டியர் சாரு,
உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும் என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன். எனது ஐயங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், உங்களது பார்வையில் நானும் கொஞ்சம் தெளிவுறுவேன் என்ற அடிப்படையிலேயே அவற்றை எழுப்பினேன். என் போன்ற பல ஆயிரம் பேருக்கும், இனி வரும் காலங்களில் பூச்சி தொடரை வாசிப்போருக்கும் உங்களது பதில்கள் பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமிதமே. நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் எனக்குத் தெளிவாக புரிகிறது சாரு. இதை விட விளக்கமாகவும் யாராலும் சொல்ல முடியாது. ஆனால்… முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவர் சொல்வதைப் புரிந்துகொள்வதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். முதல் கட்டுரையிலேயே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
”எத்தனை சீரியஸ் விவாதமாக இருந்தாலும் நாம் சொல்வது சரியாக இருக்க ஐம்பது சதவிகித வாய்ப்புதான் உள்ளது; எதிராளி சொல்வது சரியாக இருக்க ஐம்பது சதவிகிதம் என்று நினைத்துக் கொண்டுதான் பேசவே ஆரம்பிப்பேன்.”
இந்தப் பின்னணியில் எனது கருத்துக்களையும் அணுகுமாறு கோரிக்கை வைத்துவிட்டுத் தொடர்கிறேன்.
(மேலும், இங்கு நான் பேசப்போகும் அனைத்தும் நீங்கள் அறிவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். சாருவின் கட்டுரைகளை வாசித்த பிறகு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறித்து குற்ற உணர்ச்சிக்கு ஆளானதாக நண்பர் ஒருவர் போனில் தெரிவித்தார். அவருக்கும் சேர்த்தே எனது நிலைப்பாட்டை இங்கு எழுதுகிறேன்) .
சொல்லிவைத்தாற்போல சமீபத்தில்தான் டி.என்.ஜா எழுதிய ”Myth of the Holy Cow” எனும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். பசு குறித்து காந்தி சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட சில மேற்கோள்களில் இருந்துதான் முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறார் டி.என்.ஜா. என்னடா இது… ஏதோ மேஜிக் மாதிரி இருக்கிறதே என நினைத்துக்கொண்டேன். இதுபோன்ற விவகாரங்களினால்தான் பட்டர்ஃபிளை எஃபெக்ட், கேயாஸ் தியரி போன்றவற்றை நான் நம்புகிறேன். இந்தப் புத்தகம் குறித்து நான் அதிகம் குறிப்பிடப்போவதில்லை. ஆனாலும், 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, மாட்டிறைச்சியை முன்வைத்து இங்கு நடக்கும் அரசியலைப் பார்த்த பிறகுதான் சில தரவுகளைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அந்தப் பின்னணியில் இருந்து அணுகும்போது, பசு எனும் புனிதமும் – மாட்டிறைச்சிக்கு எதிரான பிரசாரமும் இங்கு அரசியலாக மட்டுமே செய்யப்படுவதை உணர முடிந்தது. இந்துக்களின் புனிதப் பண்பாட்டுக் குறியீடாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத ரீதியிலான வேற்றுமையைப் பறைசாற்றவுமே இந்த அரசியல் கையில் எடுக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
”Myth of the Holy Cow” – புத்தகத்திற்காக பெரும் உழைப்பைச் செலவிட்டுள்ளார் ஜா. எண்ணற்ற தரவுகளை சேகரித்துள்ளார். அவரது பல தரவுகள் தீவிர இந்து மதப் பற்றாளர்களின் நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் மேற்கோள் காட்டியும் இருக்கிறார்.
உங்களது கட்டுரையில் மாடு எனது தாய். குல தெய்வம். இந்துக்களின் தெய்வம் என்று தெளிவாக “புனிதப்படுத்தி“ குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு விஷயத்தைப் புனிதப்படுத்திய பிறகு அதிலுள்ள தர்க்க நியாயங்கள் செல்லுபடியாகாது என்பதை நன்கு அறிவேன். இருப்பினும் 50 ; 50 எனும் விகிதாச்சார அடிப்படையில் தொடர்கிறேன். உங்களது கருத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் என்ற காரணங்களை அடுக்குவதுதானே நியாயம்? அதன்படி, டி.என். ஜா எழுதிய புத்தகத்தின் மூலம் இந்துக்கள் (வேத கால ஆரியர்கள் ) பசுக்களை யாகங்களில் பலியிட்டு, அதனை உண்பதையும் அறிய முடிகிறது. பின்னாட்களில் பெளத்த, சமண மதங்களின் எழுச்சியால் புலால் உண்பதை ஆரியர்கள் (இந்துக்கள்) தவிர்த்ததாக அறிய முடிகிறது. இவை தவறாக இட்டுக்கட்டியவை என்றும் மறுப்பு வரலாம். தாங்கள் தெய்வத்தின் குரலை மேற்கோள் காட்டியிருந்தீர்கள் அல்லவா… அதே நூலில் மகா பெரியவா இவ்விஷயத்தைக் குறித்து விளக்கியதையும் கவனித்தேன்.
”ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசு பலி இல்லை. ‘நிரூட பசுபந்தம்‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசு பலி ஆரம்பிக்கிறது.
‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.
மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம்தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள் என்றால் கொஞ்சம்கூட சரியில்லை.
இப்போது ஒரு மருந்தைப் பரீக்ஷிப்பது என்பதற்காக லாபரிட்டரிகளில் எத்தனை ஜீவன்களைக் கொல்கிறார்கள்? இப்படியே ஒரு பெரிய க்ஷேமத்துக்காகச் சின்ன ஹானியையும் உண்டாக்கலாம் என்றே யக்ஞங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாஸ்தவத்தில் ஹானியும் இல்லை; அந்தப் பசு ஸத்கதி பெறுகிறது என்பதே நம்பிக்கை.”
மகா பெரியவாவின் வார்த்தைகளில் பசுக்கள் பலியிடப்பட்டதையும், ”சிறிய அளவில்” பிராமணர்கள் உட்கொண்டதையும் நாம் அறிய முடிகிறது. அல்லது நான் அறிந்து கொண்டேன். இடைச்செருகலாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பசு என்றால் பிராணிகள் – மிருகம் என்கிறார் மகா பெரியவர். ரிக் வேதத்தில் “கெள” என்ற வார்த்தையால் குறிப்பிடப்டும் மிருகம் பசு என்கிறார் டி.என்.ஜா.
தெய்வத்தின் குரலில் குறிப்பிட்டுள்ள ”பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும்” என்ற யாகத்தின் மூலம் இன்னொரு தகவலும் அறிய முடிந்தது. யாகம் செய்யும் குடும்பத்தின் தலைவன் பெயராலேயே அந்த யாகம் அழைக்கப்படுமாம். அந்த வகையில் நமது முன்னாள் பிரதமர் மறைதிரு அடல் பிஹாரி வாஜ்பாயி என்ற பெயரில் உள்ள ’வாஜ்பாயி’ என்பதும் பசுக்களை பலியிடும் யாகம் நடத்திய குடும்பத்தின் பெயர் என்றும் அறிய முடிந்தது.
மேலும் சில தகவல்களைத் தேடியபோது, விவேகானந்தரும் இந்துக்கள் மாமிசம் உண்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.
”You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. That is disgusting now. However they may differ from each other in India, in that they are all one – they never eat beef.” – The Complete works of Swami Vivekananda, Volume III
சில குறிப்பிட்ட யாகங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளைச் சொல்லிவிட்டு, யாகங்களில் பலியிடப்படும் பசுவின் மாமிசத்தை உண்ணாமல் இருப்பவன் இந்துவே அல்ல என்று மேற்கோள் காட்டிவிட்டு, இந்தியர்கள் பசு மாமிசத்தை உட்கொள்ளுபவர்கள் இல்லை என்பதையும் சொல்கிறார்.
சரி, இதுபற்றி வேறு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று பார்த்தால், மனு தர்மத்தில் உணவு குறித்து சொல்லும் நெறிமுறைகளிலும் மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய தகவல் கிடைத்தது.
அவை : ( அத்தியாயம் 5 )
nāttā duṣyatyadannādyān prāṇino’hany’hanyapi |
dhātraiva sṛṣṭā hyādyāśca prāṇino’ttāra eva ca || 30 ||
The eater incurs no sin by eating, even daily, such animals as are eatable: since the eater as well as the eaten animals have been created by the creator himself – (30).
krītvā svayaṃ vā’pyutpādya paropakṛtameva vā |
devān pitṝṃścārcayitvā khādan māṃsaṃ na duṣyati || 32 ||
Having bought it, or having obtained it himself, or having it presented by others, – if one eats meat after having worshiped the Gods and the Pitṛs, he does not incur sin – (32)
niyuktastu yathānyāyaṃ yo māṃsaṃ nātti mānavaḥ |
sa pretya paśutāṃ yāti sambhavānekaviṃśatim || 35 ||
But when invited according to law, if a man does not eat meat, he becomes, after death, a beast, during twenty – one births – (35)
யாகங்கள் செய்வதற்காக பிராணிகளை பலியிடுது குறித்தும், அவற்றை பிராமணர்கள் புசிப்பதில் பாவமில்லை என்றும் ‘மனு’ சொல்கிறார். விவேகானந்தர் காட்டிய மேற்கோளும், மகா பெரியவா தெய்வத்தின் குரலில் பிராமணர்கள் சிறிதளவே புசித்தார்கள் என்று குறிப்பிட்டதிலிருந்தும் எனக்குச் சில புரிதல்கள் கிடைக்கின்றன. மேலும்,
”தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது” என்றே தெய்வத்தின் குரலில் மகா பெரியவா சொல்கிறார்.
மனு தர்மத்திலும் பல்வேறு ’வெர்ஷன்கள்’ இருப்பதாக சொல்கிறார்கள். இணையத்தில் கிடைத்த நான்கைந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், என்னிடம் உள்ள இரு வேறு தமிழ்ப் பதிப்புகளையும் சரிபார்த்துவிட்டே இதனை எழுதுகிறேன். என்னிடம் உள்ள ஒரு பதிப்பு ஆச்சாரமான வைதீகரால் மொழிபெயர்க்கப்பட்டது.
மனிதனின் பரிணாம வளர்ச்சி மற்றும் இந்திய வரலாற்றிலிருந்து நான் புரிந்துகொண்ட சில தகவல்களைக் குறிப்பிட விரும்புகிறேன் சாரு.
மனிதன் காட்டுமிராண்டியாக குகைகளிலும், நாடோடியாகவும் வாழ்ந்தவன். பின்னர் வேட்டைச் சமூகம். அப்போது சகல பிராணிகளையும் தின்றிருப்பான். இன்னின்ன பிராணிகள் நமது செரிமாணத்துக்குத் தோதாக உள்ளன என்று அவன் முடிவு செய்தவற்றைத்தான் பின்னவர்கள் தொடர்ந்திருப்பார்கள். பின்னர் மேய்ச்சல் சமூகம், வேளாண் சமூகம் – நாகரிகங்கள் தோன்றின… மொழி, பேச்சு, கலை, மதம், கடவுள் என பரிணாமம் அடைந்தது மனித இனம். ஒருவரை விட இன்னொருவர் உயர்வானவர் என்று பேதங்களை உருவாக்கினான் மனிதன். யாகங்களில் பலியிட்டு மாமிசத்தை (பசுக்களையும்) தின்றவர்கள் வேத கால ஆரியர்கள். காலப்போக்கில் அந்த நெறிமுறைகள் மாறியிருக்கக்கூடும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தயானந்த சரஸ்வதியின் ஒருங்கிணைப்பால் – இஸ்லாமியர்களை வேறுபடுத்தி ஒதுக்கவும், ஆரிய – வைதீக தர்மத்தை மேன்மையானது என நிறுவவும் ’பசு புனிதமானது’ என்று கட்டமைக்கும் அரசியல் துவங்கியதாக நான் அறிகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் சாரு. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னது மேற்கத்தியர்களுக்குப் புரியவே புரியாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை நானும் ஏற்கிறேன். வெள்ளையர்களை விடுங்கள்… வட இந்தியர்களுக்கே புரியாது என்பது எனது கருத்து. தொல்காப்பியர் மேற்கோள்களையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அது மட்டுமே அல்ல.
” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்பதும்,
“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ”
– என்பதும் உலகில் வேறு எவனுக்கும் புரியாது. இவை அனைத்தும் தமிழர்களின் சிறப்பு. தமிழர்களின் தனித்துவம். இந்த பண்பட்ட மரபுகள் அனைத்தையும் பொத்தாம் பொதுவாக இந்துக்களின் மரபு – இந்தியர்களின் மரபு என்று குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடுகளவும் இல்லை! இவை அனைத்தும் ஆரிய – வேத – வைதீக பண்பாட்டின் எதிர் துருவத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்மூலையில் வாழ்ந்த தமிழர்களின் மரபாகவே நான் பார்க்கிறேன். ஒரு தமிழனாக எனது பண்பாட்டு மரபுகளை இந்தியாவின் மரபு என்றும், இந்துக்களின் மரபு என்றும் குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது ஒரு ஃப்ரைட் ரைஸ் போன்றது. அதிலாவது வெஜிடபுள் ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பீஃப் ஃப்ரைட் ரைஸ் என பல வெரைட்டிகள் உண்டு. ஆனால் இந்து மதம் எனும் ஃப்ரைட் ரைஸில் சிக்கன், மட்டன், கடல் உணவுகள், காய்கறிகள், மாட்டிறைச்சி,
பன்றி இறைச்சி என சகலமும் கலவையாக இருக்கிறது. காய்கறி மட்டுமே சாப்பிடுகிறவன் உசத்தியான இந்து. மாமிஸம் சாப்பிடுகிறவன் தாழ்வானவன். அதிலும், மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை சாப்பிடும் இந்து தாழ்விலும் தாழ்வானவன். காய்கறிகள் சாப்பிடும் இந்துவில் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் ஒசத்தியோ ஒசத்தி. உணவு, பிறப்பு, வாழ்விடம், நிறம் என அனைத்திலும் பேதங்கள் பார்த்து, இவன் உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் என்று பிரித்து வைத்த ஒரு சித்தாந்தம் எப்படி அனைவருக்குமான மதமாக இருக்க முடியும் ?
இந்து மதத்தில் அனைத்திற்கும் இடமுண்டு. நாத்திகமும் ஒரு அங்கம். கோவிலுக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. எந்தக் கடவுளையும் எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம் என பல ’பாஸிடிவ்களை’ சொல்லி சமரசம் செய்துகொள்கிறோம் என்றே தோன்றுகிறது.
கர்மா, மோக்ஷா, த்வைதம், அத்வைதம் என பல்வேறு தத்துவங்களையும்,
உயரிய நெறிகளையும் நாம் சொல்லிக்கொள்ளலாம். வாழ்வியல் கோட்பாடுகளைப் பெருமையாகவும் சொல்லலாம். ஆனால் அவை அனைத்தும் வேறு. தொல்காப்பியரும், வள்ளலாரும், வள்ளுவனும், கணியன் பூங்குன்றனாரும் வேறு என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தியாவில் இந்து என்ற மத அடையாளமும், அதனுள் இருக்கும் சாதியும் ஒரு மனிதனை நான்கு பேர் சேர்ந்துகொண்டு தண்ணீருக்குள் அமுக்குவதைப் போல இருக்கிறது. இந்த நிலப்பரப்பில் பிறந்த ஒரே காரணத்தினால், ”நீ இந்து” என்று ஒருவன் அமுக்கப்படுகிறான்! மதமும், அது சார்ந்த சாதிய உயர்வு தாழ்வுகளும் அவன் மீது திணிக்கப்படுகிறது. தாழ்வான ஒருவன் திமிறி எழுந்து மேலே வருவதற்குள் இங்கே எவ்வளவு போராட்டங்கள்…
நீங்கள் எல்லாரும் இந்துக்கள். நீ பிறக்கும்போதே உயர்வான இந்து. நீ பிறக்கும்போதே தாழ்வான இந்து. நீ பிராமணன்- இந்த வேலையைச் செய்யணும் – ஒசந்தவன். நீ சூத்திரன்- எந்தக் கேள்வியும் கேக்காமல் மற்றா எல்லாருக்கும் சேவகம் செய்யணும். நீ பஞ்சமன்-வாழவே தகுதி இல்லாவன் – யார் கண்னிலும் படவே கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியெல்லாம் சித்தாந்தங்கள் வகுத்து, மனிதர்களைப் பிரித்து வைத்த ஒரு தத்துவம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமானதாக எப்படி இருக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடு! என்னிடம்தான் தமிழ் மரபு இருக்கிறதே… நானும், குஜராத் பனியா கூட்டமும், மராத்திய சித்பவன் பார்ப்பனர் கூட்டமும், காஷ்மீரி பண்டிட்களும் எப்படி ஒரே மதமாக இருக்க முடியும்?
கோட் சூட் போட்டுக்கொண்டு வந்த ஐரோப்பியர்கள் வெறும் மஞ்சள், குங்குமம், வேப்ப மரத்திற்காக மட்டுமே நம்மைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். நாம் (இந்தியர்கள் – இந்துக்கள்) மனிதர்களைப் பிரித்துப் பிரித்து வைத்திருந்தோம்.
பெண்களை உடன்கட்டை ஏற்றினோம். தாழ்த்தப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் பெரும் கூட்டத்தை அடிமையாக்கி வைத்திருந்தோம். உடை உடுத்தத் தடை. செருப்பு போடத் தடை. ஆலய நுழைவுக்குத் தடை. பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகள். மேலாடை அணியக் கூடாது. எத்தனையெத்தனை அடக்குமுறைகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டேதானே இருக்கின்றன… மனிதர்களைப் பற்றியே துளியளவும் இரக்கம் இல்லா தேசத்தில் மாட்டின் மீது மட்டும் ஜீவ காருண்யம் பொங்குவதைப் பார்க்கும்போதுதான் எனக்குத் தெளிவாகிறது…
இது அப்பட்டமான அரசியல் என்று! சரி; வெள்ளைக்காரன் மேட்டருக்கு வருவோம். இங்கு வந்த ஐரோப்பியர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள்,
போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என்று தனித்தனியாக அறியப்பட்டார்கள்.
அவர்களுக்குள் வர்க்க பேதங்கள் இருந்தாலும், மனிதர்களாக – ஒற்றை தேசத்தினராக ஒற்றுமை இருந்தது. இங்கு வந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கலாசாரமும், கட்டமைப்பும் புரியாத புதிராக இருந்திருக்கும். ஒரு ஊருக்குள் நுழைந்திருப்பார்கள். என்னங்கடா இது.. ஒரே மொழி பேசறானுங்க. ஒரே கலாசாரமும், பண்பாடாவும் இருக்கு. ஆனால் இவ்ளோ பிரிவினைகளுடன் வாழ்கிறார்கள்ன்னு எதுவும் புரிந்திருக்காது.
அது போலவே, ஒரே பழக்க வழக்கம், பண்பாடு இருந்தாலும் பக்கத்து நாட்டுக்கும் இந்த நாட்டுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருக்கானுங்கன்னு அதுவும் புரியாமல் இருந்திருக்கும். ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு நீதி உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட பல அவலமானக் கட்டமைப்பைப் பார்த்து, ஒற்றுமையில்லாத – சக இன – நாட்டு மக்களையே அடிமைப்படுத்திய வாழ்வியலைப் பார்த்துத்தான் காட்டுமிராண்டிகள் என்று சொல்லியிருப்பான் என்று கருதுகிறேன். மஞ்சளும், வேப்ப மரமும் சர்வீஸ் சார்ஜ் போல வேண்டுமானால் இணைந்திருக்கலாம் என்பது எனது கருத்து. அவனது முன்னோர்களும் இயற்கையை வணங்கியவர்கள் தானே…
மாட்டிறைச்சிதான் அதிக அளவு புரதச்சத்து நிரம்பிய உணவு. புரதச்சத்து குறைபாடுள்ளவர்களில் இந்தியர்கள்தான் அதிகளவில் உள்ளனர். எனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தது. சத்துக்குறைவு. மூச்சு விடுவதில் சிரமம். அவர்களும் விவசாயத்திற்காக மாடு வளர்ப்பவர்கள்தான். ஆனால் மாட்டிறைச்சி உண்ணாதவர்கள். ஒரு கட்டத்தில், மாட்டிறைச்சி உண்ணும்படி மருத்துவரே பரிந்துரைத்தார். எங்கள் ஊரில் பீஃப் பிரியாணியும்,
பீஃப் வறுவலும் ரொம்ப ஃபேமஸ். யாருக்கும் தெரியாமல் அச்சிறுவனுக்கு வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தார் அவரது தாயார். சில வருடங்களில் அவனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இப்போது ஆரோக்கியமாக இருக்கின்றான்.
இந்திய எளிய மக்களுக்கு மாட்டிறைச்சி மிகவும் சத்தான உணவு. நமது “புனிதப்படுத்தலுக்காக” அம்மக்களை இந்து மத மேட்டிமைத்தன சமூகத்திலிருந்து மேலும் மேலும் அந்நியமாக்குகிறோம் என்பது எனது கருத்து. மலக்குழிக்குள் மூச்சை இழுத்துப்பிடித்து அடைப்புகளை எடுக்கும் ஒரு எளிய மனிதன் அன்றிரவு விரும்பிச் சாப்பிடும் உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது. அவனிடம் போய் மாடு புனிதம், பசு புனிதம் என்று சொன்னால், ஏன்யா… உயிரைக் கொடுத்து உன் மலத்தை நான் அள்ளுறேன். என்னைப் பத்தின கவலை உனக்கு இல்லை. ஆனால், மாடு புனிதம் அதைச் சாப்பிட கூடாதுன்னு என் சோத்துல மண்ணைப் போட்டு என்னைய அடிக்கிறயான்னு கதற மாட்டானா? இந்தியாவில் நடப்பதும் அதுதானே? மாட்டிறைச்சி உற்பத்தியில் போட்டிப் போட்டுக்கொண்டு முதல் இடத்திற்குச் செல்கிறது இந்தியா. ஆனால் அதிகளவு புரதம் தரக்கூடிய உணவை நம் நாட்டு மக்கள் சாப்பிடக்கூடாது என்று புனிதப்படுத்தி நடக்கும் வியாபார அரசியலாகவும் நான் இதைப் பார்க்கிறேன்.
இறுதியாக சாரு… மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறித்து ஆய்வு செய்யும் பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து இது : பெரிய மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டதால்தான் மனிதனின் மூளை வளர்ந்தது. சிந்திக்கும் சக்தி அதிகமானது. பகுத்தறியும் திறனும் உயர்ந்தது!
மீண்டும் இதைக் குறிப்பிட விரும்புகிறேன் சாரு. உங்களது கருத்துக்கள் அனைத்தும் – அதன் கோணத்தில் எனக்குப் புரிகிறது. ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வேறொரு நடைமுறை யதார்த்தத்தை நான் எனது சார்பாக முன்வைத்தேன். அவ்வளவே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் அனைத்தையும் தின்றுகொண்டே இருக்கிறான்.
அவ்வபோது அழிவுகளுக்கும் ஆளாகிறான். இது தொடரவும் செய்யும் என்பதே எனது புரிதல். பாவமும், புனிதமும் நமது சித்தாந்தங்களின் மாறுதலுக்கு உட்பட்டது. அதாவது, தேனிக்களை அழித்துக் கொன்றுவிட்டு, தேனை சைவமென ருசிக்கும் சைவ உணவாளர்கள் போல!
நன்றி சாரு.
கணேசன் அன்பு