பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எதை முதலில் எழுதுவது என்றே புரியவில்லை. எல்லாமே முதலில் முதலில் என்று முட்டிக் கொண்டு வருகிறது. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். நேற்று நாலு மணிக்கு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாக்கி ஷோ ரூம் வாசலில் நிற்பேன் என்று எழுதியிருந்தேனா? சரியாக நாலு மணிக்கு என் நண்பர் ஷிவா வந்து நின்று விட்டார். அவர் எனக்கு அனுப்பிய போன் மெஸேஜைப் பார்க்க எனக்கு நேரமில்லை. பிறகுதான் பார்த்து “திட்டம் மாறி விட்டது; நண்பர் பிரபு நாலரை மணிக்கு வந்து என்னை அழைத்துச் செல்கிறார்” என்று பதில் மெஸேஜ் கொடுத்தேன். நண்பர் ஷிவா வந்து பார்த்து விட்டுச் சென்றதைப் போல் நண்பர் முபாரக் மூணே முக்கால் மணிக்கே ஜாக்கி ஷோ ரூம் வந்து விட்டார் போல. அது எனக்குத் தெரியாது. அவர் நம்பர் என்னிடம் உள்ளது. என் நம்பர் அவரிடம் இல்லை. இதுவும் எனக்கு மாலை ஆறு மணி அளவில் அவர் என்னை புத்தக விழாவில் சந்தித்த போதுதான் தெரிந்தது. மூணே முக்காலிலிருந்து நாலே முக்கால் மணி வரை காத்திருந்திருக்கிறார்.
என்னுடைய நாலு மணி திட்டம் நாலரையாக மாறியதற்குக் காரணம், மூணேகாலுக்குத்தான் எனக்கு மதிய உணவே கிடைத்தது. சாப்பிட்டு முடிக்க மூணே முக்கால். சாப்பிட்ட கையோடு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓட முடியாதே என்பதால் நாலரைக்கு ஒத்திப் போட்டேன். மேலும், நான் அந்தப் பதிவைப் போட்டதுமே நண்பர் பிரபு எனக்கு போன் செய்து திட்டத்தை உறுதிப்படுத்தியாயிற்று. அது பற்றியும் நான் முகநூலிலும் என் ப்ளாகிலும் தெரிவித்திருந்தேன். முபாரக் அதைப் பார்க்கவில்லை போல. எல்லாம் தகவல் பரிமாற்றக் குழப்பங்கள். தகவல் பரிமாற்றத்தில் நாம் இன்னமும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. டெக்னாலஜியில் சொல்லவில்லை. டெக்னாலஜி பக்காவாக உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.
சீலே பற்றிய என் கட்டுரைகளில் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். சீலே சென்ற போதுதான் என் நெடுநாளைய குழப்பத்துக்கு, சந்தேகத்துக்குப் பதில் கிடைத்தது. 90 வயதிலும் பியர் அடித்துக் கொண்டு, சுருட்டு பிடித்துக் கொண்டு தன் மனைவியின் தோளில் ஆசையுடன் கை போட்டுக் கொண்டு ரகளையாக வாழும் ஐரோப்பியர்களை, குறிப்பாக சீலேயர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். நேரில் போய் தங்கிப் பார்த்த போது காரணம் விளங்கி விட்டது. ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் ஏனைய பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இப்போது நடப்பது சர்வாதிகாரமற்ற கம்யூனிஸ அமைப்பு. கார்ல் மார்க்ஸ் என்ன கனவு கண்டாரோ அம்மாதிரி அரசு முறையே அங்கெல்லாம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரம் இல்லை. Welfare State என்று சொல்லலாம். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரைச் சொல்ல மாட்டார்கள். கம்யூனிசம் என்பது மனித விரோதம் என்பதாக ருஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நடைமுறைகள் உலகுக்குச் சொல்லி விட்டன. அது வேறு விஷயம். இப்படி பெயரைச் சொல்லாமலேயே அந்தத் தத்துவத்தைப் பின்பற்றுவது போல, பேலியோ டயட் என்ற பெயரைச் சொல்லாமலேயே அல்லது அது பற்றித் தெரியாமலேயே தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் பேலியோ டயட் தான் உட்கொள்ளுகிறார்கள். உப்பு போடாமல், காரம் போடாமல், எண்ணெய் சேர்க்காமல் 400 கிராம் மாட்டு மாமிசத்தை அவித்துத் தின்கிறார்கள் (ஸ்டீக்) என்றால் அது என்ன டயட்? பேலியோ தானே? மனிதர்களின் உணவு முறையிலேயே ஆகச் சிறந்தது பேலியோ தான் என்பது என் கருத்து. அதில் சைவமும் உண்டு, அசைவமும் உண்டு. நான் பேலியோவைப் பின்பற்றினால் அசைவத்தில் நிற்பேன். ஆனால் ஏற்கனவே 15 பூனைகளுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. எங்கே எது கிடைக்கிறதோ அதை உள்ளே போடு என்ற அளவில்தான் இந்த 66 வயது வரை என் வாழ்க்கை முறை அமைந்துள்ளது. பேலியோ எல்லாம் எனக்கு மிகப் பெரிய லக்ஷுரி.
காலையில் பாரதி மெஸ்ஸில் ராமசேஷனோடு அமர்ந்து சாதா ஊத்தப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் (காலை எட்டேகால் மணி) அவந்திகாவிடமிருந்து போன். வாரம் ஒருமுறை பூனைகளுக்கு மீன் வாங்க நொச்சிக்குப்பம் மீன் சந்தைக்குப் போவாள் அவந்திகா. காலையில் போனால் ஐஸில் போடாத புதிய வலை மீன்களையே வாங்க முடியும். ”இன்று பலவகையான மீன்கள் உள்ளன. உனக்கும் மீன் வாங்கலாம் என்று பார்க்கிறேன். உனக்கு என்ன மீன் வேண்டும்?” என்று கேட்டாள். “என்னென்ன மீன் இருக்கு?” “நாக்கு மீன், பெரிய சங்கரா, மத்தி, கலவை, வவ்வால், சூறை” என்று அடுக்கிக் கொண்டே போனாள். பெரிய சங்கரா என்றேன் நான். பார்த்துக் கொண்டிருந்த ராமசேஷன் ஆச்சரியத்துடன் கண்களை விரித்து கைகளால் பாவம் காட்டினார். அவந்திகா அய்யங்கார். அவள் தீவிர சைவம். ஆனால் எனக்கும் பூனைகளுக்கும் எதுவும் பார்க்க மாட்டாள்.
இப்படியெல்லாம் செய்பவளின் வாழ்வில் காலம் (time) என்பது ஒரு முரணாகவே இருப்பது பற்றி நான் ஏதும் புகார் சொல்ல முடியாது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் 11.35 மணிக்குத்தான் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ஆக மதிய உணவுக்கு மூன்றரை நாலு ஆகும். ஆனால் இன்று ஒன்றரைக்கே முடித்து விடலாம். இதோ கொஞ்ச நேரத்தில் சோறு ஆக்கி விட்டால் நேற்றைய மீன் குழம்பையே போட்டு ஒரு வெட்டு வெட்டி விடலாம். யார் தயவும் தேவையில்லை. என்ன சொல்ல வந்தேன் என்றால், இப்படி இரண்டு வேளை உணவும் எப்படிக் கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்ற நிலையில்லா நிலையில் நான் எங்கே பேலியோவுக்குப் போவது? ஆனால் பேலியோவைக் கடைப்பிடிப்பவர்கள் அத்தனை பேரும் படு ஃபிட்டாக இருக்கிறார்கள். அதுதான் சீலே. அதனால்தான் 90 வயதிலும் அப்படி ஜாலி பண்ணிக் கொண்டு திரிகிறார்கள். அதையெல்லாம் விட முக்கியம், எதற்கெடுத்தாலும் நோய் நொடி என்று சொல்லி மாத்திரையும் கையுமாக அவர்கள் அலையவில்லை. 66 வயது ரொபர்த்தோவிடம் கேட்டேன். நீ எப்போது ஜுரம் ஜலதோஷம் என்று டாக்டரிடம் போனாய்? ஞாபகம் இல்லை என்று பதில் வந்தது. அவருக்கு 10 வயதில் ஒரு குழந்தை. 5 வயதில் ஒரு குழந்தை. இது தவிர எங்காவது ஒரு பிராத்தலுக்குப் போகலாம், வா என்று வேறு என்னை அழைத்தார். அதை விடுங்கள். அந்த இரண்டு குழந்தைகளுக்கும் எப்போது ஜுரம் ஜலதோஷம் என்று டாக்டரிடம் போனாய். சின்ன வயதில் போயிருப்பேன். சமீபத்தில் போனதில்லை.
மேலே உள்ள இரண்டு பத்திகளையும் ஏன் எனக்கு சாப்பிட மூணே கால் ஆயிற்று என்பதை விளக்குவதற்காக விளக்கினேன். ஆக, மூணே முக்காலுக்கு ஜாக்கி ஷோ ரூம் வந்த முபாரக் நாலே முக்கால் மணி வரைக்கும் என்னைக் காணாமல் எங்கள் குடியிருப்பின் காவலாளியிடம் கேட்டிருக்கிறார். நாலே முக்காலுக்கு அவந்திகாவிடமிருந்து போன். முபாரக் என்பவர் காத்திருக்கிறார். அவளிடம் விஷயத்தை விளக்கினேன்.
நண்பர் பிரபு தகவல் பரிமாற்ற விஷயத்தில் கில்லாடி. ஆக கில்லாடி சீனி. இந்தத் தகவல் பரிமாற்ற விஷயத்தில் சமீபத்தில் ஒரு மாபெரும் குழப்பம் நடந்தது. சீனியின் நிகழ்ச்சியின் போது என்னைச் சந்தித்து அழைத்துப் போக ராமர் என்ற நண்பரை அனுப்பியிருந்தார் சீனி. ஒரு மணிக்கு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாக்கி ஷோ ரூம் வாசலில் நிற்பேன். அவர் அடையாறு வழியாக வருகிறார். அப்படியானால் பட்டினப்பாக்கத்தைத் தாண்டி வந்தால் தாவத் ஓட்டல். அதை அடுத்து ஜாக்கி ஷோ ரூம். சாந்தோம் நெடுஞ்சாலை. சாந்தோம் நெடுஞ்சாலையில் ஜாக்கி ஷோ ரூமைத் தவிர்க்கவே முடியாது.
“சரி, கூகுள் மேப் அனுப்ப முடியுமா சாரு?”
“ஆஹா, எனக்கு கூகிள் மேப் எல்லாம் அனுப்பத் தெரியாது ராமர். ஆனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கு வரத் தெரியும்தானே?”
”தெரியும்.”
“ஓகே. அங்கே பட்டினப்பாக்கம் என்ற எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் இருக்கிறது. அதைத் தாண்டினால் வலது பக்கத்தில் தாவத் ஓட்டல். அதைத் தாண்டினால் ஜாக்கி ஷோ ரூம். அதை நீங்கள் தவிர்க்கவே முடியாது. ஒருவேளை உங்களுக்குப் பட்டினப்பாக்கத்தைத் தெரியாவிட்டாலும் கூட சாந்தோம் நெடுஞ்சாலையில் அடையாறிலிருந்து வந்தால் வலது பக்கத்தில் ஜாக்கி ஷோ ரூமைத் தவிர்க்கவே முடியாது.”
“ஓகே சாரு.”
ஒரு மணிக்கு நான் கீழே போய் விட்டேன். ஒன்னே காலுக்கு ராமரிடமிருந்து போன்.
“ஜாக்கி ஷோ ரூம் பக்கத்தில் உள்ள அபிநயா அபார்ட்மெண்ட்ஸ் தானே சாரு?”
முடிந்தது கதை. ஆள் வேறு எங்கோ போய் விட்டார். ஏனென்றால் இங்கே நான் குடியிருக்கும் அபார்மெண்ட் தவிர வேறு எந்த அபார்ட்மெண்ட்டும் இல்லை.
“அபிநயா அபார்மெண்ட்ஸ் என்று எதுவும் இங்கே இல்லையே ராமர்?”
“இல்லையே, ஜாக்கி ஷோ ரூம் பக்கத்தில் உள்ள அபிநயா அபார்ட்மெண்ட் வாசலில்தான் நான் நிற்கிறேன்.”
“நானும் ஜாக்கி ஷோ ரூம் வாசலில்தான் நிற்கிறேன். உங்கள் கார் நம்பர் என்ன?”
“ஃபாக்ஸ்வேகன். நம்பர் 5.”
“அப்படி எதுவும் கார் இங்கே இல்லியே? சொல்லப் போனா இங்கே காரே இல்லியே? ஆமா, நீங்கள் நிற்கும் தெரு அல்லது ரோடு பேர் என்ன?”
“டிடிகே ரோடு.”
“ஓஹோ. நான் நிற்பது சாந்தோம் ஹை ரோடு. நீங்க சாந்தோம் ஹை ரோடு வாங்க. அங்கே நிய்க்கிறேன்.”
”ஓகே சாரு. மேப்புல மூணு நிமிஷம்னு காட்டுது. இதோ மூணு நிமிஷத்துல வந்துர்ரேன்.”
டிடிகே ரோட்டிலிருந்து இங்கே வர 20 நிமிடம் ஆகும் என்று எனக்குத் தெரியும். திரும்பவும் வீட்டுக்குப் போக முடியாது. அது ஒரு பெரிய கதை. அதை அப்புறம் சொல்கிறேன். ஏற்கனவே 15 நிமிடம் நின்றாயிற்று. இனி ஒரு 20 நிமிடம். இவ்வளவு பிரச்சினைக்கு ஆயிரம் ரெண்டாயிரம் செலவு செய்து வூபரில் உத்தண்டி போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். 20 ஆகியும் ராமரின் அடையாளம் தெரியவில்லை. சரி, வரும் போது வரட்டும் என்று விட்டு விட்டேன். ஏனென்றால், வேறொரு ஜாக்கி ஷோ ரூம் கபாலி கோவில் வாசலில் இருக்கிறது. அங்கே போய் வாகன நெரிசலில் மாட்டினால் அவர் வருவதற்கு நாலு மணி கூட ஆகலாம்.
கிட்டத்தட்ட இரண்டு மணி ஆன போது பொறுமை இழந்து நானே போன் செய்தேன். கச்சேரி ரோட்டில் நிற்கிறாராம். ஓகோ, வர இன்னும் பத்து நிமிடம் ஆகும்.
வந்த பிறகுதான் சொன்னார், டிடிகே ரோட்டிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வர வழி தெரியாமல் பல இடங்களில் மாட்டி, பிறகு சீனிக்கே போன் செய்து கேட்டுக் கொண்டு வருகிறாராம்.
நாங்கள் நேராக உத்தண்டி போகவில்லை. இடையில் அடையாறில் ஒரு உணவகத்தில் லஞ்ச்சை முடித்துக் கொண்டு, பிறகு பாலவாக்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் ஒரு டிவியை எடுத்துக் கொண்டு நாலு மணிக்கு உத்தண்டி போய்ச் சேர்ந்தோம். பாலவாக்கத்தில் நண்பரின் வீட்டைக் கண்டு பிடித்தது தனியாக ஒரு குறுநாவல். தனியாக எழுதுகிறேன்.
உத்தண்டி போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக கூகுள் மேப்பில் எப்படி ஒரு இடத்தை அனுப்புவது என்ற விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். ஆனால் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு மனித மூளையின் பயன்பாடு இல்லாமல் போய் மூளை மந்தமாகிறது. அந்த வகையில் மனிதனின் பரிணாம வளர்ச்சி பின்னோக்கிச் செல்கிறது. விரைவில் அவனுடைய ஆறு அறிவு ஒரு அறிவு இரண்டு அறிவாகத் தேய்ந்து விடும் சாத்தியம் இருக்கிறது.
ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு இருக்கும் அல்லவா? இந்தக் கதைக்கு முடிவு என்ன தெரியுமா? ராமர் சீனியிடம் என்னை அழைத்துச் செல்வதற்கான பேச்சு நடந்து கொண்டிருந்தபோது தயங்கிய குரலில் கேட்டாராம்: சீனி, சாரு ஃபாக்ஸ்வேகன் கார்லேலாம் ஏறுவார்ல?
ம், பார்த்துக் கொள்ளுங்கள், என் இமேஜ் எப்படி இருக்கிறது, நடைமுறை எப்படி இருக்கிறது என்று!
என் வாசக நண்பர்களின் அன்பு என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது. நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக முபாரக் ஒரு மணி நேரம் காத்திருந்திருக்கிறார். இந்த முபாரக் யார் என்று புத்தக விழாவில் தெரிந்து கொண்டேன். சென்ற ஆண்டு எனக்காக William Penn ஃபவுண்டன் பென் வாங்கிக் கொடுத்த இரண்டு நண்பர்களில் ஒருவர். இந்த முறை திருவல்லிக்கேணி பாஷா ஹல்வாவும் எலந்த வடையும் கோவில்பட்டி கடலை மிட்டாயும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். நாகூரில் தம்ரூட் என்று ஒரு சொர்க்க இனிப்பு உண்டு. அது இப்போது காரைக்காலிலும் கிடைக்கிறது. இந்த பாஷா ஹல்வா அந்த தம்ரூட்டையும் விட பிரமாதமாக இருக்கிறது. அமிர்தம் என்றே சொல்ல வேண்டும். இனிப்பில் இதற்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் இப்போதுதான் ரசித்து சாப்பிட்டேன். அவர்கள் முகவரி:
பாஷா ஹல்வா வாலா, 9, ஃபக்கீர் சாஹிப் தெரு, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, சென்னை 5. போன் 2841 2277, மொபைல். 98401 74740.
நான்கு மணிக்குக் கிளம்பிய நானும் பிரபுவும் சங்கீதா ரெஸ்டாரண்ட் சென்றோம். புத்தக விழா செல்வதற்கு முன்னால் ஒரு நல்ல காப்பி குடித்து விடலாம் என்று நினைத்தேன். மைலாப்பூர் காப்பி பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இங்கே நல்ல காப்பி கிடைக்கும் இடங்களில் ஆர்.ஏ. புரம் சங்கீதா ஒக்கடேயையும் காவேரி மருத்துவமனை எதிரே உள்ள ஒக்கடேயையும் சேர்க்கலாம். ஆனால் மாலை நான்கு மணி அளவில் சங்கீதா காப்பி படு மோசமாக இருந்தது. காலையில் நன்றாகக் காப்பி கிடைக்கும் இடங்களில் கூட இப்படி மாலையில் மோசமான காப்பியாக மாறுவதன் காரணம், பழைய டிகாக்ஷனிலேயே மீண்டும் மீண்டும் புதிய டிகாக்ஷனைப் போடுவதுதான். ஃப்ரெஷ்ஷாகப் போட்டால் இந்தப் பிரச்சினை இருக்காது.
சமீபத்தில் ஒரு மாலை நேரத்தில் திருவல்லிக்கேணியில் என் நண்பர் இல்லத்தில் அப்படித்தான் எனக்கு ஒரு காப்பி டார்ச்சர் நடந்தது. நான் யார் வீட்டுக்கும் போவதில்லை. அப்படியே போனாலும் காப்பி குடிப்பதில்லை. டீயைத் தொடுவதே இல்லை. (மவுண்ட் ரோடு புகாரி டீ மட்டும் விதிவிலக்கு). காப்பி அடிக்டான நான் யார் வீட்டிலும் காப்பி குடிக்காததன் காரணம், காப்பியை முன்வைத்து அவர்கள் நமக்குக் கொடுக்கும் பலவிதமான டார்ச்சர்கள்தான்.
ஒன்று, ஒரு டம்ளர் காப்பிக்கும் அரை ஸ்பூன் சர்க்கரைதான் அளவு என்றால் நாலு ஸ்பூன் போட்டு பானகமாக்கிக் கொடுப்பார்கள். உங்களுக்காக சர்க்கரை குறைத்திருக்கிறேன் என்று வேறு சொல்வார்கள்.
சிலர் நுரை வர ஆற்றிக் கொடுப்பார்கள். (நீங்கள் சூடாகத்தான் காப்பி குடிப்பீர்கள் என்று தெரியும். நான் உங்கள் ப்ளாகை எல்லாம் படிப்பேன். அதனால் அதிகம் ஆற்றாமல் சூடாகக் கொண்டு வந்திருக்கிறேன்.) எனக்கு நுரையைப் பார்த்தாலே ஆகாது. நுரை வர ஆற்றினால் அது ஹராகிரிக்குச் சமம்.
சிலர் பாலாடை மிதக்க மிதக்கக் கொடுப்பார்கள். குடிக்கும் போதே தூ தூ என்று துப்பிக் கொண்டே குடிக்க வேண்டும்.
சிலர் கன்னாபின்னா என்று டிகாக்ஷன் சேர்த்து கஷாயமாகக் கொடுப்பார்கள். அது கஷாயக் காப்பி.
சிலர் (மாலையில் போனால்) காலையில் போட்ட டிகாக்ஷனிலோ (காலையில் போனால்) முந்தின தினம் மாலையில் போட்ட டிகாக்ஷனிலோ போடுவார்கள்.
சிலர் ஏற்கனவே போட்டுப் பயன்படுத்திய தூளின் மேலேயே வெந்நீரை ஊற்றி மீண்டும் டிகாக்ஷன் எடுப்பார்கள். இப்படி காப்பி போடுவதில் விதவிதமான டார்ச்சர்கள் உண்டு.
அன்றைய திருவல்லிக்கேணி நண்பர் வீட்டுக்குப் போன நான் காப்பி கொடுப்பதற்குள் நழுவி விட வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வில் கிளம்ப யத்தனித்தேன். என் நண்பனின் மாமியார் பார்த்து விட்டார். காப்பி வந்தது. அது ஒரு புதுவிதமான டார்ச்சர். முதல் வாயில் இனிப்பு சரியாக இருந்தது. இரண்டாவது வாயில் கொஞ்சம் சர்க்கரை தூக்கல். மூன்றாவது வாயில் இன்னும் கொஞ்சம் சர்க்கரை தூக்கல். இப்படியே நான்காவது வாய், ஐந்தாவது வாயில் சர்க்கரை அளவு கூடிக் கொண்டே போய் கடைசியில் பானகமாய் மாறியது காப்பி. அடப் பாவிகளா, சர்க்கரையைப் போட்டு விட்டு ஸ்பூனால் கலக்க மறந்து விட்டார்கள்!
சொல்ல மறந்து விட்டேன், பிரபுவும் பேலியோ தான். அதனால் கல்லூரி மாணவனைப் போல் இருப்பார். நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து எனக்குத் தேவையானதை கவனித்து, ஒன்பது ஆனதும் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். இப்படிப்பட்ட நண்பர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எழுத வேண்டும். எழுதி எழுதித் தீர்க்க வேண்டும்.
இன்று மாலை நாலரை மணியிலிருந்து புத்தக விழாவில் இருப்பேன். நேற்று சங்கீதா சொதப்பி விட்டதால் பார்க் ஷெரட்டன் அருகில் உள்ள ஸ்டார் பக்ஸில் காப்பி குடிக்கலாம் என்று இருக்கிறேன்.
எலந்த வடையெல்லாம் கிடைத்து விட்டது. முடிந்தால் பூனைக் குட்டிகளுக்கு Whiskas wet cat food Salmon gravy வாங்கி வாருங்கள். அல்லது அமேஸானிலும் ஆர்டர் செய்யலாம். கையிருப்பு தீரப் போகிறது.