சொல் தீண்டிப் பழகு – 1,2

ஒரு முக்கியமான எடிட்டிங் பணியினால் பூச்சி வரவில்லை. ஆனால் எழுத எக்கச்சக்கமாகக் கிடக்கிறது. நாளை அந்தப் பணி முடிந்து விடும். நாளையிலிருந்து நமது ஃபாக்டரி ஆரம்பித்து விடும். அதற்கு இடையில் நீங்கள் படிக்க, நான் குமுதத்தில் எழுதி வரும் தொடரின் சில அத்தியாயங்களைத் தருகிறேன்.

25 ஆண்டுகளாக – ஏன், அதற்கு மேலேயே இருக்கும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வர வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்து வந்தது.  அது என்ன லட்சியம்?  கனவு என்று சொல்லலாமே? இல்லை.  சே குவேரா என்ற மாமனிதன் பிறந்து வளர்ந்து புரட்சி செய்த மண் அது.  கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு எனக்கு குவேராவின் அரசியல் கோட்பாடுகளில் நம்பிக்கை போய் விட்டது என்றாலும் அவர் உலகம் முழுவதுமான ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் குறியீடாகத் திகழ்கிறார். நமக்கு ஒரு குவேராவைத் தெரியும்; ஆனால் லத்தீன் அமெரிக்கா முழுவதுமே குவேராக்களால் நிறைந்திருக்கிறது. 

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.  1973-ஆம் ஆண்டு சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டாக்டர் சால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende) அவரது ராணுவத் தளபதி பினோசெத் செய்த தந்திரமான ராணுவப் புரட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.  பிறகு பினோசெத் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான பேரை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.  அப்படிக் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் விக்தர் ஹாரா (Victor Jara) என்ற பிரபலமான பாடகர்.  நம் நாட்டில்தான் இசை என்பது வெறும் கேளிக்கையாக இருக்கிறது.  ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இசைக் கலைஞர்கள் போராட்ட வீரர்களாக இருந்திருக்கிறார்கள். 

இசைக் கலைஞர்கள் மட்டும் அல்ல; பாதிரியார்களும் கூட விடுதலை வீரர்களாக இருந்தார்கள்.  விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதியதொரு கோட்பாடே லத்தீன் அமெரிக்காவிலிருந்துதான் உருவானது.  சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்த ஆதிகுடிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து அவர்களின் சொந்த மொழியையும், கடவுளையும், கலாச்சாரத்தையும் ஒழித்துக் கட்டி விட்டு தங்கள் மதத்தையும் மொழியையும் திணித்த போர்த்துக்கீசிய, ஸ்பானிய மத போதகர்கள் 1970களில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களாக மாறினார்கள்.  அதுதான் விடுதலை இறையியல்.  கிறித்தவமும் மார்க்சீயமும் இணைந்த அரசியல் தத்துவம். 

நிகாராகுவாவில் 1936-இலிருந்து 1956 வரை அனஸ்தாஸியோ சொமோஸா கார்ஸியா (Anastasio Somoza Garcia) என்ற சர்வாதிகாரி அதிபராக இருந்தான்.  உலகப் புகழ் பெற்ற இடி அமீனைப் போன்றவன்.  எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் கேள்வி முறையில்லாமல் சுட்டுக் கொன்றான்.  அவனுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்க அரசு.  யாராலும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.  அப்போது 1955-இல் “இன்னும் ஒரு வருடத்தில் இந்தக் கொடூரனை சுட்டுக் கொல்லுவேன்” என்று அறிவித்தார் இளம் கவிஞனும் பாடகனுமான ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் (Rigoberto Lopez Perez). சொல்லி விட்டு அவர் தலைமறைவு ஆகவில்லை என்பது முக்கியம்.  அதேபோல் ஒரே வருடத்தில் சொமோஸாவை சுட்டுக் கொன்றார்.  சொமோஸா கலந்து கொண்ட ஒரு விருந்தின் போது அவரை நெருக்கமான தூரத்தில் இருந்து மார்பில் சுட்டுக் கொன்ற ரிகபர்த்தோவை சொமோஸாவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்தார்கள். அப்போது ரிகபர்த்தோவின் வயது 27. இப்போது ரிகபர்த்தோ நிகாராகுவாவின் தேசியக் கவி.

என்னிடம் பலரும் உலகின் அடுத்த கோடியில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏன் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்பதுண்டு. அங்கே செல்வது அத்தனை கடினம்.  சுருக்கமாகச் சொல்கிறேன்.  இங்கிருந்து தோஹா (கத்தார் தலைநகர்) சென்று (5 மணி நேரப் பயணம்) விமான நிலையத்தில் நாலைந்து மணி நேரம் காத்திருந்து, பிறகு அங்கிருந்து ப்ரஸீலின் தலைநகர் சாவோ பாவ்லோ சென்று (பயண நேரம் 17 மணி நேரம்) அந்த விமான நிலையத்தில் நாலைந்து மணி நேரம் காத்திருந்து, அங்கிருந்து அர்ஜெண்டினாவின் புவனோஸ் அய்ரஸ் சென்று (3 மணி நேரம்), அந்த விமான நிலையத்தில் ரெண்டு மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து பெரூவின் தலைநகர் லீமா சென்றேன்.  அது ஒரு நான்கு மணி நேரம். மொத்தம் இரண்டு நாட்கள்.  (திரும்பி வரும்போது பயண நேரம் மூன்று நாட்கள் ஆகி விட்டது.) சாவோ பாவ்லோவிலும் புவனோஸ் அய்ரஸிலும் வரிசையில் நின்று இமிக்ரேஷன் அதிகாரிகளிடம் வேறு நம் பயணம் பற்றி விளக்கி முத்திரை வாங்க வேண்டும்.  அதிலும் புவனோஸ் அய்ரஸில் ஒரு அநியாயம்.  சாவோ பாவ்லோவிலிருந்து லீமாவுக்கு ஒரே விமானம்தான்.  அது புவனோஸ் அய்ரஸில் நிற்கிறது.  ஏன் நிற்கிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.  ”என் நிலத்தில் நிற்கிறாய்.  அதனால் உன் பயணிகள் பற்றிய விபரம் எங்கள் ஆவணங்களில் பதியப்பட வேண்டும்” என்று சொல்லி நம்மை நாலு கிலோமீட்டர் தூரம் விமான நிலையத்துக்குள் நடக்கச் செய்து புகைப்படம் எடுத்து, கை விரல்களை ஸ்கேன் செய்து திரும்பவும் அதே விமானத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒவ்வொரு விமான நிலையமும் பல மைல் விஸ்தீரணத்தில் விரிந்து கிடப்பதால் நடந்து நடந்து நாக்கில் நுரை தள்ளி விட்டது.  இதைத் தவிர்ப்பதற்காக சில விமான நிலையங்களில் நகரும் நடைபாதைகள் இருந்தாலும் அதெல்லாம் போதுமானதாக இல்லை.  ஏனென்றால், அதையும் மீறி நாலைந்து கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கிறது.  இதைப் படிக்கவே உங்களுக்கு மூச்சு வாங்குகிறது அல்லவா?  எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். 

சரி, இத்தனை கஷ்டப்பட்டு ஏன் அங்கே போகிறாய்? இதுதான் கேள்வி.  இந்த அத்தியாயத்திலேயே அதற்கு பதில் சொல்ல முயல்கிறேன்.  அமெரிக்க வீசா கிடைத்திருந்தால் கொஞ்சம் சிரமமும் பணச் செலவும் குறைந்திருக்கும்.  இங்கிருந்து அமெரிக்காவுக்கு டவுன் பஸ் மாதிரி விமானங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன.  அதேபோல்  அமெரிக்காவிலிருந்தும் தென்னமெரிக்க நாடுகளுக்கு டவுன் பஸ் மாதிரி விமானங்கள் செல்கின்றன.  மேலும், அமெரிக்க வீசா இருந்தால் லத்தீன் அமெரிக்காவில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.  பல நாடுகளில் வீசாவே தேவையில்லை.  அமெரிக்க வீசா இருந்தாலே போதும்.  நானும் மவுண்ட் ரோடு அமெரிக்கத் தூதரத்தில் போய் வரிசையில் நின்றேன்.  உன் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்று சொல்லி வீசா மறுத்து விட்டார்கள்.  (ஏற்கனவே நாலு ஆண்டுகளுக்கு முன்னாலும் இதே காரணத்தால் மறுத்தார்கள்!)  நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், ”மேடம், எங்கள் நாட்டில் எழுத்தாளர்களின் வங்கிக் கணக்கில் இவ்வளவுதான் இருக்கும்.”  ம்ஹும், அந்தப் பெண்மணி மசியவில்லை. 

நான் என்னுடைய 27-ஆவது வயதில் ரிகபர்த்தோவின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.  அந்த வயதிலிருந்து நிகாராகுவாவைப் பார்க்க வேண்டும் என்பது என் லட்சியம்.  இந்த சீலே பயணத்தில் நிகாராகுவாவைச் சேர்க்க முடியவில்லை.  அதற்கு இன்னும் செலவு ஆகும்.  இதற்கே பனிரண்டு லட்சம் ஆகி விட்டது.  எனவே நிகாராகுவா அடுத்த ஆண்டுதான்.

நிகாராகுவாவில் சொமோஸா இறந்த பிறகும் அவரது பிள்ளைகள்தான் மாற்றி மாற்றி நாட்டை ஆண்டார்கள்.  அவர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டார்கள்.  கடைசியில் சாந்தினிஸ்தா என்ற புரட்சியாளர்கள் 1979-இல் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தார்கள்.  அந்தப் புரட்சியாளர்களில் ஒருவர்தான் செர்ஹியோ ராமிரஸ் (Sergio Ramirez)  என்ற பாதிரியார்.  இவர் எழுதிய To Bury Our Fathers என்ற அற்புதமான நாவல் பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். 

இந்தக் காரணங்களால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பார்க்க வேண்டும் என்பது என் கனவல்ல, லட்சியம் என்று சொன்னேன்.

லத்தீன் அமெரிக்கவில் நான் முதலில் இறங்கியது பெரூ. அங்கேதான் இருக்கிறது உலகப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் முதலில் இருக்கக் கூடிய மாச்சு பிச்சு. அங்கே சென்ற முதல் தமிழன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரஜினிகாந்த் முந்தி விட்டார். 

2.

 

சினிமா பிரபலங்களைச் சந்திப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை.  கேரளத்தில் சினிமா நடிகர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே பழகுகிறார்கள்.  ஒருமுறை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மம்முட்டியைச் சந்திக்க நேர்ந்தது.  நான் மாத்யமம் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை ஒன்று விடாமல் படித்திருப்பதாகச் சொன்னார்.  ஏதோ ஒப்புக்குச் சொன்னதல்ல.  அக்கட்டுரைகளைப் பற்றி விரிவாகப் பேசவும் செய்தார்.  அப்போது அவரது உடல்மொழியும் பாவனையும் ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் பேசும் போது இருப்பதைப் போல் இருந்தது.  கேரளத்தில் எழுத்தாளனுக்கு அப்படித்தான் மரியாதை செலுத்துகிறார்கள்.  எழுத்தாளர் என்றால் ஆசான்.  இல்லாவிட்டால் கேரளத்து முதல் மந்திரி ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவதற்காக எழுத்தாளரின் வீட்டு முன்னே வரிசையில் நிற்பாரா?  நாயனார் பஷீர் வீட்டின் முன் நின்றாரே?  அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.  சமமாக மதித்தால் போதும்.  சில சினிமா பிரபலங்களின் முன்னே தமிழ் எழுத்தாளர்கள் கூனிக் குறுகி பம்முவதைப் பார்க்கும் போது எனக்கே வெட்கமாக இருக்கிறது.  நான் எழுத்தாளர்களைக் குறை சொல்ல மாட்டேன்.  அவர்கள் பாவம்.  அவர்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது.  நடிகர் அல்லவா அதைத் தவிர்க்குமாறு செய்ய வேண்டும்?  நடிகர்களே அதை அங்கீகரிப்பது போலவும் அந்தப் பணிவை எதிர்பார்ப்பது போலவும் அல்லவா இருக்கிறது?  ஒரு நடிகர்.  உச்ச நடிகர்.  (ரஜினி அல்ல)  அவரைப் பார்க்க என் நண்பர் போனார்.  நண்பர் எழுத்தாளர்.  உலக இலக்கியமெல்லாம் வாசித்தவர்.  எழுத்தாளர் போனது நடிகர் அழைத்து.  நடிகரின் வேலைக்காக.  இதை மறந்து விடக் கூடாது.  முன்மதியம் பதினோரு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம் என்றார் எழுத்தாளர்.  “என்னது, பேசிக் கொண்டிருந்தீர்களா?  இலக்கணப் பிழை.  பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்லுங்கள்” என்றேன்.  எனக்கு அந்த நடிகரின் இயல்பு தெரியும்.  மற்றவர்களைப் பேசவே விட மாட்டார்.  அவருக்கு செவிகளே கிடையாது.  எழுத்தாளர் அசடு வழிந்தபடி “ஆமாம், பேசிக் கொண்டிருந்தார், ஹி ஹி…” என்றார்.  அப்போதும் நான் விடவில்லை. 

“இடையில் லஞ்ச் வந்திருக்குமே?  சாப்பாடு கொடுத்தாரா?”

“ம்ம்… கேட்டார்.  நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டேன்.” 

“ஓ… அவர்?” 

“நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டதால அவர் மட்டும் சாப்பிட்டார்.” 

அடப் பாவிகளா!  வந்த ஆள் கொஞ்சம் கூச்ச சுபாவத்தில் அப்படித்தான் சொல்வார்.  அதற்காக?  எனக்கு எம்ஜியாரின் ஞாபகம் வந்தது.  அவர் இருந்த வரை அவர் தோட்டத்தில் மூன்று வேளையும் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் சைவம் ஒரு பந்தி, அசைவம் ஒரு பந்தியாக எப்போதும் ஜே ஜே என்று இருக்கும்.  அவர் அல்லவா மனிதர்!  சரி, போகட்டும்.  நண்பர் மேல்தான் தப்பு.  இவர் எதற்கு சாப்பிட்டு விட்டேன் என்று பொய் சொன்னார்?  ஆனால் அந்த ஏழு மணி நேரப் பேச்சு இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய அராஜகம்?  எதிரில் இருப்பவர் முட்டாள்; நாம் ஜீனியஸ் என்ற ஆணவம்தானே இப்படிப் பேச வைக்கிறது?  

போகட்டும்.  இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் இல்லை என்பது ஒரு ஆறுதல்.  அவரை நெருக்கமாக அறிந்த நண்பர்கள் எனக்கும் நண்பர்களாக இருப்பதால் அதை நான் அறிவேன்.  ரஜினி மிகவும் எளிமையானவர்.  அதனால் அவரைச் சந்திப்பதில் பிரச்சினை இருக்காது.  அவரைச் சந்தித்து ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்.  கேட்காவிட்டால் என் மண்டை வெடித்து விடும்.  எப்படி நீங்கள் மாச்சு பிச்சுவில் நடந்த படப்பிடிப்பில் 45 நாட்கள் கலந்து கொண்டீர்கள்? 

மாச்சு பிச்சுவைப் பார்ப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து பயணிகள் கூட்டம் பெரூவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.  ஏனென்றால், அது அப்பேர்ப்பட்ட ஒரு அதிசயம்.  செங்குத்தான மலைகள் சூழ நடுவே ஒரு மாபெரும் நகரம் காலத்தின் நீட்சியில் சிதிலம் அடைந்து கிடக்கிறது.  பார்த்தால் ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவது போல் தோற்றம் தருகிறது அந்த நகரம்.  நீங்கள் எந்திரன் படத்தில் கிளிமாஞ்சாரோ பாடலில் அந்த நகரைப் பார்த்திருக்கலாம்.  என் வழிகாட்டியிடம் அந்தப் படப்பிடிப்பு பற்றிக் கேட்டேன்.  உடனே அவர் ரஜினிகாந்த் என்றார்.  45 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகச் சொன்னார்.  ”இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காகக் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளவில்லை; 45 நாட்களும் ரஜினி அந்த மலையில் ஏறி இறங்கினார்” என்றார். 

என்னால் நம்ப முடியவில்லை.  நிஜம்தானா என்று ரஜினியிடம் கேட்க வேண்டும்.  ஏனென்றால், மாச்சு பிச்சுவில் நாம் இரவு தங்க முடியாது.  அதற்கான வசதி அந்தப் புராதன நகரில் இல்லை.  குஸ்கோவில்தான் தங்க வேண்டும்.  மாச்சு பிச்சுவின் உயரம் 8000 அடி.  குஸ்கோவின் உயரமோ 12000 அடி.  குஸ்கோவில்  ஹை ஆல்டிட்யூட் சிக்னஸ் வரும் என்று பயண நிறுவனங்கள் ஏகத்துக்கு பயமுறுத்தி இருந்தன.  தலை சுற்றும், மயக்கம் வரும், மூச்சு விட முடியாது.  அதனால் நான் அங்கே செல்வதற்கு முன்பே என் நண்பரும் இதய சிகிச்சை மருத்துவருமான சிவகடாட்சத்தைப் பார்த்தேன்.  என் ஈசிஜி, எக்கோ எல்லாம் நார்மலாக இருந்தது.  இருந்தாலும் ஹை ஆல்டிட்யூட் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக Dytor Plus 5 என்ற மாத்திரையையும் சாப்பிட்டு வந்தேன்.  மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் ஷிம்லாவிலிருந்து லே (லடாக்) வரை நண்பர்களுடன் பைக்கில் சென்று வந்தேன்.  இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள சார்ச்சுவின் உயரம் 14,070 அடி.  அங்கேதான் இரவு தங்கினோம்.  மூச்சு விடவே சிரமம் என்றார்கள்.  எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.  பிறகு,  லேயிலிருந்து வேனில் பாங்கோங் ஏரிக்குச் சென்றோம்.  இமயமலை உச்சியில் உள்ள கடல் போன்ற ஏரி அது.   14,270 அடி உயரம்.  காற்றில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் அங்கே செல்பவர்களில் சிலர் இறந்து போவதும் உண்டு என்றார்கள்.  அங்கேயும் இரவு தங்கி ஆட்டம் போட்டோம். 

”சார்ச்சுவிலும் பாங்கோங் ஏரியிலுமே தங்கியிருக்கிறீர்கள்.  மாச்சு பிச்சுவெல்லாம் ஒன்றுமே இல்லை” என்று தைரியம் சொன்னார் டாக்டர் சிவகடாட்சம்.  அவரும் மாச்சு பிச்சுவும் குஸ்கோவும் போய் வந்திருக்கிறார் என்பதால் அவருக்கு நேரடி அனுபவம் உண்டு.  அதுவும் தவிர, Sarojchi என்ற மாத்திரை ஒன்று உள்ளது.  பெரூ தலைநகர் லீமாவில் கிடைக்கும். குஸ்கோ செல்வதற்கு முன்னால் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள்.  லீமா விமான நிலையத்தில் குஸ்கோவுக்குக் கிளம்பும் போது சரோச்சி மாத்திரை டப்பாவைப் பார்த்து வாங்கப் போனேன்.  உடனே என் பயண நண்பர் ரவி ஷங்கர் அதன் விலையை ரூபாயில் கணக்கிட்டு “2000 ரூ. ஆகிறது.  குஸ்கோவில் வாங்கிக் கொள்ளலாமே” என்றார். எனக்கு இப்படி யாராவது யோசனை சொன்னால் உடனே அதைக் கேட்டு விடும் பழக்கம் உண்டு.  வாங்காமல் குஸ்கோ போனோம்.  அங்கே சரோச்சி மாத்திரைகள் கிடைக்கவில்லை.  அங்கிருந்து மாச்சு பிச்சு போய் அந்த அதிசய நகரைப் பார்த்து விட்டு இரவு குஸ்கோ வந்தோம்.  என்னால் மூச்சு விட முடியவில்லை.  தண்ணீருக்குள் போட்டு அமுக்குவது போல் இருந்தது.  ரவி ஷங்கரோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.  ஆக்ஸிஜன் சிலிண்டரை வரவழைத்து ஐந்து நிமிடம் சுவாசித்தேன்.  அது ஒரு மணி நேரம் தாங்கியது.  மீண்டும் மூச்சு விட முடியவில்லை… நள்ளிரவு ஆகியிருந்தது.  ஒரு நொடி கூடத் தூங்க முடியவில்லை.  தூக்கமா?  உடனடியாகக் கிளம்பி சுவாசிக்கக் கூடிய இடத்துக்கு ஓடி விடலாம் போல் இருந்தது.  (ஓ காட், இந்தியாவுக்கு அலுமினிய டப்பாவில்தான் திரும்புவோமா?)  நேரம் ஆக ஆக எனக்கு வாய் வேறு குழறியது.  கைகள் தட தட என்று நடுங்க ஆரம்பித்தன.  தூங்கிக் கொண்டிருந்த நண்பர் எழுந்து விசாரித்தார்.  அவரோடு பேசும் போதும் குழறியது.  (மூஷ்ஷு விஷ இப்போஷும் கஷ்ஷமாத்தான் இழுக்கு…) உயிர்ப் பயத்தோடு கூட ’இனிமேல் எப்போதுமே இப்படித்தான் குழறுமோ’ என்ற பயமும் சேர்ந்து கொண்டது… 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai