மீள்: (போன வருடம் இதே நாளில் எழுதியதை முகநூல் நினைவூட்டுகிறது)
நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் கணேசகுமாரனின் “மிஷன் காம்பவுண்ட்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. சாரு நிவேதிதாவும், ராஜசுந்தரராஜனும் மற்றும் பலரும் பேசினார்கள்.
ராஜசுந்தரராஜன் தனது உரையில் ‘Status quo’ என்றால் என்ன (“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு எதிர்நிலை) என்பது குறித்த தத்துவ அடிப்படையையுடன் உரையைத் தொடங்கினார்.
சாரு பேசியபோது, இந்த Status quo அடிப்படையின் சமகால உதாரணங்களுடனும் அன்பை முன்னிறுத்தும் எழுத்தென்பது எவ்வாறு வன்முறையை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்றும் “உன்னுடைய நல்லதுக்குதான் சொல்கிறேன், இதைச் செய்யாதே,, ” என்ற அன்பிற்குப் பின்னுள்ள அதிகாரம் குறித்தும் பேசினார்.
இரண்டையுமே ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றியிருக்கிறார்கள். ராஜசுந்தரராஜன் தனது உரையை மிக அழகாக அவரது முகநூல் பக்கத்திலும் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
இதெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகிறது என்றால், நேற்றைய காதலர் தினத்தில், காஃபி ஷாப்பில் பேசிக்கொண்டிருக்கும் காதலர்களை, தோளில் காவித்துண்டு அணிந்திருக்கும் சிலர் அடித்து வெளியேற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் காண நேரிட்டது தான்.
எந்த அச்சமும் இல்லாமல், புகைப்படக் கருவியுடன் சென்றுதான் அடிக்கிறார்கள். பொதுவெளியில் காதலர் தினத்தை கொண்டாடுகிறவர்களைத் தாக்குவோம் என்று அவர்கள் பிரகடனப்படுத்திவிட்டார்கள். அதை மீறுபவர்களை தண்டிக்கிறார்கள். அதைப் படம் பிடித்து எல்லோரது முன்னும் வைப்பதன் மூலம், அவர்கள் விடுப்பது ஒரு எச்சரிக்கை. “ஒழுங்குபடுத்தும் செயல்பாடு” என்ற அடிப்படையில் செய்யப்படுகிற வெளிப்படையான பொறுக்கித்தனம் அது. எந்த பண்புமற்ற அத்துமீறல்.
ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பது என்பதோ, காஃபி ஷாப்பில் சந்திப்பது என்பதோ ஏன் தவறாகப் படுகிறது? ஏன் அதுவொரு அத்துமீறலாகப் பார்க்கப்படுகிறது? குறிப்பாக மதவாதிகளை – எந்த மதமாக இருந்தாலும் சரி – அது ஏன் ஆத்திரமடையச் செய்கிறது? நமது சூழலில் பெரும்பான்மை இந்துக்கள் என்பதால் இதை செய்வது இந்துமதப் பொறுக்கிகளாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
மட்டுமல்லாமல் இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இவர்களுக்குக் கொடுத்தவர்கள் யார்?
இதை யோசித்தால், நமது பண்பாடு குறித்த பெருமிதங்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. இங்கு பண்பாடு என்பது மதத்துடன் பிணைக்கப் பட்டிருக்கிறது. மதம் என்பது பெண்ணுக்கான எல்லைகளை வரையறுத்து வைத்திருக்கிறது. அந்த வரையறை என்பது எப்போதும் பெண்களிடம் கோருவது அடங்கிப்போவதைத் தான். நமது இதிகாசங்களின் தத்துவார்த்த அடிப்படையை கூர்ந்து நோக்கினால், அதில் உறைந்து போன பெண்களின் கண்ணீரை நாம் காண முடியும்.
இவ்வளவு சமூக, பொருளியல் மாற்றங்களுக்குப் பின்னும் இந்தகைய வன்முறையாளர்கள், பண்பாட்டுக் காவலர்கள், குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்? அத்தகைய உதிரிகளின் அணிதிரட்டலை மதவாதிகள் எங்கனம் சாத்தியப்படுத்துகிறார்கள்?
இந்த வன்முறையின் முனை பல நேரங்களில் நமது வீட்டிலிருந்து தொடங்குகிறது. உனது நல்லதுக்குதான் சொல்கிறேன், கால்களை மடக்கி உட்கார பழகிக்கொள் என்பதில் இருந்து தொடங்குகிறது அது. உனது தங்கையையும், அக்காவையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சொல்லாடலின் மூலம், பொறுப்புடன் கூடிய அதிகாரம் ஆணுக்கு கையளிக்கப் படுகிறது. தனது தந்தைக்கு மாத்திரமல்ல, தன்னை விட இளைய வயது தம்பிக்குக் கூட காதலிக்கும் ஒருத்தி அஞ்ச வேண்டிய சூழல் இவ்வாறு தான் உருவாகிறது.
இந்த பொறுப்பு மனநிலைக்குப் பின்னால் ஆண் மைய சிந்தனை இருக்கிறது. அந்த பொறுப்பை ஏற்பவனுக்கு அது பெரும் சுமை. அந்த சுமைக்கு கிடைக்கும் கூலியென்பது அவள் மீது ஆதிக்கம் செலுத்த அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அந்த வகையில் நமது சூழலில் ஒரு ஆணும் பாதிக்கப்பட்டவனே. ஒரு மென்மையான ஆண், இந்த சுமையால் வாழ்வு முழுதும் பாதிக்கப்படுகிறான். ஒரு அரசியல் பொறுக்கியாக உருமாறும் ஆண், கையை முறுக்கிக்கொண்டு மற்றவர்களை நல்வழிப்படுத்த கிளம்புகிறான்.
இந்த வன்முறையை “பெண்களின் மீதான ஆண்களின் வன்முறை” என்று மாத்திரம் குறுக்கிப் பார்க்க இயலாது. ஏனென்றால் இந்த வன்முறையின் கண்ணிகள் சிக்கலானவை. எப்போதும் குடும்பத்தைக் காப்பாற்றுகிற சுமை ஏன் ஒரு ஆணின் மீதே ஏற்றி வைக்கப்படுகிறது? எவ்வளவு படித்தவளாக இருந்தாலும் “என்னை விட நிறைய படித்தவன் தான்”தனது கணவனாக வரவேண்டும் என்றும் தன்னை விட சில ஆயிரங்களாவது அவன் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்றும் ஒரு பெண் ஏன் நினைக்கிறாள்? அல்லது அவளது குடும்பம் ஏன் அவ்வாறு நினைக்கிறது??
வேலையற்ற கணவனின் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் மனைவி அதை தியாகமாக ஏன் கருதுகிறாள்? அங்கு அவளது பொறுப்பாக ஏன் அந்த செயல் உருமாறுவதில்லை? ஒரு ஆணுக்கு மட்டும் ஏன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய செயல் பொறுப்பாக இருக்கிறது? இதைப் பற்றிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நமது சூழலில், பெண்ணின் மீதான வன்முறை மனநிலைக்கு “அவள் மீதான ஆணின் பொறுப்பு” என்ற காரணிக்கு பெரும் பங்கு இருக்கிறது. அந்த பொறுப்பை அவள் மீதான வன்முறையைக் கொண்டு அவன் சமன் செய்கிறான். நமது பண்பாடு இந்த பொறுப்பை ஆணுக்கு கட்டாயமாக்குகிறது. அதைத் தக்க வைப்பதற்காக அவள் மீதான வன்முறையை அங்கீகரிக்கிறது. இது குறித்த வெளிப்படையான உரையாடல்களைத் தொடங்காமல் நாம் தீர்வை நோக்கி நடக்கவே முடியாது.
ஏனெனில் நமது அரசியல் என்பது ஆண் மைய அரசியல். அதற்கு தேவை ஆண்மைய மனநிலையைக் கொண்ட பொறுக்கிகள். அவர்களை உருவாக்கி கையளிக்கும் வேலையை பண்பாட்டின் பேரால் நமது குடும்பங்கள் செய்கின்றன. கணிசமான அளவில் அவர்களது உருவாக்கத்தில் பெண்களுக்கும் பங்கிருக்கிறது.
நான் சொல்ல வருவது நிகழும் வன்முறையை புரிந்து கொள்ள முயல்வதும், தீர்வு நோக்கிய உரையாடலைத் தொடங்குவதுமே.மற்றைய காரணிகளைப் புறந்தள்ளுவதோ,வன்முறையின் பொறுப்பை ஒடுக்கப்படுபவர்களின் மீது சுமத்துவதோ அல்ல.
கார்ல் மார்க்ஸ்