வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும்போது அந்தக் காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச் சுருக்கம் என்று போடுவார்களே அதை விடவும் கம்மியான அளவில்தான் விபரங்களைத் தெளித்துச் செல்கிறேன். இல்லாவிட்டால் இந்த நூல் ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும். உதாரணமாக, ஸ்பெய்னிலிருந்து தென்னமெரிக்கா சென்ற பாதிரியார்களில் ஒருவரான பார்த்தொலோமெ தெ லாஸ் காஸாஸ் (Bartolome de Las Casas) எழுதிய A Brief Account of the Destruction of the Indies என்ற 50 பக்க புத்தகத்திலிருந்து ஒரு ஐந்து பக்கங்களையாவது மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். இந்தத் தொடருக்காக 1552-இல் எழுதப்பட்ட அந்த நேரடி சாட்சியத்தை முழுமையாகப் படித்தும் மேற்கோள்களை எடுத்து எழுதவில்லை. காரணம், இப்படியே இது ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும். அந்த நீட்சியைத் தவிர்க்கவே ஸ்பெய்ன் பற்றி எழுதும் போது அங்கே இஸ்லாமியர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பது பற்றித் தொடவில்லை. என்னுடைய இப்போதைய தேவை கருதி கிறித்தவம் அங்கே இஸ்லாமை எப்படி ஒடுக்கியது என்பது பற்றி மட்டுமே கவனம் செலுத்தினேன். எழுதும்போது மனதில் ஒரு எண்ணம் ஓடியது, இது நியாயமா என்று. ஆனால் அதற்குள் நுழைந்தால் அது ஒரு நூறு பக்கம். என் வாசகர்கள் யாரும் முகநூலில் உலவும் மொக்கைகள் அல்ல என்பது என் அருமை வாசக நண்பர் அருண்மொழிவர்மனின் கடிதம் படித்த போது தெரிந்தது. சென்ற ஆண்டு அவந்திகாவும் நானும் எங்கள் குடியிருப்பில் ட்ரில்லிங் போட்டதால் தெருத்தெருவாக சர்விஸ் அபார்ட்மெண்ட் தேடி அலைந்து கொண்டிருந்த போது எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதிய பல நண்பர்களில் அருண்மொழிவர்மனும் ஒருவர். ஆனால் அவந்திகாவுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதால் அங்கே செல்லவில்லை. அருண்மொழிவர்மன் கோவையில் வசிப்பவர். மேலும், நாங்கள் இருவருமே கடந்த 26 ஆண்டுகளில் சேர்ந்து ஜோடியாக எங்குமே சென்றதில்லை. வாழ்நாள் பூராவுமே எங்களைச் சார்ந்து ஏதேனும் நாயோ பூனையோ இருந்து வருவதால் இருவராக எங்கேயும் சென்றதில்லை. அவள் கூட ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றரை நாட்கள் ஆன்மீக செமினாருக்காக வெளியூர் செல்வாள். அவளுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு லெப்டோஸ்பைரோஸிஸ் ஜுரம் வந்து பிழைத்ததிலிருந்து வழக்கமாக நாம் சாப்பிடும் எந்த உணவும் ஒத்துக் கொள்ளாது. மிக மிக சாதுவான அரிசிச் சோறும்… எதற்கு விவரித்துக் கொண்டு? யோகிகள் சாப்பிடுவது போல்தான் சாப்பிட வேண்டும். அவளுக்குத் தேநீர் ரொம்பப் பிடிக்கும். ஆனால் குடிக்க முடியாது. குடித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ்தான். அதனால் இங்கேயே வீட்டுக்குப் பக்கத்தில் சர்விஸ் அபார்ட்மெண்ட் பார்த்துக் கொண்டோம். ஆனால் அது அத்தனை சுலபமானதாக இல்லை. லோக்கல் ஆட்களுக்குத் தரக் கூடாது என்று ஒரு விதி. தந்தால் இளம் ஜோடிகள் வந்து தங்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுத்து விடுவார்கள். அது தனிக்கதை. அந்த அருண்மொழிவர்மன் தான் இன்று ஸ்பெய்ன் விஷயம் பற்றிக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம்:
Dear Charu,
It was the Romans who derived the name Hispania. The history of Spain travels from Romans, Gothics and then to Turk tribes.
So Spain was not an Islamic state as you mentioned in the blog and later that was invaded and occupied by Christians. This is complete distortion of truth and history.
Christian invasions are very much similar and Synological to Islamic Turk invasions. I lived in Saudi for many years. In Jeddah there are still many places where there were Churches existing before Islam gained its roots in Mecca which is 30 minutes drive from Jeddah.
Similar to Spanish invasion of beautiful and god’s own continent South America, it was the Turkish tribal army under the leadership of Muhammad started invading various parts of middle East like S. Arabia, Iraq, Jordan, Lebanon, Libya which once belonged to Romans, Coronthians, Christians in the chronological order and lastly invaded and occupied by Turkish tribes who emerged from Saudi Arabian deserts. They entered Europe through Turkey and later marched to Spain.
They dethroned the Iberians and claimed Spain. They occupied and ruled Spain few centuries and tried converting into an Islamic state. But later it was claimed back again by the Christian rulers and remained Christian state.
Under the Islamic Caliphate Turkish tribal invasion so many countries were converted to Islamic states similar to the South American and European invasion for Christians. Both the religions were converting countries by bloody war, sword and guns.
The two countries in the world that retaliated and escaped their invaders is India and Spain especially Islamic ones.
So please refrain from falsifying and distorting history as your heart is close to philosophy of Islam which is purely your personal choice and belief that nobody has the right to poke or barge in.
Good day to you.
ARUNMOZHIVARMAN V.
இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பது முழுக்கவும் வரலாறு. யாரும் மறுப்பதற்கில்லை. என் கட்டுரையில் நான் இதையும் குறிப்பிட்டிருக்கத்தான் வேண்டும். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி. ஆனால் இஸ்லாமிய ஆதிக்கத்தை நான் குறிப்பிடாததற்கு இன்னொரு முக்கிய காரணம், நாம் இப்படி வரலாற்றைப் பின்னோக்கியே பார்த்தால் அப்புறம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததையும் சொல்ல வேண்டியிருக்கும் இல்லையா? என்னுடைய மையப்புள்ளி கிறித்தவம் ஸ்பெய்னில் வசித்த இஸ்லாமியர்களை எப்படி அழித்தொழித்தது அல்லது மதம் மாற்றியது என்பதைப் பற்றியது. வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றி எழுதும் போது அதற்கும் முன்னால் துருக்கியர், அதற்கும் முன்னால் ரோமானியர் என்றும் செல்வது தேவையற்றது என்று தோன்றியது. மேலும், மதம் என்பதே மனித குலத்துக்கு எதிரானதாகத்தான் இதுவரை இருந்து வந்துள்ளதை இதுகாறும் நடந்த போர்கள் நிரூபிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் நடந்த போர் ஒரு உதாரணம்.
அருண்மொழிவர்மனின் கடிதத்தில் இன்னொரு விஷயத்தையும் புன்னகையுடன் கவனித்தேன். ”உங்கள் மனம் இஸ்லாமியத் தத்துவத்துக்கு நெருக்கமாக உள்ளது என்பதால் வரலாற்றைத் திரிக்காதீர்கள்.” அருண்மொழி இப்படிக் கூறுகிறார். ஆனால் நான் ஒரு இந்துத்துவா, இஸ்லாமிய விரோதி என்று பல இஸ்லாமிய நண்பர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான என் சுருக்கமான பதிலை நாளை எழுதுவேன். அருண்மொழி எழுதுவது உண்மைதான். என்னிடம் ஒருவித இஸ்லாமிய சாய்வு உண்டு. அதற்குக் காரணம், கலாச்சார ரீதியானது. ஆனாலும் அதற்காக தப்லீக் ஜமாத்தின் சமீபத்திய நடவடிக்கையை என்னால் நியாயப்படுத்த முடியாது.
***
புவியின் கடிதத்துக்கு நான் எழுதிய பதில் குறித்து அராத்து முகநூலில் எழுதியதை இங்கே கவனிக்கத் தக்கது.
சாருவுக்கு புவி எழுதிய கடிதத்தில், சாருவிடம் நிறைய கண்டெண்ட் இருக்கிறது, நிறைய படித்திருக்கிறார் என்ற அர்த்தம் வருவது போல எழுதி இருந்தார். அதில் ஏதும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சாருவின் அடையாளம் இது அல்ல.
ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் படிக்காத படிப்பா? சாருவின் வயதொத்த எழுத்தாளர்களில் பலரும் வண்டி வண்டியாகப் படித்துக் குவித்து இருக்கிறார்கள். இப்போது அது சுண்டைக்காய் போல அருகி விட்டது வேறு விஷயம்.
சாருவின் தனித்தன்மையாக நான் பார்ப்பது, அவர் எதை எல்லாம் தேர்ந்தெடுத்துப் படித்தார் மற்றும் அதை எப்படி அர்த்தம் செய்து நமக்குக் கொடுத்தார் என்பதைத்தான். ஏனென்றால் நம் நாட்டில் தகவல் வங்கி போல எல்லாவற்றையும் படித்து மண்டைக்குள் தகவல்களாகவே சேகரித்துத் திரிபவர்கள் ஏராளம். அந்தத் தகவல் வெறும் தகவலாகவே இருக்கும். ஆய்வு செய்ய மாட்டார்கள்.
கல்வி கரையில கற்பவர்
நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
இந்த நாலடியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
அராத்துவின் குறிப்பின் இறுதியில் கொடுத்திருந்த நாலடியார் பாடலின் அர்த்தம் என்ன என்று சிலர் கேட்டிருந்தனர். கல்வி என்பது கரை காண முடியாத கடல். கற்பவரின் நாட்களோ (ஆயுள்) கொஞ்சம்தான். இதில் கொரோனா அது இது என்று வேறு வந்து கொஞ்ச காலத்தைச் சாப்பிட்டு விடுகிறது. மீதி இருக்கும் சொற்ப காலத்தில் அறிவுடையோர் என்ன செய்கின்றனர் என்றால், நீர் கலந்த பாலிலிருந்து நீரைப் பிரித்து விட்டுப் பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல தனக்குப் பயனற்ற நூல்களைத் தவிர்த்து விட்டு சிறந்த நூல்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இங்கே சிறந்த என்றால் என்ன? இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அவரவரின் தத்துவ, அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் அமையும்.
ஏற்கனவே ஒரு இடத்தில் எழுதியிருந்தேனே, ஆல்பெர் கம்யு எழுதிய Algerian Chronicles என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று? ஏன்? இஸ்லாமியர் வசித்த அல்ஜீரியாவை ஐரோப்பியக் கிறித்தவ ஃப்ரான்ஸ் தன் காலனியாக்கிக் கொண்டு ஆண்டு வந்த போது அல்ஜீரியாவில் ஃப்ரெஞ்சுக்காரர்களும் ஏனைய ஐரோப்பியரும் மொத்தம் பத்து லட்சம் பேர் வாழ்ந்தனர்.
1956 ஜனவரி மாதம். ஓட்டல் அல்-ஜஸேய்ர் (El-Djazair) – அந்த ஓட்டலின் முன்னாளைய பெயர் ஓட்டல் செயிண்ட் ஜார்ஜ் (இந்தப் பெயர் விபரங்கள் எல்லாம் மிகவும் முக்கியம்). பதினாறு ஆண்டுகள் பாரிஸில் வசித்து விட்டுத் தன் தாய்நாடான அல்ஜீரியாவுக்குத் திரும்புகிறார் ஆல்பெர் கம்யூ. இஸ்லாமிய மக்ரீப் நாடுகளின் அல்-காய்தாவுக்கும் ஃப்ரெஞ்ச் ராணுவத்துக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஸஹாரா எண்ணெய் கம்பெனியில் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பலருடைய இறந்து போன உடல்கள் ஓட்டல் வாசலில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. ஆல்பெர் கம்யூவைக் கொன்று விட ஃப்ரெஞ்ச் வலதுசாரிகள் ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். கம்யூ எனக்கு ஒரு இலக்கியவாதியாக அல்ல; ஒரு அல்ஜீரியனாகவே ஈர்த்துக் கொண்டே இருக்கிறார். ஃப்ரெஞ்ச் காலனியாதிக்கவாதிகள் எப்படி அல்ஜீரியர்களை அடிமைப்படுத்திச் சுரண்டினார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்து எழுதியவர் கம்யூ. கம்யூவின் வாழ்நாள் முழுவதுமே அவரது தாய்நாடு பற்றிய அவரது ஏக்கம் அவர் எழுத்துக்களில் இருந்து கொண்டே இருந்தது. அவரது புகலிடமான ஃப்ரான்ஸில் அவர் வாழ்நாள் முழுதுமே ஒரு அந்நியனாகவே இருந்தார். அவரது உலகப் புகழ்பெற்ற ப்ளேக், அந்நியன் என்ற இரண்டு நாவல்களின் களமுமே அல்ஜீரியாதான். அவரது கட்டுரைகள் முழுக்கவும் அல்ஜீரிய நினைவுக் குறிப்புகளாகவே இருக்கின்றன. ஆனாலும் அல்ஜீரியா கம்யூவுக்கு நன்றி செலுத்தவில்லை. அங்கேயும் கம்யூ ஓர் அந்நியன். அல்ஜீரியாவின் பள்ளிப் புத்தகங்களில் கம்யூ இல்லை. புத்தகக் கடைகளிலோ நூலகங்களிலோ கம்யூவின் நூல்கள் இல்லை. அல்ஜீரியா கம்யூவின் நினைவை சுத்தமாகத் துடைத்தெறிந்து விட்டது என்கிறார் அல்ஜீரிய நாவலாசிரியர் Hamid Grine. இதில் வரும் கதைசொல்லி தன் உண்மையான தந்தை ஆல்பெர் கம்யூ என்று கண்டுபிடிக்கிறான்.
2010இல் கம்யூவின் ஐம்பதாவது நினைவு நாள் வந்தது. அதன் பொருட்டு கம்யூவின் எழுத்துக்களை அல்ஜீரியாவின் ஏழு நகரங்களில் வாசிப்பது என்ற ஒரு திட்டத்தை அல்ஜீரியாவின் சில புத்திஜீவிகள் ஏற்பாடு செய்தபோது அந்த வாசிப்புத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனென்றால், அல்ஜீரியப் போராளிகளுக்கும் அல்ஜீரியாவில் இருந்த ஃப்ரெஞ்ச் ராணுவ ஆட்சிக்கும் நடந்த உள்நாட்டுப் போரில் ஒரு லட்சம் பொதுமக்கள் இறந்து போயிருந்தனர்.
தொடரும்…