நிராகரிப்பும் தடையும் (5)

காயத்ரி ஆர்.

17.02.20

சாரு நிவேதிதா குறித்த த. ராஜனின் கட்டுரை – பொதுவெளியில் சாரு பற்றி விவாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அதனாலேயே அது முக்கியமான ஒன்றாகிறது.

ஆனால் ராஜனின் அணுகுமுறையிலிருந்து நான் முரண்படுவது எங்கென்றால் – ஒருவகையில் எல்லா எழுத்தாளர்களுமே அவரவர்களின் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டவர்கள்தாம். வில்லியம் பர்ரோஸ், ஜேக் கெரோவாக், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி போன்றவர்கள் அமெரிக்க சமூகத்திலிருந்தும் மிஷல் வெல்பெக் (Michelle Houllebecq) ஃப்ரெஞ்ச் சமூகத்திலிருந்தும் ஓர்ஹான் பாமுக் துருக்கிய சமூகத்திலிருந்தும் அந்நியமானவர்களே.

எந்த எழுத்தாளருமே ‘தமிழ்த்தன்மை, இந்தியத்தன்மை, இத்யாதி, இத்யாதி’ என அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பொதுவாக ‘மனிதன்’ ‘மனிதம்’ என்ற பார்வையோடு தங்கள் கதைமாந்தர்களை உருவாக்குகிறார்கள். எந்தவொரு கதாபாத்திரமுமே – அந்தந்த இடத்தின், சூழலின் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்றாற்போல்- எங்கு வேண்டுமானாலும் உலவ முடியும். அடிச்சியின் (Chimamanda Ngozi Adichie) காம்பிலி அசிகே, அபுபக்கர் ஆடம் இப்ராஹிமின் பிந்த்தா போன்றவர்கள் எந்த நிலவெளியில் வேண்டுமானாலும் உலவலாம், உலவுகிறார்கள், இடத்திற்குத் தகுந்தாற் போல். இன்னொரு பிரபலமான உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது பெயர்தான் ருஷ்ய மொழியாய் இருக்கிறதே தவிர அவரும் அவரது கதாபாத்திரங்களும் தமிழ் வாசகர்களின் குடும்ப உறுப்பினர்கள் போல் ஆகி விட்டவர்கள்.

ஆனால் சல்மான் ருஷ்டி, மிஷல் வெல்பெக் போன்றவர்கள் மதத்தைச் சீண்டியவர்கள். பெருமாள்முருகனோ மதம், ஜாதி ஆகிய இரண்டையும் சீண்டியவர். ஆனால் சாரு இயங்கும் தளம் வேறு. அது பாலியல். பாலியல் என்பது தமிழ்ச் சமூகத்தில் இன்னும் விவாதிக்கப்படும் அளவுக்குக் கூட விடுதலை செய்யப்படாமல் இருண்ட குகைக்குள் அடைபட்டுக் கிடப்பதால் அதை எழுதிய சாருவும் விவாதிக்கப்படாமலே “பாதுகாப்பாக” இருக்கிறார்.

பெருமளவு விவாதிக்கப்பட்ட கு.ப. ராஜகோபாலனும் தி. ஜானகிராமனும் கூட பாலியலை எழுதினார்கள். ஆனால் சாருவின் பாலியல் transgressive தன்மை கொண்டது. அதனாலேயே அவர் விவாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழில் இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் கரமுண்டார் வூடு நாவலும் மற்ற சில சிறுகதைகளும் கடுமையான பாலியல் சிடுக்கு உறவுமுறைகளை எழுதுகின்றன. தஞ்சை ப்ரகாஷ் உயிரோடு இருந்த காலத்தில் அவரைப் பற்றி அவரது நெருங்கிய நண்பர்களே எதுவும் எழுதியதில்லை போல் தெரிகிறது. இப்போதுதான் அவர் பெயரே வெளியில் தெரிகிறது என நினைக்கிறேன். நல்லவேளை, சாருவுக்கு அந்த ஆபத்து நடக்கவில்லை. ராஜன் சொல்வது போல், சமூகக் குழுமங்களோடு உரையாட ஏதுமில்லை என்று நினைக்கும் ‘எலீட்’டுகள் இப்போது மிகுதியாக இருப்பதால் சாருவுக்கும் பெரும் வாசகர் கூட்டம் (ஒரு சிறிய வாசகப்பரப்பு அல்ல) இருக்கிறது போல.

இன்னொரு விஷயம். 25 ஆண்டுகளுக்கு முன்பு லிப்போக்ரமாட்டிக் (lipogrammatic) முறையில் சாரு எழுதிய நாவல் ஸீரோ டிகிரி. அந்த நாவல் அப்போதே பத்து ரூபாய் விலையில் பாக்கெட் நாவலாக வந்திருக்கிறது. மிக வெளிப்படையான பாலியல் விவரணைகளைக் கொண்ட ஸீரோ டிகிரியைத் தமிழ்ச் சமூகம் எப்படி ஏற்றுக் கொண்டது என்பதும் கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது.

***

ராஜ் சிவா:

நீங்கள் சொன்னதுபோல, ஒர்ஹான் பாமூக்கை பெரும்பான்மைத் துருக்கியர்களுக்குப் பிடிக்காது. ஒருசிலர் விதிவிலக்காக உண்டு. என்னுடன் பழக்கமுள்ள பல படித்த துருக்கியர்கள்கூட, ஒர்ஹானை நிராகரிக்கின்றனர்.

***

அருணாச்சலம்:

‘ஒரு சிறிய வாசகப்பரப்பு’ என்பது விமர்சன மேட்டிமைத்தனம். திமிர்த்தனம்.

மிகப்பெரிய வாசகப் பரப்பை கைப்பற்றி கப்பல் வாங்கிய தமிழ் எழுத்தாளர்களையும் கட்டுரையில் பட்டியல் இட்டுருக்கலாம்.

***

செல்வகுமார்:

சாருவின் நாவல்களில், தன் பிரதியின் மீதான கடும் விமர்சனத்தையும் அதனுள் உள்ளடக்கி விடுகிறார். தீவிரமான விமர்சனம் தோழமை போன்று நாவலுடன் பயணிக்கிறது. மிஷ்கின், ஞாநி போன்ற சில அசட்டுத்தன விமர்சனங்கள் பலரை விமர்சனம் செய்யும் ஆர்வத்திலிருந்து ஒதுக்கி வைத்தன.