அவதூறுக்கு எதிர்வினை (9): பிரபு கங்காதரன்

தமிழிலக்கிய உலகில் சாருவிற்கு இடமில்லை என்கிற வகையில் ஒரு மின்னிதழின் ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை வைக்கிறார்.

அதற்கு இதுவரை ஒரு சரியான எதிர்வினை வரவே இல்லை. அந்த மின்னிதழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் எல்லாருமே ஆமாம் அவருக்கு இடமில்லை, சாரு ஒரு எழுத்தாளரே இல்லை, அல்லது சாரு ஒரு மோசமான எழுத்தாளர் என்று ஒரு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்தேன். என் சிற்றறிவுக்கும் குறுகலானப் பார்வைக்கும் எட்டியவரை எதுவுமே காணக்கிடைக்கவில்லை.

சாருவினுடைய எழுத்து தமிழிலக்கிய உலகில் என்ன பங்களிப்பை செய்திருக்கிறது என்பதை கோகுல் ப்ரசாத் , ஜெயமோகன் சாருவின் எழுத்துலகம் பற்றி எழுதிய கட்டுரையில் படித்து தெரிந்து கொண்டிருக்லாம். (அவர் ஜெயமோகன் சீடர் என்று சிலர் சொல்லக்கேட்டதால் எழுதுகிறேன். ) அல்லது ஒரு நல்ல வாசிப்புள்ள ஆளாக இருந்தாலும் இந்த கேள்வியை முன் வைத்திருக்க மாட்டார்.

” முள் ” சிறுகதையை விடுங்கள், “கர்னாடக முரசு, “நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள் ” போன்ற சில சிறுகதைகள் போதும் அவர் இங்கே யாரென்று தெரிந்துகொள்ள.

த்ரிலோக்புரி ஒரு வரலாற்று ஆவணம்.

இதையெல்லாம் படித்துவிட்டுத்தான் அந்த இலக்கிய வாசகர்அல்லது ஒரு பத்திரிக்கை ஆசிரியர் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறாரா?

இவற்றை நிராகரிக்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அதை தர்க்கப்பூர்வமாக எழுத்தில் பதிவு செய்துவிட்டு நிராகரிக்க வேண்டும்.

நிற்க.

ஜெயமோகன் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு, அவருடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானவன். ஆனால் சில தற்குறிகள் அவருக்கு தமிழிலக்கியத்தில் இடமில்லை என்று ஒரு நிலைப்பாட்டை வைக்கும்போது கோவம் வரும். அவரை இட்லி மாவு என்று எழுதும்போதும் கோவம் வரும்.

தமிழில் மறுக்க முடியாத எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் அவருடைய அரசியலில் நான் வேறுபடுகிறேன்.

அவருடைய படைப்புகளில் என் அரசியல் மற்றும் ஆன்மீகக் கொள்கைகளுக்கு ஏற்புடையவற்றை நான் ஏற்றுக்கொள்வேன் சிலாகிப்பேன். பிடிக்கவில்லையென்றால் திட்டிவிடுவேன்.

ஆனால் எந்த காலத்திலும் தமிழிலக்கிய உலகத்தில் ஜெயமோகனுக்கு இடமில்லையென்று நிராகரிக்க மாட்டேன்.

நீ என்ன அவ்ளோ பெரிய மயிரா என்கிற கேள்வி இதை வாசிக்கிற உங்களுக்கு இயல்பாக எழும்.

நான் ஒரு நல்ல வாசகன் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதன் மீது ஏறி நின்றுதான் இதை எழுதுகிறேன்.

தமிழினியில் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தாளரும் உங்கள் மனசாட்சியை தொட்டுப்பார்த்துக்கொள்ளுகள்.

கோகுல் ப்ரசாத்திற்கு எதிர்வினையெல்லாம் செய்யவேண்டாம். ஆதரவாகவே எழுதுங்கள்.

அமைதி காக்காதீர்கள், அது உங்களின் வாசிப்பின் மீது உள்ள அவ நம்பிக்கை.