காயத்ரி ஆசைப்பட்டதும் அவள் வீட்டுக்குக் கடவுள் அனுப்பி வைத்த பூனை பற்றிய ஒரு முக்கியமான விஷயம், அது ஒரு காலிகோ பூனை. காலிகோ பூனைகள் அதிர்ஷ்டமானவை என்பது ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் நம்பிக்கை. காலிகோ பூனைகள் மஞ்சள், கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கும்.
அநேகமாக காலிகோ பூனைகள் பெண் பூனைகளாகவே இருக்கும். எங்கள் வீட்டு ஸிஸ்ஸி அதன் முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் போட்டு – அப்போது அது எங்கள் வீட்டில் வசிக்கவில்லை, தெருவில் வசித்தது – இரண்டு குட்டிகளையும் மழையில் சாகக் கொடுத்து விட்டது. அந்த இரண்டில் ஒன்று காலிகோ. பிறகு கர்ப்பத்தடை சிகிச்சை செய்வதற்கு முன் ஒரே ஒரு குட்டி போட்டது. அது காலிகோ. அப்போது காலிகோ பற்றி எதுவும் தெரியாது. தெரியாமலேயே அதற்கு லக்கி என்று பெயரிட்டோம். அதுவும் பெண் பூனைதான். போன ஜென்மத்தில் குரங்காக இருந்திருக்கும் போல, பார்க்க பூனை போல் இருந்தாலும் சேஷ்டையெல்லாம் குரங்கு சேஷ்டைதான். டாட்டூவும் (காயத்ரி வீட்டு காலிகோ) குரங்குதானாம். ஒருவேளை எல்லா காலிகோவும் இப்படித்தான் இருக்குமா? தியோடர் பாஸ்கரன் அவர்களிடம் கேட்க வேண்டும்.
***
Dear Sir,
பூச்சி கட்டுரைகள் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிகவும் அற்புதமான விஷயங்களை, உலக இலக்கியம் முதல் சினிமா வரை தெரிந்து கொள்கிறேன் உங்களால். மிக்க நன்றி.
மதுக்கடைகள் திறப்பது பற்றி, பூச்சி 61 பகுதியில் நீங்கள் கூறியது குறித்து:
நேற்று மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. எனது தூரத்து சொந்தக்காரர், அவருக்கு இரண்டு பிள்ளைகள். தூக்கு மாட்டி இறந்து விட்டார். காரணம் நீண்ட நாட்களாக, அவருடைய நெருங்கிய சொந்தங்களுடன் பிரச்சனை. நீண்ட நாள் பிரச்சினைக்கு நேற்று தற்கொலை செய்து கொள்ள காரணம் நேற்று எளிதில் கிடைத்த மது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
தற்கொலைக்கு, பிரச்சனைதான் காரணம் என்றால், கடை பூட்டிக் கிடந்த, இத்தனை நாட்களில் அவர் செய்யவில்லை.நேற்று செய்து கொண்டார்.
என் நண்பனின் தம்பி, நேற்று “தண்ணிய போட்டு பண்ணிய வம்புச் சண்டையில், அவன் குழந்தை மனைவியோடு வேறு வீட்டுக்கு சென்று விட்டான்.
பக்கத்து வீட்டில், மனைவியை அடித்து அந்தம்மா வாயெல்லாம் ரத்தம். இது எல்லாம் கடை திறக்காததற்கு முன் நடக்கவில்லை என்பதை நினைவு படுத்துகிறேன். என் கண்ணுக்குத் தெரிந்து இதெல்லாம்.
நேற்று மட்டும் எத்தனை மனைவிகள் அடி, உதை வாங்கி, வீங்கிய முகத்துடன் இன்றைய நாளை தொடங்கினார்கள், தாய் தந்தை சண்டையால் எத்தனை குழந்தைகள் முந்தைய இரவு சாப்பிடாமல் உறங்கினர், காலை அப்பன் முகத்தை பார்க்க பயந்து கொண்டு விலகி நிற்கும் குழந்தைகள் எத்தனை என்ற கணக்கு எண்ணிக்கையில் அடங்காதது.
இவர்கள் எல்லாம் கடை மூடியிருந்த நாட்களில் மூடிக் கொண்டு இருந்தவர்கள்தான்.
சார்,
மாலை ஆறு மணிக்கு மேல் சாலையில் நடமாட முடியவில்லை. குடிகாரர்களின் தொல்லை சாலையில். எத்தனை சண்டைகள். சும்மா நடந்து போய்விட்டு வரமுடியாத அளவில் இருக்கிறது. குடிக்காத ஒரு மனிதன், மாலைக்கு மேல் வெளியே செல்ல முடியாது என்ற நிலை தான் இங்கே.
மதுக்கடைகள் திறப்பது தொடர்பான உங்கள் கருத்தில் மட்டும் உடன்பாடு வரவில்லை.
மிக்க நன்றி,
அன்புடன்,
R. சங்கர்
திருச்சி.
டியர் சங்கர்,
உங்கள் கடிதத்தில் எழுதியிருந்தது போல் ஒரு ஐநூறு பக்கத்துக்கான ஒரு சோக மடலை என்னால் எழுத முடியும். என் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணின் கதை அது. அந்த ஆள் அந்தப் பெண்ணை எங்கள் வீட்டு வாசலிலேயே இழுத்துப் போட்டு அடிப்பான். வீங்காத முகத்துடன் அந்தப் பெண் வராத நாளே கிடையாது. 35 வயதிலேயே ஈரல் பழுதாகி செத்து விட்டான். இப்போது அந்தப் பெண் நன்றாக இருக்கிறார். அதேபோல் எங்கள் தெருவில் இருந்த அயன்காரன். அவன் மேலே சொன்ன பயலுக்குக் குடி சகா. அவனும் கிட்னி பழுதாகி முப்பத்தைந்தில் செத்து விட்டான்.
இதற்கெல்லாம் தீர்வு மதுக்கடைகளை மூடுவது அல்ல. விளிம்புநிலை ஆண்களெல்லாம் இப்படிக் குடித்துச் சாகிறார்கள் என்பதற்காக குடியைப் பொழுதுபோக்காகவும், குடியை என் உணவுப் பொருளாகவும், குடியை என் மன மகிழ்ச்சிக்காகவும், குடியை என் கொண்டாட்டத்துக்காகவும், குடியை என் கலாச்சார அடையாளத்துக்காகவும், குடியை என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்காகவும் வைத்திருக்கின்ற நான் ஏன் குடிக்காமல் இருக்க வேண்டும்? என் உணவுப் பொருளில் ஒன்றாக இருக்கும் மது, விளிம்பு நிலை ஆண்கள் செய்யும் முரட்டுக் காரியங்களால் எனக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும்? உணவு என் அடிப்படை உரிமை அல்லவா?
மேலும், இது குறித்து உங்கள் கருத்துக்களை நான் மாற்ற விரும்பவில்லை. அது முடியவும் முடியாது. ஆனால் மிகத் தெளிவாக உங்கள் கருத்தின் எல்லையை மீறி என்னால் பார்க்க முடிகிறது. என் நியாயத்தை மட்டுமே பலர் முன்னிலையிலும் வைக்க விரும்புகிறேன். இது குறித்தெல்லாம் நான் பல்வேறு கட்டுரைகளில் பல்வேறு சமயங்களில் எழுதியாகி விட்டது. இப்போது நான் செய்வது என்னவென்றால், முன்பு எழுதியதைத்தான் மீண்டும் எழுதுகிறேன்.
உலகில் ஒருசில நாடுகளைத் தவிர வேறு எல்லா நாடுகளிலும் எல்லா சமூகங்களிலும் குடிக்கிறார்கள். ஏன், நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும் கர்னாடகாவிலும் பாண்டிச்சேரியிலும் குடிக்கிறார்கள். அங்கெல்லாம் நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் எதுவும் இல்லையே, ஏன்? பெண்கள் இரவு எட்டு மணிக்கு மேல் தனியாக வந்தால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதால் பெண்கள் யாரும் எட்டு மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என்று சட்டம் போட முடியுமா?
நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன: ஒன்று, தரமற்ற மது. இரண்டாவது, ஆணாதிக்கம். தமிழ்நாட்டில் விற்கப்படும் மது கலப்படம் செய்யப்பட்டது. அதைக் குடிக்கும் யாருக்குமே உடம்பில் முறுக்கேறுகிறது; யாரையாவது போட்டு உதைக்க வேண்டும் என்ற மூர்க்கம் உண்டாகிறது. குடித்துக் கொண்டிருந்த காலத்தில் இதை நான் சோதனை செய்தே பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் ரெமி மார்ட்டின் என்ற
ஃப்ரெஞ்ச் திராட்சை ரச மதுதான் அருந்துவேன். டாஸ்மாக் மதுவை விட பத்து மடங்கு விலை அதிகம். ஒருநாள் டாஸ்மாக்கில் குடிப்பவன் மட்டும் ஏன் மிருகம் போல் ஆகிறான் என்று குடித்துப் பார்த்தேன். ஓல்ட் மாங்க் ரம். வீட்டுக்கு வந்ததும் ஏன் நீ ஒரு மாதிரி முரட்டுக் காளையைப் போல் ஆடுகிறாய் என்றாள் அவந்திகா. என்னம்மா சொல்கிறாய் என்றேன். உன் பாடி லேங்வேஜே ஒரு மாதிரி இருக்கே, மட்டமான எதையாவது குடிச்சியா, அப்படியெல்லாம் நீ குடிக்கிற ஆள் இல்லையே என்றாள். மறுநாள் முழுவதும் எழுந்து கொள்ள முடியாமல் முதுகுத் தண்டு வலி பிளந்து விட்டது. ஒரு நாளைக்கே அப்படி. தினமும் குடித்தால் இரண்டு ஆண்டுகள்தான் கெடு. அப்புறம்தான் அது பற்றி விசாரணை செய்த போது இங்கே உள்ள சாராய ஆலைகளில் அடக்க விலையைக் குறைப்பதற்காக கண்ட பொருட்களையும் போட்டுக் கலப்படம் செய்கிறார்கள் என்று அறிந்தேன். அந்தக் கலப்படப் பொருட்கள் யாவும் உயிருக்கே ஹானி விளைவிப்பவை. அந்த ஆலைகளின் முதலாளிகள் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆட்சியாளர்களின் பினாமிகளால் நடத்தப்படுபவை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த முதலாளிகளுக்கு ஒரு பைசா நஷ்டம் இல்லை. பத்து ஆலை இருக்கிறதென்றால், ஐந்து ஆளும் கட்சியினுடையது. ஐந்து எதிர்க் கட்சி. யோசியுங்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிக்கு நஷ்டம் இல்லைதானே? இப்படி கோடீஸ்வரர்கள் கோடிகளைச் சுருட்டிக் கொண்டிருக்கும் போது நீங்களும் நானும் மதுக்கடைகளை மூடுவதா வேண்டாமா என்று வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கிறோம். முதலில் கர்னாடகாவைப் போல் நல்ல மதுவைக் கொடுங்கள். பிறகு பாருங்கள், என்ன நடக்கிறது என்று. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தமிழர்கள் மட்டும்தான் ஏதோ நரகத்திலிருந்து குதித்தவர்கள் போல் அல்லவா ஆகிறது. இதே விளிம்புநிலை மனிதர்கள், இதே உழைக்கும் வர்க்கம்தானே கர்னாடகாவிலும் இருக்கிறார்கள்? அவர்கள் மட்டும் ஏன் பெண்டாட்டியை இழுத்துப் போட்டு அடிக்க மாட்டேன் என்கிறார்கள்? நூற்றில் ஒன்று ஏன், பத்து கூட நடக்கலாம். இங்கே நூற்றுக்கு நூறு நடக்கிறது. ஏன்? கலப்பட மது. இதோ பாண்டிச்சேரியைப் பாருங்கள். அது என்ன தனி மாநிலமா? வேறு இனமா? இதே தமிழர்கள்தானே? சென்னையிலிருந்து 150 கி.மீ. தூரம்தானே? அங்கே ஏன் இப்படியெல்லாம் நடப்பதில்லை? பாண்டிச்சேரியில் ஒரு தெருவில் பத்து கடைகள் இருந்தால் அதில் ஆறு கடைகள் மதுக் கடைகள். அப்படியிருந்தும் ஏன் இந்த அடிதடி அங்கே நடப்பதில்லை என்றால், அந்த மது தரமாக இருக்கிறது.
இன்னொரு காரணம், ஆணாதிக்கம். நீங்கள் மறுபடியும் அன்னையர் தினம் பற்றி நான் எழுதிய குறிப்புகளைப் படிக்க வேண்டும். குடிக்காத ஆண்கள் பெண்களை அன்பு என்ற பெயரில் என்னென்ன பாடு படுத்துகிறார்கள் தெரியுமா? சிறுகச் சிறுகக் கொலை செய்கிறார்கள். உலகம் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு காலை, இரவு என்று இரண்டு வேளை சமைத்த பெண்கள் இப்போது எல்லோரும் வீட்டில் இருப்பதால் மூன்று வேளை சமைக்கிறார்கள்.
மேலும், 200 ரூ. கொடுத்து மது வாங்குபவனை ஏதோ கிரிமினல் மாதிரி அரசும் சமூகமும் நடத்தினால் அவன் வீட்டுக்கு வந்து என்ன பண்ணுவான்? கனவான் மாதிரியா நடந்து கொள்வான்? மிருகம் மாதிரிதான் இருப்பான். கர்னாடகாவில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலேயே மதுபானம் வாங்க முடியும். மது விற்பனை என்பது அப்படி நாகரீகமானதாக மாற வேண்டும். அதுவும் ஒரு உணவுப் பொருள்தான் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். நல்ல தரமான மது எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும். டாஸ்மாக்குகளை மூடி விட்டு மது விற்பனை தனியார்மயமாக வேண்டும். நல்ல நாகரீகமான பார்கள் வர வேண்டும். இஸ்லாமிய மலேஷியாவில் இரவு பனிரண்டு மணிக்குக் கூட பார்களும் பப்களும் திறந்திருக்கின்றன. அங்கே பார்களில், உணவகங்களில் பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்கள்தான் மதுவை எடுத்து வந்து கொடுக்கிறார்கள். யாரும் எந்தத் தப்புத் தண்டாவும் பண்ணுவதில்லை. மேலும், இங்கே சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். மனைவி 100க்கு ஒரு போன் அடித்து கணவன் என்னை அடிக்கிறான் என்று புகார் செய்தால் இங்கே உள்ள பெண் போலீஸும் ஆண் போலீஸுமே சிரிப்பார்கள். முதலில் போலீஸ்காரர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். குடித்து விட்டு வந்து பெண்களை அடிக்கும் ஆண்கள் என்ற பிரச்சினை மதுபானக் கடைகளைத் திறப்பதால் அல்ல. சட்டம் என்பதே இங்கே இல்லை. புகார் செய்தாலும் கிண்டல்தான் பதிலாகக் கிடைக்கும். அப்படியே கைது செய்தாலும் நீதிபதி வெளியே விட்டு விடுவார். சட்டம் அப்படி இருக்கிறது. முதலில் பெண்களுக்கும் சொல்லப்பட வேண்டும். புருஷன் அடித்தால் நூறுக்கு போன் செய்யுங்கள் என்று. அதை விட்டு விட்டு கடையை மூடு கடையை மூடு என்றால், என்ன நடக்கும் தெரியுமா? எல்லோரும் கள்ளச் சாராயத்தைக் குடித்து விட்டு சாவார்கள். நான் ஒரு நல்ல குடிமகன். நானும் ஏன் ஐயா சாக வேண்டும்?
***
அன்னையர் தினம் பற்றிய குறிப்புகளிலேயே எழுத நினைத்து விடுபட்டு விட்டது. அவந்திகாவுடனான என் 26 ஆண்டு வாழ்க்கையில் இதுவரை அவள் என்னை விட்டு விட்டு மொத்தம் பத்து நாட்கள்தான் வெளியூர் சென்றிருப்பாள். எங்கள் வீட்டில் மாற்றி மாற்றி நாய்கள் இருந்து கொண்டே இருந்தது என்பதால் இரண்டு பேருமே எங்கேயும் சேர்ந்து ஊருக்குப் போனதில்லை. நாய் ஷெல்ட்டரில் விட்டு விட்டுப் போவதில் பல தடங்கல்கள் இருந்தன. நாயே எங்களுக்குப் பெரும் செலவு. ஷெல்டரில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய். இரண்டு நாய்களுக்கு இரண்டாயிரம். அத்தனை பணமெல்லாம் எங்களிடம் கிடையாது. மேலும், அந்த ஷெல்டர்களையெல்லாம் பார்த்த அவந்திகா ரத்தக் கண்ணீர் விட்டு விட்டாள். அவையெல்லாம் பயங்கரமான தனிமைச் சிறை. நாங்களோ நாய்களைக் கட்டியே போட்டதில்லை. வாக்கிங் போகும்போது மட்டும்தான் கயிறால் கட்டுவோமே தவிர மற்றபடி நாய்களை ஒருபோதும் கட்டியதில்லை. நாய்களைக் கயிறால் கட்டிப் போடுபவர்கள் ஹிட்லரை விடக் கொடியவர்கள் என்பது எங்கள் கருத்து. அதனால் நாங்கள் இருவருமாகச் சேர்ந்து எங்கேயும் சென்றதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றரை நாள் ஆன்மீக செமினாருக்காக ஆண்டுதோறும் பெங்களூர் போவாள் அவந்திகா. அந்த ஒன்றரையை ஐந்தால் பெருக்கினால் வரும் தினங்கள் மட்டுமே அவள் என்னை விட்டுவிட்டு வெளியூர் போனது. அவள் அம்மா வீடு சின்மயா நகரில் உள்ளது. மைலாப்பூரிலிருந்து பத்து கி.மீ. போக ஒரு மணி நேரம். வர ஒரு மணி நேரம். அங்கே அரை மணி நேரத்துக்கு மேல் தங்க மாட்டாள். தங்கினதே இல்லை. என்ன விசேஷம் துக்கம் என்றாலும் சரி. அதிக பட்சம் ஒருமணி நேரம் தங்குவாள். கண்ணிமைக்கும் நேரத்தில் என் முன்னே வந்து நிற்பாள். சில ஆண்டுகளுக்கு முன் அவள் தந்தை இறந்து போனார். அப்போதும் போய் ஒரு மணி நேரம்தான் இருந்து விட்டு வந்தாள். அதை விட பயங்கரம், பத்தாம் நாள் காரியத்துக்கு என்னிடம் வந்து, சாரு, நீ யோசனை சொல், நான் போகவா வேண்டாமா என்றாளே பார்க்கலாம். மிரண்டே போனேன். போ, போ என்று கிளப்பி அனுப்பினேன்.
இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்மணி 26 ஆண்டுகளாக இப்படி இருக்கிறாள். நான் அடிக்கடி வெளியூர் போவேன். போனால் அங்கிருந்து அவந்திகாவுக்கு போன் செய்ய மாட்டேன். அல்லது, பயந்து கொண்டே செய்வேன். ஏனென்றால், போனை எடுத்தால் ஒரே அழுகை. ஒரே புலம்பல். எப்போது வருகிறாய். எப்போது வருகிறாய். ஒரே புலம்பல். ஏதோ கொலைக் குற்றம் செய்து விட்டது போல் எனக்குக் குற்ற உணர்ச்சி ஆகி விடும். வாசகர் வட்டச் சந்திப்புக்கு 20 மணி நேரம் வீட்டிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்புவேன். மகாபலிபுரம். இன்று மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி மறுநாள் மதியம் பனிரண்டு மணிக்கு வந்து விடுவதாக சூடம் கொளுத்தி சத்தியம் செய்து விட்டுக் கிளம்பியிருப்பேன். ஏழு மணிக்கு போன் வரும். அப்போதுதான் மகாபலிபுரத்தில் போய் செக்-இன் செய்திருப்பேன். எப்போ வர்றே சாரு? ரொம்ப ரொம்ப நிதானமான குரலில் இப்போதாம்மா வந்து இறங்குறேன், இதோ நானே கூப்பிடறேன். அரை மணி நேரத்தில் இன்னொரு போன். ஏன் கூப்பிடவில்லை?
இரவு முழுவதும் பேசி விட்டு காலை ஐந்து மணிக்குத்தான் தூங்கப் போயிருப்பேன். மற்றவர்கள் எல்லோரும் மாலை நான்கு மணிக்குத்தான் எழுந்திருப்பார்கள். நான் ஏழு மணிக்கே எழுந்து தியானத்தில் இருப்பேன். எட்டரைக்கு போன் வரும். ஏன் எட்டரை தெரியுமா? எட்டரைக்குத்தான் அம்மணி எழுந்திருந்திருப்பாள். எடு போனை. எப்போ வர்றே சாரு? இதோ கிளம்பிக்கிட்டே இருக்கேம்மா. பத்து மணிக்கே டாக்ஸி பிடித்துக் கிளம்பி விடுவேன். எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.
இதிலிருந்தெல்லாம் உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா? Comfort என்ற ஒரே வார்த்தைதான் காரணம். அவள் இதுவரை தண்ணீரே எடுத்துக் குடித்ததில்லை. இந்த 26 ஆண்டுகளில். நான் தான் எடுத்துக் கொடுப்பேன். அவள் தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடிப்பாள். ஆனால் அவள் போட்டுக் கொண்டதே இல்லை. இப்படி ஒரு நூறு காரியங்கள் உண்டு. நண்பர்களே, இதையெல்லாம் தாண்டித்தான் இத்தனையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் சும்மா சோதிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்று அழைத்தேன். இருந்த இடத்திலிருந்தே என்னப்பா என்றாள். குரலில் அத்தனை சோர்வு. ஒரு டம்ளர் தண்ணி குடேன். திருமணமான 24 ஆண்டுகளில் அப்படி ஒரு வாக்கியத்தை அவள் அறிந்ததில்லை. அதற்கு அவள் சொன்ன பதில் இது: நானே ஒரு மணி நேரமா தாகத்துல துடிச்சிக்கிட்டு இருக்கேம்ப்பா. நீ வேற ரொம்ப பிசியா எழுதிக்கிட்டு இருக்கியா, உன்னைக் கேக்க வேற பயமா இருந்துச்சி. ப்ளீஸ் சாரு. முடிஞ்சா ஒரு டம்ளர் தண்ணி குடுப்பா. நீ குடிச்சிட்டே குடு. பரவால்ல. அப்படி என்ன செய்து கொண்டிருந்தாள் என்றால், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அப்புறமாக அவள் ஜாலி மூடில் இருந்த போது நான் சோதித்த விஷயத்தைச் சொல்லி விட்டேன்.
கார்த்திக் பற்றி அனு அவந்திகாவுக்கு போன் பண்ணினாள் இல்லையா, அம்மா நீங்கள் கார்த்திக்கை அடித்ததோ திட்டியதோ இல்லையா என்று கேட்டு. அப்போது எனக்கும் அவந்திகாவுக்கும் ஒரு உரையாடல். நான் சொன்னேன், எனக்கு அம்மா, அப்பா யாரும் கிடையாது என்று. ஏனென்றால், நான் எப்போதுமே உறவு பந்தம் பாசம் என்று இருந்தவன் இல்லை. எனக்கு எப்போதும் என் வாசகர்கள்தான் முக்கியம். எனக்கு எல்லாமே அவர்கள்தான். என்னுடைய கேங் ஆஃப் ஃபோர்தான் என் உறவுக்காரர்கள். இப்படித்தான் வாழ்க்கை பூராவும். அதைச் சொன்னேன். எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா, எனக்கு அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க என்றாள் அவந்திகா. சொன்னதோடு நில்லாமல் யார் சொல்லு பார்க்கலாம் என்றாளா, தெரிந்து விட்டது. ”ம்ம்ம்… நான்தானே, அவ்வளவு கூடவா தெரியாது ஒரு தஞ்சாவூர்க்காரனுக்கு?”
பரவால்ல, பாஸாய்ட்டே, எனக்கு அம்மா அப்பா எல்லாமே நீதான் என்றாள்.
ஆக, நான் வெளியூரெல்லாம் போயிருக்கிறேன். என் வீட்டில் நான் இரண்டு இரவுகள் கூட சேர்ந்தாற்போல் தனியாக இருந்ததே இல்லை. இன்று காலை பெங்களூர் கிளம்பினால் நாளை இரவு பத்து மணிக்கு வந்து விடுவாள். சமயங்களில் விமானத்திலும் வந்து விடுவதுண்டு. அதனால்தான் படுபாவி ஜெகாவைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன். ஐம்பது நாள் ஓமானில் வீட்டில் தனியாக இருந்திருக்கிறான். இங்கே வந்தும் ஒரு ஓட்டலில் பதினைந்து நாள் தனியாக. குவாரண்டைனாம். அடப் பாவிகளா, எனக்கு இப்படி ஒருநாள் கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே? இப்படிச் சொன்னால், நீதான் பாதி நாள் வெளிநாட்டுக்குப் போய்டுறியே என்கிறாள் அவந்திகா. அங்கே போவது சுற்றிப் பார்க்க அல்லவா? தனியாக இருந்து வேலை செய்வது எங்கே, வெளிநாடுகளில் வெளியூர்களில் சுற்றுவது எங்கே? அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்க வேண்டும்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai