வாழ்வில் இரண்டு முறை இப்படி நடந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ஒரு மாத காலம் ஒரு அறையில் அடைந்து கிடந்து எழுதினேன். கிட்டத்தட்ட ஒரே அமர்வு என்றே சொல்ல வேண்டும். அறையை விட்டு வெளியே வந்தது உறங்கவும் உண்ணவும் குளிக்கவும் மட்டுமே. ஒரு சிறுகதையை எழுதவா இத்தனை பிரயாசை என்று தோன்றும். அந்தக் கதையைப் படித்தால் அர்த்தம் விளங்கும். பலராலும் தூஷிக்கப்பட்ட கதை. சிலரால் கொண்டாடப்பட்ட கதை. எனக்கு ரொம்பப் பிடித்த கதை அது. அடுத்து, நான் அரசு வேலையை விட்டிருந்த சமயம். ஓய்வு ஊதியம் மிக மிக சொற்பம். வீட்டு வாடகைக்குக் கூடக் காணாது. வாங்கிக் கொண்டிருந்த சம்பளமே 8000 ரூ. என்றால் ஓய்வு ஊதியம் எவ்வளவு வரும்? அவந்திகாவின் சம்பளம் கார்த்திக்கின் பள்ளிக் கட்டணத்துக்கும் வீட்டு வாடகைக்கும் கஞ்சித் தண்ணிக்கும் வரும். கடுமையான பண நெருக்கடி.
கல்கியில் ஒரு நாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். முடிவு தேதிக்கு மூன்று நாள் இருக்கும்போதுதான் கவனித்தேன். அப்போது நான் அவ்வப்போது கல்கியில் சிறுகதைகள் எழுதி வந்தேன். திடீர் திடீரென்று உயர்நீதி மன்ற நீதிபதியிடமிருந்தெல்லாம் போன் வரும், என் கதை நன்றாக இருந்தது என்று. ஆனால் சன்மானம் என்னவோ 75 ரூ.தான். கல்கிக்கு அவ்வளவுதான் தாங்கும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால் நாவல் போட்டியில் வென்றால் ஒரு கணிசமான தொகை கிடைக்கும் என்று மூன்று நாட்கள் உட்கார்ந்து ஒரு நாவலை எழுதி முடித்தேன். உட்கார்ந்து என்றால், தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து – அந்தக் காலத்தில் மளிகைக்கடைகளில் கணக்கப்பிள்ளை பயன்படுத்துவது போன்ற ஒரு அடி உயரம் உள்ள சாய்வு மேஜையில் வைத்து எழுதினேன். குளிக்கக் கூட எழுந்து கொள்ளவில்லை. எழுதி அனுப்பி விட்டேன். ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கவில்லை. அது வேறு விஷயம். ஆனால் தினமலரில் சுமார் ஆறு மாத காலம் வெளியிட்டு உதவினார் ரமேஷ். பட்டினி கிடக்காமல் இருக்க முடிந்தது. அதற்குப் பிறகு இணைய தளம் ஆரம்பித்து நிலைமை கட்டுக்குள் வந்தது. அந்த நாவலின் பெயர் நதியின் சரிதம். அதன் கைப்பிரதி கல்கி அலுவலகத்தில் இருக்கலாம். தினமலரில் கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் வந்த வாரமலரைத் தேடினால் கண்டு பிடிக்கலாம். தினமலர் ஆர்க்கைவ்ஸில் தேட எனக்கு நேரமில்லை.
நதியின் சரிதம் என்பது ஒரு வைணவ குலத்துப் பெண்மணி எனக்குச் சொன்ன கதை. அவந்திகா அல்ல. சுவாரசியமான கதைதான். கிடைத்தால் இப்போது அதை வேறு மாதிரி எழுதி விடுவேன். போகட்டும்.
அந்த இரண்டு அனுபவத்தைப் போல் நேற்றும் முந்தாநாளும் உட்கார நேர்ந்தது. முந்தாநாள் காலை பத்து மணிக்குப் பேனாவைப் பிடித்தது. ஆம், என்னுடைய பச்சை இங்க் ஷீஃபர் பேனாவைத்தான் எடுத்தேன். எந்தப் புத்தகமும் அச்சுக்குப் போகும் முன் நான் ஒரு பார்வை பார்த்து விடுவது வழக்கம். இது எக்ஸைல் நாவலில் கிடைத்த அனுபவம். பிழை திருத்தம் எல்லாம் முடிந்து அச்சுக்குப் போனது புத்தகம். வெளிவந்து இரண்டு நாட்களில் ஸ்ரீராம் சொன்னார், புத்தகத்தில் 150 இடங்களில் junk இருக்கிறது என்று. எழுத்துப் பிழை என்றால் வாசகர்களால் புரிந்து கொண்டு விட முடியும். ஜங்க் வந்தால் ஒன்றுமே புரியாது. எழுதிய எனக்கே அந்த இடத்தில் என்ன வரும் என்று புரியவில்லை. நாவலில் ஆங்கில வார்த்தைகள் பெரும்பாலும் ஜங்க்காக வந்திருந்தன. என்ன பிரச்சினை என்றால், புத்தகம் அச்சுக்குப் போகும் முன் எழுத்துரு (font) மாற்றும்போது நேர்ந்த குளறுபடி. கடைசி நேரத்தில் ஒரு ஊழியர் செய்த பிழை. யாரையும் குறை சொல்ல முடியாது.
அப்படி இனியொருமுறை நடந்து விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு டம்மியைப் பார்த்தேன். இரண்டு விஷயங்கள். சொல்லியேதான் கொடுத்தார்கள். நூலில் பல இடங்களில் சாய்வெழுத்து வரும். பெயர்களுக்கு. அதெல்லாம் சாதா வடிவத்தில் இருந்தன. நானே சரி பண்ணித் தருகிறேன் என்றார் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வித்யா. இப்போதைய புத்தக விழா மும்முரத்தில் ஏன் அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று நினைத்து நானே முடித்து விடுகிறேன் என்றேன். என்ன இருந்தாலும் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகாது. அப்புறம் கொஞ்சம் பத்தி இடைவெளிப் பிரச்சினையும் இருந்தது.
முந்தா நாள் காலை பத்து மணிக்கு ஆரம்பித்தேன். மதியம் ஒரு மணிக்குக் கொடுத்து விடுவதாகச் சொன்னேன். முடியவில்லை. இடையில் மாலை ஆறு மணிக்கு முகநூல் லைவ் முடிந்தது. பத்தி இடைவெளி சரி செய்யவே இரவு எட்டு ஆனது. பிறகுதான் சாய்வெழுத்துக்கு வந்தேன். இரவு பதினோரு மணி வரை பதினைந்து சதம் பார்த்திருந்தேன். காலையில் பத்து மணிக்குக் கொடுக்கலாம் என்று சொன்னேன். அதனால் காலையில் நாலு மணிக்கு எழுந்து வழக்கம்போல் தியானம், நடைப் பயிற்சி எல்லாவற்றுக்கும் ஜூட் விட்டு விட்டு இந்த சாய்வெழுத்து விவகாரத்தில் அமர்ந்தேன். பத்து மணி அளவில் இருபது சதம் முடிந்திருந்தது. அப்படியானால் முன்பு பதினைந்து சதம் என்று நினைத்தது தப்புக் கணக்கு என்று புரிந்து கொண்டேன். அவந்திகாவிடம் எந்த எடுபிடி வேலைக்கும் அழைக்காதே என்று சொல்லி விட்டேன்.
தூங்கினது ஐந்து மணி நேரம் போக இடைவெளியே இல்லாமல் செய்து இரவு பதினொன்றரைக்குத்தான் முடிக்க முடிந்தது. இடையில் ஒருவர் போன் செய்து “பத்து லட்சம் தருகிறேன், வசனம் எழுதுங்கள் என் சினிமாவுக்கு” என்றார். நாளை பேசுகிறேன் என்று சொல்லி வைத்து விட்டேன். கவிஞர் ஆரா ஏன் சினிமாவுக்கு எழுதக் கூடாது என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். எழுதக் கூடாது என்று இல்லை. 2019இல் கேட்டிருந்தால் கூட எழுதியிருப்பேன். இப்போது நான் உடனடியாக வரிசைக் கிரமத்தில் நான்கு நாவல்களை முடித்தாக வேண்டும். காசு இருந்தால் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு சுந்தர ராமசாமி போல டிக்டேட் செய்து விடலாமா என்று கூட யோசிக்கிறேன். அந்த அளவுக்கு நான்கு நாவல்களுமே நாபியில் கிடக்கின்றன. எடுத்து வெளியே போட வேண்டியதுதான். சுத்தமாக நேரம் இல்லை. அதை விட வாசகர்களுக்கு இந்த இணையத்தில் எழுதி அவர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்ந்து விடுவது உத்தமமாகத் தெரிகிறது. என் எழுத்தை எழுதலாம் பாருங்கள். அவர்களுக்கு நான் சினிமாவில் எழுதி காசு சம்பாதித்தால் எந்தப் பயனும் இல்லை. நாவலை எழுதினால் அது அவர்களின் சொத்து. சினிமாவுக்கு எழுதினால் வீடு வாங்கலாம். 68 வயதில் எதுக்கு வீடு? நேற்றுதான் வினித் வயிறு எரிந்து எனக்கு எழுதினார். உங்கள் எழுத்தெல்லாம் கட்டுரைகளாகவே வீணாகப் போகின்றன, பத்து இருபது நாவல்கள் வந்திருக்க வேண்டாமா என்று. நீங்கள் 300 கட்டுரைத் தொகுதிகள் போட்டாலும் புனைவெழுத்துதான் நிற்கும். அதனால் அந்த நாலு நாவல்களையும் எழுதி முடிக்காமல் சினிமாவுக்கு எழுத இயலாது. அவ்வளவுதான். அதுவரை என் இணைய தள வாசகர்கள் அனுப்பும் சொற்பப் பணமே என் ஜீவாதாரத்துக்கும் பூனைகளின் பராமரிப்புக்கும் போதும்.
ஆ, பூனை என்றதும் ஞாபகம் வருகிறது. பூனை உணவு அனுப்ப சித்தமாயிருக்கும் நண்பர்கள் அனுப்பலாம். தீர்ந்து விட்டது. Whiskas cat food dry or wet . எனக்கு எழுதுங்கள், விலாசம் தருகிறேன். பணமாக அனுப்பினாலும் சரி. charu.nivedita.india@gmail.com
ஆக, முந்தாநாள் காலை பத்து மணிக்கு ஆரம்பித்து நேற்று இரவு பதினொன்றரை மணிக்குத்தான் முடிக்க முடிந்தது. இதை நான் செய்யாமலேயே அச்சில் கொடுத்திருக்கலாம். உங்களுக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. மூலத்தில் Italics இருந்தது என்ன உங்களுக்குத் தெரியவா போகிறது? மேலும், அது என்ன கதைப் போக்கை மாற்றப் போகிறதா? ஆனாலும், perfection என்பது என் மதம். செவ்வனே செய்தாக வேண்டும். எதைச் செய்தாலும். நான் எழுத்தாளனாக இல்லாமல் ஒரு கழிப்பறைச் சுத்திகரிப்புப் பணியாளனாக இருந்திருந்தாலும் இந்த ஊரின் மிகச் சிறந்த கழிப்பறைச் சுத்திகரிப்புப் பணியாளனாகவே விளங்கியிருப்பேன். மூன்று மணி நேரத்தில் முடிக்கலாம் என்று நினைத்த வேலை முப்பத்து மூணு மணி நேரம் எடுத்து விட்டது. இதை நீங்கள் – இளைஞர்கள் – இந்நேரம் தொழில்நுட்ப ரீதியாக யோசித்து ஒரு தீர்வு கண்டிருப்பீர்கள். Find and Replace போட்டால் ஒரு நிமிடத்தில் ஆகி விடும். வாஸ்தவம்தான். வழிகாட்டி, போதி என்ற இரண்டு வார்த்தைகளை அப்படிப் போட்டேன். இரண்டு வார்த்தைகளும் நாவலில் சுமாராக 150 இடங்களில் வருகிறது. பிறகு மற்ற வார்த்தைகளுக்காக நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது ஆசான் வழிகாட்டினார், ஆசான் போதித்தார் என்ற இடங்களிலும் சாய்வெழுத்து உட்கார்ந்திருக்கிறது. ஆசான் வழிகாட்டினார், ஆசான் போதித்தார் என்று. புரிகிறது இல்லையா? போதியும் வழிகாட்டியும் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் சாய்வெழுத்து புகுந்து விட்டது.
அதன் காரணமாக, தனித்தனியாக ஒவ்வொரு வார்த்தையாகத்தான் மாற்றியாக வேண்டிய நிலை. இந்த எல்லா குளறுபடிகளும் நான் பார்க்கும் பல்வேறு நூல்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சொன்னால் அடிக்க வருகிறார்கள்.
நாவல் மாலைக்குள் அச்சுக்குப் போய் விடும்.
இத்துடன் உள்ள புகைப்படம் தருண் 24.4.2013 அன்று The Valley of Masks நாவலில் கையெழுத்திட்டு எனக்குக் கொடுத்தது.
முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு முன்பதிவு செய்து விட்டீர்களா? விரைவில் செய்யுங்கள். நீங்கள் முன்பதிவு செய்தால் அது பல விதங்களில் புத்தகத் தயாரிப்புக்கு உதவும். 600 ரூ. விலையுள்ள இந்த நாவல் முன்பதிவு செய்தால் 480 ரூபாய்க்குக் கிடைக்கும். முன்பதிவு செய்ய இணைப்பு: