லா பணத்தையும் அவர் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கிறாராம்.  என்ன வெங்காயமோ, எனக்கு இதெல்லாம் புரிவதே இல்லை.

சரி, சிக்கன் பஜ்ஜிக்கு வருகிறேன்.  என் கதை கட்டுரைகளை பிழை திருத்தம் செய்வோரிடம் நான் கொடுப்பதில்லை.  நானேதான் என் எழுத்துக்குப் பிழை திருத்துகிறேன்.  நான் எழுதியதில் ஒரு கமா ஃபுல்ஸ்டாப் கூட மாறக் கூடாது என்றே வலியுறுத்துவேன்.  காரணம், சிக்கன் பஜ்ஜி என்று நான் எழுதியிருந்ததைப் படித்த தடம் துணையாசிரியர் நான் கமா போட மறந்து விட்டதாக எண்ணி, சிக்கன், பஜ்ஜி என்று திருத்தியிருக்கிறார்.  இப்போது கட்டுரையில் சிக்கன், பஜ்ஜி என்று வந்து விட்டது.  ஒரு பெரிய nuance காலி.  ஹமீது வாங்கி வரச் சொல்வது சிக்கனும் பஜ்ஜியும் அல்ல.  சிக்கன் பஜ்ஜி.  தடம் துணையாசிரியர் ஒருமுறை ஹமீது வீட்டுக்குப் போய் ஹமீது அந்த ஏரியாவின் பிரபலமான சிக்கன் பஜ்ஜி கடையிலிருந்து வரவழைத்துக் கொடுக்கும் சிக்கன் பஜ்ஜியைச் சாப்பிட்டு உய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நம் ஆரோக்கியத்துக்கே சவாலாக இருக்கக் கூடிய அந்த சிக்கன் பஜ்ஜியை ஹமீது மட்டும் எப்படி அடிக்கடி சாப்பிடுகிறார்?  இந்த இடத்தில்தான் நீங்கள் திமுக தலைவர் கருணாநிதி, குஷ்வந்த் சிங் போன்றவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.  குஷ்வந்த் சிங் 100 வயது வரை ஒரு நாள் தவறாமல் மது அருந்தினார்.  அதையே நாம் செய்தால் ரெண்டே வருடம்தான்.  இது பற்றித் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார்.  ஓரறிவு உயிர்கள் பல உள்ளன.  ஈரறிவு உயிர்களும் பல உள்ளன.  இதேபோல் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிரிகள் பல உள்ளன.  ஆனால் ஆறறிவு கொண்ட இனம் மனித இனம் மட்டும்தானே?  அப்படி இல்லை.  அந்தப் பாடலில் தொல்காப்பியர் ”மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பறப்பே” என்கிறார்.  ஆறறிவு உள்ள மனிதர்களைப் போல் பிற உயர்களும் உள்ளன என்றால் அது யார் என்று மிகவும் குழம்பினேன்.  நச்சினார்க்கினியர் உரையிலும் தெளிவாகவில்லை.  பிறகு இளம்பூரணர் உரையில்தான் தேவர் அசுரர் என்று கண்டேன்.  கருணாநிதி, குஷ்வந்த் சிங், ஹமீது போன்றவர்களை இதில் சேர்க்கலாம்.  தேவர்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  இல்லாவிட்டால் கருணாநிதிக்கு என் மீது கோபம் வரும்.  ஆக, மனிதர்களுக்கு நடக்கக் கூடியதெல்லாம் தேவர் அசுரருக்கு நடக்காது.  இல்லாவிட்டால் வாழ்நாள் முழுதும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதி வீட்டுக்குக் கடவுளின் பிரதிநிதியே நேரில் வருவாரா?  எனவே ஹமீது சொல்கிறாற்போல் அவருக்கெல்லாம் நான் அஞ்சலிக் கட்டுரை எழுத நேராது.

மேலும் அஞ்சலிக் கட்டுரைகளை நான் வெறுக்கிறேன்.  அஞ்சலிக் கட்டுரைகள் தமிழர்களின் குறுகிய புத்தியைக் காட்டுகிறது.  ஏனென்றால், ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது அவரைப் பாராட்டவோ அவரைப் பற்றி எழுதவோ துப்பு இல்லாதவர்களே இறந்த பிறகு எழுதுகிறார்கள்.  நான் யாரையும் மனதில் வைத்து இதை எழுதவில்லை.  தமிழர்களின் பொதுவான குணம் இது.

ஹமீதின் வாழ்வில் இரண்டு முக்கியமான சம்பவங்களைப் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும்.  இடப் பற்றாக்குறை ஒரு காரணம்.  மழை பெய்யும் நள்ளிரவில் தன் தோழியின் பிறந்த நாளுக்குக் கொடுக்க கையில் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்னையின் தெருக்களில் சென்று கொண்டிருந்த கவிஞன் உலகத்தில் வேறு யாராக இருக்க முடியும்?  ரேம்போவிடமிருந்த அதே மனப்பிறழ்வின் ஒளிக்கீற்றுதான் அது.  ஹமீது, அந்த அளவு வீரியத்தைத் தாங்கக் கூடிய பெண்களை சென்னையில் உங்களால் சந்திக்க முடிந்ததா?  எனக்கு என்னவோ ஐரோப்பா தான் உங்களுக்கு உகந்த தேசம் என்று தோன்றுகிறது.

இன்னொரு சம்பவம்.  கோவை செல்லும் ரயில்.  எதிர் இருக்கையில் ஹமீது.  நள்ளிரவில் கழிப்பறைக்கு எழுந்து செல்லும் போது எதிர் இருக்கையில் ஒரு பெண் உருவம் ஹமீதின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தது.  ஹமீது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  காலையில் செல்வியிடம், ”பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று விட்டது போல் இருந்தது நள்ளிரவுக் காட்சி” என்றேன்.  தூக்கத்துல அனத்திக்கிட்டே இருந்தார் என்றார் செல்வி.  மறைக்க முடியாத லஜ்ஜை முகத்தில் ததும்பிக் கொண்டிருந்தது.

***

விகடனின் தடம் பிரமாதமாக உள்ளது.  பாதுகாக்கப்பட வேண்டிய இதழ்.  ஒரு பெரும் நிறுவனத்திலிருந்து இப்படி ஒரு தரமான இலக்கிய இதழ் வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.  விகடன் தடம் குழுவினருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்தும்.

***

 

ஜூலை – விகடன் தடம் இதழில்

கவிஞர் மனுஷ்ய புத்திரன் பற்றி, சாரு நிவேதிதா…

எங்கள் நட்பு இனிமையாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒருநாள், `இனிமேல் இவர் முகத்திலேயே முழிக்கக் கூடாது’ என்ற சபதத்துடன் பிரிந்தேன். இதுவரை அதன் காரணத்தை யாரிடமும் சொன்னது இல்லை, அவரிடமும்கூட.

மேலும் படிக்க:
http://www.vikatan.com/thadam/article.php?aid=120697