Zero Degree Publishing மூலமாக என்னுடைய பயண நூலான நிலவு தேயாத தேசம் வரும் ஜனவரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது. தமிழில் 400 பக்கங்கள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் காயத்ரி ஆர் மற்றும் ராம்ஜி நரசிம்மன். அந்த நூலை ஆங்கிலத்திலும் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட இருவருக்கும் என் நன்றி. இந்த நூல் துருக்கி அரசால் வரவேற்கப்படுமா என்று கேட்டார் ராம்ஜி. எழுத்தாளர்களை எதிர்கொள்வதில் துருக்கிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. தமிழ்நாட்டில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் போன்றவர்களே எழுத்தாளர்கள். மற்றபடி சி.சு. செல்லப்பாவிலிருந்து இப்போதைய எழுத்தாளர் வரை எல்லோரும் ஓட்டல் சர்வர்கள். இல்லையா? அதாவது, உண்மையான எழுத்தாளனுக்கு இங்கே அட்ரஸே கிடையாது. துருக்கியில் எழுத்தாளனைக் கண்டு கொள்வார்கள். கண்டு கொண்டு ஜெயிலில் போட்டு விடுவார்கள். அதுவும் சும்மா அல்ல. தேசத் துரோகக் குற்றம் சாட்டி. ஒரு முப்பது வருஷம் நாற்பது வருஷம். ஓரான் பாமுக் மேலும் இப்படியான தேசத் துரோகக் குற்றச்சாட்டைத்தான் வைத்தது துருக்கி அரசு. நல்லவேளையாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் துருக்கியின் குரல்வளையை நெறித்து ஓரானை வெளியே கொண்டு வந்து விட்டன. இல்லாவிட்டால் ஐயா இன்னமும் கம்பிதான் எண்ணிக் கொண்டிருப்பார். (இப்போது தன் காதலியின் முத்தங்களை எண்ணிக் கொண்டிருப்பதாகக் கேள்வி!) குர்திஷ் இனத்தினரை துருக்கி அரசு ஒடுக்கிக் கொண்டிருக்கும் வரை துருக்கி பற்றி நல்லவிதமான என்னால் எழுத முடியாது. ஓரான் பாமுக்கும் துருக்கியின் சாதாரண மனிதனால் ஒரு தேசத் துரோகியாகத்தான் கருதப்படுகிறார். ஓரானுக்கு உலகமெல்லாம்தான் புகழ். சொந்த நாட்டில் அப்படி இல்லை. அதனால் வருடத்தில் பாதி நாள் அவர் அமெரிக்காவில்தான் இருக்கிறார்.
நிலவு தேயாத தேசம் ஆங்கில மொழிபெயர்ப்பு (இன்னும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கவில்லை. யாரேனும் ஒரு நல்ல தலைப்பு சொல்லலாம்) நூல் துருக்கியில் தடை செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. துருக்கியின் மகத்தான கவியான நஸீம் ஹிக்மத்தை துருக்கி அரசு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தது. மிக நீண்ட காலம் சிறையில் இருந்த அவரை ஐரோப்பிய புத்திஜீவிகள்தான் வெளியே கொண்டு வந்தனர். வெளியே வந்ததும் அவர் ரஷ்யாவுக்குப் போய் விட்டார். அங்கேயேதான் இறந்தார். துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்ட மற்றொரு கலைஞர் யில்மாஸ் குணே. என்னுடைய 400 பக்க நிலவு தேயாத தேசத்தில் குணே பற்றி ஒரு வார்த்தை கூட இருக்காது. ஏனென்றால், துருக்கி பற்றி நான் எழுதிய 400 பக்கமும் கிட்டத்தட்ட ஒரு முன்னுரை மாதிரிதான். மொத்தம் 2000 பக்கங்களுக்கு விஷயங்கள் உள்ளன.
இரண்டே வாரம் துருக்கியில் இருந்து விட்டு எப்படி 400 பக்கம் எழுத முடிந்தது என்று கிட்டத்தட்ட தினமுமே சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுகிறார் ராம்ஜி. எனக்குத் துருக்கி என்பது யில்மாஸ் குனேயின் படங்களும் நஸீம் ஹிக்மத்தின் கவிதைகளும் ஓரான் பாமுக்கின் நாவல்களும்தான். நிலவு தேயாத தேசத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எழுத வேண்டும். அதற்கு நான் ஓரான் பாமுக் எழுதிய பனி நாவலில் வரும் கார்ஸ் என்ற பகுதிக்குச் சென்று வர வேண்டும். கார்ஸ் என்பது துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இஸ்தம்பூல்காரர்களே கார்ஸுக்குப் போய் வந்திருப்பார்களா என்பது சந்தேகம். தமிழ்நாட்டில் வசிக்கும் நாம் கௌஹாத்திக்குப் போயிருக்கிறோமா? அப்படித்தான். அதிலும் கார்ஸுக்குக் குளிர்காலத்தில் செல்ல வேண்டும். அந்த 400 பக்க நாவலில் 200 பக்கம் பனி பற்றியே எழுதியிருப்பார் ஓரான். மைனஸ் ஸீரோ குளிரில் நாமே அல்லல்படுவது போல் இருக்கும்.
எனவே, துருக்கி பற்றிய என் பயண நூல் ஃப்ரான்ஸிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும்தான் ஆர்வமாக வாசிக்கப்படும், துருக்கியில் அல்ல. துருக்கி அரசு அந்த நூலைத் தடை செய்து விடும். அதற்காக வேண்டுமானால் தில்லியில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கலாம்.