ரொம்ப காலத்துக்குப் பிறகு இங்கே வருவது போல் உள்ளது. எடுத்த வேலை இன்னும் முடியவில்லை. இன்று காலை நாலு மணிக்கே எழுந்து கரதலையாக உட்கார்ந்து முடித்து விடுவோம் என்று ஆரம்பித்தேன். எடுத்ததுமே ஆப்பு. வேர்டில் இருந்த ஃபைலைத் திறக்க முடியவில்லை. எர்ரர் என்று வந்தது. மணி நாலு. என் பையன்கள் முத்துக்குமாருக்கும் பாக்யராஜுக்கும் மெஸேஜ் கொடுத்தேன். எழுந்தவுடன் அழையுங்கள். ஒன்பது மணிக்கு முன்னதாக அழைக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கொடுத்து வைத்தேன். எடிட்டிங் வேலையை முடித்து விட்டேன். கடைசியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்றோ நாளையோ முடித்து விடலாம் என்று பார்த்தால் இந்தப் பிரச்சினை. நல்லவேளை, எடிட் செய்த நாவலை ஆகஸ்ட் முதல் தேதியே என் மெயிலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேன். ஆனால் அது அரை கிணறு தாண்டிய வேலை. ஏனென்றால், ஆகஸ்ட் பதினைந்து தினங்களில்தான் 250 பக்கங்களை எடிட் செய்திருந்தேன். மொத்தம் 700 பக்கம். இந்தப் பதினைந்து தினங்களில் எப்படி இத்தனை வேகம் என்றால், பூனைகள் காப்பகத்துக்குப் போய் விட்டன. ஆக, ஒருவேளை ஃபைல்கள் கெட்டு காணாமல் போனாலும் மெயிலிலிருந்து 450 பக்கங்கள்தான் கிடைக்கும். மீதி 250ஐ மீண்டும் செய்ய வேண்டும். சரி, அப்படியெல்லாம் ஆகாது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். மேலும், இது உங்களுக்கும் ஒரு பாடம். முந்தாநாள் வேலை முடிந்ததுமே நான் ஃபைலை எனக்கு மெயில் அனுப்பியிருக்க வேண்டும். செய்யவில்லை.
கோபி கிருஷ்ணனைப் படித்தேன். வளன் அரசு ஒரு வாரமாகப் பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். பேசினேன். ராகவன் ஒரு வாரமாகப் பேச வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருந்தார். பதில் மெஸேஜ் கூடக் கொடுக்கவில்லை. பேசினேன். எட்டு மணி வாக்கில் கபிலனை அழைத்தேன். ஷ்ருதி டிவி. அவர் டீம் வ்யூவரை நீக்கி விட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்யுமாறு சொன்னார். ஆனால் எதையுமே நீக்கக் கூட முடியவில்லை. எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருந்தது. என்னுடைய கணினி பழசாகி விட்டது என்று நினைக்கிறேன். விலை எல்லாம் ஒரு லட்சம் இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் இதிலேயே இன்னும் காலம் தள்ளுவது கடினம் என்று தோன்றுகிறது. MAC-க்குத் தாவி விடலாம் என்று பார்க்கிறேன். நான்கைந்து பேர் சேர்ந்தால் வாங்கி விடலாம். அமெரிக்க நண்பர்கள் முயற்சி செய்யவும். இந்திய விலை கட்டுப்படி ஆகாது.
கடைசியாக ஒன்பது மணி அளவில் இரண்டு தம்பிகளும் அழைத்தார்கள். அவர்கள் சொன்ன வழியிலும் ஒன்றும் ஆகவில்லை. பிறகு கணினி சரி செய்யும் தொழில்முறை நண்பரை அழைத்து சரி செய்தேன். மணி இரண்டு ஆகி விட்டது. பத்து மணி நேரம் வீண். ஆனால் பேச வேண்டிய சில நண்பர்களோடு பேச முடிந்தது ஆறுதல்.
வேலையை முடிக்காமல் இங்கே வந்ததற்குக் காரணம், இதை எழுதாவிட்டால் இன்று என்னால் தூங்க முடியாது. எழுதியே ஆக வேண்டும். இன்றைய தமிழ் இந்துவில் வந்துள்ள புத்தக மதிப்புரை ஒன்றைப் பார்த்து விட்டுத் தொடருங்கள். அதற்கு முன்னால் இன்னொரு விஷயம். என் மதிப்புக்குரிய நண்பரும் பேராசிரியரும் கால்நடை விஞ்ஞானியுமான குமரவேள் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தார். அதன் விவரம்: ஒரு ஆலோசனை என்பது தவறு. ஓர் ஆலோசனையே சரி. ஒரு என்பது உயிர்மெய் எழுத்துக்கு முன்னால் மட்டுமே வரும்; உயிர் எழுத்துக்கு முன்னால் ஓர்தான்.
இது பற்றியும் ஆயிரம் முறை எழுதி விட்டேன். இன்றைய நிலையில் தமிழில் மிகக் குறைந்த பிழைகளுடன் எழுதும் ஆட்களில் நானும் ஒருவன். குறைந்த பிழைகள் என்றால், 200 பக்க நூலில் ஒன்றிரண்டு பிழைகளே இருக்கும். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ பக்கத்துக்குப் பத்து தப்பு விடுகிறார்கள். எனக்கு மிகப் பிடித்த ஒரு சமீபத்திய நாவலை என் நண்பர் ஒருவரிடம் சிபாரிசு செய்து கொடுத்தேன். பத்து பக்கத்துக்கு மேல் போக முடியவில்லை என்று நிறுத்தி விட்டார். என்னங்க இது, ஜெட் வேகத்தில் பறக்குமே என்றேன். பக்கத்துக்குப் பத்து தப்பு என்றார். ஐயோ, அந்தப் பதிப்பகத்தில் ஒரு அச்சுப் பிழை கூட இல்லாமல் பார்ப்பார்களே என்றேன். அச்சுப் பிழை என்றால் கடந்து விடுவேன். இலக்கணப் பிழை. தாங்க முடியவில்லை. சாப்பாட்டில் கல் கிடப்பது போல் இருக்கிறது. இத்தனைக்கும் புலவர் பட்டம் வாங்கியவர் பிழை திருத்தம் செய்தது. புலவரின் தமிழில் ஒரு பிழை இருக்காது. ஆனால் பிழை திருத்தத்தில் கோட்டை விட்டு விட்டார். சென்ற ஆண்டு புத்தக விழாவில் நடந்த கதையையும் சொல்லியிருக்கிறேன். ஒரு தோழி தூண்டி விட்டார். எஸ்ராவைப் பாருங்கள், ஜெயமோகனைப் பாருங்கள், அவர்களுக்குத் தெரியாத ஒரு இளம் எழுத்தாளர் இல்லை. நீங்களோ எப்போது பார்த்தாலும் செல்லப்பா, க.நா.சு., தி.ஜா., தி.ஜ.ர. என்று பழைய ஆட்களையா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். வீறாப்பாகப் போனேன். ஒரு பதிப்பகத்தில் 3000 ரூபாய்க்கு பத்து புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். எல்லாம் இள ரத்தம். ஆனால் ஒரு பக்கத்தைக் கூட தாண்ட முடியவில்லை. பின்னட்டையிலேயே மூணு நாலு தப்பு, காப்பிரைட் பக்கத்தில் ரெண்டு மூணு, சமர்ப்பணத்தில் ஒரு பெயர் இருக்கும் அல்லவா, அந்தப் பெயரில் தப்பு. சரி, இதெல்லாம் அச்சுப் பிழை என்று மன்னித்து பிரதிக்குள் போனால் கொடூரமான இலக்கணப் பிழைகள். பக்கத்துக்குப் பத்து.
என்ன செய்யலாம்? எனக்கு ஒரு சந்தேகம். குழந்தைகள் – உலகம் பூராவும் உள்ள குழந்தைகள் மட்டும் எப்படி இலக்கணச் சுத்தமாக அதது மொழியைப் பேசுகின்றன? நாய் வந்துச்சு என்று சொல்லாமல் எந்தக் குழந்தையாவது நாய் வந்தான் என்று சொல்கிறதா? அவன் வந்தாள் என்று சொல்கிறதா? நாளைக்கு வந்தேன் என்று சொல்கிறதா? மழலைகளைச் சொல்லவில்லை. ஆறேழு வயதுக் குழந்தைகள். தாத்தா நீ என் கூட வா என்றுதானே சொல்கின்றன? தாத்தா வா கூட நீ என்று சொல்கிறதா? அப்புறம் நீங்கள் மட்டும் ஏனய்யா தாத்தா வா கூட நீ என்று மொழிபெயர்க்கிறீர்கள்? காரணம், Thaatha, come with me. மொழிபெயர்ப்பு, தாத்தா, வா கூட நீ. நான் இங்கே மொழிபெயர்ப்புக் குளறுபடிக்குக் கூட வரவில்லை. சொந்த சரக்கே சந்தி சிரிக்கிறது. எடுத்து கொண்டு, கருகி போயிருந்த என்றெல்லாம் படித்தால் நடு வெய்யிலில் அம்மணக்குண்டியுடன் தார்ச்சாலையில் படுக்கப் போட்டு அடிப்பது போல் இருக்கிறது. எடுத்துக் கொண்டு, கருகிப் போயிருந்த என்று எழுத எனக்கு இலக்கணமே தேவையில்லை.
சி.சு. செல்லப்பா, க.நா.சு., கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஆதவன், புதுமைப்பித்தன், மௌனி, சார்வாகன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் புலவர் பட்டம் வாங்கியவர்கள் அல்ல. சாதாரணமாக பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள். கரிச்சான் குஞ்சு, இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் ஆகியோர்தான் புலவர் பட்டம் வாங்கியவர்கள். அல்லது, தமிழை முறையாகக் கல்லூரியில் படித்தவர்கள். இந்த மூவரைத் தவிர மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒரு இலக்கணப் பிழை கூட பார்க்க முடியாது. ஒரு ஒற்றுப் பிழை கூட பார்க்க முடியாது. காரணம் என்ன? அது பழக்கம். எனக்கும் பழக்கம். குழந்தைகள் இலக்கணப் பிழை இன்றி ஒரு மொழியைப் பேசுவது போல. அப்புறம் ஏன் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இத்தனை இலக்கணப் பிழை நேர்கிறது? உண்மையிலேயே எனக்குக் காரணம் தெரியவில்லை.
என் எழுத்தைப் பொறுத்தவரை – பொருத்தவரை என்று எழுதுபவர்களின் விரல்களில் பிரம்பால் நூறு அடி கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது, இக்கால இளைஞர் அத்தனை பேரும் பொருத்தவரை என்றுதான் எழுதுகிறார்கள் – அதில் வரும் இலக்கணப் பிழைகள் நான் வேண்டுமென்றே செய்வது. காமரூபக் கதைகள் என்பதே சரி. ஆனால் என் தலைப்பில் காமரூப கதைகள் என்றே இருக்கும். முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஒருவரிடம் குறை கண்டு பிடிக்கும் முன் அவருடைய எழுத்தை மிக நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் மொழியில் HARMONYயைப் பின்பற்றுகிறேன். இலக்கணத்தை அறிந்து கொண்டு அதை மீறுகிறேன். காமரூபக் கதைகள் என்றால் ஹார்மனி சரியில்லை. காமரூப கதைகளில்தான் லயம் உட்காருகிறது. எனக்கு மொழியில் இசை முக்கியம். இலக்கணத்தை விட. அதற்காக அந்தச் சினிமா என்றும் இன்று இரவுச் சந்திக்கலாமா என்றும் தமிழ்க் கொலை செய்ய மாட்டேன். புலவர்களும் இன்று இளைஞர்களோடு சேர்ந்து கொண்டு தமிழைக் கொலை செய்கிறார்கள். இளைஞர்கள் தெரியாமல் செய்கிறார்கள். ஒற்றே போடுவதில்லை. அவர்கள் எழுதும் தமிழ் ஓலைச்சுவடி தமிழ் மாதிரி ஒற்றெழுத்தே இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. புலவர்களோ ஓர் ஊரில் ஓர் அரசி இருந்தாள் என்று எழுதி குழந்தைகளைத் தமிழ் வகுப்பிலிருந்து துரத்தி அடிக்கிறார்கள். தமிழ் உங்கள் கடவுள். நானோ கலைஞன். உங்கள் கடவுள் எனக்கு சேவகம் செய்கிறது. இது வேறோர் தளம். கவனியுங்கள். இங்கே உயிரெழுத்துக்கு முன்னே ஓர் வருகிறது. நான் கலைஞன். நான் எழுதுவதுதான் இலக்கணம். ஏனென்றால், இலக்கியத்துக்கு இலக்கணம் சேவகம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் தப்பும் தவறுமாக, இலக்கணமே தெரியாமல் நான் கலைஞன் என்று பிதற்றினால் அவர் கார்ல் மார்க்ஸ் அல்ல, க்ரோச்சோ மார்க்ஸ் என்று புரிந்து கொண்டு போய் விட வேண்டியதுதான்.
இவ்வளவையும் மீறி, உங்களுக்கு ஒழுங்கான தமிழ் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் பானுமதியின் காணொலிகளைப் பாருங்கள்.
சிறார்கள் இவரை பானு பாட்டி என்று அழைக்கிறார்கள். உம்மைத் தொகை, வியங்கோள் வினைமுற்று, இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், வினைத்தொகை, பெயரெச்சம், வினையெச்சம், எழுவாய்த் தொடர், விளித்தொடர், சுட்டுப் பெயர்கள், வினாப்பெயர்கள், வேற்றுமை உருபுகள், வேற்றுமைத் தொகைகள் என்ற பெயர்களெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஆனால் கிளம்பிச் சென்றானா, கிளம்பி சென்றானா என்று தெரிந்தே இருக்க வேண்டும். தெரியாவிட்டால் எழுதவே வரக் கூடாது.
இன்னொரு கொடுமை. மொழிபெயர்ப்பு. மொழிபெயப்புக் குளறுபடிகள் பற்றியே ஒரு நூறு கட்டுரை எழுதி நூறு பேருடைய பகைமையைப் பெற்றிருக்கிறேன். முதலில் எதிர் பதிப்பகம் அனுஷ். அவருடைய ஜென்ம விரோதிப் பட்டியலில் எனக்குத்தான் முதல் இடம். காரணம், அவருடைய பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சித்தேன். இரண்டாவது, வேண்டாம், பட்டியல் நீளம். எனக்கு க்ரியா பதிப்பகம் என்றால் ஒரு பைத்தியம். தமிழில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம்தான் உச்சபட்ச பதிப்பகம். அதற்குப் பிறகு க்ரியா. அதற்குப் பிறகுதான் மற்ற பதிப்பகங்கள் என்று பல தசாப்தங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது க்ரியாவிலிருந்து வரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் பார்க்கும் போது தலை சுற்றுகிறது. க்ரியாவின் சிறப்பு என்னவென்றால், மூல மொழியிலிருந்தே தமிழுக்கு மொழிபெயர்ப்பார்கள். ஆனால் இப்போது க்ரியாவின் ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களைப் பார்த்தால் வாந்தி வருகிறது. எனக்கு வெ. ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பு பிடிக்கும். ஆனால் க்ரியாவின் ஃப்ரெஞ்ச் – தமிழ் நூலில் மொழிபெயர்ப்பாளர் பெயர் ஏதோ நாயகர் என்று இருந்தது. தமிழ் சகிக்கவில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்பவர் பலர் தமிழர்களாகவும் தமிழ்நாட்டிலேயே வாழ்பவர்களாகவும் இருப்பதால் அதுவும் ஒரு கசாப்புக் கடையாகவே காட்சியளிக்கிறது. அ.இரா. வெங்கடாசலபதி ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்ன மாதிரி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்று விவரமாக எழுதியிருக்கிறேன் ஜெர்ரி பிண்ட்டோ ஹிண்டு தினசரியில் சலபதியை நார்நாராகக் கிழித்துத் தோரணம் கட்டி விட்டார். சலபதி ஒரு பெரும் ஆய்வாளர். மரியாதைக்குரியவர். அவர் ஏன் தனக்குத் தெரியாத ஒரு துறையில் போய் அவமானப்பட வேண்டும்? கமல் கவிதை எழுதி எழுதி அவமானப்படுகிறார் என்றால் அவரிடம் அந்தக் கண்றாவியைச் சொல்லக் கூட நாதி இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் அப்படியா? தும்மினால்கூட எதிர்மறைச் செய்தியாக வந்து விடும்.
கவிஞர் சுகுமாரனை உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழில் தவிர்க்க முடியாத கவி. அவரது கோடைக்காலக் குறிப்புகளை விட்டு விட்டு யாரும் சமகாலத் தமிழ்க் கவிதையைப் பேச முடியாது. ஒரே ஒரு தொகுப்பில் இத்தனை மரியாதை. இந்தப் பரிவட்டம் போதாதா? ஆசை யாரை விட்டது, ஐயா பாப்லோ நெரூதாவின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். பெரிய தொகுப்பு. ஒரே பேத்தல். நெரூதாவின் உச்சபட்ச கவிதை அவருடைய மாச்சு பிச்சு. அதில் முக்கியமான ஒரு பத்தியையே காணோம். ஏனென்றால், மொழிபெயர்க்க அது ரொம்பக் கடினம். மற்ற இடங்களிலும் ஒரே அலங்கோலம். இது பற்றி மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதினேன். ஆள் அடங்க வேண்டாமா? காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் நூறாண்டுகளின் தனிமையை மொழிபெயர்த்தார். அதுவும் குப்பை. எடுத்த எடுப்பிலேயே கோளாறு. முதல் பத்தியிலேயே அர்த்தப் பிழை.
இந்த நிலையில் இன்று காலை தமிழ் இந்துவில் வந்த ஒரு புத்தக மதிப்புரையைக் காண நேர்ந்த காலத்தின் கோளாறை என்னவென்று சொல்வது? நேற்றுதான் யுவன் சந்திரசேகரின் படைப்புகள் பற்றி அரை மணி நேரம் புகழ்ந்து என் சிநேகிதியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று அவரே அந்த மதிப்புரையின் இணைப்பை எனக்கு அனுப்பியிருக்கிறார். மதிப்புரை எழுதிய ஆசைக்கு நன்றி சொல்லி இதை ஆரம்பிக்கிறேன்.
லோரன்ஸ் வில்லலோங்கா என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரின் பொம்மை அறை என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர் யுவன் சந்திரசேகர். அதற்கான மதிப்புரையை தமிழ் இந்துவில் ஆசை எழுதியிருக்கிறார். தமிழில் எம்.எஸ்., ஜி. குப்புசாமி போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளைத் தவிர மற்ற மொழிபெயர்ப்பு நூல்களை நான் மலத்தைப் போல் கருதி ஒதுக்குபவன். அதனால் இது போன்ற மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடுகளவும் கவனிப்பது இல்லை. ஆனானப்பட்ட, நான் பைபிளைப் போல் கருதும் Dictionary of Khazars நாவலே தமிழில் வந்திருப்பதையும், அதையும் ஒரு ஆள் கைமா பண்ணியிருப்பதையும் கேள்விப்பட்டேன். நமக்கு ஏன் இந்த மலக்கிடங்கு விவகாரம் எல்லாம் என்று விட்டு விட்டேன். ஆனாலும் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களைப் பற்றிய சரியான மதிப்புரை இல்லாமல் வாங்கக் கூடாது என்ற முடிவே அது. திரும்பவும் சொல்கிறேன். எம்.எஸ்., ஜி. குப்புசாமி போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளை நம்பி வாங்கலாம்.
மொழிபெயர்ப்புகள் எந்த லட்சணத்தில் செய்யப்படுகின்றன என்பதற்கு ஆசை தரும் உதாரணங்கள். Pagan, Paganism என்ற வார்த்தைகள் சமயச் சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட, சமயத்துக்குப் புறம்பான, சமயவுணர்வுக்கு எதிரான, சமய வெறுப்பு, அஞ்ஞானம் என்ற ரீதியிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விவிலிய மொழியில் புறவினத்தார், புறமதத்தார் என்பதே அதன் பொருள். Palaces என்பது இடங்கள். Intelligible என்றால் புரியக் கூடிய என்று பொருள். மொழிபெயர்ப்பில் பூடகமான!!!
அடுத்து வருவதுதான் பயங்கரமானது: ஆங்கிலம். For Dan Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night.”
இதற்கு யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு: டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்.
ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழியானாலும் அது எவ்வளவு சுலபமாகப் புரிகிறது. தமிழ் நம்முடைய தாய் பாஷையானாலும் எவ்வளவு அந்நியமாக நிற்கிறது பாருங்கள். ஏற்கனவே இது ஸ்பானிஷில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதுதான் இப்படிக் கச்சடாவாகத் தமிழில் கிடைக்கிறது. ஆசிரியர் என்ன சொல்கிறார். தான் தோனியைப் (ஸ்பானிஷில் ட கிடையாது) பொறுத்தவரை கலை என்பது குழந்தைகளைப் போன்றது. குறிப்பிட்ட வழிமுறை எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது. கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.
இது ஆசையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்.
எழுத்தாளரைப் பற்றி “எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்…” இதன் ஆங்கில மூலம்: He always lived off… இதற்குப் பொருள்: எப்போதுமே பிறரை அண்டி வாழ்ந்தார்.
For க்கும் offக்கும் வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் மொழிபெயர்த்து நாம் அதைப் படிக்க வேண்டியிருக்கிறது!!!
அவர் எப்போதுமே ஒரு புரவலராக வாழ்ந்தார். மொழிபெயர்ப்பு.
மூலம்: He always had a benefactor. அதாவது, அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்.
Dog-cart : யுவனின் மொழிபெயர்ப்பு: நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி. உண்மையில் அது ஒரு சிறிய குதிரை வண்டி.
Ark of the covenant : யுவன் கவனெண்ட் கப்பல். உண்மை: கவனெண்ட் பெட்டகம்.
Will never amount to much : யுவன் : இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு.
சரியான அர்த்தம்: அவர்கள் தேற மாட்டார்கள்.
Thrush : யுவன்: அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்
சரியான அர்த்தம்: ஒரு பறவை
ஆங்கிலத்தில் டைஃபஸ் தமிழில் டைஃபாய்டாக மாறியிருக்கிறது.
Immoral – ஒழுக்கக் கேடான
யுவன்: அழிவற்ற. யுவன் நல்ல கண்ணாடிதான் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். Immortal என்று படித்து விட்டார்.
அதேபோல் இன்னொரு கந்தர்வகோலம்
Heresy என்பதற்கு யுவனின் மொழிபெயர்ப்பு: செவிவழிச் செய்தி, புரளி, கேட்பார் சொல்.
Heresy என்பதன் பொருள் மதநிந்தனை. உதாரணமாக, ஒரு கத்தோலிக்கன் கடவுள் இல்லை என்று சொன்னால் அது ஹியர்சி. யுவன் அதை heresay யோடு குழப்பிவிட்டார்.
Habit யுவன் மொழிபெயர்ப்பு பழக்கம். ஆனால் habit என்றால் துறவிகளின் நீண்ட அங்கி.
Unwholesome யுவன் மொழிபெயர்ப்பு முழுமையற்ற. சரியான அர்த்தம்: ஆரோக்கியமற்ற.
மேலும், நாவலில் சில இடங்கள் காணாமலே போய் விட்டன என்கிறார் ஆசை.
இதெல்லாம் சர்வ சாதாரணம். நான் பார்த்த மொழிபெயர்ப்பெல்லாம் இதைவிட கொடூரம் எனவே வாசகர்களே, மொழிபெயர்ப்புகளை வாங்கும் போது கவனமாக இருங்கள். இதன் பொருள்: வாங்காதீர்கள்.
இது பற்றி என் நண்பரிடம் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தபோது காசுக்காகச் செய்திருப்பார் என்றார் நண்பர். நண்பருக்கு இந்த ஜென்மத்தில் எழுத்தாளனைப் பற்றித் தெரியப் போவதில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டேன். எனக்கு யுவனைத் தெரியும். கோடி ரூபாய் கொடுத்தாலும் மயங்க மாட்டார். இலக்கியத்தின் மீதான அதீத ஆர்வத்தினால் இந்தக் கோளாறு. செய்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் சன்னி லியோனியின் படத்தைப் பார்த்துக் கர மைதுனம் செய்யுங்கள். சமூகத்துக்குத் தீங்கு இல்லை. இம்மாதிரி வேலைகள் தமிழை அவமானப்படுத்துகின்றன. புத்தகம் வாசிப்பவர்களை ஏமாற்றுகின்றன.
இந்தியர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று வெளிநாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது. இப்படியெல்லாம் மொழிபெயர்ப்பது ஏமாற்றுவேலை இல்லாமல் வேறு என்ன, சொல்லுங்கள்? தெரியாமல் செய்வதா இது? கத்தியையே தொட்டிராதவன் சத்திர சிகிச்சை செய்கிறேன் என்று கிளம்பினால் நோயாளி செத்து அல்லவா போய் விடுவான்? போலி டாக்டரைத் திட்டுகிறீர்களே, இது போன்ற போலி மொழிபெயர்ப்புகளை எப்படிச் செய்து கொடுக்கிறீர்கள்? நான் பதிப்பகத்தின் மீது தவறே சொல்ல மாட்டேன். யுவன் சந்திரசேகர் என்ற பெயரை பதிப்பகத்தார் நம்புகிறார். நானே நேற்று யுவன் பற்றி அரை மணி நேரம் லெக்சர் கொடுத்தேன் நண்பரிடம். அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டு நோயாளியைக் கொலை செய்கிறீர்கள். Intelligibleக்குக் கூட அர்த்தம் தெரியாதவர்களெல்லாம் ஏன் ஐயா மொழிபெயர்க்கக் கிளம்புகிறீர்கள்? நீங்களெல்லாம் உங்கள் சொந்த மொழியில் பிரபலமான கவிகள், நாவலாசிரியர்கள், 35 ஆண்டுகளாக இலக்கியம் படைத்தவர்கள். இப்படித் தெரியாத மொழியில் போய் விளையாட வெட்கமாக இல்லை?
நான் பாட்டுக்கு சிவனே என்று நாவலை எடிட் பண்ணிக்கொண்டிருந்த என்னை இந்த சமூக நற்பணியில் இழுத்து விட்ட என் சிநேகிதிக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன். என் பணி கூடுகிறது. ஒரு மொழிபெயர்ப்பு நாவலைத்தான் எடிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஔலியாவே காப்பாற்று!!!
நன்றி: ஆசை, தமிழ் இந்து
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai