என்னை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் சிலரில் ஆக முக்கியமானவர்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம். ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. சமீபத்தில்தான் ஒரு நண்பரிடம் எஸ்.ரா. சென்னையின் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொண்டால்தான் உண்டு. சமீபத்தில் அப்படிச் சந்திக்க நேர்ந்த போது ”ArtReview Asiaவில் நீங்கள் எழுதுவது மிகப் பெரிய விஷயம்; மிகப் பெரிய கௌரவம்” என்றார்.
இன்னொருவர் ஜெயமோகன். அவரும் நானும் எதிரெதிர் துருவம் என்றாலும் என் எழுத்து இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவர் அவர் என்றே கருதுகிறேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று அவருடைய பின்வரும் கடிதத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஒரு வாசகரின் கேள்விக்கு அவர் எழுதியுள்ள பதில் அது. 2015-இல் எழுதியிருக்கிறார்.
ஜெ
எதிர்காலத்தில் தனக்கு வழங்கப்படவிருக்கும் விஷ்ணுபுரம் விருதை இப்போதே திருப்பியனுப்புவதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறாரே? உங்கள் எதிர்வினை என்ன?
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
உண்மையிலேயே மனுஷ்யபுத்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்குமெல்லாம் விஷ்ணுபுரம் விருது வழங்கவிருக்கிறோம். சீனியாரிட்டிதான் பிரச்சினை. சாரு நிவேதிதா மறுக்கமாட்டார் என நினைக்கிறேன், அவருக்கு வேறு எவரும் விருது வழங்க வாய்ப்பே இல்லை. மனுஷ்யபுத்திரன் மீது எங்களுக்கு பெருமதிப்புண்டு, பல்லாயிரம்தான் இருந்தாலும் அவர் நல்ல கவிஞர் அவருக்கு அவர் ஆற்றும் சொற்பொழிவுகளுக்காக திமுக விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன.
***
கடிதத்தின் தொடர்ச்சியைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
http://www.jeyamohan.in/79676#.V38kFaJ8sy5
ஆனால் ஒன்று, எல்லோரையும் போல என்னுடைய கட்டுரைகளின் சிறப்புத் தன்மைக்காகவோ, என் சமையல் கலைக்காகவோ, விருந்துபசாரத்துக்காகவோ கொடுத்தால் மறுத்து விடுவேன். என் அடையாளம் என் புனைவெழுத்துக்களில்தான் உள்ளது. தமிழில் வெளிவரும் எல்லா படைப்புகளையும் உடனுக்குடன் படித்து விடும் ஜெ. கூட என்னுடைய நான்லீனியர் கதைகளைப் படித்திருப்பதாகத் தெரியவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் கூட அவற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கதைகள்:
1. the joker was here
2. கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பில் ஆய்வும்
3. நேநோ
4. பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்
5. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் (பிற்பாடு இதை எக்ஸைல் நாவலில் சேர்த்து விட்டேன்)
6. கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை
7. இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்
இன்னும் நாலைந்து கதைகள் தேறும். பெயர்கள் ஞாபகம் இல்லை. இவற்றில் முதல் நான்கு கதைகளைப் போல் தமிழிலோ நான் அறிந்த வேறெந்த மொழி இலக்கியத்திலோ கதைகள் எழுதப்பட்டதில்லை. அப்படியே இருந்தாலும் ஒன்றிரண்டு இருக்கலாம். டொனால்ட் சுக்கேனிக் என்ற அமெரிக்க எழுத்தாளரின் 98.6 என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. சிறுகதைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் எழுதுங்கள். படித்துத் தெரிந்து கொள்கிறேன். (முதல் நான்கு கதைகளை யாரேனும் தட்டச்சு செய்து கொடுத்தால் நம் தளத்தில் பதிவேற்றலாம். புதிய வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.)