விஷமும் மருந்தும்…

இலக்கியம் என்பது விஷமும் மருந்துமாக செயல்படுகிறது.  ஹோமியோபதி மருந்து மாதிரி.  ஹோமியோபதி மருந்தின் மூலகங்களைப் பற்றிப் படித்தால் அவற்றில் பெரும்பாலானவை கொடிய விஷம் என்பதை அறிவீர்கள்.  கடுகளவு உண்டாலே மரணம்தான்.  ஆனால் அதைப் பல நூறு முறை நீர்த்துப் போகச் செய்துதான் நமக்கு மருந்தாகத் தருகிறார்கள்.  அதையும் நூறு மில்லி நீரில் பத்து சொட்டுதான் சேர்க்க வேண்டும்.  அப்படித்தான் இலக்கியமும்.  அது தெரியாமல் அதில் காலை விட்டால் அழிவுதான்.  எண்பதுகளில் என்னோடு ஒரு நண்பர் பழகினார். சராசரியாக இருந்த அவரை நல்ல இலக்கிய வாசகராக மாற்றினேன்.  எழுதவும் ஆரம்பித்தார்.  படித்துப் பார்த்து வேண்டாமே என்றேன்.  அவை மோசமான கதைகள் அல்ல.  ஒருவர் மோசமான கதைகள் எழுதலாம்.  ஆனானப்பட்ட சுந்தர ராமசாமியே ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று மோசமான நாவல்களை எழுதியிருக்கிறார்.  ஆனால் என் நண்பர் எழுதியது நகல் கதைகள்.  கோணங்கியை நகலெடுத்த கதைகள்.  மிமிக்ரி.  தாமு ரஜினி குரலில் பேசுவார்.  அது ரஜினியின் ஒரிஜினல் குரலை விட நன்றாகவும் இருக்கும்.  ஆனால் தாமு என்றுமே ரஜினி ஆக முடியாது இல்லையா, அதைப் போல.  அந்த நண்பர் அதோடு என்னை விட்டுப் பிரிந்து விட்டார்.  அந்த ஒரு தொகுப்போடு அவர் இலக்கிய வாழ்க்கை முடிந்து விட்டது.  திருமணத்தில் நம்பிக்கை இல்லை.  வேலைக்கும் போகவில்லை.  இலக்கியமும் கை விட்டு விட்டது.  குடி அடிமையாக மாறினார்.  இப்போது எல்லோரையும் திட்டியபடி தான் மட்டுமே நல்ல இலக்கியன் என்று நம்பியபடி இன்பமாக, தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நல்ல காலம், அவருடைய பூர்வீக சொத்து அவருக்கு சோறும் விஸ்கியும் போடுகிறது.  ஆனால் அவருடைய சகோதர சகோதரிகளை இலக்கியம் தீண்டவில்லை.  அவர்கள் சராசரி மனிதர்களாக, நல்ல வேலையில் இருந்து கொண்டு, திருமணம் செய்து, குழந்தை குட்டிகளோடு நிம்மதியாக வாழ்கிறார்கள்.  இலக்கிய அன்பர் மட்டும் கைவிடப்பட்டார்.  எல்லாவற்றிலிருந்தும்.  குடி மட்டுமே அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 

எனக்குக் கண்ணதாசனும், சந்திரபாபுவும் ஞாபகம் வருகிறார்கள்.  பணத்திலேயே புரண்ட அவர்கள் சொந்தப் படம் எடுத்துத்தான் நடுத்தெருவுக்கு வந்தார்கள்.  அதேபோல் வாசகர்களாக இருக்கும் வரை இலக்கியம் பிரச்சினை இல்லை.  எழுதினால் ஆபத்து.  ஆனால் சினிமாவில் பாண்டியன் போன்ற நாயக நடிகர்களும் இருந்தார்கள்தானே, அவர்களைப் போல் இலக்கியத்தில் நீங்களும் இருந்து கொள்ள விரும்பினால் தாராளமாக உள்ளே வரலாம்.  எம்.ஜி. சுரேஷ் அதிர்ஷ்டம் இல்லாதவர்.  ஆனால் பெருமாள் முருகன் பாருங்கள், உலகமே கொண்டாடுகிறது.  உங்களையும் உலகமே கொண்டாடும்.  எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஏனென்றால், உலகமே இன்று லும்ப்பன் லிட்ரேட்டி என்ற கும்பலால்தான் நிறைந்திருக்கிறது.  படித்த முட்டாள்களின் கூட்டம்.  எனவே நீங்கள் எப்படி எழுதினாலும் அது ஆங்கிலத்தில் இருந்தால் உலகம் கொண்டாடும்.

சில தினங்கள் முன்பு என் நண்பர், “ஜெயமோகன்தான் உங்கள் rival இல்லையா?” என்று கேட்டார். சேசே, தத்துவத் தளத்தில் அப்படிச் சொல்லலாமே தவிர மற்றபடி எதுவும் இல்லை. உலகமே எனக்கு எதிராக இருக்கிறது என்றேன். காரணம், உலகமே இன்று லும்ப்பன் லிட்ரேட்டி என்ற கும்பலால்தான் நிறைந்திருக்கிறது.  படித்த முட்டாள்களின் கூட்டம்.  எனவே நீங்கள் எப்படி எழுதினாலும் அது ஆங்கிலத்தில் இருந்தால் உலகம் கொண்டாடும்.

உதாரணமாக, ஹாருகி முராகாமி இன்று மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்குப் புகழ் பெற்றவர்.  அவருக்கு நோபல் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன?  அவர் மீதெல்லாம் எனக்குப் பொறாமை இல்லை.  சராசரிகளைக் கொண்டாடும் கும்பலாகி விட்டதே என்று உலக இலக்கியச் சூழல் மீதுதான் எனக்குக் கோபம். இல்லாவிட்டால் பத்ரிக் மோதியானோ என்ற சராசரி எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுப்பார்களா என்ன? 

எல்லாம் உங்கள் விருப்பம்தான்…