என் எழுத்தின் வாசனை கூட அறியாதவர்கள் “நம்ம மதத்தைத் திட்டி எவனோ சாரூன்னு ஒருத்தன் எழுதியிருக்கான், பாத்தியா?” என்று நண்பர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு, பூச்சியைப் படித்து விட்டு என்னைத் திட்டி கடிதம் எழுதும் அன்பர்களுக்கு இனிமேல் பதில் எழுதுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். ஏனென்றால், என் எழுத்தோடு பத்து வருடப் பரிச்சயம் உள்ளவர்களே தப்பும் தவறுமாகப் புரிந்து கொள்ளும் நிலையில் இப்படிப் புதிதாக வரும் அசடுகளைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை. இப்படி எழுதுபவர்கள் இந்து மற்றும் இஸ்லாம் என்ற இரண்டு தரப்பினரும்தான். ஒரு தரப்பு மட்டுமே இல்லை. இந்து ஆதரவாளர் என்னை இஸ்லாமியரின் சார்பாகப் பேசுவதாகவும், இஸ்லாமியர் என்னை இந்துத்துவா என்றும் மோடி ஆதரவாளன் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எல்லோரும் அல்ல; ஒரு சிலர். ஒரு இந்துத்துவர் என்னை தி.க.வுக்கு வேலை செய்கிறவன் என்கிறார். பெரியாரின் ஆவி அவரைச் சும்மாவே விடாது. இந்துத்துவவாதிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இஸ்லாமிய அன்பர்களுக்கு சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலில் நான் உடல் ரீதியாகவே இஸ்லாமிய அடையாளத்தோடு வாழ்கிறேன். இப்போதைய சமாதான காலத்தில் பிரச்சினை இல்லை. இனி வரப் போகும் காலம் இப்படி இருக்காது. மதக் கலவரங்கள் சூழும் காலமாகவே இருக்கும். அந்த நிலைமைக்கு இரு சாராருமே சம அளவில் காரணம். மோடி பதவிக்கு வந்த பிறகு இஸ்லாமியர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதி இல்லை என்பது போலவே எல்லா இந்துவும் இந்துத்துவா இல்லை. சொல்லப் போனால் இந்துக்களில் பாதிப் பேர் தங்கள் மத அடையாளத்தைப் புறக்கணித்து விட்டு முற்போக்குகளாகவும், கம்யூனிஸ்டுகளாகவும், இடதுசாரிகளாகவும், நாத்திகர்களாகவும், மதச்சார்பு இல்லாதவர்களாகவுமே இருக்கின்றனர். மோடியின் இரண்டாவது தேர்தலில் கிறித்தவக் கல்விக் கூடங்களில் மோடிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் நடந்ததை நான் கண்கூடாகவே பார்த்தேன். அதேபோல் மெக்காவில் மோடி வெற்றி பெறக் கூடாது என்று சில தமிழ் முஸ்லீம்கள் தொழுகை நடத்திய காணொலியையும் பார்த்தேன். இந்தக் காணொலியைப் பல லட்சம் இந்துக்கள் பார்த்தார்கள். பார்த்த அத்தனை பேரும் மோடிக்கு ஓட்டுப் போட்டார்கள். பார்த்த போதே பதறினேன், அடக் கடவுளே, இது மோடிக்கு ஆதரவாக அல்லவா போகும் என்று. அதற்காக மோடியை எதிர்க்கவே கூடாதா என்று கேட்கலாம். உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியவில்லை. எதிர்க்கலாம். ஆனால் இந்த மாதிரி அல்ல. அப்படி எதிர்க்கும்போது ஒரு இந்து – இதுவரை மதச்சார்பற்றவனாக இருந்தவன் – இப்போது ஒருங்கிணைகிறான். இந்த ஆபத்தை மட்டுமே நான் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். இதைச் சுட்டிக் காட்டினால் நான் மோடி ஆதரவாளனா? என்னையே நீங்கள் மோடி ஆதரவாளன் என்று சொன்னால் நாளை உங்களோடு யார் இருப்பார்? நீங்கள் மட்டுமேதான் உங்களைப் பற்றிப் பேச வேண்டும். அது பற்றிக் கவலையில்லை என்று நீங்கள் நினைத்தால், திரும்பத் திரும்ப மோடிதான் வருவார். நஷ்டம் இஸ்லாமியருக்கும் என்னைப் போன்ற புத்திஜீவிகளுக்கும் ஒட்டு மொத்த இந்திய சமூகத்துக்கும்தான்.
சில எதார்த்த நிலைகளை முஸ்லீம்கள் கண் கொண்டு பார்க்க வேண்டும். இதெல்லாம் இந்துக்கள் என்னிடம் சொன்ன கதைகள். யோகேஷ் என்று ஒரு அன்பர். அவருடைய அலுவலக சகா காதர். யோகேஷுக்கு ஒரு பையன். இப்போது 35 வயது. கேரளத்தின் மா அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டான். அமெரிக்காவில் உத்தியோகத்தில் இருந்தவன். இப்போது ஆசிரமத்தில் இருக்கிறான். காதருக்கு நான்கு குழந்தைகள். யோகேஷ் காதரிடம் இந்தக் காலத்தில் இப்படி நான்கு குழந்தைகளை வளர்க்க எப்படிக் கட்டுப்படி ஆகிறது என்று கேட்கிறார் யோகேஷ். காதர் சொல்கிறார்: நம் சந்ததியை இந்த உலகத்தில் வளர்த்து விடுவதை விட வேறு என்ன கடமை நமக்கு இருக்கிறது யோகேஷ்? யோகேஷ் என்னிடம் சொன்னார், ”நான் மிகப் பெரிய தப்பு செய்து விட்டேன். நானும் ஒரு நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு ரெண்டாவது. இப்போது பாருங்கள், என்னோடு என் வம்சமே அழிந்து விட்டது.” ஏனென்றால், அவரும் அவர் பெற்றோருக்கு ஒரு குழந்தைதானாம். இப்படியாகத்தான் இந்துக்கள் அஞ்சுகிறார்கள், எங்கள் மதம் அழிந்து விடும் என்று. இதற்கு மோடி என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. ஒரு கலாச்சாரம், ஒரு மதம், ஒரு இனம், ஒரு மொழி அழிந்து போகிறது என்றால், அதன் அழிவுக் கூறுகளை அது தன்னுள்ளேயேதான் கொண்டிருக்கிறது. அழிவு வெளியிலிருந்து வருவதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது ஒரு மதத்துக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டமே இன்று இல்லாமல் போகவில்லையா? ஆனால் எத்தனையோ மொகலாயப் படையெடுப்புகளாலும், மொகலாய சாம்ராஜ்யங்களாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்ளைக் கூட்டத்தாலும் அழியாத இந்து மதம் இப்போதைய இந்திய இஸ்லாமியர்களாலா அழிந்து விடப் போகிறது? இன்னொரு விஷயம். பணம் பணம் என்று மனிதர்கள் பணத்தையே வழிபாடு செய்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் உண்மையான இந்து தர்மம் எங்கே இருக்கிறது? கோவிலுக்குப் போவதெல்லாம் ஒரு மத அடையாளமா என்ன? அங்கே போகும் பக்தர்களுக்கு சுயநலத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது? எல்லா உயிர்களிடத்தும் பிரம்மத்தைக் காண்பவனே ஒரு உண்மையான இந்து. அப்படிப் பார்த்தால் காதரிடமும் இப்ராஹீமிடமும் கூட அவன் பிரம்மத்தையே காண வேண்டும். நான் அப்படிக் காண்கிறேன். ஆனாலும் நான் ஓர் இந்து அல்ல. ஏனென்றால், நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். நான் ஒரு இறை நம்பிக்கையாளனாக இருந்தாலும் மதத்தை விரும்பாதவன். மதம் மனிதனைப் பிரிக்கிறது. மதத்தின் பெயரால்தான் இங்கே கோடிக்கணக்கான பிணங்கள் விழுந்திருக்கின்றன. இஸ்லாத்துக்குள்ளேயே ஸன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் எத்தனை சண்டை? இன்று சிரியாவே பிணக்காடாக மாறியதற்கு யார் காரணம்? வேண்டாம், அந்த அரசியலுக்குள் செல்ல வேண்டாம்.
ஒரு உண்மையான வைஷ்ணவனின் அடையாளம் என்ன என்று பத்ம புராணம் சொல்லுகிறது. அதாவது பகவான் விஷ்ணுவே இதைச் சொல்லியிருக்கிறார் என்கிறது புராணம்.
காமமும் கோபமும் இல்லாதவன்; பிறருக்குத் தீங்கு இழைக்காதவன். பேராசையும் பொறாமையும் இல்லாதவன். அன்பே உருவானவன். உண்மையே பேசுபவன். இவனே உண்மையான வைஷ்ணவன்.
என்னையும் உன்னையும் சங்கரனையும் சமமாக பாவிப்பவன். பாகவதத்தையும் சாளக்கிராமக் கல்லையும் தன் இல்லத்திலே எப்போதும் வைத்திருப்பவன் வைஷ்ணவன். பசியாலும் தாகத்தாலும் தவிப்பவர்களுக்கு உணவும் நீரும் அளிப்பவன். தாவரங்களைப் பராமரித்து அரச மரத்தை வளர்ப்பவன் வைஷ்ணவன்.”
இத்தனை விரிவான வியாக்யானத்தை ஒரு பக்திப் பாடலாக பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தா அற்புதமான பஜனாகப் பாடியிருக்கிறார். அதுதான் மகாத்மாவின் ஆசிரமத்தில்
பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவோ ஜனதோ பாடல். அதன் அர்த்தம் என்ன? நாமக்கல் கவிஞர் அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேளுங்கள்…
பிறருடைய துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.
மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.
கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.
இப்படிப்பட்டவனே உண்மையான இந்து.
***
என்னை இஸ்லாமிய விரோதி என்று நினைப்பவர்கள் முதலில் தப்புத் தாளங்கள் என்ற நூலைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அல்லது, குறைந்த பட்சம் அதில் உள்ள தொழுகையின் அரசியல் என்ற கட்டுரையை மட்டுமாவது படியுங்கள். நாத்திகனாக இருந்த என்னை மொராக்கோவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன் என்ற இஸ்லாமியர் எழுதிய The Blinding Absence of Light என்ற நாவல்தான் இறை நம்பிக்கையாளனாக மாற்றியது. காரணம் என்னவென்றால், இந்த நாவலில் ஒரு சிறைச்சாலை வருகிறது. இது உண்மையில் நடந்த கதை. ஹசன் மன்னனைக் கொல்ல ராணுவச் சதி நடந்த போது, அந்தக் கலவரத்தில் தப்பி விட்ட மன்னர் சதியில் ஈடுபட்டவர்களை ஒரு பாதாள இருட்டுச் சிறையில் அடைத்தார். ஆறுக்கு ஆறு அடி கொண்ட ஒரு இருட்டுப் பொந்து அது. வெளிச்சத்தின் ஒரு கீற்றைக் கூட பார்க்க முடியாது. கைதிகளில் யாராவது இறந்து விட்டால் மய்யத்துக்குச் செல்லும் போது மட்டும் கைதிகள் வெளியே வரலாம். ஒரு வேளை உணவும் நீரும் அந்த இருட்டுப் பொந்தில் வைக்கப்ப்படும். கழிவுகளைப் போக்க அதிலேயே ஒரு துளை இருக்கும். எல்லாமே கும்மிருட்டுக்குள்தான். பலரும் எலி, தேள் போன்ற ஜந்துக்கள் கடித்து இறந்து போகிறார்கள். சிலர் பைத்தியம் பிடித்து இறக்கிறார்கள். சிலர் வயிற்றுப் போக்கினால். மொத்தம் இருபது பேரில் ஐந்து பேர் மட்டும் எஞ்சுகிறார்கள். இப்படி அவர்கள் சுமார் பத்து ஆண்டுகள் அந்தப் பொந்துக்குள் வாழ்ந்து ஃப்ரெஞ்ச் அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டார்கள். அந்தப் பொந்தில் இத்தனை காலம் யாராலும் உயிர் வாழ முடியாது. அப்படியானால் இந்த ஐந்து பேரால் அது எப்படி முடிந்தது என்று விசாரித்த போது அந்த ஐந்து பேரும் Soul Travel என்ற அனுபவத்தைத் தொடர்ந்து அனுபவித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அதாவது, அடைக்கப்பட்ட அன்றிலிருந்து தொடர்ந்து – இடைவெளியே இல்லாமல் – ஒருவர் மாற்றி ஒருவர் குரானை ஓதிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் குரான் மனனமாகவே தெரிந்திருந்தது. அப்படி ஓதும் போது ஒரு கட்டத்தில் அவர்கள் மெக்காவில் இருந்ததாக உணர்ந்திருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் மெக்காவில் அவர்கள் பார்த்ததை நாவலில் கூறுகிறார்கள். அவர்களின் உடல்தான் அந்த இருட்டுப் பொந்தில் இருந்ததே தவிர ஆன்மா மெக்காவில் இருந்துள்ளது.
இதுதான் என்னை இறை நம்பிக்கையாளனாக மாற்றியது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, இறை நம்பிக்கை எனக்கு உயிர் வாழும் திறனையும் வலுவையும் கொடுக்கிறது. அந்த நூலில் சொல்லப்பட்டவை எதுவும் கட்டுக் கதை அல்ல; உண்மைச் சம்பவங்கள்.
***
என்னை இஸ்லாமிய விரோதி என்று விமர்சித்துக் கடிதம் எழுதியுள்ள அன்பர்களுக்கு ஒரு கேள்வி: தப்லிக் ஜமாத்தை விமர்சித்தால் நான் எப்படி இஸ்லாமிய விரோதி ஆவேன்? நான் உண்மையில் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்திருந்தால் கூட இது போன்ற விமர்சனங்களையே எதிர்கொண்டிருப்பேன். ஏனென்றால், இந்தியாவில் வசிக்கும் சில இஸ்லாமியர்களின் மன அமைப்பு அடிப்படைவாதத்தில் ஊறியிருக்கிறது. தவறான செயல்களில் ஈடுபடும் இந்து சாமியாரை யாரேனும் விமர்சித்தால் இந்துக்கள் யாரும் பொங்கி எழுகிறார்களா? இல்லையே? தப்லிக் ஜமாத் மாநாட்டில் கூடியவர்களில் பலருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிந்த பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி. மாநாட்டில் கூடியதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாத அவர்கள் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடன் அரசு ஊழியர்களுடன் ஒத்துழைத்துத் தனிமைப்பட்டு இருக்காமல் ஓடி ஒளிந்து விட்டார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. பலரும் இன்னும் கூட கிடைக்கவில்லை. அவர்களால் எந்த அளவு முடிகிறதோ அந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள். சென்ற வாரம் கூட தமிழ்நாட்டில் தனிமைப்பட்டிருந்த எட்டு எத்தியோப்பிய முஸ்லீம்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்கள். அவர்களும் தில்லி தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்களே. ஒரு சிலர் அவர்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த செவிலியர் மீது எச்சில் துப்பியிருக்கிறார்கள். ஒருவர் அம்மணமாக ரகளை செய்த காணொலியையும் பார்த்தோம். இது எல்லாமே என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இதையெல்லாம் ஒரு இந்துவான நானா கண்டிப்பது? யார் கண்டித்திருக்க வேண்டும்? இன்றளவும் எனக்கு தப்லிக் ஜமாத்துக்கு ஆதரவாகத்தான் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ நான் அவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லி விட்டதைப் போல என் மீது பிராது தொடுக்கிறார்கள். தப்லிக் ஜமாத்தினர் செய்த முட்டாள்தனமான காரியங்களால்தானே தமிழ்நாட்டில் இவ்வளவு பேருக்குத் தொற்று ஏற்பட்டது என்று கேட்டால், ஹைதராபாத் மந்திரி வீட்டில் நடந்த திருமணத்தால் தொற்று பரவவில்லையா என்று எதிர்க் கேள்வி! எதிர்க் கேள்வியால் நம் தரப்பு நியாயப்படுத்தப்பட்டு விடுமா? திருமணத்தில் என்ன உலக நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வந்தார்களா? மலேஷிய அரசே தப்லிக் ஜமாத்தும் மலேஷியாவில் தொற்று பரவியதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறதே, அப்படியானால் மலேஷிய அரசும் இஸ்லாமிய விரோதியா?
இது குறித்து தமிழ் இந்துவில் வெளிவந்த புதுமடம் ஜாபர் அலி எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்:
”சீனாவைக் கடந்து இத்தாலியும் ஜெர்மனியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இந்திய அரசு கொரோனாவைத் தடுக்கும் முன்செயல்பாடுகளை எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் இந்தியாவில் எல்லா மதங்களிலுமே ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் திருவிழாக்கள் நடந்துகொண்டிருந்தன. மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றாலும், ‘இது மிக ஆபத்தான விஷயமாயிற்றே!’ என்று வெளியிலிருந்து பார்த்தவர்களும் எல்லா மதங்களிலும் இருந்தனர். தப்லிக் ஜமாஅத் மாநாடும் அவற்றில் ஒன்று. என்னைப் போல எவ்வளவோ முஸ்லிம்கள் இந்த முட்டாள்தனத்தை இந்த விஷயம் தெரிந்தது முதலாகச் சாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நாடாளுமன்றக் கூட்டம்கூட நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை. மார்ச் 22 ‘நாடு தழுவிய சுய ஊரடங்கு’க்குப் பிறகே இந்தியச் சமூகம் கொரோனாவின் தீவிரத்தை உணரலானது. பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட மாநாடு அது, அழைக்கப்பட்டவர்கள் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரும் டெல்லிக்கு வந்துவிட்ட நிலையிலேயே மார்ச் 13 அன்று அந்த மாநாடு நடத்தப்பட்டுவிட்டது என்றெல்லாம் பிற்பாடு நியாயங்களை தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் சொன்னாலும், முட்டாள்தனம் அல்லது பொறுப்புக்கெட்டத்தனம் என்று மட்டுமே அதைச் சொல்ல முடியும். ஏனென்றால், மார்ச் 13 அன்றே டெல்லி அரசு ‘இருநூறு பேருக்கு மேலானோர் கூடும் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டதோடு, ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் அது அறிவுறுத்தியது. இந்த இரண்டு விதிமுறைகளையுமே தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் மீறியிருக்கிறார்கள். சட்டரீதியாக இதைப் பேசுவதைக் காட்டிலும், தார்மீகரீதியாகப் பேசுவது முக்கியம்.
இந்தியாவில் ஏறத்தாழ இருபது கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு; மொத்தமாக இந்த அமைப்புகள் இடையே ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. அமைப்புகள் இடையிலேயே இவ்வளவு வேறுபாடுகள் என்றால், இந்த அமைப்புகளுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் இடையே மட்டும் எப்படி ஒரே சிந்தனை இருக்க முடியும்? ஒரு மதத்தின் பெயரால், ஏதோ ஒரு சிறு அமைப்பு செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நான் மட்டும் அல்ல; எனக்குத் தெரிய பெரும்பான்மை முஸ்லிம்கள் தப்லிக் ஜமாஅத் மாநாடு எல்லா வகையிலும் முட்டாள்தனமானது என்றே நினைக்கிறோம்; அதை நியாயப்படுத்தும் ஒருவர் மத அடிப்படைவாதியாகத்தான் இருக்க முடியும்; அப்படி சிலர் இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் போன்றவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”
இதற்கும் மேல் இது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.
***
மோடி ஒரு ஃபாஸிஸ்ட் என்று நான் பலமுறை எழுதி விட்டேன். அதற்காக அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால், மோடி மத்திய அரசியலுக்கு வரும் முன்பாகவே நான் காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று எழுதியவன். அப்படியானால் அதை மோடி செய்து விட்டார் என்பதாலேயே எப்படி எதிர்க்க முடியும்? சுத்தப் பைத்தியக்காரத்தனம் அல்லவா அது? மேலும், குடியுரிமைச் சட்டத்திலும் அவர் என்ன எல்லா முஸ்லீமும் நாட்டை விட்டு ஓடுங்கள் என்றா சொன்னார்? வட கிழக்கு மாகாணங்களில் – குறிப்பாக அஸ்ஸாமில் – ஜனத்தொகையில் பல ஆயிரம் பேர் பாங்ளாதேஷில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களிடம் எந்தக் காகிதங்களும் கிடையாது. ஆவணங்கள் இல்லாமல் என்னால் ஃப்ரான்ஸில் போய் குடியேறி அந்த நாட்டின் குடிமகனாகி விட முடியுமா? அகதியாய் அலையலாம். அவ்வளவுதான். அதையேதான் அரசும் சொன்னது. நீ அகதி என்று. இவர்களோ நான் இந்தியக் குடிமகன்கள் என்றார்கள். இதற்காக பாலக்கரை முஸ்லீம் வீதிக்கு வந்து போராடிய போது இதை இந்துக்கள் ஊன்றி கவனித்ததை நான் கவனித்தேன். அதற்குள் கொரோனா வந்து விட்டது.
இப்போதும் சொல்கிறேன். உம்பர்த்தோ எக்கோ ஃபாஸிஸத்துக்கு 14 பொது குணாம்சங்களைச் சொல்கிறார். அவை அத்தனையும் மோடிக்கும் அவர் கூட்டத்துக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது.
1.பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி முழுமையாக மாற்றுதல்.
2. நவீனத்துவத்தை எதிர்த்தல்.
3. செயலுக்காகவே செயல்களில் ஈடுபடுதல். உ-ம். அமீத் ஷா. அதாவது, சிந்தனையைக் காயடித்தல். (இதை மாவோயிஸ்டுகளும் செய்வது வழக்கம்)
4.முரண்படுதல் தேசத் துரோகம்
5.மாறுபாடுகளின் மீதான பயம். (நீ மாட்டுக் கறி தின்பவனா? அப்படியானால் நீ என் எதிரி)
6. Frustration. பொருளாதார ரீதியாக மிகுந்த எரிச்சலுடன் இருக்கும் மத்தியதர வர்க்கம்தான் உடனடியாக ஃபாஸிஸத்துக்குள் தன்னை நுழைத்துக் கொள்ளும். அவர்களுடைய பொருளாதார நலிவுக்குக் காரணம் கிடைக்க வேண்டும்.
7. ஒரு எதிரியை உருவாக்குவது.
8. எளியவர்கள் மற்றும் வறியவர்கள் மீதான அருவருப்பு.
(இப்போதைய கொரோனா ஊரடங்கில் கூட இதை நீங்கள் காணலாம். Survival of the fittest. பட்டினி கிடக்கிறாயா? கிட. வாழ வழியில்லையா? செத்துப் போ. தினக் கூலியா? அதற்கு நான் என்ன செய்ய? நீங்கள்தானே சார் பிரதம மந்திரி? அதற்காக 135 கோடி ஜனத்துக்கும் நானா ரொட்டியும் சப்ஜியும் கொடுக்க முடியும்? எக்கேடாவது கெட்டுப் போ. உனக்குத் திறமையிருந்தால் படித்து முன்னேறியிருக்கலாம்தானே? என்னையே பார். டீக்கடையில் நின்றவன் இன்று இந்த தேசத்துக்கே ராஜா. உனக்குத் துப்பு இல்லை.)
9. நீ ஹீரோ. (ஹீரோ என்றால் தியாகம் செய்ய வேண்டும். உயிர்த் தியாகம். தேசத்துக்காக. தேச முன்னேற்றத்துக்காக. பாரம்பரியத்துக்காக. செய் அல்லது செத்து மடி. தேசத் துரோகிகளைக் கொன்று விட்டு சிறைக்குச் செல்லுங்கள். மதக் கலவரமும் இந்த ஹீரோயிஸம்தான்!)
10. ஆணாதிக்கமும் ஆயுதம். (டேய் நான் ஆம்பளை!)
11. மொழியைக் குறுக்கு. மொழி செழுமையானால் சிந்தனை வளரும். சிந்தனை ஃபாஸிஸத்தின் எதிரி.
இன்னும் சில உள்ளன. எல்லாம் மோடியையும் அவரது கோஷ்டியையும் நேரில் பார்த்து எழுதியது போல் உள்ளது. ஆனால் மோடி வருவதற்கு முன்பே எழுதியது.
ஆனாலும் மோடி அதிர்ஷ்டக்காரர். தொழில்களெல்லாம முடங்கிப் போய் நாடு படுகுழியில் கிடந்தது. இப்போது அதை கொரோனாவின் தலையில் போட்டுத் தப்பி விடுவார். Hunters சீரீஸில் ஒரு காட்சி. நாஜி யூதனிடம் கேட்கிறான்.
”நீ இத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருக்கிறாயே? உன்னுடைய டாலர் அழுக்குப் படிந்ததுதானே? (ஊழல் செய்து சம்பாதித்த பணம்தானே என்கிறான்.) நீ எப்படி அறம் பேச முடியும்?”
“அழுக்குப் படிந்திருந்தால் பரவாயில்லை. கழுவி விடலாம். ஆனால் உன் டாலரில் ரத்தம் படிந்திருக்கிறது. எவ்வளவு கழுவினாலும் போகாது.”
அதேபோல் மோடியின் ரூபாய் நோட்டுக்களில் ரத்தம் படிந்திருக்கிறது.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai