அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் கதையை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது பற்றி என் கருத்து எதையும் எழுதவில்லை. என் தளத்தில் வெளியிட்டாலே அந்தக் கதை பற்றிய என் கருத்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்றே பொருள் என்று நினைத்தேன். மேலும், அந்தக் கதை பற்றி நான் உயர்வாக எழுதினால் அதைக் குப்பை என்று நினைப்பவர்களின் சுதந்திரமான மனப்போக்கைத் தடை செய்ததாகவோ அல்லது இடையூறு செய்ததாகவோ ஆகும் என்று நினைத்தும் அப்படியே விட்டு விட்டேன். என் நெருங்கிய நண்பரிடம் பொதுவாக தினந்தோறும் நேற்று எழுதியதைப் படித்தீர்களா என்று கேட்கத் தவறவே மாட்டேன். ஆனால் அராத்து கதை பற்றி வாயே திறக்கவில்லை. ஏனென்றால், அவர் குப்பை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் சொன்னால் அதை நான் தாங்க மாட்டேன். என் சிஷ்யன் படுதோல்வி அடைவதை நான் தாங்க முடியுமா? அதனால் அவரிடம் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. (இங்கே சிஷ்யன் என்றால் அராத்து என்று எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!)
அராத்து விஷயத்தில் நான் கொஞ்சம் கவனமாகவே இருந்தேன். (கவனியுங்கள்: இறந்த காலம்) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ”நைனிட்டாலில் உள்ள என்னுடைய மலைவாசஸ்தலத்துக்கு மூன்று நாள் அராத்துவோடு வாருங்கள், நானும் வந்து விடுகிறேன், ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கலாம்” என்று தருண் தேஜ்பால் சொன்னபோது ”அராத்து இப்போது ரொம்ப பிஸி, நான் மட்டும் வருகிறேன்” என்று தருணிடமும் ”தருண் என்னை மட்டுமே அழைத்திருக்கிறார் சீனி” என்று சீனியிடமும் பொய் சொல்லி விட்டு நான் மட்டுமே கிளம்பி விட்டேன்.
இதனால் நீங்கள் என்னைப் பொய்யன் என்று நினைத்து விடக் கூடாது. இன்னமுமே எனக்கு தீர்மானமாக எது பொய் எது உண்மை என்று தெரிய மாட்டேன் என்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். சில பையன்கள் ஒரு ஆமையைப் போட்டு அடியோதண்டம் என்று கம்பினால் அடித்துக் கொண்டிருக்கிறான்கள். அவ்வழியே சென்ற ஒரு பெரியவர் தனக்குள்ளாகவே முட்டாப் பசங்க, ஆமையைத் திருப்பிப் போட்டு அல்லவா அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செல்கிறார். உடனே பையன்கள் ஆமையைத் திருப்பிப் போட்டு அடிக்க ஆமை செத்தது. ஆக, உண்மைக்கு என்ன மதிப்பு? உண்மை இங்கே ஒரு கொலை பாதகத்தை அல்லவா செய்திருக்கிறது? அதே போன்ற ஒரு காரணத்தினால்தான் தருணிடமும் அராத்துவிடமும் பொய் சொன்னேன்.
அது ஒரு பெரிய கதை. அராத்து இன்றைய கதையை எழுதுகிறார். இது பலருக்கும், அதாவது, நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்குக் குப்பையாகத்தான் தெரியும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஸீரோ டிகிரி எழுதிய போது அது குப்பையாகத் தெரிந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ராஸ லீலா. பத்து ஆண்டுகளுக்கு முன் காமரூப கதைகள். ஏழு ஆண்டுகளுக்கு முன் எக்ஸைல். ராஸ லீலாவில் இன்று நடைமுறையில் உள்ள செக்ஸ் சாட் பற்றி எழுதினேன். அதில் ஒரே repetition, அந்தப் பகுதியை நான்கில் ஒன்றாகக் குறைத்து விடுங்கள் என்று என் நெருங்கிய நண்பர் அறிவுரை பகர்ந்த போது வாயை மூடு என்று சொல்லி விட்டேன். ஆனால் அதையே வைத்து என் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் (அவரது ஆங்கிலத்தின் மீது எனக்கு ஒரு மோகமே உண்டு) என்னை வதைக்க ஆரம்பித்த போது அவருடனான உறவையே அறுத்துக் கொண்டேன். என்ன தெரிகிறது என்றால், நான் ஒரு இருபத்தைந்து ஆண்டு முன்னோக்கி யோசிக்கிறேன் என்பதுதான். இப்போதும் என்னால் ஐம்பது வயது அப்பன்களிடம் பேசுவதை விட அவர்களின் இருபது வயது பிள்ளைகளிடம் பேசுவது லகுவாக இருக்கிறது.
எனக்கு இளம் வாசகர்களே அதிகம். ஒருவர் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவரா பழைய தலைமுறையா என்பதை ஒரே வார்த்தையில் கண்டு பிடித்து விடலாம். சாருவின் கட்டுரைகள் பிடிக்கும். கதை பிடிக்காது. அவ்வளவுதான். அவர் மூத்தவர். அவர்களோடு உரையாட எனக்கு எதுவும் இல்லை.
இப்போது அதை அராத்து செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அதில் சில பிரச்சினைகள் இருப்பதும் தெரிகிறது. மொழியில் command இல்லை. ஒரு தி.ஜா.வின் மொழித் திறமைடு இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதன் அர்த்தம் தி.ஜா.வின் நடை போல் என்று அல்ல. அதற்கென்று மா சே துங் இருக்கிறார். நாளை ஒரு சே குவேராவும் வருவார். நான் சொல்வது என்னவென்றால், ஒரு எழுத்தாளன் மந்திரவாதியைப் போல் மொழியைக் கையாள வேண்டும். மொழி எழுத்தாளனிடம் கை கட்டி சேவகம் செய்ய வேண்டும். குயவனின் கையில் உள்ள களிமண்ணைப் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். வழவழ என்று வழுக்கிக் கொண்டு ஓட வேண்டும். ஐஸ் ஸ்கேட்டிங் செய்வதைப் போல. கதையை நிராகரிப்பவர்கள் கூட கதை குப்பை, ஆனா லேங்வேஜ்ல கலக்குறா(ங்)யா மனுசன் என்று சொல்ல வேண்டும். என்னை அப்படிச் சொல்கிறார்கள். தவிர்க்கவே முடியாதபடி சுந்தர ராமசாமி சொன்னாரே, உங்க மொழி ரொம்ப சரளமா இருக்கு என்று. எல்லோரும் சரளமாக எழுதினால் அவர் ஏன் அப்படிச் சொல்லப் போகிறார்? இந்த ஒரு handicapதான் அராத்துவிடம் நான் காணும் குறையே தவிர மற்றபடி அவர் கதைகள் நிகழ்காலத்தின் பதிவுகள். இது குப்பை என்றால் நிகழ்காலம் குப்பையாய் இருக்கிறது என்று பொருள். இது ஆபாசம் என்றால் நிகழ்காலம் ஆபாசமாய் இருக்கிறது என்று பொருள்.
சரி, ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன். தருணிடமும் அராத்துவிடமும் ஏன் பொய் சொன்னேன்? பெரிய கதை. சுருக்கமாகச் சொல்கிறேன். எக்ஸைல் வெளியீட்டு விழா. தருண் பேச வந்திருந்தார். வழக்கில் மாட்டி பெயர் கெட்டு இருந்த நேரம். (அது ஒரு அரசியல் சதி என்றே நான் நம்புகிறேன்.) அவரை நான் அழைத்து வந்ததற்காக மறுநாள் ஒரு தினசரியில் ஒரு முழு பக்கத்தை ஒதுக்கி திட்டியிருந்தார்கள். தருணை சிக்க வைத்த அரசியல் கட்சியின் ஜென்ம விரோதிப் பத்திரிகையாக இருந்தாலும் தருண் தொழில் விரோதி என்பதால் போட்டு அடி அடியென்று அடித்துத் துவைத்தது அந்தப் பத்திரிகையின் அகில இந்தியப் பதிப்பு.
என் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, நான் சத்தியத்தின் பக்கமே நிற்பேன் என்றபடியால் நான் அது பற்றியெல்லாம் கவலையே படவில்லை. பொதுவாக என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு நண்பரையும் ஒன்றுக்கு ஒன்று என்று இரண்டு பேராக மட்டுமே சந்திப்பதில்லை. அது கொஞ்சம் அலுப்பூட்டுவதாக இருக்கும். (பெண்கள் விதிவிலக்கு. மேலே, எந்த ஒரு ஆண் நண்பரையும் என்று வந்திருக்க வேண்டும்.) எக்ஸைல் வெளியீட்டு விழா அன்று மதியம் அமேதிஸ்டில் தருணுக்கு ஒரு விருந்து கொடுக்கலாம் என்று நினைத்து அராத்துவையும் வரச் சொல்லியிருந்தேன். அராத்து அவருடைய தற்கொலைக் குறுங்கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டு வந்திருந்தார். (இன்னும் அது வெளியிடப்படவில்லை.) symphony of suicide என்ற தலைப்பு என்று நினைக்கிறேன். அதை தருணிடம் கொடுத்தார் அராத்து. அன்றுதான் அராத்துவை தருணிடம் அறிமுகம் செய்கிறேன். தருண் பொதுவாக இலக்கியத்தில் ஒரு cynic என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.
அன்றைய தினம் காமராஜர் அரங்கில் கூட்டம். தருண் முக்கால் மணி நேரம் பேசினார். அரை மணி நேரம் தற்காலத்திய இந்திய அரசியல் சூழலில் நிலவும் ஃபாஸிஸம். பதின்மூன்று நிமிடம் சிம்ஃபனி ஆஃப் ஸ்யூஸைட். இரண்டு நிமிடம் என்னைப் பற்றி. என் நண்பர்கள் மிகவும் நொந்து போய் விட்டார்கள். மறுநாளே தருணிடமும் கேட்டேன். நமக்கு எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதே? ”என்ன பாஸ் இது, (என்னை பாஸ் என்றுதான் அழைப்பது) உன் எக்ஸைல் பற்றித்தானே அரை மணி நேரம் பேசினேன்?” என்றார் தருண்.
என்னது? நீ ஃபாஸிஸம் பற்றி அல்லவா பேசினாய்?
அடப் பாவிகளா. அதைத்தானே நீ எக்ஸைலில் எழுதியிருக்கிறாய். அதையும் ஃபாஸிஸத்தையும் கோர்க்க மறந்து போனேனே. சே, ஸாரி பாஸ்.
(எக்ஸைலின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஏற்கனவே இதற்காக தருணிடம் கொடுத்திருந்தேன்).
இப்போது என்ன பிரச்சினை என்றால், அதாவது ஏன் நான் தருணிடமும் அராத்துவிடமும் பொய் சொன்னேன் என்றால், புக்கர் பரிசில் உள்ள ஒரு எழுதப்படாத ஷரத்துதான். அங்கே அவர்கள் இளவட்டங்களுக்குத்தான் பரிசு கொடுக்கிறார்கள். முதியோர் என்றால் அவர்கள் நோபல் பக்கம் திரும்ப வேண்டும். மேலும், நோபல்காரர்கள் பெருமாள் முருகனின் பெயரைக் குறித்து விட்டார்கள் என்பதால் அங்கே போய் மோதிப் பயன் இல்லை. அடுத்த சுற்று வர ஐம்பது ஆண்டுகள் ஆகும். வைரமுத்துவும் நோபலுக்கு முயற்சி செய்கிறார். ஆனால் அவர் அவருடைய சினிமா பாடல்களுக்கு முயற்சி செய்தால் கிடைத்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. இப்போது நோபலில் சினிமா பாடலையும் சேர்த்து விட்டார்கள். விரைவில் சினிமா டான்ஸையும் சேர்க்க இருக்கிறார்களாம். அப்படிச் சேர்த்தால் நம்முடைய கலா மாஸ்டருக்கு நல்ல சான்ஸ் இருக்கிறது. ஸாண்டிக்குக் கிடைக்காது. இளவட்டங்களை நோபல் கண்டு கொள்ளாது என்பதை முன்பே சொல்லி விட்டேன். ஆனால் வைரமுத்து அவருடைய நாவல்களை வைத்துக் கொண்டு முயற்சி செய்வதால் நோபல் கிடைப்பதில் வாய்ப்பு கம்மி. ஏன் என்று சொல்கிறேன். அவருடைய சினிமா பாடல்கள் ரொம்பவே சிறப்பானவை. அந்தத் தரத்தில் எழுத தாமரை ஒருத்தர்தான் உண்டு. அதோடு அதிர்ஷ்டவசமாக, வைரமுத்துவின் பாடல்களுக்குப் பிரமாதமான ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. சில ஆங்கிலேயர்கள் என்ன இது, ஷெல்லி மாதிரி இருக்கிறது என்று சொல்லக் கூட வாய்ப்பு உண்டு. ஆனால் அவருடைய நாவல்களுக்கு அப்படித் தரமான மொழிபெயர்ப்பு இல்லை. இந்த இடத்தில் பெ.மு. முன்னேறி விடுகிறார். மிகத் தரமான மொழிபெயர்ப்பு. நாவல் தரம் என்று பார்த்தால் பெ.மு.வும் வை.மு.வும் ஒன்றுதான் என்றாலும் – இது ரொம்ப ரொம்ப முக்கியமான என்றாலும் – பெ.மு.வுக்குக் கொலை மிரட்டல் இருந்தது. வை.மு.வுக்கு அது இல்லை என்பதோடு அவர்தான் பெண்களிடம்… சரி, வேண்டாம், அது நமக்கு வீண் வம்பு. நாம் இப்போது பேசுவது இலக்கியம். யாருக்குக் கொலை மிரட்டல் இருந்ததோ அவருக்குத்தான் நோபல். அதனால் நோபல் பக்கமே என்னால் தலை காட்ட முடியாது.
என் புதினங்கள் மிக அற்புதமான ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. ஆனால் இங்கிலாந்துப் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். பெங்குவின், ஹார்ப்பர்காலின்ஸ் எல்லாமே இந்தியாவில் கிளைகள் உள்ள இங்கிலாந்துப் பதிப்பகங்கள். அவைதான் பெ.மு.வின் நூல்களைப் பிரசுரம் செய்கின்றன. அந்தப் பதிப்பகங்களை இங்கே சென்னையில் அணுகுவதும் வெளியிடுவதும் எனக்கு ஒரு விஷயமே அல்ல. ஆனால் என்னை அவர்கள் பதிப்பிப்பதோடு நின்று விடுவார்கள். என்னை promote பண்ண மாட்டார்கள். ஏனென்றால், எனக்குக் கொலை மிரட்டல் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்தக் கொலை மிரட்டலை கம்யூனிஸ்டுகள் எதிர்க்க வேண்டும். எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டால் கம்யூனிஸ்டுகள் அதை ஆதரிக்கவே செய்வார்கள் (இந்துவவாதிகளும் அதை ஆதரிப்பார்கள்) என்பதால் எனக்கு இப்போது இருக்கும் ஒரே வழி, லண்டனில் இயங்கும் பதிப்பகத்தை லண்டனிலேயே அணுகுவதுதான். நான் நான்கு ஆண்டுகளாக ArtReview Asia என்ற elite பத்திரிகையில் பத்தி எழுதி வருவதால் அதுவும் என் சாத்திய எல்லைக்குள்தான் உள்ளது. இப்போது எனக்குத் தேவையான ஒரே விஷயம், கொலை மிரட்டல்தான்.
விஷயம் இழுத்துக் கொண்டே போகிறது. ஏன் தருணிடமும் அராத்துவிடமும் பொய் சொன்னேன்? மேலும் மேலும் அராத்துவை அங்கே கொண்டு போனேன் என்றால், சர்வ நிச்சயமாக அராத்துவுக்குத்தான் புக்கர் போகும். வயது ஒரு காரணம். இன்னொன்று, அவரோடு ஒப்பிட்டால் நான் இருபது ஆண்டு பின்னே நிற்கிறேன். மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் நான் ஐம்பது ஆண்டு முன்னே நிற்கிறேன் என்றாலும் அராத்துவோடு ஒப்பிட்டால் சொல்கிறேன். அதனால்தான் என் சிஷ்யனை நானே பதுக்க வேண்டியதாயிற்று.
எக்ஸைல் வெளியீட்டு விழா மட்டும் அல்ல. இன்னொரு சம்பவமும். கௌதம் மேனன் என்னிடம் ஆறு மாதம் டிஸ்கஷனில் இருந்தார். இரண்டு கதைகளை உருவாக்கினோம். ஒன்று அவர் உருவாக்கினது. நான் செப்பனிட்டேன். பல காட்சிகளுக்கு வசனம் எழுதினேன். இன்னொரு படம் கதையே என்னுடையதுதான். காட்சிகளும் பல என்னுடையது. அப்போது அராத்துவை கௌதமுக்கு அறிமுகம் செய்தேன். ஒரு முழு காட்சியை அராத்து எழுதிக் கொடுத்தார். டைட்டிலில் அராத்து பெயர் இருந்தது, என் பெயர் இல்லை. என் மகன் அதிர்ச்சி அடைந்தான். கதையே என்னுடையது ஐயா. பெயர் இல்லை. அதுவாவது போகட்டும். அராத்து பெயர் இருக்கிறது.
ஆக, எனக்கு உறுதியாய்த் தெரிந்து விட்டது. புக்கர் எனக்கு இல்லை. அராத்துவுக்குத்தான். அதனால்தான் அவரை அவ்வளவாக வெளியில் கொண்டு போய் ப்ரமோட் பண்ணாமல் கமுக்கமாக இருந்தேன்.
ஆனால் இப்போது திருந்தி விட்டேன். இல்லை. மாறி விட்டேன் என்று சொல்வதுதான் சரி. திருந்தி விட்டேன் என்றால் முன்பு ஏதோ கெட்டவனாக இருந்தேன் என்று ஆகிறது. என்ன மாற்றம் என்றால், இப்போது எனக்குக் கிடைக்காமல் அராத்துவுக்கு புக்கர் கிடைத்தால் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகுமே தவிர பொறாமையோ வயிற்றெரிச்சலோ ஏற்படாது.
காரணம், கனிந்து விட்டேன். சே. நானே மற்றவர்களைப் போல் உளற ஆரம்பித்து விட்டேன். ராஸ லீலாவும் காமரூப கதைகளும் எழுதிய போது சில கள ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். இளம் பெண்களைப் பற்றிய கதை என்பதால் இளம் பெண்களோடு பழகினேன். பாருக்குப் போனால் கூட அவர்களோடுதான் போவேன். அதனால் வுமனைஸர் என்றார்கள். பெயர் கெட்டது. ஆனால் நாவல்தான் முக்கியம். பெயர் முக்கியம் இல்லை. இப்போது ஒரு ஞானி பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். நானே ஞானியாகி விட்டேன். ஏதோ இரண்டு வார்த்தை சமாச்சாரம் அல்ல இது. மொத்தம் 20,000 பக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் ரத்தத்துக்குள் மஜ்ஜைக்குள் செரித்துக் கொள்ள வேண்டியிருந்தது. நானே அந்த ஞானியாக மாற வேண்டியிருந்தது. மாறி விட்டேன். சரி, ஒரு ரேப்பிஸ்ட் பற்றி எழுத வேண்டுமானால் நீ ரேப்பிஸ்டாக மாறுவாயா? இதெல்லாம் குதர்க்கம். அந்த மனநிலைக்குள் போக வேண்டும். அந்த மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஞானியை எழுத ஒருத்தர் வெளியிலிருந்து கொண்டு எழுத முடியாது. முடியவே முடியாது. காந்தியை எழுத வேண்டுமானால் நீங்கள் காந்தியாக மாறியே ஆக வேண்டும். கோட்ஸேவாக இருந்து கொண்டு காந்தியை எழுதுவது சாத்தியம் இல்லை. ஆனால் காந்தியிடம் என்ன பிரச்சினை என்றால், ஒருமுறை காந்தியாக மாறி விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாது. ஆக, நான் துரதிர்ஷ்டவசமாக காந்தியாகி விட்டேன்.
இந்தப் பின்னணியில், ரொம்ப காலமாக அமுக்கி (பதுக்கி) வைத்திருந்த அராத்துவின் suck guru என்ற கதையை நேற்று ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்கு அனுப்பினேன். அவர்களும் இலக்கியத் தீவிரவாதிகள். எதையும் சடுதியில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனுப்பிய பதில் ”எக்ஸெலண்ட். அடுத்த இதழில் இது பற்றி எழுதுங்கள்.” ஆக, அந்தக் கதை பற்றியும் மயிர்க்கூச்செறிதல் பற்றியும் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் அடுத்த இதழில் எழுத இருக்கிறேன். இரண்டு முறை ஜெயமோகன் பற்றி எழுதினேன். தஞ்சை ப்ரகாஷ், ந. முத்துசாமி பற்றியும் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். ஆனால் அராத்து பற்றி எழுதினால் அவருக்கு புக்கர் கிடைத்து விடும். அந்த அளவுக்கு அவர் சமகாலமாக இருக்கிறார். ஏதாவது கொலை மிரட்டலுக்கு மட்டும் arrange பண்ணிக் கொண்டார் என்றால் நோபல் கதவையும் தட்டலாம்.
எனக்கு ஒரே ஒரு தட்சணை கொடுத்தால் போதும். மிக மிக அவசரமாக MacAir தேவை. அவ்வளவுதான். இதை வாசிக்கும் நீங்களும் கூட உங்கள் பங்களிப்பை அனுப்பி வைக்கலாம்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai