புனித அங்கியும் கொஞ்சம் பணமும்…

என்னுடைய பல வாசகர்களில் கிருஷ்ணனும் ஒருவர்.  உண்மைப் பெயர் வேறு.  உண்மையான பெயரை அனுமதி இல்லாமல் சொல்வதில்லை.  என்னைத் தீவிரமாக வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது.  அதைத் தெரிந்து கொள்ளவும் வழியில்லை.  நான்கு ஆண்டுகள் குமுதத்தில் எழுதியதால் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  ஆனால் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நாவல்களோ மற்ற புத்தகங்களோ பரிச்சயமில்லை.  எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு அறுபத்தெட்டில் ஆரம்பிக்கிறது. 

கிருஷ்ணன் என் தீவிரமான வாசகர்களில் ஒருவர்.  வளன் அரசுவைப் போல் என்னை அப்பா என அழைக்கும் ஒன்றிரண்டு ஆத்மாக்களில் கிருஷ்ணனும் ஒருவர். கிருஷ்ணன் எனக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் அனுப்புவார். ஒருமுறை 400.  ஒருமுறை 500.  இன்று அழைத்து பணம் அனுப்புவதற்காக ஒரு விவரம் கேட்டார். ஆறு மாதத்தில் ஏதேனும் மாறியிருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக.  நான் இந்தக் கொரோனா காலத்தில் வேண்டாமே கிருஷ்ணன் என்று ஆரம்பித்தேன்.  அவர் என்ன அப்பா நீங்கள்… என்று தொடங்கவும் பேச்சை மாற்றி விட்டேன்.   சிலரிடம் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லவே தயங்குகிறேன்.  ஏனென்றால், அவர்கள் தரும் பணம் ஒரு தாய் தன் குழந்தைக்குத் தரும் பாலைப் போல் அர்த்தமாகிறது எனக்கு.  அவர் என்னை அப்பா என அழைத்தாலும் அவர் தாய் போலவே தெரிகிறார். வளன் அரசுவும்தான்.  யாராவது தன் பாதிரியார்களுக்கான அங்கியில் யேசுவின் பெயரோடு தன் ஆசானின் பெயரையும் பொறித்து வைப்பார்களா?  வாழ்க்கை முழுக்கவும் வளனோடு கூட இருக்கப் போகும் அங்கி அது.  அவனுடைய புனிதமான பணியின் அடையாளம் அந்த அங்கி.  அதில் ஓர் மகத்தான தீர்க்கதரிசியின் நாமத்தோடு என் பெயர்.  இதை விட வேறு பேறு ஏதும் வேண்டுமா? 

அப்படி ஒரு தருணம்தான் கிருஷ்ணன் அனுப்பும் பணமும்.  கிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுகிறார்.  இதுவே ஃப்ரான்ஸாக இருந்து அவர் ஒரு டாக்ஸி ஓட்டுநர் என்றால் இது எழுதப்பட வேண்டிய விஷயமே அல்ல.  அங்கே ஒரு டாக்ஸி ஓட்டுநருக்கும் ஒரு தபால்காரருக்கும் ஊதிய விகிதம் ஒன்றாகத்தான் இருக்கும்.  நான் எழுதியிருக்கிறேனே, சிலே சாந்த்தியாகோ நகரில் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் ஒருநாள் ஊதியம் அந்த ஊரின் போலீஸ்காரரின் ஊதியத்தை விட இரண்டு மடங்கு.  ஆனால் நம் நாட்டில் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானமும், வாழ்க்கை நிலையும் அப்படி இல்லை.  அதன் காரணமாகவே இது எழுத வேண்டிய விஷயமாகிறது. 

என் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அனுப்பாதீர்கள் கிருஷ்ணன் என்றுதான் சொல்வார்கள்.  எனக்கு கிருஷ்ணனின் சந்தோஷத்தை மறுக்க இஷ்டமில்லை.  என்ன சொல்கிறீர்கள்?