Pithy thoughts – 5

நான் இங்கே

வந்ததிலிருந்து

அவனைப் பார்க்கிறேன்

ஒரு நாளும்

தவறியதில்லை

நெடுஞ்சாலையின்

எதிர்ப்பக்கத்தில்

படுத்திருக்கிறான்

இடம் மாறியதேயில்லை

அதே இடம்

எப்போது இங்கே

வந்தேனென்று

ஞாபகமில்லை

ஆனால்

நீண்ட காலமாயிற்று

என்பது மட்டும் நிச்சயம்

வந்ததிலிருந்து

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் வந்தால்

படுத்திருக்கிறான்

மாலையில் வந்தால்

படுத்திருக்கிறான்

இரவில் வந்தாலும்

படுத்திருக்கும் உருவம்

தெரிகிறது

பிரேதமென்றால் அழுகியிருக்காதா

துப்புரவுத் தொழிலாளர்கள்

அப்புறப்படுத்தியிருக்க

மாட்டார்களா

ஒருவேளை

சயனத்திருக்கும் சிலையோ

யாரும் வணங்குவதாகவும்

தெரியவில்லை

ஒருநாள்

கூச்சத்தை விட்டு

அருகில் சென்று பார்த்தேன்

என்ன ஒரு ஆச்சரியம்

அச்சு அசலாக

நான்