ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு,
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி. இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன். விஷயம் இதுதான். ரொம்ப சிம்பிள். ஆனால் ரொம்பக் கஷ்டம். நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன். 45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன். தெய்வத்தால் ஆகாது என்றாலும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று என் ஆசான் வள்ளுவனின் வாக்கையும் நம்பினேன். ம்ஹும். இந்த 68 வயது வரை அந்தக் கூலி கிடைக்கவில்லை. கிடைக்காததோடு மட்டுமல்ல. இனிமேலும் கிடைப்பதற்கான ஒரு வெளிச்சக் கீற்று கூடத் தெரியவில்லை. உங்களுக்கே தெரியும், இந்த புக்கர் புக்கர் என்று சொல்லப்படுகின்ற விருதை வாங்குவதற்கு தமிழ் எழுத்தாளர்கள் யாருக்குமே தகுதி இல்லை என்பது. அதாவது இலக்கியத் தகுதியைச் சொல்லவில்லை. இலக்கியத் தகுதி என்று பார்த்தால் எங்கள் தெருவிலேயே என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கிறோம். பெயரைக் கூட சொல்ல முடியும். சிவசங்கரி, ஜோடி க்ரூஸ், நான், எஸ்.வி. சேகர். என்னது சேகரா என்று கேட்கக் கூடாது. அர்விந்த் அடிகா எல்லாம் வாங்கும் போது சேகர் அவருடைய முகநூல் எழுத்துக்களுக்காக வாங்கக் கூடாதா? என்ன, ஒரே ஒரு பிரச்சினைதான். புக்கர் பரிசு இந்தியாவைத் திட்டினால்தான் தருவார்கள். சேகரோ பயங்கர தேச பக்தர். ஆனாலும் என்ன, சரியாக, துல்லியமாக யோசித்தால் எங்கள் தெருவில் இன்னும் நாலு பேர் கூடக் கிடைப்பார்கள். சுப்ரமணியம் சாமியும் எங்கள் தெருதான். க்ரூஸுக்குப் பக்கத்து வீடு. ஆனால் சாமி பொருளாதார நிபுணர் என்று கேள்வி. இலக்கியப் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதுவும் சொல்ல முடியாது. யாரோ ஒரு பாப் பாடகருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்த போது சாமிக்கு புக்கர் கிடைப்பதிலும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தமிழ் எழுத்தாளர் ஒத்தருக்கும் புக்கர் கிடைக்காது. இல்லை. ஒரே ஒருவரை விட்டு விடுவோம். அவருக்கு புக்கர் நோபல் எல்லாமே கிடைக்கும். அவரைத் தவிர சொல்கிறேன். இதற்குக் காரணம், ஒரு பதிப்பக உரிமையாளர் என்ற முறையில் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கே பிரசுரம் ஆகிற புத்தகம் லண்டனில் உள்ள ஒரு பதிப்பகத்திலும் பிரசுரம் ஆகியிருந்தால்தான் புக்கரில் போட்டியே போட முடியும். அப்படிப்பட்ட வசதி எங்கள் மூவருக்கும் சரி, மற்ற யாருக்கும் சரி, இல்லை. அந்த ஒருவரைத் தவிர, of course. அதாவது, இங்கே மைலாப்பூரில் ப்ரியா என்ற பதிப்பகத்தில் என் புத்தகம் வந்தது என்றால் அந்தப் பதிப்பகத்தின் imprint லண்டனிலும் இருக்க வேண்டும். இது இன்னும் நூறு ஆண்டுக்கு சாத்தியம் இல்லை. எனவே என்னால் புக்கர் பக்கமே செல்ல முடியாது போல் இருக்கிறது.
ஆனால் ராம்ஜி புக்கர்காரப் பயலே என் வீட்டு வாசலில் வந்து என் அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காக தவம் கிடக்க வைக்கலாம். நீங்கள் மனசு வைத்தால் இந்த நிமிடமே அது சாத்தியம். நீங்கள் மனசு வைக்க வேண்டும். அவ்ளோதான். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வெறி வெறி சிம்ப்பிள், எப்படியும் தமிழ்நாட்டில் மு.வ. கோஷ்டி இன்னமும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. மு.வ. கோஷ்டி என்றால் மு.வரதராசனார் கோஷ்டி. அந்த கோஷ்டியில் ஒரு ஆளைப் பிடித்து என் நாவல்களில் கெட்ட வார்த்தைகள் உள்ளன, அதைத் தடை செய்ய வேண்டும் என்று எடப்பாடியாருக்கு ஒரு கோரிக்கை வைக்கச் சொல்லுங்கள். கோரிக்கை வைத்தால்தானே தடை பற்றி அரசு நிர்வாகம் யோசிக்க முடியும்? தடை செய்து விடுவார்கள். ஏனென்றால், கெட்ட வார்த்தைகளின் அத்தாரிட்டியே அடியேன் தானே ராம்ஜி? சரி, ஒப்புக் கொள்கிறேன், பதினாறு அடி பாய்ந்த குட்டிகள் எல்லாம் இருக்கின்றனதான்; ஆனால் முதலில் பாய்ந்த ஆள் நான் தானே? அதனால் அந்தக் குட்டிகள் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
அப்படித் தடை செய்தால் அடுத்த நிமிடம் தமிழ் இந்துவில் முழுப் பக்கக் கட்டுரை வரும். அடுத்த நிமிடம் London Review of Booksகாரனும், நியூயார்க் டைம்ஸ்காரனும் என் வீட்டு வாசலில் வந்து நிற்பான்கள். அவன்கள் வந்து விட்டால் அப்புறம் என்ன, புக்கர்தான்.
இப்படியெல்லாம் சொன்னால் நம்முடைய தோழியும் உங்கள் பிஸினஸ் பார்ட்னருமான காயத்ரி “நீங்கள் இருக்கும் உயரம் என்ன, இடம் என்ன? புக்கருக்கெல்லாம் நடுவராக இருக்க வேண்டிய நீங்களா இப்படி பரிசு கிரிசு என்று பேசுவது?” என்பாள். விஷயம் புரியாதவர்கள் பேசும் பேச்சு அது. சென்ற ஆண்டு சாந்த்தியாகோ தெ சீலே நகரின் பொது நூலகத்தில் – நான் எந்த ஊருக்குப் போனாலும் பொது நூலகங்களுக்குச் சென்று விடுவது வழக்கம், ஒரு முழுநாள் அங்கே செலவிடுவேன் – நம்முடைய கே.ஆர். மீரா, பென்யாமின் இருவரின் புத்தகங்களையும் (ஆங்கில மொழிபெயர்ப்பு) பார்த்து மிரண்டு விட்டேன். வட இந்திய எழுத்தாளர்களில் வழக்கம் போல் விக்ரம் சேட், அருந்ததி ராய், அனுராதா ராய் என்று இருந்தது. இந்த அனுராதா ராய் இல்லாத நூலகமே உலகில் இல்லை. பென் யாமினும் அப்படியே. இப்போது அந்த இடத்தை கே.ஆர். மீராவும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக் கொண்டு வருகிறார். மட்டுமல்ல; துபாய் பொது நூலகத்திலும் இந்த ஆட்கள் அத்தனை பேரையும் பார்த்தேன். அதை விட ஆச்சரியம், துபாயில் உள்ள புத்தகக் கடை கினோகுனியாவிலும் இவர்கள் அத்தனை பேரின் புத்தகங்களும் இருந்தன. இப்படி பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சர்வதேச இலக்கிய வாசகர்களும் என்னைப் படிக்க வேண்டுமென்றால், அதற்கு இந்த புக்கர் மாதிரியான விருதுகள் ஒன்றுதான் வழி. பென் யாமின் புக்கர் வரை போகவில்லை என்றாலும் இந்தியாவின் மிகப் பெரிய இலக்கிய விருதுகளைப் பெற்று விட்டார். இனி பாக்கி இருப்பது புக்கர் ஒன்றுதான்.
ஆகவேதான் உங்களிடம் வந்து இதைக் கேட்கிறேன். கோவிலில் வைத்து கூட்டுக் கலவி பண்ணுவது இன்ன சாதியின் வழக்கம் என்று ஒத்தர் எழுதினார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். உயிர்ப் பிரச்சினைதான். நோபல் கமிட்டியில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லது. ஆனால் கெட்ட வார்த்தை எழுதியதற்கெல்லாம் இந்த மு.வ. கோஷ்டி தடையை விதித்து நண்பரை புக்கர் வரை கொண்டு போய் விட்டார்களே ராம்ஜி? எனக்கு ஏன் நீங்கள் உதவி செய்யக் கூடாது? நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் பார்ட்னர் என்ற ஹோதாவிலேயே நான் கேட்கவில்லை. உங்கள் நண்பனாகத்தான் கேட்கிறேன். ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள். இயலாது என்றால், நம் பாலகுமாரன் சொன்னபடி முண்டக்கண்ணி அம்மனையாவது போய் வேண்டிக் கொண்டு வருவோம். அம்மனை வேண்டினால் வேண்டியது கிடைக்குமாம். தெரிந்தும் இன்னும் நான் போகவில்லை. சுழிதான் சரியில்லை போல.
வணக்கம்.
சாரு