அவதூறுக்கு எதிர்வினை (7): அமல்ராஜ் பிரான்சிஸ்

சாருவின் எழுத்துக்கள் இலக்கியமா என்று அவரை வாசித்து விமர்சிப்பவர்கள் மட்டில் எனக்கு பெரும் மதிப்பு உண்டு. வாசகர்களை எதுவுமே செய்யாத எழுத்து இலக்கியமா என்ன? செய்யட்டும். செய்வதால் விமர்சனம் வருகிறது. நல்லது. ஆனால், காலாகாலமாக கொழுந்துவிட்டெரியும் சாருவிற்கு எதிரான வக்கிர விமர்சனங்களில் குறைந்த விகிதாசாரமே நான் மேலே சொன்ன வகையறாவினுள் சேரும். மீதம், அவர் மீதான தனிப்பட்ட வன்முறை. ஒரு தனிமனிதன் மீதான பழி, வசை. கோகுல் பிரசாத்தின் பதிவும் அப்படித்தான். விமர்சனம் அல்ல, வன்முறை.

ஒரு எழுத்தாளரை கீழ்த்தரமாகப் பதிவு செய்யும் ஒரு பதிவுக்கு முன்னூறுக்கு மேற்பட்ட விருப்புக்கள். இதில் பாதி லைக், மீதி ஹார்டின்கள். இன்னும் சில ஹாஹா. இதில் எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் எழுத்தாளர் ஜெமோவை வாசிப்பவர்கள். அவருடைய சீடர்கள். சபாஷ். எப்படியொரு சீடர் கூட்டத்தை ஜெமோ உருவாக்கி வைத்திருக்கிறார் என்று பார்க்க வேதனையாக இருக்கிறது. சக மனிதன் மீதான அடிப்படை மரியாதை, ஒழுக்கம், கண்ணியம் என்றெல்லாம் ஜெமோவிடம் வாசித்தவை இவைதானா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இங்கு முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. சாரு மீதான ஜெமோவின் விமர்சனமும், ஜெமோ மீதான சாருவின் விமர்சனமும் அவரவர் படைப்பாக்கம் சார்ந்தது. எழுத்து மீதான அறம் பிறழாதது. அவர்கள் எதிரிகள் கிடையாது. தமிழின் முக்கிய மூன்று எழுத்தாளர்களில் இருவர். இது அவர்களுக்கே தெரியும். ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால், சாரு மீதான ஜெமோவின் சீடர்களின் ஒவ்வாமை. எதற்காக? அத்தனையும் இதே வகை. தனிமனித தாக்குதல். இழிவான வசை.

சாரு பற்றிய அவர்களுடைய விமர்சனத்திற்கு சிறந்த உதாரணம் கோகுல் பிரசாத்தன் பதிவு. இதுவரை ஜெமோவிடமிருந்தே ஒரு துளிதன்னும் கற்றுக்கொள்ளாத தனி மனித, வாசக அறத்தை யாரிடமிருந்து கற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இலக்கியம் என்கிற சொல்லே இங்கு ஒரு highly diversified narrative. இங்கு எல்லோரும் ஒன்றையோ அல்லது ஒரே சிந்தனைத்தளத்திலோ நின்றுதான் எழுத வேண்டுமென்றில்லை. ஜெமோவையும் நான் வாசிக்கிறேன். அண்மையில் என்னை அதிகம் ஈர்த்துக்கொண்டிருக்கும் – கடைசியாகப் படித்த – புத்தகம் ‘தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்’. பிடித்திருக்கிறது. அதற்காக ஜெமோவின் அத்தனை எழுத்துக்களும் பிடிக்கும் என்றில்லை. அவருடைய அரசியல் உட்பட.

ஆனால், சாரு என்னுடைய குரு, ஆசான். உங்களுக்கு ஜெமோ எப்படியோ அப்படி சிலருக்கு சாரு, சிலருக்கு எஸ்.ரா இப்படிப்பல (சம கால எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறேன்). இங்கு இந்த எழுத்தாளர் உசத்தி என்று விரலை நீட்டுவது அவரவர் இஷ்டம். ஒருவரை உயர்த்திப்பிடிக்க மற்றவரைத் தீர்த்துக்கட்டவேண்டும், வீண் பழி சுமத்த வேண்டும், வக்கிரத்தைக்கக்க வேண்டும் என்பதெல்லாம் அடிப்படை மனித ஒழுக்கத்திற்கு முரணானது.

ஒரு எழுத்தாளனை இழிவுபடுத்தும் எவனும் ஒரு நல்ல வாசகனாக இருக்க முடியாது.

மீண்டும், அந்தப் பதிவின் எதர்வினைகள் பற்றி. என்னுடைய பல நண்பர் அந்தப் பதிவைப் பார்த்து ஏகப்பட்ட குதூகலத்தில் கிடக்கிறார்கள். தங்கள் வன்மத்தையும் நகைச்சுவையாக, அல்லது sugar coated ஆக அள்ளி வீசியிருக்கிறார்கள். ஒருவருக்கு உயர்தர ஆடை அணிவித்து அழகு பார்ப்பதற்காக, இன்னொருவரை நிர்வாணமாக்கும் எளிய வேலை இது. அந்தக் கொமன்டுகளை மீண்டும் மீண்டும் படித்தேன். அந்தப் பதிவில்தான் எத்தனை கோகுல்கள். எத்தனை வன்முறையாளர்கள். எத்தனைபேர் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குள் உயர்ந்த இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் என்கிற அட்ரோசிட்டீஸ் வேறு.

சாருவை மட்டுமல்ல, எந்தவொரு எழுத்தாளரையும் விமர்சிப்பதற்கு ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். அறம் வேண்டும். தனிமனித ஒழுக்கம் வேண்டும். இவை எதுவுமே இல்லாதவர்களுக்கு இலக்கியமும் வாசிப்பும் எதுவுமே செய்யாது. வெறும் நேர விரயம்.

கோகுல் பிரசாத்திற்கும் அவர் சேனைக்கும் என்னுடைய வன்மையான கண்டனங்கள்.