நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகளும் என் நன்றியும்…

இரண்டாம் அத்தியாயமும் வெளிவந்து விட்டது.  படித்து விட்டுப் பலரும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாட்ஸப் மெஸேஜ்களும் மின்னஞ்சல்களும் அனுப்புகின்றனர்.  எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விட்டேன்.  நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உங்களுடைய இந்தக் கருத்துகளை bynge.in பக்கத்திலும் கதைக்குக் கீழே கருத்துகள் என்ற இடத்தில் பதிந்தால் பிஞ்ஜ் குழுவினரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

பிஞ்ஜ் டாட் இன் குழுவைச் சேர்ந்த நவீனையும் ஜனாவையும் அவர்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதிருந்தே தெரியும்.  பார்கவை எப்போது பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை.  மூவரும் என் மகன் கார்த்திக்கின் பள்ளிக்கூட காலத்திலிருந்து மிக நெருக்கமான நண்பர்கள். ஆக, மூவருமே என் வீட்டுக் குழந்தைகளைப் போலத்தான்.  மூவரும் நோஷன் பிரஸ்ஸை ஆரம்பிக்கும் போது கார்த்திக்கையும் அதில் இணைந்து கொள்ளச் சொன்னேன்.  “உங்கள் புத்தகங்களையெல்லாம் தந்தால் இணைகிறேன்” என்றான்.  அது மட்டும் முடியாது கண்ணு என்று சொல்லி விட்டேன்.  ஏனென்றால், ரொம்ப காலம் சுயமாகப் பதிப்பித்துக் கொண்டிருந்து விட்டு அப்போதுதான் உயிர்மையில் என் புத்தகங்கள் வர ஆரம்பித்திருந்தன.  அதுவும் தவிர, கார்த்திக்குக்கு புத்தகம் படிக்கும் வழக்கம் இல்லை என்பதால் அவன் கப்பலுக்குப் போய் விட்டான்.

இந்தப் பின்னணியில் நவீன், ஜனா, பார்கவ் மூவரும் என் வீட்டுக் குழந்தைகள் மாதிரிதான்.  அவர்களின் பிஞ்ஜ் செயலியில் ஔரங்கசீப் நாவல் வருவது முழுக்க முழுக்க நவீனின் இடையறாத முயற்சிதான்.  இல்லாவிட்டால் இத்தனை சீக்கிரத்தில் நான் எழுதியிருக்கவே போவதில்லை.  அதனால் நவீனுக்கு என் பிரத்தியேக நன்றி.  பிஞ்ஜ் குழுவினருக்கும் என் நன்றி. 

எழுத்தாளர்கள் அனைவருமே அப்நார்மல் ஜீவிகள்தாம்.  எக்ஸெண்ட்ரிக் வகையினர்.  அதிலும் நான் கொஞ்சம் அதிகப்படி.  இந்த அப்நார்மல்களோடு பேசி, கதைகளைக் குறிப்பிட்ட தேதியில் வாங்கி எல்லோரும் வாசிக்கக் கொடுப்பதெல்லாம் சாமான்யமான காரியம் அல்ல.  அதை அனாயாசமாகச் செய்து வரும் பிரியதர்ஷிணிக்கும் என் விசேஷமான நன்றி.  டச்வுட் டச்வுட்.

செந்தில் போன் செய்து முதல் அத்தியாயத்தை ஸ்ரீகாந்தின் பேட்டிங்கோடு ஒப்பிட்டார்.  அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்டம்.  அதற்கு வருவதற்கு முன் இன்னொரு விஷயம்.  ஸ்ரீகாந்துக்கு முன்பே மெட்றாஸில் வெங்கட்ராகவன் பிரபலமாக இருந்தார்.  150 ஆட்டங்களைக் கண்டவர்.  35 விக்கட்டுகளை எடுத்தவர்.  அது 1971இல் உலக சாதனை.  ஆனால் வெங்கட்ராகவன் சூப்பர் ஸ்டாராக அறியப்படவில்லை.  வெங்கட்டை விடத் திறமை குறைந்த ஸ்ரீகாந்த் தான் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.  இதற்குக் காரணமாக எக்ஸெண்ட்ரிசிட்டி, க்ளாமர், கரிஸ்மா மற்றும் அதிரடி.  முன்யோசனையின்றி, திட்டமிடல் இல்லாமல் அடித்து ஆடுவது.  அப்படித்தான் ஸ்ரீகாந்த் அந்தக் குறிப்பிட்ட ஆட்டத்தில் 38 ரன் எடுத்தார்.  லார்ட்ஸ் மைதானம்.  ஜுன் 25, 1983.  வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து இந்தியா ஆடி வெற்றி பெற்ற அந்த உலகக் கோப்பை ஒரு லெஜண்டரி ஆட்டம்.  அப்போது மார்ஷலின் பந்துக்கு ஸ்ரீகாந்த் அடித்த பந்துகளோடு முதல் அத்தியாயத்தை ஒப்பிடுகிறார் செந்தில்.  நன்றி செந்தில்.

முதல் அத்தியாயத்தில் கொஞ்சம் விஷயம் அதிகம்.  அதனால் வாசகர்கள் சலிப்படைந்து விடுவார்களோ எனப் பயந்தேன்.  அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதும், ஸ்ரீகாந்த் பேட்டிங் மாதிரி இருந்தது என்பதும் பெரிய ஆசுவாசம்.  படித்து விட்டு எழுதுங்கள்.