எனக்குப் பிடித்தவை, எனக்குப் பிடிக்காதவை…

ஜி.குப்புசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை பின்வருவது. ஜி. குப்புசாமியின் கட்டுரை லிங்க்:

https://www.arunchol.com/g-kuppusamy-reaction-for-charu-nivedita

ஒரு மாதத்துக்கு முன்பு ராணி திலக் போன் செய்தார்.  எடுக்க முடியவில்லை.  ஔரங்கசீப் முடிந்ததும் அவரோடு பேச வேண்டும்.  ஒரு புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளரைப் போல் பழைய எழுத்தாளர்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ராணி திலக்.  அதேபோல் நற்றிணை யுகனும் போன் செய்தார்.  அவரும் என் உற்ற நண்பர்.  என்னவோ தெரியவில்லை, ஔரங்கசீப்பை முடிக்காமல் போனைத் தொடவே முடியவில்லை.  இது ஒரு மனநிலை.  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  மற்றபடி போனை எப்போதும் என் கண்ணெதிரிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆள்தான் நான்.  ஆனால் வாய்ஸ் மெஸேஜ்களுக்கு மட்டும் தவறாமல் குரல் பதிவிலேயே பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  நாவலை முடிக்கும் வரை என்னோடு தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் வாய்ஸ் மெஸேஜையே பயன்படுத்துவது உசிதம். 

இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தும் கூட அருஞ்சொல்லில் வந்த ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பைப் படித்ததற்கு இரண்டே காரணங்கள்தான்.  ஒன்று, தமிழில் இரண்டு பேருக்கு நான் அடிக்ட்.  ஒருவர் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.  இரண்டு, ஜி.கே.  ஜிகேயின் எந்த மொழிபெயர்ப்பையும் நான் விட மாட்டேன்.  தேடித் தேடிப் படித்து விடுவேன்.  அவரது மொழிபெயர்ப்பில் தவறே இருக்காது என்று அர்த்தமில்லை.  இப்போது மொழிபெயர்ப்பவர்களிலேயே அவர்தான் ஆகச் சிறந்தவர் என்பதால்.  இப்படிச் சொல்லும் போதெல்லாம் அவரது மொழிபெயர்ப்பின் தவறுகளைப் பட்டியலிட்டு எனக்கு முழநீளக் கடிதங்கள் வந்து விடுகின்றன.  அவற்றை எனக்கு அனுப்புவதை விட குப்புசாமிக்கே அனுப்புங்கள்.  அவருக்கு சரி என்று தோன்றினால் அடுத்த பதிப்பில் அதைச் சரி பண்ணி விடுவார்.  அவ்வளவு அடக்கமான மனிதர் அவர்.  ஈகோ இல்லாதவர். 

இந்த இரண்டு பேரும் சம்பந்தப்பட்டதால்தான் ரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்புச் சிறுகதையைப் படித்தேன்.  திரும்பவும் சொல்கிறேன்.  அந்தச் சிறுகதையில் ஒரு மண்ணும் இல்லை.  திரும்பவும் சொல்கிறேன்.  தமிழில் சிறுகதை எழுத வரும் இருபத்திரண்டு வயதுப் பையன்களே இதை விட நல்ல கதைகள் பத்துப் பதினைந்து எழுதியிருக்கிறார்கள்.  எனக்கு அதில் சந்தேகமே இல்லை.  நாலு பேர் வார விடுமுறையில் தண்ணி அடிப்பதற்காக ஏரிக்கரைக்குச் செல்கிறார்கள்.  (நதிக்கரை என்றால் எனக்குத் தூக்குத் தண்டனை தராதீர்கள்!) இப்படிச் செல்வதெல்லாம் அமெரிக்க சமூகத்தில் சர்வ சகஜமானது.  நீர்நிலையின் கரையில் ஒரு பெண்ணின் பிணம்.  அந்தப் பிணத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நாலு பேரும் மூன்று நாள் அங்கே தங்கி தண்ணி அடித்து விட்டுத் திரும்பும்போது போலீஸில் போன் செய்து செய்தியைச் சொல்கிறார்கள்.  கதைசொல்லியின் மனைவி “நம் கணவன் இந்த அளவுக்கு சுரணையுணர்வு இல்லாமல் இருந்து விட்டானே” என்று அவன் மேல் கடும் கோபம் கொள்கிறாள்.  அந்தப் பெண்ணோடு தன்னைப் பொருத்திப் பார்க்கிறாள்.  அவ்வளவுதான் கதை.  சுரணையுணர்வு இல்லாமல் தண்ணி அடித்ததுதான் அடியோட்டமான விஷயம்.  இன்னும் நுணுகிப் பார்த்தால் இந்தப் பயல்களே குடிபோதையில் கெடுத்துப் போட்டிருக்கலாம்.  ஆனால் கதையின் ஆரம்பத்திலேயே பிணம் கிடக்கிறது.  எப்படியோ.

அமெரிக்காவில் பூங்கா என்றாலே வனம்தான்.  அங்கே இப்படி நடக்க சகல சாத்தியங்களும் உண்டு.  நம் ஊரிலும் உண்டு என்றாலும் உடனடியாக போலீஸுக்கு போன் போட்டு ஆக வேண்டும்.  இல்லாவிட்டால், அந்தப் பிணத்தைப் பார்த்த காரணத்தினாலேயே வன்கலவி செய்து கொலையும் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அளிக்கப்படுவோம்.  அமெரிக்கா தன் குடிமக்களை அவ்வளவு கேவலமாக நடத்துவதில்லை என்பதால் நண்பர்கள் சாவகாசமாகக் குடித்து விட்டு வருகிறார்கள்.

இந்தக் கதையைத்தான் நான் ஸ்டுப்பிட் என்று வர்ணித்தேன்.  உடனே குப்புசாமி க்ரியா ராமகிருஷ்ணனே இந்தக் கதையைப் பாராட்டியிருக்கிறாராக்கும் என்று எழுதுகிறார்.  இன்னொரு விஷயத்தை நானே குப்புசாமியிடம் சொன்னேன்.  இதே கதையை விஜயராகவன் மொழிபெயர்த்து விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே விவாதித்திருக்கிறார்கள்.  அந்த மொழிபெயர்ப்பு ஜெயமோகனின் தளத்திலும் வெளிவந்திருக்கிறது.  ஆக, ஒரே கதையை இரண்டு பேர் மொழிபெயர்க்கும் அளவுக்கு சீரும் சிறப்பும் பெற்ற கதை இது.

இதைத்தான் தமிழர்களின் Xenomania என்று குறிப்பிட்டேன்.  வெளிநாட்டுக்காரன் செய்தால் அது பெரிய விஷயமாகத் தெரியும்.  ஆ. மாதவனின் எட்டாவது நாள் என்று ஒரு கதை உண்டு.  அப்படி ஒரு கதையை உலக இலக்கியத்தில் காண முடியுமா? 

ஒரு முறை பால் ஸக்கரியாவோடு பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், உங்களை இங்கே எல்லோரும் தங்களுடைய எழுத்தாளராகவே தத்து எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று.  அடடா, மலையாளம் கற்றுக் கொண்டு இங்கேயே வந்து விடலாம் போலிருக்கிறதே என்றேன்.  ”ஐயோ, அதை மட்டும் செய்து விடாதீர்கள். மலையாளிகளுக்கு வெளியிலிருந்து வந்தால்தான் பிடிக்கும், இங்கேயே இருந்தால் அடச்சீ என்று போய் விடுவார்கள்” என்றார்.  அந்த குணத்தில் தமிழர்களை விஞ்ச இந்தியாவிலேயே ஆள் இல்லை.  இல்லாவிட்டால் யாருக்குமே தெரியாத கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களையெல்லாம் தமிழில் கொண்டு வருவார்களா?  அதனால்தான் நான் சர்வதேச எழுத்தாளர்கள் சந்திப்பில் சொல்வதுண்டு, நீங்கள் என்ன பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள், தமிழில் மொழிபெயர்ப்பு இருக்கிறது என்று. 

க்ரியா ராமகிருஷ்ணன் என்ன போப் ஆண்டவரா?  அல்லது, அவர்தான் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஜென்ரல் மேனேஜரா?  தமிழில் உள்ள எந்த முக்கியமான எழுத்தாளரையும் அவர் பதிப்பித்தது இல்லை.  ஆனால் படிப்பார்.  சார்வாகன் என்ற மிக முக்கியமான எழுத்தாளரை இல்லாமல் ஆக்கியதே ராமகிருஷ்ணன்தான்.  சார்வாகன் தன் கதைகளை க்ரியா ராமகிருஷ்ணனிடம் கொடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும் ராம் தொகுப்பைக் கொண்டு வராததால் சார்வாகன் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.  இந்த வாக்கியத்தின் முதல் பகுதியை மட்டும் சார்வாகன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.  சொல்லாவிட்டாலும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை அது.  கடைசியில் நற்றிணை யுகன் வந்துதான் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்தது.  இப்படிப் பல எழுத்தாளர்களை இல்லாமல் ஆக்கிய பெருமை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு உண்டு.  இதனால் எல்லாம் க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்பு உலகுக்குச் செய்த பணியை நான் மறுக்க மாட்டேன்.  இன்றைக்கும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டத்துக்குப் பிறகு க்ரியாதான் என் ஆதர்சம்.  க்ரியாவின் பங்களிப்பு தமிழ் இலக்கியத்தில் முக்கியமானது.  குறிப்பாக, ராமின் தமிழ் – ஆங்கில அகராதி.  க்ரியா ராமகிருஷ்ணனின் பங்களிப்பு என்ன, அவரது குறைபாடுகள் என்ன என்பது பற்றி ஜெயமோகன் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ராமின் பங்களிப்பையே துடைத்து எறிந்து விடக் கூடியது அவர் செய்த மற்ற வேலைகள்.  ஜெயமோகன் கட்டுரையோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

க்ரியா ராமகிருஷ்ணனின் இலக்கிய ரசனை எப்படிப்பட்டது என்பதை அவர் வெளியிட்ட சில புத்தகங்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.  சீரிய இலக்கியத்துக்கான எந்தக் குறைந்த பட்ச தகுதியும் இல்லாத சிலரை ராம் இலக்கியப் பிதாமகர்களைப் போல் கொண்டாடி முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார்.  அதெல்லாம் அவரது fetish ரசனை சார்ந்தது.  எனவே க்ரியா ராமகிருஷ்ணன் சொன்னார் என்பது எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை.

இன்னொரு உதாரணமும் தருகிறேன்.  என்னை மேற்கத்திய விமர்சகர்கள் சிலர் வ்ளதிமீர் நொபகோவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். ஒரு இலக்கிய வாசகனாக நொபகோவைப் படித்துப் பார்த்ததில் அவர் எனக்குக் கீழேதான் இருப்பதாகத் தெரிந்தது.  பிறழ்வெழுத்துக் கலைஞர்களான வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்களும், மெட்டாஃபிக்‌ஷன் எழுத்தாளர்களான ரொனால்ட் சுக்கேனிக் (98.6) போன்றவர்களும் கூட எனக்குக் கீழேதான். நீங்கள் படித்துப் பார்த்தால் இந்த முடிவுக்குத்தான் வருவீர்கள்.  அவர்களையெல்லாம் விட நான் சிறந்த எழுத்தாளன்.  இன்றும் அன்றும் ஒரு ராக்ஸ்டாரைப் போல் கொண்டாடப்படும் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியும் என்னை விடக் கீழேதான்.  இதையெல்லாம் நான் வாய்ச்சவடாகச் சொல்லவில்லை.  ஒரு வாசகனாகச் சொல்கிறேன்.  என்னை விடவும் பெரிய இடத்தில் உள்ளவர்கள், என்னால் கடக்கவே முடியாதவர்களாக நான் கருதுவது – சொன்னால் ஆச்சரியமாக இருக்கும், அவர் தமிழில் எழுதுபவர், நம்முடைய பா. வெங்கடேசன்தான் – நெற்றியில் குங்குமம் மிளிர ஒரு பள்ளி ஆசிரியரைப் போல் தோற்றமளிக்கும் அவர்தான் நான் அண்ணாந்து பார்க்கும் ஒரே எழுத்தாளர்.  வேற்று மொழியில் பார்த்தால், மிலோராத் பாவிச்சை சொல்லலாம்.  கஸார்களின் அகராதியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை.  அவருடைய மற்ற நாவல்களையும் படித்திருக்கிறேன்.  கஸார்களையும் தூக்கி அடிக்கக் கூடியவை அவரது பிற நாவல்கள்.  மற்றொருவர், கஸான்ஸாகிஸ்.  அவருடைய தத்துவ தரிசனம் நான் என்றுமே வியந்து பார்க்கக் கூடியதாகவும் அடைய முடியாததாகவும் இருக்கிறது.

பா. வெங்கடேசன்

அப்படிப்பட்ட சாரு நிவேதிதாவின் புனைவெழுத்துக்களை குப்புசாமி படித்ததே இல்லை.  அதை நான் வரவேற்கிறேன்.  நம்முடைய வாசிப்பு என்பது நம் தேர்வு.  அது பற்றி மற்றவர்களுக்கு என்ன புகார் இருக்க முடியும்?  நாளை எனக்கு புக்கர் பரிசு கிடைத்தாலும் குப்புசாமி என்னைப் படிக்காமல் விடலாம்.  ஏனென்றால், எல்லா பரிசுகளுமே இங்கே கலை மாமணி விருது போல் அசிங்கப்பட்டுக் கிடக்கின்றன.  புக்கர் என்ன பெரிய வெங்காயமா?  குப்பை எழுத்தாளர் அரவிந்த் அடிகாவுக்குக் கிடைத்த விருது.  படு சராசரி எழுத்தாளரான அருந்ததி ராய் வாங்கியது.  அப்படியிருக்கும்போது என்னை குப்புசாமி படிக்காததில் எந்தத் தப்பும் இல்லை.  நானே அவரிடம் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு, என்னை நீங்கள் posthumous-ஆகத்தான் படிப்பீர்கள் என்று.  அது நண்பர்களிடையேயான வேடிக்கைப் பேச்சு.  என்னை அவர் படிக்காமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது, அவருக்கும் நல்லது. 

ஆக, நொபகோவுடன் ஒப்பிடப்படும் என்னை இங்கே தமிழில் என்ன சொல்கிறார்கள்?  இதுவரை ஜெயமோகன், அபிலாஷ் ஆகிய இருவரைத் தவிர என் எழுத்து பற்றி வெளிப்படையாகப் பாராட்டியவர்கள் யாரும் இல்லை. அதை விட முக்கியமானது என்னவென்றால், என் எழுத்தைக் குப்பை என்று சொல்பவர்களே அதிகம்.  சுமார் நாற்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போது இந்த கோஷ்டியில் அதிகம் இருப்பவர்கள் ஜெயமோகன் வாசகர்கள்.  சமீபத்தில் கூட ஒரு பொடியன் (அவர் ஒரு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் வேறு!) என்னைத் திருடன் என்றும் காறித் துப்புவேன் என்றும் சொன்னார்.  குப்பை, மலம் என்றெல்லாம் சொன்னால் அதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்வேன்.  ஆனால் தரம் இறங்கும் போது – அதிலும் அந்த நபர் முக்கியப் பொறுப்பில் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தோன்றும் – மேற்படி நபர் மீது ஒரு கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம் என்று நினைத்தேன்.  அதற்கு நான் பத்து லட்சம் நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும்.  அதற்கும் தயாரானேன்.  ஆனால் அந்தப் பொடியன் தியாகியாகி விடுவார்; மற்றும், எனக்கு நீதிமன்றம் அலைவதற்கெல்லாம் நேரம் இல்லை.  அதனால் இறை சக்தியிடம் ஒப்படைத்து விட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.  எதற்கு இதைச் சொன்னேன் என்றால், இன்று வரை என் எழுத்தை எனக்கு நெருக்கமான வாசகர்களைத் தவிர வேறு யாரும் பாராட்டியதில்லை.  அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமியிலிருந்து தொடங்கி வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா போன்றவர்கள் வரை இதுவரை யாரும் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை.  அசோகமித்திரனைத் தவிர வேறு யாரும் என் எழுத்தைப் படித்தது கூட இல்லை.  (அசோகமித்திரன் தமிழில் எழுதப்படும் எல்லாவற்றையும் படித்து விடுவார். உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் அபிப்பிராயமும் சொன்னார்.) இது பற்றியெல்லாம் நான் கவலையும் படவில்லை.  பிரச்சினை என்னவென்றால், நான் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னால் வரும் இளைஞர் கூட்டத்துக்காக எழுதி விட்டவன்.  அதனால்தான் இளைஞர்களுக்கு என் எழுத்து பிடிக்கிறது.  அதனால்தான் சென்ற மாதம் ஒரு 25 வயதுப் பெண் “உங்களை சந்தித்தால் செத்து விடுவேன்” என்றாள்.  ஒரு if போட்டு யோசிக்கிறேன்.  குப்புசாமி மட்டும் என் எழுத்தைப் படித்து, அவருக்குப் பிடித்தும் போய் விட்டால், நான் உண்மையில் பயந்தே போய் விடுவேன்.  குப்புசாமியின் மகனுக்குத்தான் என் எழுத்து பிடிக்க வேண்டும்.  அவர் இலக்கியம் படிப்பவராக இருந்தால். அதுதான் நியாயம்.  அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.  

எனக்கு ரேமண்ட் கார்வர் பிடிக்கவில்லை என்றால் அதில் அத்தனை பதற்றத்துக்கு என்ன இருக்கிறது?  இந்தியாவின் ஐம்பது முக்கிய நூல்களில் ஒன்றை எழுதியிருக்கிறேன்.  அந்த நூல் ஏஷியன் க்ளாஸிக் என மேற்குலகில் கொண்டாடப்படுகிறது.  ஒரு ஐரோப்பிய சஞ்சிகையில் நான்கு ஆண்டுகளாக பத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அவர்கள் என்னை நபகோவ் என்கிறார்கள்.  அப்படிப்பட்ட என்னை இங்கே குப்பை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  அதற்கே என் வாசகர்கள் பதற்றமே அடையாமல் “உங்களுக்கு அப்படித்தான் தோன்ற வேண்டும், அதுதான் நியாயம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் ரேமண்ட் கார்வரின் ஒரு கதையை ஸ்டுப்பிட் என்று சொன்னால் அதற்கு ஏன் இத்தனை பதற்றம்?  ரேமண்ட் கார்வர் என்ன கடவுளா?  இருக்கட்டும்.  உங்கள் கடவுள் எனக்கு ஸ்டுப்பிடாக இருக்கக் கூடாதா? 

தஸ்தயேவ்ஸ்கியை இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லும் ஒரு பெரும் கூட்டமே அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது.  இலக்கியமே தஸ்தயேவ்ஸ்கியோடு முடிந்து விட்டது என்று சொல்பவர்களும் உண்டு.  ஆனால் அவருடைய இடியட் என்ற நாவலைப் படித்த போது ச்சே என்று ஆகி விட்டது.  எனக்கு அது தமிழ் டிவி சீரியல்களைப் போல் இருந்தது.  நாவலில் மாமியார் கொடுமையெல்லாம் காணக் கிடைத்தது.  செகாவ் அளவுக்கு தஸ்தயேவ்ஸ்கி என்னை ஈர்க்கவில்லை.  ஆனால் அவருடைய சிறுகதைகளும், குறுநாவல்களும் எனக்குப் பிடித்தன.  அது வேறு விஷயம்.  ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை எப்படிப்பட்டது?  எத்தனை துயரகரமானது?  துப்பாக்கி முனையில் நின்றவர்.  கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியின் ரவை அவர் நெஞ்சைத் துளைத்திருக்கும்.  ஆனால் ஷேக்ஸ்பியர் சொன்னபடி, அந்தப் பறவை அந்த நேரத்தில் அடிபட்டு விழுமாறு எழுதப்படவில்லை.  இளம் வயதில் துப்பாக்கி ரவையிலிருந்து தப்பினார்.  பிறகு, சைபீரியாவின் பனிப்பாலைகளில் கடும் உடல் உழைப்புத் தண்டனையை ஏற்றார். Ana என்ற ஸ்டெனோகிராஃபரைப் பார்த்தது.  காதலித்தது.  திருமணம் செய்து கொண்டது.  தஸ்தயேவ்ஸ்கியின் சூதாட்டம்.  வலிப்பு நோய்.  அட அடா… என்ன ஒரு வாழ்க்கை.  ஒரு கலைஞனுக்கு மட்டுமே அப்படிப்பட்ட வாழ்க்கை அமையும்.  ஆனால் அதற்காகவெல்லாம் இடியட் என்ற இடியாட்டிக் நாவலை மன்னிக்க முடியுமா?

தமிழ் எழுத்தாளர்களிடம் ஒரு நோய் உண்டு.  யாராவது குடி அடிமையாகி, கஞ்சா அடிமையாகி, சட்டை கிழிந்து, வேட்டி கிழிந்து சாக்கடையில் கிடந்தால் அவன் கலைஞன்.  அவன் சாகசக்காரன்.  பக்கா மிடில் கிளாஸ் மனோபாவத்தோடு மிடில் கிளாஸில் வாழும் குமாஸ்தாக்களுக்கு அந்த சாக்கடைக் கலைஞன் மீது ஒரு வியப்பு.  அவன் எழுதியதைத் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்து விடுகிறார்கள்.  ஜி. நாகராஜன் என்ற சராசரி எழுத்தாளர் இங்கே ஆ ஊ என்று ஐவரி டவரில் உட்கார்த்தி வைக்கப்பட்டது அப்படித்தான்.  நடிகர் பார்த்திபனின் புதிய பாதையில் இருக்கும் மனோபாவம்தான் நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலும்.  அதில் வரும் கந்தன் போன்ற மோடுமுட்டியை நான் பார்த்திபனின் படங்களில்தான் பார்த்திருக்கிறேன்.  (பார்த்திபன் மன்னிக்கவும்) விபச்சாரத் தரகர்களையும், பாலியல் தொழிலாளிகளையும் நாகராஜன் அளவுக்கு ரொமாண்டிசைஸ் பண்ணின ஒரு எழுத்தாளரைக் கண்டதில்லை.  படித்தாலே குமட்டிக் கொண்டு வரும் எழுத்து ஜி. நாகராஜனுடையது.  ஆனால் அவர்தான் இங்கே விளிம்பு நிலை மனிதர்களை எழுதியவர்!!!

இப்படி இருக்கும்போது ரேமண்ட் கார்வரின் ஒரு சிறுகதையை ஸ்டுப்பிட் என்று எழுதியதற்கு ஏன் இந்தப் பதற்றம்?

மை டியர் குப்புசாமி, தஸ்தயேவ்ஸ்கி ஓர் இலக்கியக் கடவுள்.  இல்லையா?  ஆனால் அவரை வெறும் ஜனரஞ்சகத் துப்பறியும் எழுத்தாளர் என்கிறார் வ்ளதிமீர் நபக்கோவ்.  இப்போது நான் சொல்லப் போவதை நீங்கள் உட்பட யாருமே நம்பப் போவதில்லை.  இடியட்டைப் படித்த போது தஸ்தயேவ்ஸ்கி பற்றி நபகோவ் சொன்னது எனக்குத் தெரியாது.  இடியட்டைப் படித்து விட்டு என் ப்ளாகில் நான் “இது ஒரு தமிழ் டிவி சீரியல் கதை” என்றே எழுதினேன்.  அதற்குப் பிறகே நபக்கோவின் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய விமர்சனம் படிக்கக் கிடைத்தது.  ருஷ்ய இலக்கியத்தின் சிகரமான தஸ்தயேவ்ஸ்கியையே சர்வதேசப் புகழ் பெற்ற நபக்கோவ் வெறும் ஜனரஞ்சகத் துப்பறியும் கதாசிரியர் என்று சொல்லி விட்டார்.  இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 

தமிழின் நவீனத்துவ காலகட்டத்தில் எழுத வந்த அத்தனை பேரும் காஃப்கா காஃப்கா என்றார்கள்.  இன்றைக்கும் உலகமே காஃப்கா புகழ்தான் பாடுகிறது. ஆனால் காஃப்காவை என்னால் படிக்கவே முடியவில்லை.  படு தண்டம்.  காஃப்காவை ஏன் உலகம் கொண்டாடுகிறது என்பதற்கு யூதர்களின் தனிமை, யூதர்கள் ஒடுக்கப்பட்டது என்பது போன்ற இலக்கியத்தைத் தாண்டிய பல காரணங்கள் உண்டு.  காஃப்காவின் எழுத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் என்ற ஆயுள் வரையறை உண்டு.  அதைத் தாண்டி அவரைப் படிக்க இயலாது என்றே கருதுகிறேன். அதனாலேயே என்னால் படிக்க முடியவில்லை.  பலமுறை முயன்றும் என்னால் முடியவில்லை.  ஆனால் காஃப்காவின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது.  காஃப்காவை வைத்து என்னால் ஒரு நாவல் எழுத முடியும் எனத் தோன்றியது. 

நோபல் பரிசு பெற்ற பாத்ரிக் மோதியானோவை இன்று தெரியாதார் யாருமில்லை.  எழுதிக் குவித்திருக்கிறார்.  அத்தனையும் குப்பை.  ஐரோப்பா முழுவதும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.  அத்தனை சலிப்பூட்டும் எழுத்தை நீங்கள் படித்திருக்கவே முடியாது.  கட்டி வைத்து உதைப்பது போல் இருந்தது.  ஆனாலும் தஸ்லீமா நஸரீன் அளவுக்குக் குப்பையான எழுத்தை உலகில் தேடி எடுப்பது கடினம்.  தஸ்லீமாவின் எழுத்தைக் குப்பை என்று சொல்வதே பெரிய வார்த்தை.

எனவே ரேமண்ட் கார்வர் எப்படி வாழ்ந்தார், அவர் வாழ்க்கை எத்தனை துயரமானது என்பதெல்லாம் நமக்குத் தேவையே இல்லாத விஷயங்கள்.  கபிலரும் பரணரும் எப்படி வாழ்ந்தார்கள் என்று யாருக்குத் தெரியும்?  வள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது கூடத் தெரியவில்லை.  ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் அனுபவிக்கும் துயரமோ சாகசமோ அல்லது வேறு எதுவுமோ அவனது எழுத்தை நிர்ணயிப்பதற்கு ஒருபோதும் அளவுகோலாய் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன் உம்பர்த்தோ எக்கோவின் தெ நேம் ஆஃப் தெ ரோஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நாவலைப் படிக்க முயன்றேன்.  கிட்டத்தட்ட பைபிள் அளவுக்கு விற்ற புத்தகம் என்றார்கள்.  உம்பர்த்தோ எக்கோ நான் மிகவும் மதிக்கும் தத்துவவாதி.  அவருடைய கட்டுரைகளை, அ-புனைவுகளை நான் வாசித்திருக்கிறேன்.  ஒரு சமயம் இயக்குனர் மிஷ்கின் பாரிஸ் பற்றி எக்கோ எழுதிய ஒரு கட்டுரையைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னபோது படித்து விட்டு அந்தப் புத்தகத்தை அவர் மேஜையிலேயே தூக்கி எறிந்தேன்.  மிஷ்கினிடம் சொன்னேன், நீங்கள் சாருவைப் படித்ததில்லை.  எக்கோ பாரிஸ் பற்றி எழுதியிருக்கும் இந்த மட்டமான கட்டுரையை விடப் பல மடங்கு பிரமாதமான பாரிஸை நான் ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன்.  நீங்கள் ராஸ லீலாவைப் படிக்காதது பற்றி எனக்குப் புகார் இல்லை.  ஆனால் என்னிடம் கொண்டு வந்து எக்கோவின் பாரிஸைக் காட்டியது மன்னிக்க முடியாத குற்றம்.  முதலில் என்னைப் படித்துப் பாருங்கள்.”  மிஷ்கினின் மனோபாவம்தான் தமிழர்களின் பொதுக் குணம்.  Xenomania. வெளியிலிருந்து வந்தால் ஒஸ்தி.  நேம் ஆஃப் தெ ரோஸ் ரொம்பக் கஷ்டப்பட்டு நூறு பக்கம் படித்தேன்.  Pleasure of the text என்பது மருந்துக்குக் கூட இல்லை.  நாலு வரியில் சொல்ல வேண்டியதை நாற்பது பக்கத்தில் அறுக்கிறார்.  ஒரு தேவாலயத்தின் கதவைப் பற்றி பத்து பக்கம்.  அந்த வர்ணனைக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை.  ஆனாலும் அந்த நாவல் ஏன் பிரபலமானது என்றால், Inquisition என்ற வார்த்தை திருச்சபையின் வரலாற்றில் முக்கியமானது.  பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இன்க்விஸிஷன் பல நூறு ஆண்டுகள் நீடித்தது.  மதத்தைச் சுத்தப் படுத்துகிறோம் என்று சொல்லி பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.  நான் சொன்னால் உங்களால் இப்போது நம்பவே முடியாத அளவில் சித்ரவதை செய்யப்பட்ட பிறகே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.  ஆனால் நேம் ஆஃப் தெ ரோஸில் இது எதுவும் இல்லை.  அந்தப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் பிரபலம் ஆகி விட்டது. 

எல்லாவற்றையும் விடக் கொடுமை ஹாருகி முராகாமி.  விபரீத ராஜ யோகம்தான்.  வேறு எந்தக் காரணத்தையும் என்னால் யோசிக்க முடியவில்லை.  அவருடைய நார்வேஜியன் வுட்டைத் தவிர வேறு எதையும் என்னால் படிக்கவே முடியவில்லை.  ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த விபரீத நூலகம் பிரமாதமான கதை.  மறுக்கவில்லை.  ஜனரஞ்சக எழுத்தாளரான சுஜாதாவே நகரம் போன்ற நல்ல கதைகளை எழுதியிருக்கும்போது முராகாமியின் ஒருசில நல்ல கதைகள் நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை.   அவருடைய IQ84 என்ற நாவலைப் படிக்க முயன்ற கொடும் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.  பொடி எழுத்தில் ரெண்டாயிரம் பக்கம் இருக்கும்.  முதல் அத்தியாயத்தில் ஒரு பெண் டாக்ஸியில் போகிறாள்.  டாக்ஸி ட்ரைவர் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுகிறார்.  (முராகாமி அந்த வகை சங்கீதத்தின் ரசிகர்!) அந்த சிம்ஃபனி எப்போது எந்த சூழலில் வெளிவந்தது இத்தியாதி எல்லாம் பேசிக் கொண்டே போகிறார்கள்.  ட்ராஃபிக் ஜாமைத் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலையில் செல்கிறார்கள்.  கடைசியில் அவளுக்கு மிகவும் நேரம் ஆகி விடுவதால் பாதியிலேயே ஒரு இடத்தில் இறங்கி சாலைக்கு நடுவே இருக்கும் தடுப்பைத் தாண்டிச் செல்ல வேண்டி வருகிறது. 

உடம்பில் கம்பளிப் பூச்சி ஊர்வது போல் இருந்தது.  கிட்டத்தட்ட முப்பது பக்கம் இந்த ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது.  இனிமேல் இந்த ஜென்மத்தில் முராகாமியைப் படிக்கக் கூடாது என்ற சபதத்துடன் நூறு பக்கம் படித்தவுடன் முடிவெடுத்தேன்.

சென்ற ஆண்டு ப்ரியங்கா சோப்ரா 25 வயதில் எப்படி இருந்தாரோ அப்படியிருந்த ஒரு பெண்ணை ப்ரூ ரூமில் சந்திக்க நேர்ந்தது.  இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  ஒரு முறையேனும் அந்த முராகாமியோடு படுத்து விட வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.  1Q84 இல் நான் பட்ட அவஸ்தையைச் சொன்னேன்.  அதற்கு அவர், டோக்யோவில் அந்தப் பெண் அந்த நாவலில் அந்த மெரிடியனைத் தாண்டும் இடம் இப்போது பெரிய டூரிஸ்ட் மையமாக ஆகி விட்டது என்றார்.  முராகாமியின் ரசிகர்கள் செய்த காரியம்.  முராகாமி குறிப்பிடும் சங்கீதம், அவர் விவரிக்கும் சமையல் நுணுக்கங்கள் எல்லாமே உலகப் பிரசித்தம்.  கிட்டத்தட்ட மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார் முராகாமி.  சென்ற மாதம் ஒரு 25 வயது முராகாமி ரசிகை முராகாமி புராணத்தை ஆரம்பித்தார்.  மன்னித்து விட்டேன்.  எனக்கு ஒரு கண் முராகாமி, இன்னொரு கண் சாரு என்று சொன்னதால். 

பிராமணர்கள் தலித் இலக்கியம் படித்துத் தங்கள் குற்ற உணர்விலிருந்து மீள முயற்சிக்கிறார்கள்.  சென்னையில் பன்னிரண்டு பிஹெச்டி ஆய்வுகள் தமிழில் நடக்கிறது என்றால் அதில் பத்து ஆய்வுகள் பிராமணப் பெண்கள் செய்கிறார்கள்.  எதைப் பற்றித் தெரியுமா?  தமிழின் சமகால தலித் எழுத்து பற்றி.  இதில் உள்ள சமூகவியலைப் புரிந்து கொள்ளுங்கள்.  க்ரியா ராமகிருஷ்ணனின் இலக்கிய ரசனையும் அப்படிப்பட்டதுதான். 

ஒரு விஷயம் சொல்கிறேன்.  லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia பத்திரிகை வாசகர்கள் பலருக்கு சாரு நிவேதிதா என்ற பெயர் இப்போது ஜி. குப்புசாமிக்கு ரேமண்ட் கார்வர் என்ற பெயர் எப்படியோ அப்படித்தான்.  அந்தக் குழுவில் பிரதானமாக இருப்பவர் அப்பத்திரிகையின் ஆசிரியர் என்பது இன்னொரு பெருமை எனக்கு.  சந்தேகம் இருந்தால் குப்புசாமி இரண்டு விஷயங்களை இணையத்தில் தேடிப் பார்க்கலாம்.  ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் வெளிவந்த மார்ஜினல் மேன் மதிப்புரை.  அப்பத்திரிகையின் ஆசிரியர் எழுதியது.  இன்னொன்று, சாரு பற்றி ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் வெளிவந்திருக்கும் ஆசிரியர் குறிப்பு.  அந்தக் குறிப்பும் குப்புசாமியின் ரேமண்ட் கார்வர் பற்றிய வாசகங்களும் ஒன்றேபோல் இருக்கிறது!    

க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய ஜெயமோகனின் கட்டுரை இந்த லிங்கில் உள்ளது. முக்கியமான கட்டுரை. அவசியம் படித்துப் பாருங்கள். அதிலிருந்து ஒரு சிறிய மேற்கோள்:

”…அடுத்த காலகட்டத்தில் எழுந்துவந்த கோணங்கி, நான். எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், தேவிபாரதி,பாவண்ணன், சுப்ரபாரதி மணியன்,பா.வெங்கடேசன், இரா.முருகன் என எவருடைய நூலையும் க்ரியா வெளியிடவில்லை. நாங்கள் அவரை பொருட்டாக நினைக்கவுமில்லை. என்னிடம் அவர் “உங்க கதைகளைக் கொண்டாங்க” என்று ஒருமுறை கேட்டார். அந்தத் தோரணையால் எரிச்சலடைந்து, “உங்க ரசனை மேலே எனக்கு நம்பிக்கை இல்லை” என்று நான் பதில் சொன்னேன். க்ரியா தொடங்கப்பட்டபின் நிகழ்ந்த மூன்று தலைமுறை இலக்கிய வளர்ச்சியில் க்ரியாவின் பங்கு என ஏதுமில்லை.”

ஜெயமோகன்

மெய்யான முன்னுதாரணங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)