சமஸ் -இன் முகநூல் பக்கத்திலிருந்து

ஐந்தாண்டுகள் இருக்கும். “மகிழ் கவிதை மாதிரி அப்பப்போ நாலைஞ்சு வரி சொல்றான். இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் நண்பர் ஆசை. அப்போது மகிழுக்கு வயது நான்கு. குழந்தை மேதமையையும் பிரபல்யத்தையும் குழந்தைமைக்கான பெரும் சுமையாகக் கருதிவந்தவர் ஆசை என்பதால், மகிழ்ச்சியைவிடவும் குழப்பமே அவரைச் சூழ்ந்திருந்தது. “அது எப்படியோ, அவன் அவ்வப்போது சொல்வதைக் குறித்து வையுங்கள்” என்று சொன்னதை மட்டும் தவறாமல் செய்துவந்தார்.

குழந்தைமை மொழியே கவித்துமானது என்பது போக, குழந்தைகள் சில சமயங்களில் மொழியினூடாக அபாரமான இடங்களுக்குச் செல்வதைப் பல குழந்தைகளிடமும் நானும் கண்டிருக்கிறேன். ஆனாலும், மகிழ் தனித்துவமாக வெளிப்பட்டான். தொடர்ந்து அவன் கவிதைகள் சொல்லிவந்தான், ஆண்டுகளாக.

இந்த உலகத்தை வேறோர் உலகத்துடன் அவனுடைய சொற்கள் இணைக்க முற்பட்டன.

2019 புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்ல செல்பேசியில் பேசியபோது, “மாமாவுக்கு ஒரு கவிதை சொல்லேன், மகிழ்!” என்று விளையாட்டாகக் கேட்டேன்.

சட்டென்று சொன்னான்.

“கண்ணாடி ஒளி

என் மேலே பட்டு

ஒரு அற்புதமான ஒளி வரும்

அந்த ஒளி

என்னை வெயிலாக வரையும்.”

இப்படி முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒருநாள் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தபோது அது அவசியம் நூலாகப் பிரசுரிக்கப்பட வேண்டியது என்று தோன்றியது. அதை எழுதியது ஒரு குழந்தை என்பதையெல்லாம் தாண்டியும் தனக்கான ஓரிடத்தை அந்தத் தொகுப்பு உருவாக்கிக்கொண்டிருந்தது.

இன்றைக்கு மகிழுக்கு 9 வயது நிறைகிறது. இந்த நாளில் மகிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 கவிதைகள் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூலாக வெளியாகியிருப்பது அவனுக்கு அப்பாற்பட்டும் ஒரு தருணம் என்றே நினைக்கிறேன்.

இன்று மாலை பார்த்தபோது “மாமா, நான் கவிஞன்” என்றான். வணக்கமும் வாழ்த்துகளும் கவிஞரே!

‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’

மகிழ் ஆதன்விலை ரூ. 50,

வானம் வெளியீடு

நூலைப் பெற: 91765 49991

  • சமஸ்