வணக்கம்.
உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. இருந்தாலும் கடைக்கோடி ரசிகனின் ஏதோ ஒரு மனத்தாங்கலை உங்களிடம் கொட்டி விடலாம் என்று எழுதுகிறேன். நான் சொல்வது முழுக்கவே தவறாக இருக்கலாம். இருந்தாலும் என் மனசாட்சி ‘இப்படி ஒரு பார்வையும் இருக்கலாம்தானே? இதை சம்பந்தப்பட்டவரிடமே சொல்லி விடலாமே?’ என்று சொன்னதால் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இதை எழுதத் துணிந்தேன்.
சமீபத்தில் ரா. கணபதி எழுதிய மகா பெரியவர் விருந்து என்ற நூலில் மகா பெரியவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரை வரவழைத்து அவரைத் தமக்குப் பிடித்த கீர்த்தனையைப் பாடச் சொல்லி கேட்டு, பிறகு அதன் ஒவ்வொரு வரியையும் பாடச் சொல்லி அதற்கு அர்த்தமும் சொல்லும் பகுதி உள்ளது. இப்படி அரியக்குடி போன்ற ஒரு மகத்தான கலைஞனுக்கே பாடம் எடுக்கக் கூடிய ஒரு சங்கீதக் கடலான மகா பெரியவர் தன் சங்கீத ஞானம் பற்றி தான் ஒரு ஏனோதானோ என்று சொல்லிக் கொள்கிறார். அப்படியிருக்கும்போது சங்கீதம் பற்றிய எந்த அடிப்படை ஞானமும் இல்லாத நான் என் கருத்தை முன்வைப்பதில் உள்ள ஒரே ஒரு நியாயம், உலகில் உள்ள எல்லா வகை சங்கீதங்களையும் தொடர்ந்து 50 வருட காலம் கேட்டு வந்திருக்கிறேன் என்பதுதான். இந்த 50 வருட அனுபவம் செவி சார்ந்த ஒரு நுண்ணுணர்வை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. மேலும், தஞ்சை மண்ணில் பிறந்த வளர்ந்த ஒரு பின்னணி. அந்தக் காற்றிலும் மண்ணிலுமே சங்கீதம் ஓடிக் கொண்டிருக்கிறது. தியாக பிரம்மத்தின் காற்று அலைகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அந்த மண்ணில் மிதந்து கொண்டிருக்கும் இல்லையா?
விஷயத்துக்கு வருகிறேன். ”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்ற பாரதிதாசன் பாடலை நீங்கள் பாடுவதைக் கேட்டேன். அதேபோல் சமீபத்தில் நீங்கள் கொடுத்த ’தமிழும் நானும்’ என்ற Virtual Editionஐயும் கேட்டேன். அதில் ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்ற பாரதி பாடலைப் பாடினீர்கள். அந்தப் பாடலில் நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்று ஒரு வரியும் வருகிறது. சங்கீதத்தில் வாக்கேயக்காரர் என்கிறீர்கள். இதை மற்றவர்களும் படிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்காக அர்த்தமும் சொல்ல வேண்டியிருக்கிறது. மன்னியுங்கள். சாகித்யங்களை இயற்றி, அதை சங்கீதத்தோடு இசைத்துப் பாடுபவர்களே வாக்கேயக்காரர் என்கிறோம். அந்தப்படி தியாக பிரம்மம், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி போன்றவர்கள் வாக்கேயக்காரர்கள். திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் எல்லாம் வாக்கேயக்காரர்களா? அவர்கள் எல்லாம் கவிகள். பாரதிக்கு சங்கீதமும் தெரியும். ஆனால் அவர் கவனம் எல்லாம் மொழியிலும் கவித்துவத்திலும் குவிகிறது. சங்கீதம் அவருக்குப் பிரதானம் அல்ல. அவருடைய பாடல்கள் சினிமாவுக்குத் தகுந்த இனிமையான பாடல்களாக (Lyrics) அமையும். சங்கீதத்துடன் பின்னிப் பிணைந்த, பக்தி தோய்ந்த பிரதிகளாக ஆக முடியாது. அதிலும் அவர் இயற்றி நீங்கள் பாடிய பாடல் மிகத் தட்டையான ஒன்று. அவருடைய நோக்கம் பல சமயங்களில் கவித்துவத்திலிருந்து பிறழ்ந்து சமூக விடுதலை, தேச விடுதலை, பெண் விடுதலை என்று நாலா பக்கங்களிலும் பாய்கிறது. அதை எப்படி நீங்கள் சங்கீதத்தில் எடுத்துப் பயன்படுத்த இயலும்?
.
இந்திய இசையிலிருந்து பக்தியை எடுத்து விட்டால் இங்கே இசை மிஞ்சுமா? ஒரு உலகப் பிரபல இசைக் கலைஞர் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். புரட்சிகரமான கருத்து. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் – நாடி நரம்பெல்லாம் ராமநாமம் ஓடாமல் -எப்படி தியாக பிரம்மத்தின் ராமபக்திப் பிரபஞ்சத்தில் நுழைய முடியும்? வாய்ப்பாடுதானே ஒப்பிக்க முடியும்? சங்கீதம் என்ன தொழில்நுட்பமா? தமிழ்ப் பற்று என்ற உங்கள் நோக்கம் உயர்ந்ததுதான். சந்தேகமே இல்லை. அதிலும் தமிழ் மொழியே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்து விட்ட இந்த நிலையில் உங்கள் அக்கறை பாராட்டத்தகுந்ததுதான். ஆனால் அதற்கு பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் சமூகப் பிரச்சாரப் பாடல்களை சங்கீதமாகப் பாடுவது உகக்கவில்லையே? அதில் சங்கீதமே இல்லையே? துன்பம் நேர்கையில் பாடலை ஓர் இரவு படத்தில் எம்.எஸ். ராஜேஸ்வரி குரலில் கேட்கும் போது இனிமையாகத்தான் இருக்கிறது. எம்.எம். தண்டபாணி தேசிகர் இசை. அது ஒரு சினிமா பாடலாக அந்த மனோநிலையில் கேட்பதில் பிரச்னை இல்லை. ஆனால் உங்களைப் போன்ற ஒரு திறமையான – அதிலும் ஜெயமோகனால் நம் காலத்து நாயகன் என்று பாராட்டப்பட்ட உங்களின் சங்கீத சபையில் கேட்க முடியவில்லையே?
தமிழில் பாட எத்தனையோ வாக்கேயக்காரர்கள் இருக்கிறார்களே? இரண்டு பேர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். பாபநாசம் சிவன். இன்னொருவர், நீங்கள் மிகவும் அறிந்த – ஆனால் தமிழ்ச் சமூகம் மறந்து விட்ட ஊத்துக்காடு வேங்கட கவி. வடநாட்டு ஜெயதேவருக்கு இணையாகச் சொல்கிறார்கள். இவர் கிருஷ்ண பக்தியில் உருகி உருகிப் பாடிய கீர்த்தனைகளை சமீபத்தில் இணையத்தில் சிரமப்பட்டு படித்தேன். புத்தகம் கூட கிடைக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட அவரது பாடல்களில் பக்தி ரசமும் சங்கீதமும் பிரவாகித்துப் பொங்குவதைக் கண்டேன். வேங்கடகவியின் பிரபலமான கீர்த்தனை தாயே யசோதாவை செம்பை வைத்தியநாத பாகவதர் பாடுவதை ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். அலுக்கவே இல்லை. தோடி ராகத்தில் மகுடி ஊதுவது போல் அல்லவா ஊதி ஊதி மயக்குகிறார் செம்பை? இந்த 25 நிமிட கீர்த்தனையில் 12 நிமிடம் ஆலாபனையில் போய் விடுகிறது. மீதி 13 நிமிடத்தில் காலினில் சிலம்பு கொஞ்ச என்ற மூன்று வார்த்தைகள் – அதிலும் கொஞ்ச என்ற வார்த்தையில் நிரவலில் இறங்கி அதற்கே 8 நிமிடம் போய் விடுகிறது. அந்த நிரவலின் போது செம்பை கொஞ்சுவது இருக்கிறதே, அப்படியே ஆன்மாவே உருகி உருகி ஓடுகிறது.
இந்தக் கீர்த்தனையில் 7 சரணங்கள் உள்ளன. இதில் தலைவர் முதல் சரணமும் கடைசி சரணமும் பாடுகிறார். மகுடி மெஸ்மரிசத்தில் 25 நிமிடம் போனதே தெரியவில்லை. இந்த நிலையில் 7 சரணத்தையும் செம்பை பாடினால் ஒரு இரவு கூடப் போதாதே? அப்போதுதான் எனக்கு தோடி சீதாராமையா தோடி ராகத்தை 8 முழு தினங்களுக்குப் பாடியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்படி தமிழில் பாடுவதற்கு ஊத்துக்காடு வேங்கடகவியைப் போல் வாக்கேயக்காரர்கள் இருக்கும்போது சமூக சீர்திருத்தக் கவிகளை எடுத்து கர்னாடக சங்கீதமாகப் பாடுவது பொருந்தவில்லை. காரணம், பக்தியும் சங்கீதமும்தான் இந்திய இசையில் ரத்தமும் சதையுமாகக் கலந்து கிடக்கிறது. தியாகராஜருக்கு நாரதர் தரிசனம் தந்து சங்கீதத்தின் அடிப்படை நூலான ஸ்வரார்ணவத்தைக் கொடுத்தார் என்பதையும் – 96 கோடி முறை ராமதாரக மந்திரத்தை ஜபித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளையும் பாடி முடித்ததும் ராமரை நேரடியாக தரிசித்தார் என்பதையும் நம்பவில்லையானால் எப்படி ஒரு சங்கீதக்காரரால் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஆத்மார்த்தமாகப் பாட முடியும்?
தமிழுக்கும் தமிழிசைக்கும் ஏதேனும் செய்ய வேண்டுமானால் ஆப்ரஹாம் பண்டிதர் எழுதியுள்ள கர்னாமிர்த சாகரம் என்ற ஆறு தொகுதிகளையும் படித்தால் உங்களைப் போன்ற கலைஞர்கள் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்ற திட்டங்கள் பிறக்கும். ஏ.ஆர். ரஹ்மான் ஆப்ரஹாம் பண்டிதர் குறித்து ஒரு அமைப்பு வைத்திருக்கிறார். முதலில் அந்த ஆறு தொகுதிகளையும் பிரசுரம் செய்தாக வேண்டும். தொகுதிகள் வந்த பிறகு அது பற்றிய விவாதங்களும் ஆய்வுகளும் செய்யப்பட வேண்டும். இந்த நூலை அடிப்படையாக வைத்து இசையறிஞர் எஸ். ராமநாதன் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ’சங்கீத அரசியல்’ பிடிக்காமல்தான் எஸ். ராமநாதன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார் போல என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் எம்.டி. ராமநாதனைத்தான் தெரிகிறது. எஸ். ராமநாதனைத் தெரியவில்லை. ஆனால் உலக அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் மியூசிகாலஜிஸ்டுகளில் எஸ். ராமநாதன் ஒருவர். ஆனால் தமிழகத்தில் எழுத்தாளர் கீதா பென்னட்டின் தந்தை என்று சொன்னால்தான் தெரிகிறது. துரதிர்ஷ்டம். அப்ரஹாம் பண்டிதர், எஸ். ராமநாதன் ஆகிய இருவரது புத்தகங்களும் உடனடியாகப் பிரசுரம் பெற வேண்டும்.
சமூக சீர்திருத்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை. பாப் மார்லியை விட ஒருத்தர் வேண்டுமா? ஆனால் அவர் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தை எடுத்து அதைச் செய்யவில்லை. ரெகே என்ற நவீன வடிவத்தையே எடுத்தார். இப்போது Rap என்ற வடிவம் வந்துள்ளது. மேலும், சமூக சீர்திருத்தம் என்றாலே ஏன் நாம் பாரதி, பாரதிதாசன் இருவரை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? Rap-க்கு திருவள்ளுவர், நவீன இலக்கியத்தில் ஞானக்கூத்தன், ஆத்மாநாம் போன்ற கவிஞர்கள் சரியாகப் பொருந்துவார்கள். உங்கள் குரலும் கூட உத்தமமாய்ப் பொருந்தும். எவ்வளவு பெண் விடுதலை வேண்டுமானாலும் பாடலாம்.
கடைசியாக ஒரு வார்த்தை. ஒருமுறை செம்மங்குடி சீனிவாசய்யர் சொன்னது போல் (ரவிகிரணுக்குக் கொடுத்த பேட்டியில்) இக்காலத்தில் பெரும்பாலான கலைஞர்கள் தொழில்நுட்பத்தைக் காண்பிக்கிறார்கள். ஆனால் ஆன்மாவிலிருந்து பாடவில்லை. உங்கள் திறமையையும் குரல் வளத்தையும் சமூக சீர்திருத்தத்துக்குச் செலவிடாமல் சங்கீதத்தில் ஆழ்ந்து மூழ்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை. இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. டி.எம். கிருஷ்ணா குடிசைவாசிகளுக்குக் கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தது. இதனால் குடிசைவாசிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்களுக்குத் தேவை நல்ல தரமான கல்வி. ஆனால் கிருஷ்ணாவுக்கு சர்வதேச விருது கிடைத்து விட்டது. அதுதான் நடக்கும்.
ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள். இதுவே கிருஷ்ணா என்றால் எழுதியிருக்க மாட்டேன். நீங்கள் இலக்கிய வாசகரும் கூட என்பதால் எழுதினேன். உங்களுக்கு தியாக பிரம்மத்தின் ஆசி எப்போதும் கூடியிருக்கட்டும்…
அடியேன்
சாரு நிவேதிதா
***
சென்ற வாரம் குமுதத்தில் வெளியான கட்டுரை. நன்றி குமுதம்.
***
என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai