அவதூறுக்கு எதிர்வினை (8): அய்யனார் விஸ்வநாத்

ஓர் எழுத்தாளன் தன் படைப்புகளுக்காக விமர்சிக்கப்படுவது என்பது வேறு – ஒருவகையில் அது ஆரோக்கியமானதும் கூட. ஆனால் எழுத்தாளனின் இருப்பே சிலருக்கு ஒவ்வாததாக இருப்பதும், அவன் வாழ்நாள் முழுக்க ‘இலக்கியவாதி இல்லை’ என்கிற புறந்தள்ளல்களை எதிர்கொள்ள நேரிடுவதும் நாம் இயங்கும் இந்த சூழலுக்கு எதிரானதும் அவமானகரமானதுமாகும். சாருவின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். சக மனிதனை இழிவு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழின் உரைநடைக்கும் மாற்றுப் புனைவுத் தளத்திற்கும் வலு சேர்க்கும் சாருவை போகிற போக்கில் தட்டிவிடுவது அராஜகம்.

சாரு அகாலத்தை முடித்துவிட்டு ஒளரங்கசீப் என அடித்து ஆடுகிறார். வரலாற்று நாவல் என்கிற போர்வையில் இருபது நவீன சொற்களை வைத்துக் கொண்டு மெலோடிராமா நாவல்களாக எழுதித்தள்ளும் சூழலில் ஒளரங்கசீப்பின் ஆவியோடு எழுத்தாளன் நிகழ்த்தும் உரையாடலை வாசிக்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இவரின் வேகத்திற்கு எப்படி ஈடு கொடுப்பது என்பதுதான் தற்போது எழுதுபவர்களின் சவாலாக இருக்கிறது. இதற்கிடையில் சாரு இலக்கியவாதி இல்லை என்கிற கூச்சலைக் கேட்கும்போது இதைச் சொல்ல இவர்களுக்கு எவ்வளவு திடமான அறியாமை இருக்க வேண்டும் என நினைத்துதான் வியக்கிறேன்.