என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)

சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.  ஏகப்பட்ட கடிதங்கள்.  மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை.  வேலையில் கடுமையாகவே இருங்கள்.  இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள்.  நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும்.  யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம்.  இப்படி தெரிந்த வேலையைச் செய்ய வேண்டும்.  அதேபோல், நேரம் தவறாமை.  ஒரு ஆள் ஒரு பெரிய இயக்குனர் பெயரைச் சொல்லி அவரிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விடுங்கள் என்றார்.  சரி, காலை ஐந்து மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்கா வாருங்கள் என்றேன்.  நான் எப்போதும் அங்கே ஆறரைக்குத்தான் போவேன்.  அன்றைய தினமும் ஆறரைக்குத்தான் போனேன்.  ஆள் வந்திருக்க மாட்டார் என்று இருநூறு சதவிகிதம் தெரியும்.  வரவில்லை.  எட்டு மணிக்கு போன் வந்தது.  வடபழனியில் பஸ்ஸைப் பிடித்து விட்டதாக.  பொறுமையாகக் காத்திருந்தேன்.  காலை நாலு மணி வரை குடித்திருப்பார் போல.  ஒரே நாற்றம்.  உடம்பு பூராவும் தூக்கம்.  அவசியம் சிபாரிசு செய்கிறேன் என்று சொல்லித் துரத்தி விட்டு விட்டேன்.

இதோ ஒரு நண்பரிடம் ஒரு வேலை சொன்னேன்.  மூன்று நாட்களில் முடியவில்லை என்றால் வேறு ஆள் பார்த்து விட வேண்டியதுதான்.  கடினமாக இருக்க நேரத்தில் கடினமாகவும், மென்மையாக இருக்க வேண்டிய நேரத்தில்…

பொதுவாக இந்தியர்கள் முரடர்கள்.  அதிலும் தமிழர்களும் மலையாளிகளும் மகா முரடர்கள்.  அதனால்தான் சாருவைப் படித்தவர்களாவது சற்று மென்மையாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அதிலும் ஒருவரை விளிக்கும் போது, ஒருவருக்கு ஒரு செய்தி சொல்லும் போது பெயரைக் கூப்பிட்டுச் சொல்வதே பண்பு.  உடனே காதலனையும் எப்போதும் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது.  என் அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி, ஆனை அர்ரம்னா குதிரைக்குக் குர்ரம்னு சொல்லக் கூடாது என்று.  சாரு பேர் சொல்லி அழைக்கச் சொல்லி விட்டார் என்பதற்காக  ஆயிரம் வார்த்தைகள் உள்ளன.  amor, darling, baby, லூசு, அறிவு கெட்டவனே, முரட்டுப் பயலே இப்படி.  அப்பாவாக இருந்தால் வெறும் good morning இல்லை.  குட் மார்னிங் பா.   ஏற்கனவே நான் எழுதிய ஒரு பதிவு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஒருவர் தன்னுடைய குறும்படத்தைப் பார்க்கச் சொல்லி நேரம் கேட்டிருந்தார்.  கொடுத்தேன்.  ஆனால் அதற்கு முந்தின நாளே எனக்கு வேறொரு அவசர வேலை வந்து விட்டது.  அந்த நண்பருக்கு நான் மிகப் பெரிய செய்தியை டைப் செய்து மெஸேஜ் செய்தேன்.  மெஸேஜ் செய்த போது அதிகாலை நான்கு மணி.  அதற்கு அவரிடமிருந்து பதினோரு மணிக்கு k என்று பதில் வந்தது.  ஒரு கெட்ட வார்த்தை எனக்கு மனதில் வந்தது.  இப்படித்தான் இருக்கிறார்கள் பெரும்பாலான இளைஞர்கள்.

வந்த கடிதங்கள் பலவற்றில் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புள்ள சாரு அவர்கட்கு,
“என் கடன் பணி செய்து கிடப்பதே” ஒரு அதி அற்புதமான கட்டுரை.  எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்.  நானும் பலமுறை எனது team memberகளுக்கு ok என்று பதிலளித்திருக்கிறேன் என்றாலும் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருக்கும்.  இனி மாற்றிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.  மஹாப் பெரியவரின் கட்டுரையையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
Regards,

Jagan