நான் மோடி ஆதரவாளன் அல்ல; மனித சுதந்திரம் பற்றிக் கவலைப்படும் யாருமே இன்றைய நிலையில் மோடி ஆதரவாளராக இருக்க முடியாது. அவர் மூலம் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸம் மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. எனவே நான் மோடியை எதிர்க்கிறேன். மோடியை விட ஊழல் காங்கிரஸ் தேவலை. ஏனென்றால், ஃபாஸிஸத்தை விட ஊழல் பரவாயில்லை.
அதற்காக, இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாலேயே மோடியின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருக்க மாட்டேன். காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை நீக்கியது சரிதான் என்று எழுதினேன். அதுதான் என் நிலைப்பாடு. மோடிக்கு முன்னாலேயே பலப் பல ஆண்டுகளாக நான் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், குடியுரிமைச் சட்ட விஷயத்திலும் என் கருத்து மோடிக்கு ஆதரவானதுதான். ஆனாலும் எதுவும் எழுதவில்லை. ஏனென்றால், நான் எழுதினால் அது இந்துத்துவ ஆதரவாக எடுத்துக் கொள்ளப்படும். அதனால் எதுவுமே எழுதாமல் இருந்தேன். குடியுரிமைச் சட்டத்தில் detention centre என்ற பகுதி மட்டுமே ஆட்சேபணைக்குரியது. மற்றபடி எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் அந்தச் சட்டம். இந்தியா என்ற நிலைப்பகுதி ஒன்றும் புறம்போக்கு நிலம் அல்ல; கண்டவர்களும் வந்து பட்டா போடுவதற்கு.
ஆக, என் நிலைப்பாடு என்பது issue based ஆகவே இருக்கும். இந்தப் பின்னணியில் ரஜினியின் இப்போதைய பேச்சைப் பார்ப்போம். சேலத்தில் 1971இல் பெரியார் தலைமையில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்துக் கடவுள்களின் உருவங்கள் நிர்வாணமாகக் காட்டப்பட்டதாகவும் ராமன் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாகவும், அந்தச் செய்தியை ‘துக்ளக்’ துணிச்சலுடன் வெளியிட்டதாகவும் ‘துகளக்’ ஆண்டு விழாக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் ரஜினி. பிறகு அதற்கு எதிர்ப்பு வந்ததும் ”நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று கூறிய ரஜினி, இப்போது அந்தச் செய்தி ‘அவுட்லுக்’ பத்திரிகையில் வெளிவந்தது என்று சொல்லியிருக்கிறார்.
ரஜினி சொன்னது போல் அவுட்லுக் இதழ் இந்து குழுமத்தைச் சேர்ந்தது அல்ல. சுப்ரமணியம் சுவாமி ஃபோனில் பேசும் போது ரஜினி காகிதத்தை வைத்து குறிப்பு எடுத்துக் கொண்டு பேசுவது நல்லது. இல்லாவிட்டால் இப்படித்தான் உளற வேண்டியிருக்கும். மேலும், இந்துக் கடவுள்கள் யாரும் பெரியார் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் நிர்வாணமாகக் காட்டப்படவில்லை. இதை துக்ளக் பத்திரிகையே மறுத்துள்ளது. குறிப்பிட்ட படத்தில் ராமர் செருப்பு மாலையுடன் தான் காணப்படுகிறாரே தவிர நிர்வாணமாக அல்ல. மேலும், அந்தப் படத்தில் சீதையும் இல்லை.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், 1971-இல் நடந்த விஷயத்தை இப்போது ரஜினி சொல்வதற்குக் காரணம் என்ன? யார் இப்படி ரஜினியைப் பேசச் சொன்னது? 46 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைக் கண்ணும் காதும் வைத்து இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? சரி, அப்படியானால் 40 ஆண்டுகளுக்கு முன் ரஜினி கொடுத்த பேட்டிகளைப் பற்றி இப்போது பேசுவோமா? நான் தினமும் பெண்களோடுதான் படுக்கிறேன். ரஜினி பேட்டி. ஒரு பிரபலமான பத்திரிகையில் வந்தது. நான் கொஞ்சம் நாசுக்காக இங்கே எழுதியிருக்கிறேன். எனவே சுப்ரமணியம் சுவாமி தன்னிடம் சொல்லி வெளியே சொல்லச் சொல்லும் விஷயங்களை அவரையே சொல்லச் சொல்லுங்கள் ரஜினி. நீங்கள் அதையெல்லாம் நோட்ஸ் எடுக்காமல் பேசினால் ரொம்பக் குழப்பமாகி விடும். கொள்கை என்றாலே நமக்குத் தலையைச் சுற்றுகிறது ரஜினி. நமக்கு எதற்கு இந்த ஹிஸ்ட்ரி ஜியாகரஃபி எல்லாம்? என்ன சரியா?