அ-காலம் தொடர் பற்றி…

ஒரு விஷயம் கவனித்தேன்.  என் தளத்தில் நான் தினந்தோறும் எழுதினால் மாதம் ஐம்பது பேர் சந்தா/நன்கொடை அனுப்புகிறார்கள்.  வாரம் ஒரு தடவை எழுதினால் அஞ்சு பேர்தான் அனுப்புகிறார்கள்.  அந்த அஞ்சு பேரும் என் நெருங்கிய நண்பர்கள்.  நான் எதுவும் எழுதாமலே போனாலும் அனுப்புவார்கள்.  ஒரு தகவலுக்காகச் சொன்னேன்.

இப்படி என் தளத்தில் வாரம் ஒருமுறை எழுதினாலும் bynge.in என்ற செயலியில் வாரம் இரண்டு முறை என் கட்டுரைகள் அ-காலம் என்ற தலைப்பில் வந்து கொண்டிருக்கின்றன.  நான் அ-புதினங்களாக ஒரு நூறு புத்தகங்கள் எழுதியிருப்பேன்.  அதில் அறுபதுதான் பிரசுரம் கண்டுள்ளன.  இன்னும் நாப்பதோ என்னவோ தொகுக்கப்பட வேண்டும்.  வெளிவர வேண்டும்.  இத்தனை புத்தகங்களில் ஒன்றே ஒன்றை சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்டால், கேட்பவர் ஒரு தீவிரமான வாசகர் என்றால், தீவிர வாசகர் என்றால் யார் என்று கடைசியில் சொல்கிறேன், தப்புத் தாளங்கள் என்ற நூலையே பரிந்துரை செய்வேன்.  அதை எழுதிய காலத்தில் என்னிடம் இண்டர்நெட் வசதி கூட இல்லை.  மலையாளத்தில் மாத்யமம் என்ற பத்திரிகையில் அந்தப் பத்தியை எழுதினேன்.  மலபார் பகுதி முஸ்லீம்கள் அத்தனை பேரும் படித்தார்கள்.  மாத்யமம் ஒரு இஸ்லாமிய அமைப்பால் நடத்தப்படும் வாரப் பத்திரிகை.  ஆனால் இஸ்லாமிய அமைப்பால் நடத்தப்படும் பத்திரிகை என்பது பத்திரிகையைப் பார்த்தால் அறவே தெரியாது.  அதற்கான எந்த அடையாளமும் அதில் இருக்காது.  ஒரு புத்தக மதிப்புரையில் கூட அதை நீங்கள் கண்டு பிடிக்க முடியாது.  ஆசிரியரே ஒரு இந்துதான். 

அந்தத் தப்புத் தாளங்களை விட தீவிரமான முறையில் இப்போது அ-காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.  ஆரம்பத்தில் அந்தப் பத்தியை நான் ஜாலியாகத்தான் எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் இரண்டாவது அத்தியாயத்திலேயே அந்த சப்ஜெக்ட் என்னை வேறோர் திசையில் இழுத்துக் கொண்டு போய் விட்டது.  இப்போதெல்லாம் தினமும் ஒரு அத்தியாயம் என்ற விகிதத்தில் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று மட்டும் மூன்று அத்தியாயம் எழுதினேன். மூன்றாவதை மட்டும் எத்தனை பிஸியாக இருந்தாலும் படித்து விடுங்கள் என்று பா. ராகவனுக்கு அனுப்பினேன்.  அவர் அவ்வளவு பிஸியான மனிதர்.  அவரும் bynge.in இல் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார். 

பிஞ்ஜ் டாட் இன் இப்போதைக்கு ஒரு அண்டர்க்ரௌண்ட் பத்திரிகை மாதிரி வந்து கொண்டிருக்கிறது.  அதாவது, அது ஆண்ட்ராய்ட் போனில் மட்டுமே தெரிகிறது.  ஆப்பிளில் தெரியாததற்கு பிஞ்ஜ் டாட் இன் ஆசிரியர் குழு காரணம் அல்ல.  ஆப்பிள் நிறுவனம்தான் காரணம்.  ஆப்பிள் நிர்வாகமெல்லாம் நம் தாலுகா அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் வாங்குவது மாதிரி.  இன்னும் சில தினங்களில், சில வாரங்களில் அல்லது அதிக பட்சம் ஒரு மாதத்தில் ஐஃபோனிலும் தெரியும்.  என் நண்பர்கள் பலரும் ஐஃபோன் பயன்படுத்துபவர்கள் என்பதால் யாரும் இன்னும் அ-காலம் படிக்கவில்லை.  சிலர் ஆண்ட்ராய்ட் வைத்திருக்கிறார்கள்.  அவர்களும் படிக்கவில்லை.  நேற்றோடு நான் பதினாறாவது அத்தியாயத்தையும் அனுப்பி விட்டேன்.  நேற்று எழுதிய பதினாறாவது அத்தியாயத்தைப் போன்ற ஒரு எழுத்தை நான் சமீப காலத்தில் எழுதவில்லை.  அது ஒரு நாவலிலிருந்து மொழிபெயர்ப்பு. 

இப்படியாக பிஞ்ஜ் டாட் இன் ஒரு அண்டர்க்ரௌண்ட் செயலியாக வளர்ந்து வருவதால் பா. ராகவன் எழுதும் நாவலை நானும் நான் எழுதுவதை அவரும் படிப்பதற்கு எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டோம்.  எழுதியவுடன் ஆளாளுக்கு அனுப்பிக் கொள்வது.  எல்லாம் அந்த ஆப்பிள் கடன்காரனால் வந்த வினை.  பட்டுக்கோட்டையும் ராஜேஷ்குமாரும் இப்படிச் செய்து கொள்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 

அதனால் இதன் மூலம் யாவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில், நான் தளத்தில் எழுதாவிட்டாலும் bynge.in இல் எழுதுவதைப் படித்து உய்ய வேண்டும் என்பதுதான்.  அப்படியே சந்தா அனுப்புவது பற்றியும் – அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும் – யோசிக்கலாம். 

தீவிர வாசகர் என்பதன் விளக்கம்: எனக்கு அர்ஜுன் மோகன் என்று ஒரு நண்பர் இருக்கிறார்.  திரைப்படக் கலை மாணவர்.  என்னுடைய புத்தகத் தேவைகளை கவனித்துக் கொள்ளும் குழுவில் முக்கியமானவர்.  மற்றும் சில நண்பர்கள் உள்ளனர்.  அவர்கள் வாங்கியே கொடுத்து விடுவார்கள்.  அந்தக் குழுவில் மட்டும் இருபது பேர் உள்ளனர். அர்ஜுன் மாணவர் என்பதால் உலகின் முக்கியமான நூலகங்களிலிருந்து கடன் வாங்கி, அனுமதி பெற்று எனக்கு அனுப்புவார்.  பல அமெரிக்க, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்களின் மின்நூலை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுப்புகிறார்கள்.  ஆனால் அதற்குப் பல விதிமுறைகள் உள்ளன.  அதிலெல்லாம் புகுந்து புறப்படுவதற்குள் நுரை தள்ளி விடும்.  அர்ஜுன் மாணவர் என்பதால் அதெல்லாம் அவருக்குத் தூசு. 

நேற்று அ-காலம் தொடருக்காக ஒரு இஸ்ரேலிய எழுத்தாளரின் ஒரு நாவல் தேவைப்பட்டது.  இதெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க வேண்டிய விஷயம்.  என் அமெரிக்க வாழ் நண்பர்களுக்கு எழுதி அனுப்பி மாதக் கணக்கில் ஆகி… அதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது.  நானும் ஒரு மணி நேரம் எத்தனையோ நூலகங்களில் தேடினேன்.  எங்குமே இல்லை.  அர்ஜுனுக்கு எழுதினேன்.  அடுத்த நிமிடம் அந்த நாவல் என் கிண்டிலில் வந்து விழுந்தது.  என்னப்பா என்றால், அதை ஏற்கனவே நான் Kansas நூலகத்திலிருந்து தருவித்து வைத்திருந்தேன், அவருடைய மற்ற இரண்டு நாவல்களும் கூட வேண்டுமானால் அனுப்புகிறேன் என்றார்.  அனுப்பச் சொன்னேன்.  அனுப்பினார்.  இத்தனைக்கும் அந்த இஸ்ரேலிய எழுத்தாளர் நம் ஊர் ப. சிங்காரம் மாதிரி.  உள்ளூரிலேயே யாருக்கும் தெரியாத எழுத்தாளர்.  சர்வதேச அளவிலும் அவரைப் பற்றி அதிகம் யாரும் பேசியதில்லை.  அர்ஜுனின் இலக்கிய அறிவை எண்ணி கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.   

இதில் உள்ள மற்றொரு நுணுக்கத்தை கவனித்தீர்களா?  ஒரு நாவல் கேட்டால் அந்த எழுத்தாளரின் எல்லா நாவல்களையும் அனுப்பவில்லை.  அனுப்பியிருந்தால் நான் அதைப் பாராட்டவே மாட்டேன்.  ஏன் சொல்லாததைச் செய்கிறாய் என்றுதான் கேட்பேன்.  கேட்டதை மட்டும்தான் செய்ய வேண்டும் எனக்கு.  கேட்காததைச் செய்தால் கோபம் வரும்.  மிகச் சரியாக என்னைப் புரிந்து கொண்டிருக்கிறார் அர்ஜுன்.  பெரிய ஆளாக வருவார்.  அதிகப் பிரசங்கித்தனம் எனக்கு ஆகவே ஆகாது.  அது அர்ஜுனிடம் அறவே கிடையாது.  அர்ஜுன் ஒரு காரியத்தை எடுத்தால் மிகச் சிறப்பாக செய்து முடிக்கிறார். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai