குமுதத்தில் சொல் தீண்டிப் பழகு என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். தொடர் மிகவும் நன்றாக இருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பின்வரும் கட்டுரை சென்ற அக்டோபர் மத்தியில் வந்தது. குமுதத்துக்கு நன்றியுடன் மறு பிரசுரம் செய்கிறேன்.
கட்டுரைக்குள் நுழையும் முன் இன்னொரு விஷயம். பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் யாரேனும் பூனை உணவு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். எனக்கு எழுதினால் முகவரி அனுப்புகிறேன். அதேபோல் சி.சு. செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபி கிருஷ்ணன், புதுமைப்பித்தன் ஆகியோர் பற்றிய என் உரைகள் தேவையென்றால் எனக்கு எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன். அதேபோல் ஷார்லட் தமிழ்ச் சங்கத்தில் பேசியதும். தொடர்பு முகவரி: charu.nivedita.india@gmail.com
இந்தக் கொரோனா கண்றாவியெல்லாம் முடிந்த கையோடு முதல் வேலையாக நூக் என்ற ஊருக்கு டிக்கட் வாங்க வேண்டும். பக்கம்தான். தில்லியிலிருந்து விமானத்தில் 35 மணி நேரம். உலக வரைபடத்தில் அமெரிக்க கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வடதுருவத்துக்கு அருகில் ஒரு பிரம்மாண்டமான நிலப்பகுதியாகத் தெரிகிறது கிரீன்லாந்து தீவு. உலகின் மிகப் பெரிய தீவு. ஆஸ்திரேலியா கிரீன்லாந்தை விடப் பெரியதுதான். ஆனால் ஆஸ்திரேலியா கண்டம் என்ற பிரிவில் வந்து விடுகிறது. கிரீன்லாந்து இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு மடங்கு. அப்படியானால் எவ்வளவு பெரியது என்று யோசித்துப் பார்க்கிறேன். ஜனத்தொகை 55,000. நம்ப முடியவில்லை. இந்தியாவில் ஒரு சிற்றூரின் ஜனத்தொகையே இதை விட அதிகம். இதில் 15000 பேர் தலைநகர் நூக்கிலும், மற்ற 40,000 பேர் ஆங்காங்கே கடற்கரை ஓர ஊர்களிலும் வசிக்கிறார்கள்.
90 சதவிகிதம் ஐஸ்கட்டிகளால் ஆன இந்த நாடு ஏன் கிரீன்லாந்து என்ற பெயர் பெற்றது என்று பார்த்தேன். பச்சை நிறத்தையே இந்த நாட்டில் பார்க்க முடியாது என்கிறார்கள். காய்கறி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மீன், மாமிசம் ஆகியவற்றைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் டென்மார்க்கிலிருந்துதான் வர வேண்டும். டென்மார்க்கின் காலனி நாடாக இருந்த கிரீன்லாந்து 1979-இல் சுதந்திரம் பெற்றது. ஆனால் அது முழுச் சுதந்திரம் அல்ல. சுதந்திரமான ஆட்சிமுறைதான் என்றாலும் பெயரளவுக்கு டென்மார்க் மன்னர்தான் கிரீன்லாந்தின் மன்னரும். எங்கு பார்த்தாலும் உறைபனி. தேசம் பூராவும் சாலைப் போக்குவரத்தோ ரயிலோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டுமானால் விமானத்தில்தான் போக வேண்டும். இல்லாவிட்டால் ஹெலிகாப்டர். வேறு வழியில்லை. விமானங்கள் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் எப்படிப் பயணம் செய்தார்கள்? ஸ்லெட்ஜ் மூலம் அதிக தூரம் செல்ல முடியாது. ஸ்லெட்ஜ் என்பது நாய்களைக் கொண்டு சறுக்கிச் செல்லும் வண்டி என்று பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
கப்பல் பயணத்தில் பெரிய பிரச்சினை இருக்கிறது. குளிர்காலத்தில் கடல் பூராவும் பனியாய் உறைந்து விடும். யோசித்துப் பாருங்கள். ஒரு பெருங்கடலே முழுவதும் பனியாய் உறைந்து கிடந்தால் எப்படி இருக்கும்? கிரீன்லாந்தில் பொதுவாக போக்குவரத்து என்பதே அசாத்தியமான ஒன்றுதான். குறைந்த தூரத்துக்கு ஸ்லெட்ஜில் போகலாம் என்றால், திடீரென்று பனி உள்வாங்கி ஸ்லெட்ஜ் மூழ்கி விடும் அபாயம் உள்ளது.
பொதுவாக ஆறு நாய்களைக் கொண்டு ஸ்லெட்ஜைப் பயன்படுத்துகிறார்கள். பதினோரு நாய்கள் வரை கொண்ட ஸ்லெட்ஜும் உண்டு. தலைநகர் நூக்கில் மட்டும் பஸ் வசதி இருக்கிறது.
சமீபத்திய ஆய்வுகளிலிருந்து 9000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து நாய்கள் ஸ்லெட்ஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிய வருகிறது. இது ஹஸ்கி என்ற வகை நாய்கள். வேட்டைக்கும் இங்கே நாய்கள்தான் மனிதனுக்கு உதவுகின்றன. பத்து மாதம் குளிர் காலம். அப்போது குளிர் மைனஸ் 60 டிகிரி வரை போகும். இரண்டே மாதம் இருக்கும் கோடையில் உச்ச வெப்பநிலை பத்து டிகிரி. குளிர் காலத்தில் வெய்யிலையே பார்ப்பது அரிது.
சரி, இப்படிப் பனிப்பாலையாய் இருக்கும் ஒரு நாட்டுக்கு ஏன் கிரீன்லாந்து என்று பெயர் வந்தது? பத்தாம் நூற்றாண்டில் நார்வேயில் எரிக் என்பவன் ஒரு சண்டையில் மூன்று பேரைக் கொன்று விட்டான். அவனை கிரீன்லாந்துப் பக்கம் நாடு கடத்தினார்கள். அதற்கு முன்பே அங்கே இன்யூத் இன மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். இவன் அங்கே போய், இந்த நாடு பூராவும் ஒரே பச்சை பச்சையாய் பூத்துக் குலுங்குகிறது என்று புளுகுச் செய்திகளை அவிழ்த்து விட்டான். அப்போதுதான் நார்வேயிலிருந்து மனிதர்கள் இங்கே வந்து வாழ ஆரம்பிப்பார்கள் என்பதற்காகச் சொன்ன புளுகு. அதுவே பின்னர் இந்த நாட்டின் பெயராக மாறிற்று.
இப்போதைய கிரீன்லாந்து ஜனத்தொகை 55000இல் 50000 பேர் இன்யூத் பழங்குடியினர்தான். உலக வரைபடத்தைப் பார்த்தால் உலகத்தின் தலை என்று சொல்லக்கூடிய வகையில் மேலே வட துருவத்தின் அருகில் தெரிகிறது இந்த நாடு. வட துருவத்துக்கும் கிரீன்லாந்தின் வடக்கு எல்லையில் உள்ள ஊருக்கும் உள்ள தூரம் 700 கி.மீ.தான்.
கிரீன்லாந்தின் உணவு மற்ற நாட்டு உணவு வகைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. மீனும் மாமிசமும்தான் உணவு. இன்யூத்துகள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஸ்லெட்ஜில் போகிறார்கள் என்றால், இடையில் அவர்கள் என்ன சாப்பிட முடியும்? அங்கேயே கிடைக்கும் பறவையையோ மானையோ கடலில் கிடைக்கும் Seal-ஐயோதான் வேட்டையாடி உண்ண வேண்டும். மீனையும் மாமிசத்தையும் எப்படி சமைப்பது? மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸில் எப்படி வெட்டவெளிப் பனிக்காட்டில் அடுப்பு எரியும்? சமைக்காமல் அப்படியே பச்சையாகத் தின்ன வேண்டியதுதான். சீலை அறுத்து அதன் ஈரலை சுடச் சுடத் தின்பார்கள். எப்போதுமே அப்படி அல்ல; கையில் கொண்டு வந்த உணவு தீரும்போது அப்படி நடக்கும். மற்றபடி மீனையும் மாமிசத்தையும் பாடம் பண்ணி வைத்துக் கொண்டு அதைக் கடித்துக் கடித்துத் தின்பார்கள். (நம் ஊரில் அந்தக் காலத்தில் உப்புக் கண்டம் என்று சொல்வார்களே, அந்த மாதிரி). மீன் என்றாலும் நம் ஊர் மாதிரி முள் உள்ள மீன் அல்ல. திமிங்கிலம், காலா, சீல் போன்ற சதைப் பற்றான மீன்கள். திமிங்கிலத்தை உலகில் வேறு எங்குமே உண்பதில்லை. ஆனால் கிரீன்லாந்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திமிங்கிலமும் சீலும்தான் பிரதான உணவு. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதை சாப்பிடாவிட்டால் அவர்களின் ஜனத்தொகை ஐம்பதாயிரத்திலிருந்து ஐந்தாயிரத்தைத் தொட்டு விடும்.
ஆனால் இன்யூத்துகள் தாங்கள் உணவுக்காகக் கொல்லும் மீன்களை தெய்வத்தைப் போல் கருதுகிறார்கள். உணவு கிடைப்பது அரிதான நாடு என்பதால் வேட்டையில் கிடைக்கும் மீனின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தி விடுகிறார்கள். கறி உண்பதற்கு. எலும்புகளால் ஆயுதம் தயாரிக்கிறார்கள். தோலில் ஆடைகள். மற்றும் கூடாரங்களுக்கும் தோல் பயன்படுகிறது. திமிங்கிலத்தின் தோலில் ஒருவகை சூயிங்கமும் தயாரிக்கிறார்கள். விலை மிகவும் அதிகம். கிரீன்லாந்தின் மற்றொரு விசேஷ உணவு, கலைமான் கறி. ஆனால் கிரீன்லாந்தின் வேட்டையில் ஒரு முக்கியமான விஷயம், அவர்கள் எந்த விலங்கையும் அழிந்து போக விடுவதில்லை. அதற்கான கடுமையான கட்டுப்பாடுகளுடன்தான் வேட்டையாடுகிறார்கள்.
தலைநகர் நூக்கிலிருந்து 720 கி.மீ. தூரத்தில் உம்மாநாக் என்ற ஒரு தீவு உள்ளது. அங்கேயும் செல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளது. இந்தத் தீவின் மொத்த பரப்பளவு 12 சதுர கி.மீ. இங்கே உள்ள வீடுகளில் தண்ணீர் வசதி கிடையாது. வெளியே போய்தான் பிடித்துக் கொள்ள வேண்டும். கழிப்பறை வசதியும் இல்லை. நம்மூரில் இருந்த அந்தக் காலத்து எடுப்புக் கக்கூஸ்தான். ஏனென்றால், அப்படிப்பட்ட வசதிகளையெல்லாம் செய்யக் கூடிய நிலையில் இந்தத் தீவின் தரை அமைப்பு இல்லை. எல்லாம் பனிப் பாறைகள். அவ்வப்போது உருகி ஓடும். பாதாள சாக்கடை கிடையாது. எல்லா வீட்டு சாக்கடையும் நேரடியாகக் கடலில் கலக்கிறது. சீஸ், தயிர், பழம் எல்லாம் ரொம்பவும் அரிதான பொருட்கள். எனவே எல்லாம் உப்புக் கண்டம்தான். குளிர்காலத்தில் இன்னும் கொடுமை. ஹெலிகாப்டரில் வந்துதான் சீஸ், தயிர், பழமெல்லாம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு ஃப்ரிஜ் இருக்கிறது. டிசம்பர் ஜனவரியில் ஒரு மணி நேரம்தான் பகல். மற்ற நேரமெல்லாம் இருட்டு. கிரீன்லாந்தின் மற்றொரு விசேஷம், இங்கே குற்றங்களே இல்லை. எல்லோருமே இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கும்போது எங்கேயிருந்து குற்றம் செய்யத் தோன்றும்? இன்னொன்று, எஸ்கிமோ என்பது நீக்ரோ என்பதைப் போன்ற இழிவு வார்த்தை. இன்யூத் தான் மரியாதையான வார்த்தை.
***
சில தினங்களுக்கு முன் என் நண்பர்கள் ராமசுப்ரமணியன் – காயத்ரி தம்பதியின் மகன் ஆதித்யா வெளியூரிலிருந்து சென்னை வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வரும் வழியில் டாக்ஸியில் பல புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து விட்டு டிரைவரிடம் புத்தகங்கள் படிப்பீர்களோ என்று கேட்டிருக்கிறான். தமிழ் இப்போது பேச்சு மொழியாக மாறி விட்டதால் ஆதித்யாவுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுத்துக் கூட்டிப் படிப்பான். பழுதில்லை. மற்றபடி ஆங்கிலத்தில் இத்தாலோ கால்வினோ எல்லாம் படித்திருக்கிறான். தமிழ் எழுத்தாளர்களே நான் க.நா.சு. படித்ததில்லை, முராகாமி படித்திருக்கிறேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் இந்தக் காலத்தில் இலக்கியத்துக்கு வெளியே இருக்கும் இந்த இளைஞன் இப்படி இருப்பதில் தப்பு இல்லை. ”ஆமாம் தம்பி, புத்தகங்கள் படிப்பேன்” என்று சொல்லியிருக்கிறார் டிரைவர். அதற்கு மேல் நடந்த உரையாடல் இது:
என்ன authors எல்லாம் படிப்பீங்க?
சுஜாதா என்று ஆரம்பித்து இன்னும் இரண்டு மூன்று பெயர்களைச் சொல்லியிருக்கிறார் டிரைவர். தம்பிக்கு சுஜாதா பெயர் மட்டும் தெரிந்திருந்ததால் அதை மட்டும் என்னிடம் சொன்னான். டிரைவர் சொன்ன வேறு இரண்டு பெயர்கள் ஆதித்யாவுக்குத் தெரியவில்லை. தொடர்ந்து டிரைவரிடம், சாரு நிவேதிதா படிச்சிருக்கீங்களா என்கிறான் ஆதித்யா.
அந்தக் குப்பையெல்லாம் படிப்பதில்லை.
அவரோட ஒரு புத்தகமாவது படிச்சிருக்கிங்களா?
இல்லை.
படிக்காம எப்டி குப்பைன்னு சொல்றீங்க?
(டேய் ஆதித்யா, இதுக்காகவே உனக்கு ஒரு ட்ரீட் டா!)
அவர் பதில் தெரியாமல் முழிக்கிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, “சரி, படிக்கிறேன். அவர் எழுதிய புத்தகம் எதாவது சொல்லுங்க” என்கிறார்.
இப்போது பையன் முழிக்கிறான். ஏனென்றால், அவனுக்கு நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று தெரியாது. அதனால் எல்லோருக்கும் தெரிந்த ஸீரோ டிகிரி என்ற பெயரையே சொல்லியிருக்கிறான். அடப்பாவி, அதைப் படித்தால் அந்த ஆள் இன்னும் மட்டமாகத் திட்டுவாரேடா? குமுதத்தில் முன்பு வந்த கனவு கேப்பசினோ கொஞ்சம் சாட்டிங் புத்தகத்தைச் சொல்லியிருக்கலாம். இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஸீரோ டிகிரி adult content உள்ள நாவல் ஆயிற்றே?
எப்படி என்னைப் படிக்காமலேயே குப்பை என்று முடிவுக்கு வருகிறார்கள் என்று யோசித்தேன். Word of mouth என்பார்களே அதுதான். அப்படியே ஒருத்தர் மூலமாக இன்னொருத்தருக்கு வாய் வார்த்தையாகவே பரவும்… என்ன செய்ய?
***
என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai
***