நன்றி

நன்றி என்ற வார்த்தையைக் கேட்பது எனக்கு எப்போதுமே லஜ்ஜையான விஷயம். நன்றி பற்றி சற்று நேரத்துக்கு முன்பு என் நண்பரிடம் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் எதிர்பார்ப்பது நன்றி அல்ல. நன்றி பகர்வது உங்கள் பண்பின் அடையாளம். அவ்வளவுதான். நான் என் தந்தைக்கும் தாய்க்கும் நன்றியா சொன்னேன். அது அல்ல விஷயம். ஆனால் எனக்குக் குழந்தை பிறந்த விஷயத்தை என் தகப்பனுக்கோ உயிர் நண்பனுக்கோ தெரிவிக்க வேண்டியது என் கடமை அல்லவா? ஊரார் மூலமா அவர் அந்த நல்ல விஷயத்தைத் தெரிந்து கொள்ள வைப்பது? அதைத்தான் நான் எனது பதிவுகளின் மூலம் தெரிவிக்க முற்பட்டேன்.

இதை நான் நண்பரிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்த போது கேட்டு விட்ட அவந்திகா “என்ன, உனக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று கேட்டாள். சாமியார் பாணியில் “நான் impotent” என்று பதில் பகர்ந்தேன்…