போலிகளை என்ன செய்யலாம்?

அன்புள்ள சாரு,

தில்லியிலிருந்து நவீன். ராஸ லீலா படித்தேன். google play வில் கிடைத்தது மிக வசதியாக இருந்தது. அதன் பிறகு தேகமும் படித்தேன். ராஸ லீலா முதல் பாகத்தில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்ததை விட அவை அளித்த திறப்புகள் அபாரம். வேறு தள சிந்தனைக்கு வித்திட்டமைக்கு நன்றி. அடுத்து படித்தது தேகம். ஒரு உடலின் தேடலாகவும் அந்த தேடலின் அலக்கழிப்புகளையும் பதிவு செய்திருந்தது அருமை. இரு நாவல்களிலுமே பெண்கள் எழுதும் கடிதங்கள் ஒரு ஆற்றொணா ஏக்கத்தின் குறியீடாகவே (A desperate longing) எனக்குத் தெரிந்தது. அக்கடிதங்கள் சில நேரங்களில் அலுப்பைத் தந்தன.

ஒழிவு திவசத்தே களி பார்த்தேன். பட முடிவு முதலில் அபத்தமாகப் பட்டது ஆனால் இரண்டாம் நோக்கில் வாழ்வில் அத்தகைய அபத்தங்கள் சாத்தியமானதே என்று தோன்றியது.

புதிய தலைமுறை —–  யோகா விவாதம் youtubeஇல் பார்த்தேன். அந்த விவகாரங்களில் எனக்கு சொல்வதற்க்கு ஒன்றுமில்லை. ஆனால் ஏதோ ஆன்மீகத்தில் பழுத்து விட்டவர் போல் உட்காந்திருந்த ஒருவர் ‘ஒரு எழுத்தாளர் தனது இணய பக்கத்தில் பணம் கேட்கிறார்’ என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட மறு கணம் கண்ணீர் துளிர்த்துவிட்டது.  அவர் அப்படிக் குறிப்பிட்டது கூட எனக்குத் தவறாகப் படவில்லை. ஆனால் பெயர் குறிபிட்டிருந்தால் அதை ஒரு குற்றச்சாட்டு என்று கொள்ளலாம். ஆனால் எத்தனை வஞ்சம் இருந்தால் ஒருவரால் அப்படி தாக்க முடியும். நான் பார்க்கும் நிறைய ஆன்மீகவாதிகளிடம் மனிதனுக்கு அடிப்படையில் இருக்க வேண்டிய அன்பும் பண்பும் கூட இல்லை என்றே தோன்றுகிறது. மனிதனின் தன்மையை அன்பு மையமாக ஆக்கவியலாத ஆன்மீகம் போலி ஆன்மீகமே.

உங்கள் எழுத்துக்களும் அவை திறந்துவிடும் திசைகளும் எனக்கு அளிப்பது போலி பாவனைகளிலிருந்து விடுதலையும் அன்பின் தரிசனமும். மட்டுமே.

அன்புடன்

நவீன்

அன்புள்ள நவீன்,

ராஸ லீலா, தேகம் ஆகியவற்றில் வரும் கடிதங்கள் அலுப்பைத் தருவதாக வேறு சிலரும் சொன்னார்கள்.  ஆங்கில மொழிபெயர்ப்பில் இன்னும் இறுக்கிக் கட்டி விடுவதாக அப்போதே முடிவு செய்து விட்டேன்.  ஆனால் அப்படி நினைப்பதும் தவறோ என்ற சந்தேகமும் உண்டாகிறது.  Alchemy of Desire நாவலில் நூறு பக்கம், இருநூறு பக்கம் என்று ஹீரோ தன்னுடைய காதலியைப் பற்றியும் அவளைச் சந்திக்க தில்லியிலிருந்து ஷிம்லா வரை பைக்கில் செல்லும் போது பார்க்கும் மரங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போவான்.  அலுப்பாகத்தான் இருந்தது.  ஆனால் அது என் வாழ்க்கை குறித்த அணுகுமுறையையே மாற்றியதே, அதனால்தான் அலுப்பூட்டும் பகுதிகளை நீக்கவும் தயக்கமாக இருக்கிறது.

அந்த ஆள் என்னைப் பற்றி இடுப்புக்குக் கீழே தாக்கியது குறித்து:  இப்போது நான் ஆளே மாறி விட்டேன்.  முன்பு என்றால் நூறு பக்கத்துக்குப் பதில் எழுதிக் கிழித்திருப்பேன்.  இப்போது அம்மாதிரி ஆட்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.  சாப்பிட்ட எலும்புத் துண்டுக்குப் பேசுகிறார்.  நன்றியாக இருப்பதும் ஒரு நல்ல குணம்தானே?  எலும்புத் துண்டையும் சாப்பிட்டு விட்டுத் துரோகம் செய்தால்தான் அது கண்டிக்கத் தக்கது.  விசுவாசத்தை நாம் குறை சொல்லவே கூடாது.  ஆனால் இது போன்ற நபர்களின் புத்தி விகாரம் ஆச்சரியத்தை அளிக்கிறது.  ஒரு சிவராத்திரி நிகழ்ச்சியைப் பார்க்க ஒன்றரை லட்சம் கட்டணம் வாங்குகிறவரோடு திருவோடு ஏந்திப் பிச்சை எடுக்கும் என்னை ஒப்பிடுகிறார் அந்த நபர்.  நான் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தால் 500 ரூபாய் அனுப்புவார்கள்.  அதுவும் இரண்டு பேர்.  அதற்காக நான் இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை வேறு எடுக்க வேண்டும்.  ஆனாலும் ஒரு விஷயம்.  காலம் காலமாக, நூற்றாண்டு நூற்றாண்டாக புலவர்கள் பிச்சை தானே எடுத்தார்கள்?  புலவனும் பிச்சை எடுத்தான்; சந்நியாசியும் பிச்சை எடுத்தான்.  ஆனால் இப்போதைய சந்நியாசி ஒன்றரைக் கோடி ஜகுவார் காரில் அல்லவா போகிறான்?  அப்படிப்பட்ட கபட சந்நியாசியும் புலவனும் ஒன்று என்று அந்த அன்பருக்குத் தெரிகிறது.  எலும்புத் துண்டு பேசுகிறது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு அந்த கார்ப்பொரேட் சாமியாரின் அடியாட்களிடமிருந்து பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.  எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  என்னைக் கொன்றாலும் கவலை இல்லை.  உயிருக்குப் பயந்தவன் அல்லவா இந்த மாதிரி கடிதங்களுக்குப் பயப்பட வேண்டும்.  ஆனாலும் மேலே டேஷ் டேஷ் போட்டிருப்பதன் காரணம், கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தடிப்பார்கள்.  எனக்கு அதற்கு நேரம் இல்லை.  மற்றபடி ஒரு பயமும் இல்லை.

தப்புக்கு மேல் தப்பு செய்கிறார்கள்.  கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகக் கும்பல் என்றே இவர்களைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.  தொலைக்காட்சியில் என்னைப் பெயர் சொல்லாமல் திட்டியவரிடம் ஒரு அடியாள் மனோபாவமே எனக்குத் தெரிந்தது. என் கேங்க் லீடரையா திட்டினாய்?  உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று சினிமாவில் அடியாட்கள் கத்துவது போல இது.  மற்றபடி எந்தவித நாகரீகமோ பண்போ எதுவுமே இல்லாத வன்முறைப் பேர்வழிகள் இவர்கள்.

சாரு