சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் – சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் முகநூலில் எழுதியது:

கப்பல் சோமாலியா கடல் எல்லையை தாண்டும் வரை பயணிகள் உஷாராக இருக்கும் படி சிப்பந்திகள் சொன்ன போது ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது.

சென்னையில் தன் நண்பன் சந்தோஷ் வாங்கி கொடுத்த தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் கனமான புத்தகங்களை தவிர அவனிடம் சொல்லிக்கொள்ளும் படி எந்த உயர்தர வஸ்துவும் இல்லை. சோமாலிய கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்தால் கூட இப்புத்தகங்களை தூக்கி சுமக்க கஷ்டப்பட்டாவது தன்னை விட்டுவிடுவார்கள் என்று கற்பனை செய்து கோண்டான்.

எப்படியோ சிறு தோணிகள் மூலம் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து விட்டார்கள் என அறிந்த போது கூட அவன் அசரவில்லை. ஆனால் சில கொள்ளையர்கள் சுற்றி வளைத்து இவனை பிடித்துக்கொண்டு இவனுடைய பெரிய பார்சலைப்பார்த்து என்ன இது என்று கேட்ட போது கூட “புக்ஸ் தமிழ் புக்ஸ்” என்றான் மிதப்பாக. தலையில் ’நங்’கென்று அடி விழுந்தது. பிறகு நடந்தது எல்லாம் அவனுக்கு ஹெராயின் போதையில் வரும் ட்ரிப்பிங் போல சுருள் சுருளாக பலவண்னத்தில் உள்ளுக்குள் ஒரு மாடர்ன் ஆர்டாக நெளிந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. கண் விழித்து பார்த்தால் ஏதோ ஒரு தகரக்கொட்டகையில் ஒரு மர பெஞ்சில் படுத்திருந்தான்.

சுற்றிலும் கருத்த தேகங்கள் கொண்ட சோமாலிய கொள்ளையர்கள் அழுக்கான மிலிட்டரி யூனிபாஃமில் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். இவனுக்கு நினைவு திரும்பியதை கண்டுகொண்ட அவர்களில் தலைவன் போல இருந்தவன் இவன் அருகில் வந்து இவன் தாடையை பிடித்து தூக்கி “இந்தியாவிலிருந்து வரேன்னு தெரியும். அங்கே எங்கேருந்து வரே” என்று சுத்த தமிழில் கேக்கா விட்டாலும் அவன் பேசிய ஆங்கிலத்தை இப்படி மனதிற்குள் மொழி பெயர்த்து கொண்டான் ஜெய். ”தமிழ் நாடு” “இதெல்லாம் என்ன” “புக்ஸ்” “அது தெரியுது மவனே இதெல்லாம் என்ன புக்ஸ்” என்றான்.

“இதெல்லாம் இலக்கிய புக்ஸ். குண்டு குண்டா இருக்குதே அதெல்லாம் நாவல்ஸ். ஒல்லியா இருக்கிறது எல்லாம் கவிதை புக்ஸ்” என்றான். “ ஓ நாவல். அது சரி” என்று விட்டு அவிழ்ந்து கிடந்த புத்தக கட்டில் ஒன்றை சுட்டி ஒல்லியான ஒரு கொள்ளைக்காரனிடம் தூக்க சொல்லுகிறான். அவன் அந்த புத்தகத்தை தூக்க முயற்சி செய்து முடியாமல் இன்னொருவனை ஒரு கை பிடிக்க சொல்லி இருவருமாக தூக்கி கொண்டு வந்து காட்டுகிறார்கள் “இது என்ன புக்” என்கிறான் தலைவன். “இது. விஷ்ணுபுரம்” என்கிறான் ஜெய்.

இரண்டு கொள்ளையர்களும் தூக்க முடியாமல் தூக்கிகொண்டு நிற்க தலைவன் சில பக்கங்களை புரட்டி விட்டு ஜெய்யை நோக்கி திரும்பி கேட்டான்” இது எத்தனை பேர் சேர்ந்து எழுதியது” “எத்தனை பேரா… ஒரே ஆள் ஒரே ஆள் எழுதியது தான் என்கிறான்” அந்த ஒல்லியான ஆள் கடுப்புடன் “ இத ஒரே ஆளா தூக்க முடியல ஒரு ஆள் எழுதினதா, என்ன விளையாடுறியா” என்கிறான். அவன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை பார்த்து லேசான பீதியுடன் ஜெய்”நல்ல வேளை அசோகவனம் இன்னும் வரல” என்று தனக்குள் முணு முணுத்து விட்டு “சத்தியமா சொல்றேங்க ஒரே ஆள் தான். அவரு பேரு ஜெயமோகன். இங்கே நமீபியாவுக்கெல்லாம் கூட வந்திருக்கிறாரு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா விசாரிச்சு பாருங்க” என்றான்.

கூட்டத்திலிருந்து இன்னொரு கொள்ளையன் மெல்ல நடந்து வந்து சாவகாசமாக புத்தகத்தின் பின்னட்டையை திருப்பி பார்த்து விட்டு தலைவனிடம் சொன்னான் “பாஸ். இவரப்பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன் நம்ம சினுவா ஆச்சிபிய கூட இவரு நிராகரிச்சு தான் எழுதிருக்காரு” என்றான். ஜெய்க்கு இந்த தகவலே புதுசாக இருந்தது. ”நிராகரிச்சுன்னா?” என்றான் தலைவன். “அது வந்து பாஸ் இப்போ நம்ம கிட்ட மாட்டுன ஹோஸ்டேஜுல யாராவது ஒர்த் இல்லன்னு தெரிஞ்சா போட்டு தள்ளுறோம் இல்ல அது மாதிரி தான்” என்றான். ஓ என்ற படி தலைவன் ஜெய்கிருஷ்ணனை பார்த்து திரும்பி “ அடுத்த கப்பல் எப்போ வருமோ என்னமோ அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகணும் தம்பி. நீ என்ன பண்ணு இந்த நாவல எங்களுக்கு படிச்சி காட்டுற” என்றான். ஜெய் கதறி விட்டான். “ஐயா நான் இத மும்பைல கப்பல் ஏறும் போது படிக்க ஆரம்பிச்சது. ஸ்ரீபாதமே இன்னும் தாண்ட முடியல. முழுக்க படிச்சு காட்டுனா ஒரே கப்பல் ஏழு வாட்டி சோமாலியாவ கடந்து போனாலும் நீங்க மிஸ் பன்னிடுவீங்க. அவ்ளவோ நாளாகும். விட்டுடுங்க” என்றான்.

தலைவன் குனிந்து இன்னொரு புக்கை எடுத்தான் “ இது என்னா” என்பது போல இவனை நோக்கி தலையை மேலும் கீழும் அசைத்தான். ஜெய் லேசாக எட்டி பார்த்து விட்டு சொன்னான் “ இது சீரோ டிகிரி” “இவரு யாருப்பா கூலிங்கிளாஸ், காதுல ஸ்டட் எல்லாம் போட்டு கிட்டு” என்றான் ஜெய் வாய் திறப்பதற்குள் கொள்ளையர்களில் ஒருவன் சொன்னான் “இவரு பேரு சாருநிவேதிதா பாஸ்” “ஹேய் உனக்கு எப்படி தெரியும் மேன்” “பாஸ் போன வருஷம் டெல்லியில ஒரு இண்டெர்நேஷனல் எழுத்தாளர்கள் மீட்டிங் நடந்திச்சில்ல அது பேரு என்ன எழவோ மறந்திட்டேன். அதுல நான் ஒரு சோமாலிய எழுத்தாளருக்கு டூப் போட்டு கிட்டு கலந்து கிட்டேன் இல்ல அங்க தான் இவர சந்திச்சேன்.” “ஓ இண்ட்ரெஸ்டிங். சொல்லு சொல்லு” என்றான் தலைவன்.

“மீட்டிங் முடிச்சு சரக்கடிக்கும்போது இவர் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ஆனா அவரு அன்னைக்கு சரக்கு அடிக்கவே இல்ல. ஏதோ மலைக்கு போறதுக்கு மாலை போட்டிருந்தார். சோமாலியாவுல ஒட்டகபாலில தயாரிக்கிற சினோ அவருக்கு பிடிச்ச பானம்னு அவரு சொல்லி தான் எனக்கே தெரிஞ்சுது பாஸ்.” தலைவன் சீரோ டிகிரியை தூக்கி பிடித்து இந்த புக்கை பற்றி ஏதாவது தெரியுமா என்றான் “ பாஸ் இதோட இங்கிலீஷ் ட்ராண்ஸ்லேஷன் என்கிட்ட இருக்கு. நான் ஏற்கனவே படிச்சிட்டேன். ஒரு மாதிரி நான் லீனியர் ரைட்டிங்” என்றான். “அப்டினா” புருவத்தையும் புத்தகத்தையும் ஒரே சமயத்தில் தூக்கியபடி தலைவன் கேட்டான். “ அது வந்து பாஸ். இப்போ ஒரு கப்பல்ல நாம கொள்ளை அடிக்க போறோம்னு வச்சிக்குங்க அந்த கப்பலோட எந்த பக்கத்தில இருந்தும் உள்ள நுழையலாம் இல்ல. எப்படி வேணும்னாலும் நுழையலாம் இல்ல ஆனா கொள்ள அடிக்கிறது தான் முக்கியம் அது மாதிரி தான் பாஸ். முதல் அத்தியாத்துல நுழஞ்சும் படிக்கலாம் மூணாம் அத்தியாயத்துல நுழஞ்சும் படிக்கலாம். பின்னாடி இருந்து முன்னாடி கூட படிக்கலாம்.” தலைவன் டயர்டாகி “வேற என்னப்பா இதுல மேட்டர் இருக்கு” என்றான். இந்த கேள்விக்கு ஜெய் வாய் விட்டு சிரித்தான். “நிறைய இருக்கு” என்றான் அந்த படித்த கொள்ளையன். “ பாஸ் இத சோமாலிய மொழிக்கு நான் தான் ட்ராண்ச்லேஷன் பண்ணனும்ணு ரொம்ப அடம் பிடிச்சாரு” “யாரு” ’’ சாரு”என்றான் கூடவே. “பாஸ் அவரு சாதாரண ஆளுல்ல பாஸ். நம்ம சோமாலிய எழுத்தாளர் நுருதின் ஃபாரா பத்தி கூட ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தாரு. அவரு பேரையே நான் அப்போ தான் கேள்விப்பட்டேன் தெரியுமா. சாரு இஸ் கிரேட் என்று பெருமைப்பட்டு கொண்டான் தலைவன்.

ஆர்வம் மேலிட தலைவன் இன்னொரு புத்தகத்தை எடுத்து பிரித்தான். “இது யாருப்பா” என்றான். “எஸ்.ராமகிருஷ்ணன்” என்றான் ஜெய்.

“உலக சினிமா பற்றி ஒரு புக் எழுதி இருக்காரே அவரா” என்று தலைவனே கேட்டான். ஜெய் அப்படியே ஷாக் ஆயிட்டான்.

(தொடரும்)

மூணு வருஷம் முன்னாடி எழுத ஆரம்பிச்ச தொடர். படிக்காதவர்கள் படிக்க வேண்டும் என்றால் எனது பிளாக் பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்க்கவும்.
https://ensanthosh.wordpress.com/page/5/