பூச்சி 126

வணக்கம்.  என்னை உங்களுக்கு தெரியாது. உங்களது பேச்சுக்களை கேட்டு புத்தகங்களையே வாசித்திராதவன். எனக்கு 16வயது.

நீங்கள் எனக்கு ஷ்ரூதி டிவி காணொலிகளின் மூலம் அறிமுகமானவர். இலக்கியத்தை பற்றி நான் உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன்.

கீழுள்ள சிறுகதை நான் எழுதியது தான்.அடியேன் உங்களை வாசிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை!…

இலக்கியம் என்று தவறாக கற்பிக்கப்படுவதன் சித்தரிப்பே இச்சிறுகதை.இலக்கிய பிழைகள் இருப்ந்தால், அடியேன் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் என நினைவில் கொள்ளுங்கள்.

***

இப்படி ஒரு கடிதம்.  கடிதத்தோடு சிறுகதை.  கடும் கோபம்தான் வந்தது.  சின்ன பையன் என்றாலும் அத்துமீறக் கூடாது இல்லையா?  இதில் என்ன அத்துமீறல் என்று நினைக்கலாம்.  பதினாறு வயதில் ஒரு அடக்கம் வேண்டாமா? எவ்வளவு திமிர் இருந்தால் அதை ஒரு எழுத்தாளனுக்கும் அனுப்பி வைக்க முடியும்?  எவ்வளவு அகம்பாவமும் திமிரும் இருக்க வேண்டும்?  அடியேன் என்று எழுதினால் மட்டும் போதுமா?  அடியேன் என்பது வெறும் வார்த்தையா? சரி, ஆர்த்தர் ரேம்போ பதினாறு வயதில்தானே உலக இலக்கியம் படைத்தார், குஸ்தாவ் ஃப்ளெபர் பதினாறு வயதில்தானே பைத்தியக்காரனின் நினைவுக் குறிப்புகள் எழுதினார், அப்படி ஏதாவது ப்ராடிஜியாக இருந்து தொலைக்கப் போகிறது, வெறும் கடிதத்தை மட்டும் வைத்து முடிவு பண்ணக் கூடாது என்று கதையில் ஒரு நாலு பாராவைப் படித்தேன்.  நாற்பது தப்பு.  தமிழே எழுதத் தெரியவில்லை.  கதை எப்படி என்று பார்த்தால் இரண்டு வயது குழந்தையிடம் சாக்பீஸைக் கொடுத்தால் கிறுக்கும் இல்லையா அப்படி ஒரு கதை.  கதை என்றால் கர மைதுனம் செய்வது போல என்று நினைத்து விடுவார்கள் போல் இருக்கிறது.  எத்தனையோ பதினாறு வயதுப் பையன்களைப் பார்த்திருக்கிறேன்.  அவர்களின் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன்.  வளன் அரசை எனக்குப் பதினாறு வயதிலிருந்து தெரியும்.  இப்படி ஒருவர் அல்ல.  பலர்.  ஆனால் இவ்வளவு சின்ன வயதில் இத்தனை திமிர் கூடாது.  எழுதலாம்.  எழுத வேண்டாம் என்று சொல்லவே இல்லை.  அதை யாரிடம் கொடுப்பது?  மின்னஞ்சல் முகவரி இருந்தால் தட்டி விட வேண்டியதா? 

இதனால்தான் இந்தியாவைத் தவிர பிற நாட்டு எழுத்தாளர் எவருமே தங்கள் மின்னஞ்சல் முகவரியை யாருக்குமே தெரியப்படுத்துவதில்லை.  ரஜினியின் தொலைபேசி எண்ணோ மின்னஞ்சல் முகவரியோ யாருக்காவது தெரியுமா? அப்படித்தான் இருக்கிறார்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள்.  அவர்களின் ஏஜெண்டுக்கும் பதிப்பாளருக்கும் மட்டுமே எழுத்தாளர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியும்.  ஆனால் இங்கே அது சாத்தியம் இல்லை.  அப்படி இருந்தால் எழுத்தாளர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.

ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியின் பதினைந்தாம் ஆண்டு நிறைவு விழாவுக்காக ஒரு ரெண்டு நிமிட வாழ்த்துச் செய்தி கேட்டார்கள்.  ஒரு நிமிடத்துக்கு விளம்பர சார்ஜ் எவ்வளவு வாங்குகிறீர்கள் என்று கேட்டேன்.  அவருக்குத் தெரியவில்லை.  கேட்டுச் சொல்கிறேன் என்றார்.  கேட்டும் சொன்னார்.  ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு விதம்.  கூட்டி வகுத்தால் அரை நிமிடத்துக்கு ஐம்பதாயிரம்.  சரி, நான் ரெண்டு நிமிடம் பேசி அனுப்புகிறேன், ஐம்பதாயிரம் கொடுங்கள் என்றேன்.  பேசியவருக்கு என்ன தோன்றியதோ, கொஞ்ச நேரம் திகைத்து விட்டு கேட்டு சொல்றேன் சார் என்று சொல்லி போனை வைத்து விட்டார்.  எழுத்தாளன் என்றால் ஏதோ இவர்கள் வீட்டு சேவகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

பின்குறிப்பு: இம்மாதிரி விபத்துகளுக்காகத்தான் ஓசி காணொலிகள் இருக்கக் கூடாது என்கிறேன். ஒருநாள் கபிலனோடு உட்கார்ந்து பேசி ஷ்ருதி டிவியில் உள்ள என்னுடைய உரைகளையெல்லாம் இப்படி எல்லோரும் கண்டபடி பார்ப்பதைத் தவிர்க்க கடுமையான கட்டணம் நிர்ணயிக்கச் சொல்ல வேண்டும். ஓசியில் படித்தால் இப்படித்தான் கதை எழுதத் தோணும். எழுதிய கதையை அகப்பட்ட ஒரு எழுத்தாளனுக்கு அனுப்பவும் தோணும்.