“சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே”

சாரு,

சமீபத்தில் உங்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அது அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் சமீபத்தில் ஏற்பட்டது உங்கள் ரசனையின் மேல். நான் உங்களை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன். நீங்கள் எழுதியவற்றில் இரண்டு மூன்று புத்தகங்களைத் தவிர (ரெண்டாம் ஆட்டம், தீராக் காதலி, எங்கே உன் கடவுள் (துக்ளக் அப்போது கையில் கிடைக்க வில்லை)) மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் என் சிந்தனைப் போக்கில் உங்கள் தாக்கம் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நான் உங்களுடன் முரண்பட ஆரம்பித்தேன். சரியாக அது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சமயம். கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு நிலை. எல்லாவற்றையும் உங்கள் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக இந்தியாவைப் பற்றிய உங்கள் பார்வை. இந்தியா மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடு , பாரீஸ்தான் மனிதர்கள் வாழ உகந்த நாடு போன்றவைகள். ஆம் இந்தியா வாழ உகந்த நாடு இல்லை. அதற்காக அதை புறக்கணித்து விட்டு செல்ல முடியுமா?. ஒருவனுடைய தந்தை மிகப்பெரிய குடிகாரன். ஆனால் அவனுடைய தாய் கூலி வேலை செய்து அவனை படிக்க வைக்கிறாள். ஏழ்மையின் காரணமாக அவன் அவர்களைத் தூற்றி விலகிச் செல்வது சரியில்லை தானே? அவனும் அந்த வறுமையில் பங்கெடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது தானே சரியானது? இப்போது நாம் வியக்கும் ஐரோப்பிய நாடுகள் ஒரு காலத்தில் வாழ தகுதியற்றைவையாகத் தானே இருந்தது. குறிப்பாக ஹிட்லரின் ஜெர்மனி. இப்படியெல்லாம் யோசித்து உங்களுடன் முரண்படுவேன். பிறகு வேறு எங்காவது அடிபடும் போது ‘நாடு புண்டையடா இது’ என்று உங்கள் கட்சிக்கே தாவி விடுவேன். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வருடங்கள் உங்கள் கருத்துடன் முரண்பட்டும் அதனை முழுவதுமாக புறக்கணிக்க முடியாமலும் ஊசலாடினேன். அந்த சமயத்தில் நான் தேடியது என் சிந்தனைப் போக்கை ஒட்டிய ஒரு தரப்பை. அப்போதுதான் நான் அதுநாள்வரையிலும் படிக்காமலேயே வெறுத்து வந்த ஜெயமோகன் பக்கம் திரும்பினேன். தொடர்ந்து இரண்டு வருடங்கள அவருடைய கட்டுரைகளை தேடித் தேடி படித்தேன். ஜெயமோகனின் பார்வையோடு என்னால் ஒத்துப் போக முடிந்தது. சிலவற்றில் முரண்பட்டாலும் அவர் தன் தரப்பை முன் வைக்கும் விதத்திலும் ஒரு பிரச்சினையை அவர் பார்க்கும் விதத்திலும் எனக்கு ஜெயமோகனை பிடித்தது. அப்போது தான் அவர் உங்களைப் பற்றி எழுதிய பதிவு ஒன்றை படித்தேன். ‘சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே’ என்பது போல் ஒரு பதிவு. எனக்கு அப்போது அது மிகச் சரியான விமர்சனமாகப் பட்டது.  ஆனால் அப்போது நான் அவரின் ஒரு புனைவைக் கூட படித்திருக்கவில்லை. ஜெயமோகனின் கட்டுரைகளைப் படித்தப் பிறகு உங்களின் கட்டுரைகள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் உங்கள் மொழி. உங்கள் மொழி தீவிரமான சிந்தனைக்கான மொழி அல்ல. மிக மேம்போக்கானவற்றை மட்டுமே பேசிக் கூடிய மொழியாக தெரிந்தது. இப்போது கூட ஒரு உதாரணம் கிடைத்தது. பெருமாள் முருகனின் மாதொரு பாதகன் நாவலுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒட்டி ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி எழுதியிகிருக்கிறார்.

“திருச்செங்கோட்டுக்காரர்களின் நிலைப்பாடு பழைமையானது. அதை நான் எதிர்க்கிறேன். இலக்கியத்தின் செயல்முறையையும், அதன் சமூகப்பங்களிப்பையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவ்வாறு அறிந்திருக்காததும் இந்தியச்சூழலில் இயல்பானதே. அது ஒரு கருத்துத் தரப்பு.

அதைப்போலவே எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்று எண்ணி ஆட்சியாளர்கள் எடுத்த சமரசநடவடிக்கையும் சரி, அதற்காக அவர்களிட்ட ஆணைகளும் சரி சட்டவிரோதமானவை அல்ல. அவர்களின் கடமைசார்ந்தவை அவை. அதற்குரிய நியாயங்கள் கொண்டவை. இப்பிரச்சினையில் இரண்டு கொலை விழுந்திருந்தால் நாமே இதை சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாகக் கண்டு ஆட்சியாளர்கள் என்ன செய்திருப்பார்கள் என்றுதான் கேட்டிருப்போம்.

நீதிமன்றம் அந்தத்தரப்புகளின் நியாயங்களை கருத்தில்கொண்டபின் மேலே சென்று நவீன அறம் சார்ந்த ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு சமூகக்குழுவின் உளநிலைகளைவிட, சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தைவிட, கருத்துச்செயல்பாடு ஒருபடி மேலானதே என தீர்ப்பளித்து அதற்கான வழிகாட்டுநெறிகளையும் அளித்துள்ளது. மிகநிதானமான ஆனால் மிகக்கறாரான தீர்ப்பு இது. நீதிமன்றம் அறிவுசெயல்பாட்டின் சுதந்திரத்தை முழுமையாக அங்கீகரிக்கிறது, அதைப்பாதுகாப்பதே அரசின் முதற்கடமை என வலியுறுத்துகிறது, கருத்துச்செயல்பாடுகளுக்கு எதிரான சமூக உணர்வுகளை நிராகரிக்கிறது. அதை சட்ட ஒழுங்குப்பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் அதிகாரிகளின் போக்கை கண்டிக்கிறது. எதிர்காலத்தில் எவ்வாறு இப்பிரச்சினை கையாளப்படவேண்டும் என உறுதியான வழிகாட்டலை அளிக்கிறது.”

இதை ஒட்டியக் கருத்தை  தான் நீங்களும் எழுதியிருந்தீர்கள்.
“நான் மயிலாப்பூரில் வசிக்கிறேன். மயிலாப்பூர் பெண்களைப் பற்றி நான் அவதூறாக எழுதினால் நிச்சயம் இங்கே உள்ள கவுன்சிலர், தெருக்கோடி தாதா, வட்டச் செயலாளர் போன்றவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்தபடி தான் நான் செயல்பட வேண்டியிருக்கும்.”

ஆனால் உங்கள் கருத்து மேம்போக்காகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை உங்கள் மொழிநடை தீவிரமான சிந்தனைத் தளத்தை நோக்கி பாயத ஒன்று.

இந்த எண்ணத்துடன் தான் ஜெயமோகனின் புனைவுகளுக்குள் நுழைந்தேன். வழக்கம் போல் காடு படித்தேன். ஏமாற்றவில்லை. அறம் தொகுப்பில் மூன்று நான்கு கதைகளைத் தவிர மற்றவைகள் பிடிக்கவில்லை. அத்துடன் அவரின் புனைவுகளை விட்டுவிட்டு கட்டுரைகளைத் தொடந்தேன். வெறும் அபுனைவுகளை மட்டும் வைத்து ஒரு எழுத்தாளரை மதிப்பிடக்கூடாது என்று எண்ணி ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரலை வாசித்தேன். மிகத் தட்டையான மொழி. அந்நாவாலில் அவர் பேசியதை ஒரு கட்டுரையாக எழுதினால் மிகத் தீவரமாக இருந்திருக்கும்.  என்னுடைய தேடலைத் தான் அந்த நாவலிலும் கண்டேன்.ஆனால் புனைவில் அது மிகப் பரிதாபமாக இருந்தது.

சரி, ஜெயமோகனின் மாஸ்டர்பீஸாகக் கருதப்படும் விஷ்ணுபுரத்தை படித்து முடிவு செய்யலாமென்று அதனை ஆரம்பித்தேன். அதற்கு பின்தொடரும் நிழலின் குரலே பராவாயில்லை என்று எண்ணும் அளவிற்கு ஆயிற்று. இருந்தும் முழுதும் வாசித்து முடிவு செய்யலாம் என்று தொடர்ந்தேன். ஏனென்றால் எனக்கு பல நாவல்களில் அப்படி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆல்பர்ட் காம்யுவின் ‘தி ப்ளேக்’. படிக்கும் போது செத்து விட்டேன். அறுவை என்றால் அறுவை அப்படி ஒரு அறுவை. ஆனால் திடீரென்று வேறொரு சமயத்தில் அந்நாவலின் தரிசனம் பிடிபட்டது. இதே அனுபவம் தான் ஒரான் பாமுக்கின ‘தி மியூசெயம் ஆஃப் இன்னொசென்ஸிலும்” யேசாவின் ” த ட்ரீம் ஆஃப் செல்ட்டிலும்” ஏற்பட்டது. அப்போதுதான் முடிவு செய்தேன். படிக்கும் போது அலுப்பாக இருந்தாலோ தட்டையாக இருந்தாலோ அப்படைப்பு நல்ல படைப்பு இல்லை என்ற முடிவிற்கு வரக்கூடாது என்று. ஆனால் விஷ்ணுபுரத்திற்கு முன் இந்த கோட்பாடுகள் எல்லாம் நிற்க முடியவில்லை. விஷ்ணுபுரத்தை சிலாகிக்கும் பலரும் அதன் பிரம்மாண்டத்தை குறிப்பிடுகிறார்கள். எனக்கு விஷ்ணுபுரத்தின் பிரமாண்டம் பழைய தமிழ் சினிமாக்களில் போடப்படும் செட்டைத் தான் ஞாபகப் படுத்தியது. விஷ்ணுபுரத்தை சிலாகிக்கும் நண்பர்களிடம் நாவல் பிடிக்கவில்லை என்று கூறினால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிடிக்கலாம் என்று கூறுகிறார்கள். பிடித்தால் சரி என்று விட்டுவிட்டேன்.

இந்த நேரத்தில் தான் உங்களுடைய புதிய எக்ஸைலை நினைத்துப் பார்க்கிறேன். சமீபத்தில் நான் படித்த சிறந்த நாவல்களில் புதிய எக்ஸைலும் ஒன்று. உங்கள் நாவல்களில் முக்கியமானவைகளாக நான் கருதுவது புதிய எக்ஸைலையும், ராஸ லீலாவையும் தான். ராஸ லீலாவில் மனிதர்கள் மீதானா வெறுப்பு அதிகமாக வெளிப்படும். ஆனால் புதிய எக்ஸைல் அப்படி அல்ல. முற்றிலும் கனிந்த எழுத்து. நாவல் முழுதும் அன்பு கசியும். தி இந்துவில் புதிய எக்ஸைலின் வெளியீட்டை ஒட்டி அந்நாவலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார்கள். நான் ஏற்கெனவே புதிய எக்ஸைலை வாங்க வேண்டுமென்று நினைத்து இருந்தாலும் அந்த பகுதியை படித்த பிறகே கண்டிப்பாக வாங்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ( கடைசி வரையிலும் வாங்க வில்லை. நூலகத்தில் எடுத்துதான் படித்தேன்) மீன் ஒன்று மரணிக்கும் பகுதி. உண்மையில் நீங்கள் இதுவரையில் எழுதியதில் அது தான் உச்சம். மிகக் கவித்துமான மொழியை பயன்படுத்தியிருப்பீர்கள்.

அதே போல் நாவலில் இன்னொரு பகுதி. நாயகன், அப்போது பிரபலாமாக இருக்கும் சாமியார் ஒருவரை எதிர்த்து பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதுவான். சாமியார் பலமிக்கவர். சாமியரின் அமைப்பு நாயகன் மேல் வழக்கு தொடுக்கிறது. அப்போது நாயகனினி எண்ண ஓட்டத்தை அற்புதமாக எழுதியிருப்பீர்கள்.

அதேபோல், மிக சோகமான குடும்ப காவியத்தை எழுதிவிட்டு ரமணிச்சந்திரனின் கதை தலைப்பிடுவது.

விலங்குகள் , மரங்கள் , நாகூர் பற்றிய பதிவு , எழுபது என்பதுகளின் இந்தி சினிமாக்களையின் போக்கு என நாவல் பல இடங்களை செவ்வியல் தன்மையோடு தொட்டுச் செல்லும்.

சரியாக இரண்டே நாட்களில் இந்த நாவலை முடித்தேன். நண்பரிகளிடம் இந்நாவலைப் பற்றி சிலாகிக்கும் போது மேலும் கீழும் பார்ப்பார்கள். அவர்கள் எல்லாரும் பழைய எக்ஸைலில் சூடு பட்டவர்கள். நானும் தான். நாற்பது பக்கத்துடன் தூர வைத்து விட்டேன். மிக மோசமாக இருந்தது பழைய எக்ஸைல்.ஆனால் அதில் இருந்த வெறுமையை புதிய எக்ஸைல் நிரப்பி இருக்கும். பல பேரிடம் புதிய எக்ஸைலை படிக்கும் படி மண்டையை கழுவிக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் ரசனையின் மீது ஏற்பட்ட அதிருப்தியை சொல்ல வந்து, உங்களைப் போல் வேறு எங்கோ சென்று விட்டேன்.

விஷயம் இது தான். ஒரு வாரத்திற்கு முன்னால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை , ரோலகஸ் வாட்ச் , வெண்ணிற ஆடை ஆகியவற்றைப் படித்தேன். முகநூலில் ஐந்து முதலைகளின் கதையைப்பற்றியும், ரோலக்ஸ் வாட்ச் பற்றியும் பலர் பாராட்டி எழுதி இருந்தார்கள். இருந்தாலும் நீங்கள் ரோலக்ஸ் வாட்சை பின்நவீனத்துவ நாவல் என்று அந்நாவலின் வெளியீட்டு விழாவில் கூறியதாக யாரோ எழுதியதை படித்தப் பிறகே அந்நாவலை படிக்கும் முடிவிற்கு வந்தேன். முடித்த பிறகு உங்கள் மீது தான் கோபம் கொண்டேன். எதன் அடிப்படையில் இதனை பின்நவீனத்துவ கிளாசிக் என்று கூறுகினீர்கள் என்று. மிகத் தட்டையான நடை. நாவில் குறிப்பிடும்படி எதுவுமே இல்லை. சும்மா மேம்போக்க அங்கங்கு கேட்டவற்றை, பார்த்தவற்றை பதிவு செய்கிறார். அதும் பத்திரிகை செய்தியை படிப்பதைப் போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. இதே போன்ற கூறுகள் உங்கள் நாவல்களிலும் அதிகம் உண்டு. கேட்டவற்றினை அப்படியே சொல்வது. அது எந்த ஒரு அனுபவத்தையும் வாசகனுக்கு அளிப்பதில்லை. அதே போல பல கதைகளை அவனும் கேட்டவன் தான். அதற்கு பத்திரிகையையே படித்து விடலாமே. 2666 நாவலிலும் பத்திரிகை செய்தி போன்று ஒரு முன்னூறு பக்கத்தை ராபர்ட்டோ போலோனா எழுதிருப்பார். ஆனால் அந்நாவல் தரும் அனுபவம் வேறு. இது வேறு. அதிகாரமட்டத்தில் நடப்பவற்றை தான் சரவணன் சந்திரனின் இரு நாவல்களும் பேசுகிறது. ஆனால் அது கிசுகிசு பாணியில் பேசுகிறது. யோசாவின் ‘கான்வர்ஷேசன் இன் த கதீட்ரலிலும்’ சரி “பீஃஸ்ட் ஆஃப் தி கோட்டிலும் ‘ எவ்வளவு ஆழமாக அதிகாரமட்டத்தைப் பற்றி எழுதியிருப்பார். அவற்றையெல்லாம் படித்த நீங்கள் எதன் அடிப்படையில் ரோலக்ஸ் வாட்சை பின்நவீனத்துவ கிளாசிக் என்கிறீர்கள்.

ஆனால் அவரின் வெண்ணிற ஆடை வாசிக்க வேண்டிய புத்தகம். அதில் அவர் நேரடியாகவே கதையை சொல்கிறார். அதையையும் முதலிலேயே சொல்லி விடுகிறார். அதைப் படிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னளவில் ஐந்து முதலைகளின் கதையையும் , ரோலக்ஸ் வாட்ச்சையும் நல்ல நாவலகள் இல்லை என்றே கூறுவேன்.

இன்னொரு விஷயம் உங்கள் பழுப்பு நிறப் பக்கங்களை தொடந்து படித்து வருகிறேன். நீங்கள் கூறுவதால் மட்டுமே சிலரை படிக்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளேன். ஆனால் கண்டிப்பாகாக கு.பா.ர வையெல்லாம் படிக்க மாட்டேன். ஐம்பதுகளுக்குப் பின் போக பயமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கூறியததால் தான் நாமக்கல் கவிஞரின் ‘என் கதையை’ படித்தேன். மிக அற்புதமான  அனுபவமாக இருந்தது. நிச்சயம் நீங்கள் சொல்லாமல் வேறு யாரு சொல்லிருந்தால் நான் அதனைப் படித்திருக்க மாட்டேன். அதனால் தான் கு.பா.ர வையும் படித்து பார்க்கலாம் என்று தோன்றும். ஆனாலும் பயம். காலம் முடிவு செய்யட்டும். எம்.வி. வெங்கடராமனும் பிடித்தது. இன்னும் காதுகள் படிக்க வில்லை. நித்தியக் கன்னியையும் , வேள்வீ தீயை மட்டும் படித்துள்ளேன். அவருடைய எழுத்து நவீனமாக இருக்கிறது. ஜம்பதுகளுக்கு முன்னால் உள்ளவர்களைப் படிக்க உள்ள தயக்கம் அவர்களின் எழுத்து நடையை நினைத்து தான். நீங்கள் இப்போது எழுதும் சா. கந்தசாமி அவர்களின் விசாரணைக் கமிஷன் நாவலைப் படித்து விட்டு இனி புத்தகமே படிக்க கூடாது என்ற முடிவிற்கெல்லாம் வந்தேன். முதல் ஐம்பது பக்கத்திற்கு புருஷன் அவனுடைய பொண்டாட்டியை தடவி கொண்டே இருக்கிறான். நீ அப்படியே தடவு ராசா என்று நான் ஒதுங்கி விட்டேன். எனக்கு சந்தேகம் வந்து விட்டது. நாம் படிப்பது சாகித்திய அகாடெமி விருது பெற்ற சா. கந்தசாமி எழுதிய நாவல்தானா இல்லை வேறு ஏதவாது நாவலை எடுத்து வந்து விட்டோமா என்று. ஒருவேளை இட்டலோ கால்வினாவின் ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ நாவலில் வருவது போல அட்டை ஒரு நாவலுடையதாகவும் உள்ளேயுள்ள பக்கங்கள் வேறு நாவலுடையதாக இருக்குமோ என்றலெல்லாம் எண்ணத் தலைபட்டேன்.

நீங்கள் அறிமுகப்படுத்திய அராத்தும் , ஜி.கார்ல் மார்கஸ் மிகவும் பிடித்தமானவர்கள். ஜி. கார்ல் மார்க்ஸ் ஆழமான கட்டுரைகளை எழுதுகிறார். குட்டி ஜெயமோகனாகத் தெரிகிறார். அராத்து சொல்லவே வேண்டாம். அசால்ட்.

அன்புடன்
முகம்மது ரியாஸ்
கடையநல்லூர்.

டியர் ரியாஸ்,

இதுவே நான் உங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதம்.  உங்களோடு நான் உரையாட விரும்பவில்லை.  காரணம், உங்கள் கடிதம் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.  தற்கொலைக்குத் தூண்டும் சமாச்சாரங்களை நான் தீண்டுவதில்லை.

சுமார் 30 ஆண்டுகளாக சாரு எழுத்தாளனே இல்லை, சாரு ஒரு fake, சாரு ஒரு mediocre, சாருவுக்கு உண்மையே பேசத் தெரியாது, சாரு ஒரு புத்தகத்தைக் கூட முழுசாகப் படித்ததில்லை என்ற அவதூறுகளைக் கேட்டு வருகிறேன்.  இப்போது அதை ஒரு 21 வயது மாணவரிடமிருந்தும் கேட்க நான் தயாராக இல்லை.  நான் 1000 முறை எழுதி விட்டேன், அபிப்பிராயங்களை வைத்து எழுத்தாளர்களை மதிப்பிடாதீர்கள் என்று.  அசோகமித்திரனுக்குப் பிடித்த எழுத்தாளர் கல்கி.  அதற்காக அசோகமித்திரனை எழுத்தாளர் இல்லை என்பீர்களா?  இப்படிச் சொல்வதால் சரவணன் சந்திரனின் நாவல்களை கீழாக நினைக்கிறேன் என்று அர்த்தம் அல்ல.  நீங்கள் சொல்வதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டால் கூட அதில் லாஜிக் இல்லையே என்பதற்காக அசோகமித்திரன் கல்கி உதாரணத்தைச் சொன்னேன்.  மற்றபடி சரவணன் சந்திரனின் நாவல்கள் பற்றி நான் சொன்னது நூற்றுக்கு நூறு சரியே.  மேலும், மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்று ஜெயமோகன் கூறியிருக்கிறார்.  கேங்ஸ் ஆஃப் வாஸேபூர் படத்தை கேணத்தனமான படம் என்று சொல்லியிருக்கிறார் ஜெ.  இதற்கெல்லாம் நீங்கள் சுவற்றில் தலையை முட்டிக் கொண்டு தான் அழ வேண்டியிருக்கும்.

உங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்ள வேண்டியதையெல்லாம் எனக்கு எழுதி விட்டீர்கள்.  அதன் மூலம் நமக்குள்ளான நட்பு முடிவுக்கு வருகிறது.  என் மீது மரியாதை கொண்டவர்கள் மிக அரிது.  அதனால்தான் எனக்கு நண்பர்களும் அரிதாகவே இருக்கிறார்கள்.

குட் பை.

சாரு