வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் பூச்சி கொஞ்சம் தாமதம். இடையில் எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற தீர்மானத்தையும் உடைத்து விட்டு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அற்புதம். தொகுப்பு முழுமையும் பற்றி விரிவாக எழுத ஆசை. இருந்தாலும் ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.
கட்டுவிரியன் என்பது கதைத் தலைப்பு. இன்றைய இந்தியாவின் கிராமத்து எதார்த்தம். இப்போதெல்லாம்தான் சாதிகள் இல்லையே, எல்லோரும் சமமாகத்தானே இருக்கிறோம் என்று உளறும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்க உயர்சாதிக்காரர்கள் இம்மாதிரி கதைகளைப் படிக்க வேண்டும். இன்றும் இதுதான் கிராமத்து எதார்த்தம். பாம்பு பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ஒரு பழங்குடி இனம் இருப்பது நமக்குத் தெரியும். அந்த இனத்தைச் சேர்ந்தவன் இருளன். கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து சாக்கில் போட்டுக் கொண்டு போகிறான். அப்போது வரப்பிலிருந்து சாலையில் ஏறும் இடத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர், தன் பைக்கை நிறுத்தி விட்டு இருளனும் அவன் மனைவி காயாம்பூவும் வருவதற்காக அங்கேயே நிற்கிறான். இனி உரையாடல்:
“என்னடா, என்ன பாம்பு?”
இருளன் உடல் குனிந்து, “கட்டுவிர்யங்க!”
“எவ்வளவு கிடைக்கும்?”
“வெஷம் அளவப் பொறுத்துங்கய்யா!”
“உம் பொண்டாட்டிய ஒரு தடவை வுட்டா நானே அவ்வளவு கொடுப்பேனில்ல?”
முன்னே நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியின் காதில் இந்தச் சொற்கள் விழுந்து விடக் கூடாதே எனக் கவலைப்படுகிறான் இருளன். “நிறைமாதப் பெண்ணைத் தாயாய் அல்லவா நினைக்க வேண்டும். இவன் எல்லாம் என்ன மாதிரி ஆண்” என்று நினைத்துக் கொள்கிறாள் அவள்.
அடுத்து வருவது எல்லா கிராமங்களிலும் நடப்பதுதான். 1992-இல் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திலும் நடந்தது. நந்தகோபால் என்ற தலித் இளைஞன் ஒரு திருட்டுக் கேஸில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுபயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டான். அவன் மனைவி பத்மினியும் அதே போலீஸ் ஸ்டேஷனில் நான்கு போலீஸ்காரர்களால் வன்கலவி செய்யப்பட்டாள். ஊரில் எங்காவது மேல்சாதிக்காரர்களின் வீட்டில் சாமான் சட்டி திருடு போய் விட்டால், அல்லது யாரையாவது உதைக்க வேண்டும் என்றால் போலியாகத் திருட்டுக் கேஸ் போடுவார்கள். கட்டுவிரியன் கதையில் இன்ஸ்பெக்டர் சுதாகர் இருளனின் வீட்டுக்கே வந்து இருளனை உதைத்து காயாம்பூவை வன்கலவி செய்கிறான்.
மேற்கொண்டு கதையை நான் சொல்லக் கூடாது. பொதுவாக இது போன்ற கதைகளை எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்குப் பெரிதும் ஆயாசத்தையே தருவதுண்டு. தமிழில் எழுதினாலும் அவர்களின் பெயரை நான் அடிக்கடி நியூயார்க் டைம்ஸில் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை எழுதுபவர் என்று பெத்த பெயர். ஆனால் கதையைப் படித்தால் விகடனில் அந்தச் சம்பவத்தை எழுதும் மாணவ நிருபரே தேவலாம் என்பது போல் இருக்கும். ஆனால் அம்மாதிரி எழுத்தாளர்கள்தான் இங்கே ஸ்டார் எழுத்தாளர்களாக உலக இலக்கிய அரங்கில் தெரிய வருகிறார்கள். வெளியிடுவது நம்பர் ஒன் பதிப்பகம். உலகம் பூராவும் நெட்வொர்க் வைத்திருக்கும் பதிப்பகம். ஒருத்தரை மட்டும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. பெரும்பான்மையான கதைகள் – ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துயர் சொல்லும் கதைகள் – தந்தி பேப்பர் ரிப்போர்ட்டிங்கை விட மட்டமாக உள்ளன என்பது மட்டுமே என் புகார்.
சரி, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதைகளை ஒடுக்கப்பட்டவர் மட்டுமா எழுத முடியும், நானும் எழுதுகிறேன் என்று வேறு சில பெரிய கைகளும் எழுதுகின்றன. அதைப் படித்து எல்லோரும் ஆஹாகாரம் செய்கிறார்கள். அதைப் பார்த்தால் வேறு விதமான வேதனைதான் மிஞ்சுகிறது. மொழி பிரமாதமாக இருக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் விஷம். தலித்துகளின் வாழ்க்கை மிருகங்களைப் போல் இருக்கிறது. அவர்களிடம் கலாச்சாரம் இல்லை. காரணம், அவர்களிடமிருந்து வாழ்க்கை பறிக்கப்பட்டிருக்கிறது. இத்யாதி, இத்யாதி.
ஆனால் குட்டி ரேவதியின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் அந்த இரண்டு பிரச்சினைகளுமே இல்லை. தினத்தந்தி ரிப்போர்ட்டிங்கும் இல்லை; தலித் வாழ்க்கை பற்றிய பிலாக்கணமும் இல்லை. அதே சமயம் அந்த வாழ்வின் குரூரம் நம் முகத்தில் அடிக்கிறது. Claude Levi-Strauss கூறியது போல அவர்களின் வாழ்க்கையும் கலாச்சாரமும் வேறு எந்த இனக்கூட்டத்தின் வாழ்க்கைக்கும் கலாச்சாரத்துக்கும் சவால் விடுவதாகத்தான் இருக்கின்றன. என்ன, அந்தக் கலாச்சாரம் மேட்டுக்குடி கலாச்சாரத்திலிருந்து அந்நியமாக இருக்கிறது. அவ்வளவுதான். ஒரே ஒரு இடத்தைத் தருகிறேன்.
கடல்கன்னிக்குச் சடங்கு செய்கிறார்கள்.
காயாம்பூ வேகமாகச் சடங்குகளுக்கான ஏற்பாடு செய்தாள். கடல் கன்னி சூரியன் வழியாகத்தான் எழுந்து வருவாள். கற்பூரத்தை இருளனின் கைகளில் கொடுத்தாள். இருளன், பெரிய கற்பூரக் கட்டியைக் கையிலே ஏற்றித் தூக்கினான். அவன் உடல் குளிரிலும், ஆழ்மனக் கிடக்கைகளிலும் உருக்கொண்டு நடுங்கியது. மெல்ல நடுங்கினான். அவன் வாய், மனித வாழ்வின் அபூர்வமான தருணங்களையெல்லாம் முணுமுணுக்கத் தொடங்கியது. காயாம்பூ, உடலெல்லாம் செவியாகி அவன் சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு பெருமூச்சில், இருளன் பாம்பாய் உடல் திருகி அங்கிங்கென அந்தக் கடற்கரையில் ஊர்ந்திடத் தொடங்கினான். அவன் மூச்சு சீறியது. கண்களின் கருவிழிகள் இமைகளின் மேலண்ணத்தில் ஒட்டியது. நாசி முனை விடைத்து, பாம்பின் வேகமும் மூர்க்கமும் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கூட்டத்திடையே நழுவினான். நகர்ந்தான். மெல்லிய அவன் உடலின் விலா எலும்புகளும் முதுகெலும்புகளும் உயர்ந்து நின்று ஓர் இரைக்கான வேட்டையை நிகழ்த்துவது போலக் கூர்மையாகி நின்றன. உடலின் முதுகெலும்புக்குள் வயிறு ஒட்டிப் படமெடுத்து நிற்கும் பாம்பைப் போல் இருந்தது. கூட்டம் பயபக்தியுடன் அவனையே பார்த்து நின்றது. ஒரு கணத்தில் அவன் இரத்த ஓட்டம் எல்லாம் நீலம் பாய்ந்து சுழன்று திசைகளுக்கு விரைந்தது போல வண்ணம் மாறி இயங்கினான்.
இன்னும் கதை இப்படியே போகிறது.
தொகுப்பின் மிக விசேஷமான அம்சம், இதன் மொழி. சூல் கொண்ட வார்த்தைகளாலான மொழி. அப்படித்தான் சொல்ல வேண்டும். கனமான, காத்திரமான மொழிநடை. இளைய எழுத்தாளர்கள் குட்டி ரேவதியிடம் மொழியைப் பயில வேண்டும். திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.
நான் படிக்கும் சர்வதேசத் தரத்தில் இருந்தது இந்தத் தொகுப்பு. வாங்கிப் படியுங்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். புத்தகத்தின் தரம் பற்றிப் பாராட்ட வார்த்தை இல்லை. பொறாமையாக இருந்தது. எனக்கெல்லாம் இப்படி அட்டை அமைய மாட்டேன் என்கிறது.
நிறைய அறைகள் உள்ள வீடு. சிறுகதைத் தொகுப்பு. குட்டி ரேவதி. விலை 199. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்/எழுத்து பிரசுரம், போன் 98400 65000