பூனைகளைப் பற்றி எழுதக் கூடாது என்று என் நண்பர்களில் பலரும் என்னிடம் அபிப்பிராயம் சொன்னபடியே இருக்கிறார்கள். நானும் கொஞ்சம் ஜனநாயகபூர்வமானவன் என்பதால் அவ்வப்போது எழுதாமலும் எழுதியும் இருந்து வருகிறேன். நாளை சந்திப்புக்காக ட்யூரின் ஹார்ஸ் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் என்று அமர்ந்த போது லேசாக முகநூலை எட்டிப் பார்த்தேன். ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு மாதமே ஆன ஒரு அதிரூப பூனைக் குட்டியைச் சித்ரவதை செய்து காணொலியாகப் போட்டிருப்பதைக் கண்டேன்.
ஹிட்லரே தன்னுடைய நாஸி பிரச்சாரத்துக்காக எடுத்த சித்ரவதைக் கூடங்களின் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான குழந்தைகளை விஷவாயுக் கூடங்களுக்கு உள்ளே அனுப்பும் காட்சிகள். மனிதர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களின் உடல்களிலிருந்து பற்களைப் பிடுங்குவது, பரிசோதனைக்காக உடலில் அமிலங்களை ஊற்றுவது போன்ற காட்சிகளும் அந்தப் பிரச்சாரப் படங்களில் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் நாயை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசும் காட்சி. சீனாவில் நாயை உயிரோடு எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கும் காட்சி. ஆனால் இன்றைய காட்சியைப் போன்ற குரூரமான காட்சியை என் 66 வயதில் பார்த்ததில்லை. ஏசி அறையில் அமர்ந்திருந்த போதும் சட்டையே நனையும் அளவுக்கு வேர்த்து நெஞ்சு வலியும் வந்து விட்டது. உடனே காணொலியை நிறுத்தி விட்டு தியானம் செய்தேன். மூன்று பேர் அந்தச் சித்ரவதையைச் செய்கிறார்கள். அதில் ஒருத்தி அம்மாக்காரி. ஒரு டீன் ஏஜ் பெண். ஒரு எட்டு வயதுச் சிறுமி. எல்லோர் காலிலும் உயர்ரக நெயில் பாலிஷ் போட்டிருக்கிறது. வீட்டைப் பார்த்தால் அப்பர் மிடில் கிளாஸ் என்று தெளிவாகத் தெரிகிறது. பூனைக்குட்டியின் கழுத்தில் கட்டியுள்ள கயிறை அம்மாக்காரி கையில் பிடித்துக் கொண்டிருக்கிறாள். பூனைக்குட்டியை அங்கும் இங்கும் ஓட விடாமல் கெட்டியாகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு பூனையின் காலை தன் குதிகாலால் தன் பலம் கொண்ட மட்டும் நசுக்குகிறாள். பிறகு இன்னொரு காலை நசுக்குகிறாள். பூனை கதறுவது கேட்கிறது. மற்றவர்களின் குரலும் கேட்கிறது. இரண்டு கால்களும் நசுங்கி விட்டன. இப்போதும் பூனைக்குட்டி கதறிக் கொண்டே இருக்கிறது. இப்போது பூனையின் வயிற்றைத் தன் பலம் கொண்ட மட்டும் குதிகாலால் நசுக்குகிறாள். மற்ற டீன் ஏஜ் பெண்ணும் ஒரு பையனும் இன்னொரு பத்து வயதுப் பெண்ணும் பூனைக்குட்டியின் மேலே மேலே ஏறி ஏறி நசுக்குகிறார்கள். ஒருத்தி பூனையின் தலையை நசுக்கிறாள். எல்லோரும் பெண்கள். நவநாகரீகமாக உடையணிந்த பெண்கள். வெள்ளை வெளேரென்ற தோல் கொண்டவர்கள். தரை மொஸைக் போட்டிருக்கிறது. அல்லது, டைல்ஸா? எனக்கு விபரம் தெரியவில்லை. மொத்தத்தில் பளபள தரை. பூனையின் ரத்தம் தரையில் தெறிக்கிறது. எல்லாமே மிகத் துல்லியமாக படம் எடுக்கப்படுகிறது. க்ளோஸப்பில் எடுக்கப்பட்ட படம். ஒருத்தி பூனையின் தலையை நசுக்கி கண்கள் பிதுங்குவதை ரசிக்கிறாள். எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவராக ஏறி ஏறி மிதித்துத் துவைக்கிறார்கள். பூனை செத்துப் போனது கூட தெரியாமல் ஏறி ஏறி மிதித்துக் கொண்டே இருக்கிறார்கள். வட இந்தியாவில் நடந்திருக்க வேண்டும்.
இந்த நால்வரையும் பிடித்தால் மூவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பார்கள். இரண்டு ஆண்டுகளில் அந்தச் சிறுமிகள் வெளியே வந்து விடுவார்கள். படித்த படிப்பு கூட வீணாகாமல் இரண்டு ஆண்டுகளைக் கடந்து மேலே செல்லலாம். அந்த அம்மாக்காரி அநேகமாக பெயிலில் வந்து விடுவாள்.
ஆனால் இயற்கையின் சட்டம் நம் இந்தியச் சட்டம் மாதிரி இல்லை. அவளுடைய இரண்டு கண்களும் போகும். அந்தக் குழந்தைகளுக்கு கை கால்கள் முடமாகி கண்கள் குருடாகி பிச்சை எடுக்கும். அதனால்தான் நான் கடவுளை நம்புகிறேன். பூகம்பம் வந்தால் எல்லோரும் மடிகிறோம் இல்லையா? இந்தச் சம்பவம் நடந்த தேசத்தில் இன்னும் இன்னும் இன்னும் கொரோனா வைரஸ் வந்து தொற்றி மனிதர்களை அழிக்கும். இதை அனுமதிக்கும் சமூகம் இன்னும் இன்னும் இன்னும் சீரழியும். நாஸ்திகர்களைப் போன்ற முழு மூடர்களை என்னால் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. எப்படி இந்த அளவுக்கு மூடத்தனம் சாத்தியம் என்றே தெரியவில்லை. மனிதர்கள் செய்யும் அயோக்கியத்தனத்துக்கும் காவாளித்தனத்துக்கும் கடவுள் என்னடா செய்வான் மூடனே?
குறிப்பிட்ட காணொலி முகநூலில் வலம் வருகிறது. நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேரால் அதைப் பார்க்க முடியாது. இந்தியச் சட்டம் ஒரு மயிரையும் புடுங்காது. அந்த நால்வரையும் வெளியே விட்டு விடும். எனவே சட்டத்தின் முன்னே கொண்டு போய் பிரயோஜனம் இல்லை. அந்த நால்வரையும் இறை சக்தி தண்டிக்கும். விலங்குகளை குரூரமாக சித்ரவதை செய்யும் சமூகம் நாசமாய்ப் போகும்.