சிறுகதை நேரம்

ஆதியிலே சப்தம் இருந்தது.  நான் அந்த சப்தத்தின் அடிமை.  சிலர் நாத பிரம்மம் என்கிறார்கள்.  ஓம் என்ற ஒலி ஒரு குறியீடு.  இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியின் பாங்கு உலகின் தலைசிறந்த பாங்குகளில் ஒன்று எனப் படித்ததும் உடனடியாகக் கிளம்பி இஸ்தாம்பூல் சென்றேன்.  தஞ்சாவூர்க் காவிரி தன் மைந்தர்களுக்குக் கொடுத்த கொடையே காவிரியின் மைந்தர்கள் தம் வாழ்நாள் பூராவும் சப்தத்தின் அடிமையாகவும் சப்தத்தின் உபாசகராகவும் வாழுமாறு மாற்றுவதுதான்.  நாதத்தின் ஒரு வடிவமே கதையை வாசிக்கக் கேட்பது. 

இன்றைய வாழ்க்கைச் சூழல் ஒரு மனிதரை ஒரு இடத்தில் அமரச் செய்து ஆறு ஏழு மணி நேரம் வாசிப்பதற்கு இடம் கொடுப்பதில்லை.  தினமும் மூன்று மணி நேரம் கார் ஓட்டுகிறார்கள்.  அல்லது, ரயிலில் பயணிக்கிறார்கள்.  அந்த நேரத்தில் படிக்க முடியாது; யாரேனும் கதை சொன்னால் நன்றாக இருக்கும். இனிமேலான காலம் வாசித்துக் கேட்பதற்கானது.  ஆனால் இந்த தேசத்தின் இப்போதைய சாபம் தரம் இன்மை.  எதை எடுத்தாலும் அதில் ஆக மட்டமான தரம்.  அரை மணி நேரத்துக்கு முன்புதான் பட்டினப் பாக்கம் சங்கீதா உணவகத்தில் இட்லி சாப்பிட்டேன்.  இட்லிக்கும் நம்மைப் போல் உயிர் இருந்தால் தூக்கு மாட்டிச் சாகும்.  இட்லி வெறும் இலை மாதிரி இருந்தது.  நாலு விதமான சட்னி.  வடைகறி.  எல்லாமே கடைசித் தரம்.  தமிழ்நாட்டில் இப்படித்தான் எல்லாமே தரக் குறைவானதாக இருக்கின்றன.  தி. ஜானகிராமனின் ஆடியோ புத்தகம் கேட்டேன்.  கேட்க சகிக்கவில்லை.  ஏதோ ஒரு நாராசம்.  அது என்ன என்று என்னால் திட்டமாகச் சொல்லத் தெரியவில்லை.  வாசிப்பவர்கள் உயிரைக் கொடுத்துத்தான் அந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.  ஆனால் நான் உயிரைக் கொடுத்து கிரிக்கெட் விளையாடினால் பார்ப்பீர்களா?  ஆடியோ நூல்களில் எதுவோ என்னவோ சரியில்லை.  எது என்று எனக்குத் தெரியவில்லை.  வாசிப்பவர்கள் அந்தக் காலத்து ஒலிச் சித்திரம் மாதிரி ஏதோ பாவனை பண்ணுகிறார்கள்.  சிறு குழந்தைகள் விளையாட்டுக் காட்டினால் ரசிக்கலாம்.  அதே விளையாட்டை பெரியவர்கள் செய்தால் பைத்தியம் என்றுதானே சொல்வீர்கள்?  இப்படியெல்லாம் எழுதினாலும் ஆடியோ புத்தகங்களில் எது குறை என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல இயலவில்லை.

ஆனால் கேட்கும் ஒவ்வொருவரும் அந்தக் குறைபாட்டை உணர்கிறார்கள்.  அதனாலேதான் ஆடியோ புத்தகங்கள் தமிழில் படு தோல்வி அடைந்து விட்டன.  அவை மட்டும் தரமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கும்.  சென்னையில் கிடைக்கும் இட்லி மாதிரி இருக்கின்றன இன்றைய தமிழ் ஆடியோ நூல்கள்.

திரும்பவும் சொல்கிறேன், வித்யா சுபாஷ், ரம்யா போன்ற ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.  நான் விதிவிலக்குகள் பற்றிப் பேசவில்லை.  பொதுவான நிலைமையை ஒரு நுகர்வோனாக இருந்து சொன்னேன். இங்கேதான் ஃபாத்திமா பாபு தனித்துவமாக நிற்கிறார்.  என்னுடைய நீண்ட காலத் தோழி என்பதற்காக இதை நான் எழுதவில்லை, அப்படி நான் எழுத மாட்டேன் என்று ஃபாத்திமாவுக்கும் உங்களுக்கும் தெரியும்.  இதுவரை நான் ஃபாத்திமாவின் கதை வாசிப்பைக் கேட்டதில்லை.  கேட்டிருந்தால் முன்பே எழுதியிருப்பேன்.  அவரும் என்னிடம் இதுவரை ஒரு வார்த்தை சொன்னதில்லை. 

மாயமான் வேட்டை கதை ஃபாத்திமா பாபுவின் வாசிப்பில் வேறொரு வடிவத்தைப் பெற்றது.  திர்லோக்புரி நேற்று ஒரு காட்சிப்படுத்தலாக கண் முன்னே தத்ரூபமாக விரிந்தது.  பயங்கரத்தைத் தாங்க முடியாமல் காயத்ரி பாதியிலேயே கிளம்பி விட்டேன் என்று சொன்னாள்.  திர்லோக்புரி கதை அப்படிப்பட்டது.  ஏற்கனவே எழுதியிருக்கிறேன், ஒரு எழுபத்தைந்து வயது முதியவர் குற்றாலம் பட்டறையில் என் காலில் விழுந்து விட்டார்.  பதறிப் போய் துடித்து விட்டேன்.  திர்லோக்புரி அவரை அப்படி உலுக்கி எடுத்து விட்டதாகச் சொன்னார். 

ஒரு பொய்ப் பெயரில், முகத்தையும் காண்பிக்காமல் ஒரு ஹிந்துத்துவ நண்பர் வந்து ஏகமான கேள்விகளைக் கேட்டு இரண்டு நாட்களாகக் குடைந்து கொண்டிருந்தார்.  எல்லோரும் அவர் மேல் கடும் கோபமாக இருந்தார்கள்.  எனக்கு அவர் மீது கோபம் வரவில்லை.  அவர் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னிடம் பதில்கள் இருந்தன.  முடிந்த வரை சொன்னேன்.  ஆனால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள முடியாதவர்களை நாம் அனுமதிக்க வேண்டியதில்லை. 

ஆனாலும் ஒன்று சொல்கிறேன்.  திர்லோக்புரி போன்ற ஒரு கதையை இதே வீரியத்துடன் எழுத இன்று தமிழில் குறைந்த பட்சம் பத்து பேர் இருக்கிறார்கள்.  ஆனால் என்னுடைய வேறு சில கதைகளை எழுத உலக மொழிகளிலேயே ஒருவர் கூட இல்லை.  அந்தக் கதைகள்:

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்.

the joker was here  

நேநோ

நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்

இதில் நேநோ என்ற கதையை வாசித்துக் கேட்பது சாத்தியம் இல்லை.  மற்ற மூன்றும் என்றாவது ஒருநாள் என் கதைகள் ஆடியோவாக வந்தால் அதில் இடம் பெறும்.  இடம் பெற வேண்டும்.  நட்சத்திரங்கள் கதையை இன்றே வாசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  ஆனால் அதில் வரும் அடிக்குறிப்புகளே கதையை விடப் பெரிது, கதை புரிந்து கொள்வதற்கு சற்று சிரமம், க்ளப் ஹவுஸ் நேயர்கள் பலருக்கு என் எழுத்து புதிது என்பது போன்ற காரணங்களால் இந்தக் கதையை ஆடியோ நூல் வரும்போது படிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

நேற்றைய வாசிப்பு முடிந்து விவாத நேரத்தில் என்னை குழந்தையோடு ஒப்பிட்ட உமாவுக்கும் மீராவுக்கும் என் மனமார்ந்த நன்றி.  கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக “நான் ஒரு குழந்தை மாதிரி” என்று சொன்னால் என் தோழிகள் நம்புவதே இல்லை.  வழக்கமாக ஆண்கள் சொல்லும் பொய் என்று நிராகரித்து விடுகிறார்கள்.  இப்போதுதான் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது.  விவாத நேரத்தில் நான் பேசியதை வைத்து நான் ஒரு குழந்தை போல் இருக்கிறேன் என்று முடிவுக்கு வந்தார்கள் உமாவும் மீராவும்.  ஆனால் பாருங்கள், என் குழந்தைமையை அனுபவம் கொள்பவர் அராத்துதான் என்பது எனக்கும் அவருக்குமே எவ்வளவு பெரிய தண்டனை.  பாவம் அராத்து.  பாவம் நான். 

என்னுடைய நடுத்தர வயது புகைப்படத்தை நிகழ்ச்சி நிரலில் போட்டிருந்தார் ஃபாத்திமா.  அதைப் பார்த்தபோது எனக்கு ப்ரியதர்ஷன் என்ற மலையாள நடிகர் நினைவுக்கு வருகிறார் என்றேன்.  யாருக்குமே புரியவில்லை. ப்ரியதர்ஷன் என்ற பெயரில் நடிகரே இல்லையே என்று குழம்பினார்கள். அராத்துதான் எந்தக் குழப்பமும் அடையாமல் சாரு ப்ரித்விராஜைச் சொல்கிறார் என்றார்.  அதாவது, நான் என்ன நினைக்கிறேன் என்பதை என்னை விட நன்றாகப் புரிந்து கொள்பவர் அராத்து.   

ஒன்பதரையிலிருந்து பத்தேகால் வரை கதையை நிகழ்த்தினார் ஃபாத்திமா பாபு.  பிறகு பன்னிரண்டரை வரை விவாதம் போனது.  யாரும் சலிப்படையவில்லை.  கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.  ஃபாத்திமாவுக்கு விசேஷமான நன்றி.  இன்றைய கதைக்கான லிங்க் விரைவில் தருகிறேன்.