ரமண மஹரிஷி, தலப்பாக்கட்டி பிரியாணி, ‘ஆன்வி’, எதார்த்த பாணி எழுத்து, ஓப்பன் பண்ணா… (Revised)

ஐயா,

நான் மிகவும் வியப்பது பிரமிப்பு அடைவது திருவாளர்கள் ———————— போன்ற எழுத்தாளர்களை.  இவர்களது நாவல்கள் கி்.ரா. அவர்கள் போல் வட்டார வழக்கு நடை.  போலித்தனம் இல்லை. அடித்தட்டு மக்களை யதார்த்தமாக சித்தரிக்கிறது.

இவர்களது நாவல்கள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட இலக்கிய சாதனையாளர்கள் தங்களின் பழுப்பு நிறப் பக்கங்கள் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பாலா.

டியர் பாலா சார்,

தாங்கள் என்னை விட பத்து இருபது வயது மூத்தவர்களாக இருப்பீர்கள்.  தங்களது பல கடிதங்கள் எனக்குப் பெரும் உதவியாகவும் வழிகாட்டுதலாகவும் இருந்துள்ளன. அவையெல்லாம் நான் அறிந்திராத விஷயங்கள்.  உதாரணமாக, இந்தியப் புராணங்கள், தியாகராஜர் போன்றவை.  இப்படி தங்களின் பல கடிதங்கள் எனக்கு உதவியாக இருந்து கொண்டிருப்பதால் மேலே கண்ட கடிதத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.  மற்றபடி இந்தக் கடிதம், ரமண மஹரிஷியிடம் சென்று தலப்பாக்கட்டி பிரியாணியின் மேன்மையைச் சொல்லும் ரகம்தான்.  நான் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதை விடுங்கள்.  கடந்த பத்து ஆண்டுகளாக ப்ளாகில் எழுதியதே தங்களுக்கு வாசிக்கக் கிடைக்கிறதே?  அதைப் படித்தாலே இப்படி ஒரு கடிதம் எழுத வந்திருக்காதே?

தலப்பாக்கட்டி பிரியாணி ஒரு தனி ருசிதான்.  ஆனால் ரமண மஹரிஷிக்கு அதனால் ஏதும் பயன் உண்டா?  அது கூடத் தெரியாமல் அவரிடம் போய் தலப்பாக்கட்டி பிரியாணி பற்றிப் பேசுபவரை என்னவென்று சொல்வது?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு எழுத்தாளர்களின் பெயர்களையும் நீக்கி விட்டு அந்த இடத்தில் டேஷ் போட்டு விட்டேன்.  ஏனென்றால், இன்றைய தினம் அவர்கள் இருவரும் இலக்கிய உலகின் சூப்பர் ஸ்டார்கள்.  ரஜினி, கமல் மாதிரி அல்ல.  இருவருமே ரஜினிதான்.  இவர்களின் தலைவர் சிவாஜி இல்லையா?  அவர்தான் பொன்னீலன்.  இவர்களில் தல அஜீத், விஜய் எல்லாம் உண்டு.  ஏன், மன்சூர் அலி கான் கூட உண்டு.  இந்த மன்சூர் பற்றி ஒருமுறை சுந்தர ராமசாமியே பயந்து போனார். அந்த அளவுக்குத் தீவிரம் மன்சூர் அலி கான்.  இவ்வளவு ஆபத்தான இடத்தில் போய் என்னை மாட்டி விடுகிறீர்களே, நியாயமா சார்?  உண்மையில் என்னைக் கண்ணி வெடிகள் சூழ்ந்த நிலத்தில் நின்று கம்பு சுற்றச் சொல்கிறீர்கள்.  நீங்கள் வாசகர், உங்களுக்குப் பிரச்சினையே இல்லை.  என்னையெல்லாம் ஊருக்கு ஊர் கேஸ் போட்டு என்னுடைய ஐந்து ஆண்டுகளைக் காணாமல் அடித்து விடுவார்கள்.  சுந்தர ராமசாமியையே அழ வைத்தவர்களுக்கு நான் எல்லாம் எம்மாத்திரம்? பெங்களூர் சாமியார் என் மீது நாலைந்து கிரிமினல் கேஸ்களைப் போட்டு விட்டதால் கடந்த பத்து ஆண்டுகளாக மெட்ராஸுக்கும் பெங்களூருக்கும் நாய் அலை பேய் அலை அலைந்து விட்டு இப்போதுதான் அவர் கைலாசத்துக்குப் புகலிடம் சென்று விட்டதால் கொஞ்சம் ஆசுவாசமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் இன்னும் ஐந்து ஆண்டுகள் கோர்ட் கோர்ட்டாக அலை என்றால் என்ன அர்த்தம்?  அதனால்தான் நீங்கள் சொன்ன பெயர்களில் டேஷ் போட்டு விட்டேன்.  இன்று ஜெயமோகனைத் திட்டலாம், மோடியைத் திட்டலாம், ஆனால் நீங்கள் சொன்ன எழுத்தாளர்களை விமர்சிக்கக் கூட முடியாது.  அதுதான் நிலை.  கம்யூனிஸ்டுகளிடம் அரசியல் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் கலாச்சார ரீதியாக ஸ்தாபனமாக ஒருங்கிணைந்திருப்பவர்கள் அவர்கள் மட்டுமே.  அவர்கள்தான் பெருமாள் முருகனை நோபல் கமிட்டி அலுவலகம் வரை அழைத்துச் சென்றவர்கள்.  அவர்களைப் பகைத்துக் கொண்டால் தீர்ந்தது கதை.  தீவிரவாதிகளை எதிர்த்தால் உயிர் போய் விடும்.  இது போன்ற கம்யூனிஸ்டுகளை எதிர்த்தால் உயிரோடு வைத்தே அட்ரஸ் இல்லாமல் ஆக்கி விடுவார்கள்.  இன்னும் என்னென்ன ஆக்கினை நடக்கும் என்று எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன்.  கோர்ட்டுக்கு இழுத்தால் கூடப் பரவாயில்லை; மது, மாது என்று எந்தப் பழக்கமும் இல்லாத ஜெயமோகனையே வாய்ப்புக் கிடைத்ததும் இந்த சமூகம் என்ன பாடு படுத்தியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  நான் எல்லாம் கிடைத்தால் இந்த ஜென்மத்தில் எழுந்து கொள்ள முடியாதபடி செய்து விடுவார்கள்.  எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களின் திசை பக்கமே நோக்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது.  நல்ல வார்த்தை இருந்தால் பிரச்சினை இல்லை.  எனக்கு அவர்கள் பற்றி நல்ல வார்த்தை இல்லையே?  அதுதான் சிக்கல். 

இப்போது உங்கள் கடிதத்தின் இன்னொரு பிரச்சினைக்கு வருகிறேன்.  நான் ஒரு துறையில் சாதனையாளன்.  அந்தத் துறை பற்றி என்னிடம் பேசும் போது யாருக்கும் கவனம் இருக்க வேண்டும்.  எல்லா துறைகளிலும் சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன.  விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.  உசேன் போல்ட்டின் நூறு மீட்டர் ஓட்டத்தின் சாதனை 9.58 விநாடிகள். இந்தச் சாதனையை யாரேனும் முறியடிப்பார்கள்.  அவரே கூட முறியடிக்கலாம்.  ஆனால் இலக்கியம் அப்படி அல்ல.  வள்ளுவரின் சாதனை 2000 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.  சமகாலத்தில் புதுமைப்பித்தன்.  அவரது சாதனையும் அப்படியேதான் இருக்கும்.  ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், ஜேம்ஸ் ஜாய்ஸ் என்பவை முறியடிக்கப்படவே முடியாத சாதனைகள்.  அதைப் போலவேதான் ஆலன் ராப் க்ரியேவின் (Alain Robbe-Grillet) சாதனையும்.  உதாரணம், அவருடைய கடற்கரை என்ற சிறுகதை.  இது பற்றியெல்லாம் நான் ஏராளமாகப் பேசி விட்டேன். ஏராளமாக எழுதி விட்டேன்.  ஆனாலும் தங்களைப் போன்ற நண்பர்கள் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.  உங்களுடையது கேள்வி கூட அல்ல.  ஆலோசனை.  ரமண மஹரிஷியிடம் சென்று தலப்பாக்கட்டி பிரியாணி சாப்பிடச் சொல்லி ஆலோசனை.    

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு கேலிச் சித்திரத்தைப் பார்த்தேன்.  எத்தனைக் காலம் ஆனாலும் மறக்க முடியாத சித்திரம் அது.  சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், இம்மானுவல் காண்ட், தெக்கார்த்தே, தாமஸ் அக்வினாஸ், ஸ்பினோஸா போன்ற தத்துவவாதிகள் ஒரு வட்ட மேஜையைச் சுற்றி அமர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேஜையின் அடியில் ஒரு ஆள் வெடி குண்டு வைத்துப் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் பெயர் கார்ல் மார்க்ஸ் என்று எழுதியுள்ளது.  பேச்சளவில் இருந்த தத்துவத்தைச் செயல்பூர்வமாக மாற்றியவர் மார்க்ஸ்.  மார்க்ஸுக்கு முன்னதாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுரண்டக் கூடாது என்றும், மனிதர்கள் எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்றும் யாரும் சொன்னதில்லை. 

இவ்வாறாக புனைவெழுத்தில் பெரும் மாற்றத்தை, பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் எழுத்தையே நான் இலக்கியம் என்று கருதுகிறேன்.  நான் எழுதும் பிறழ்வெழுத்து அப்படிப்பட்டதுதான்.  தமிழின் இரண்டாயிரம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட எழுத்து வந்ததில்லை.  சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது.  மஹாபாரதம் முழுக்கவே பிறழ்வெழுத்துதான் என்று எனக்குத் தோன்றுகிறது.  மற்றபடி இந்திய இலக்கியத்தில் பிறழ்வெழுத்து அறவே இல்லை. மேற்கில் கொஞ்சம் உள்ளது.  ஆனாலும் அப்படி எழுதுபவர்களைப் படிக்க இயலவில்லை.  சலிப்பூட்டுவதாக உள்ளது.  மார்க்கி தெ ஸாத், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்களைச் சொல்லலாம்.  இப்படிச் சொல்வதால் பிறழ்வெழுத்தை மட்டுமே நான் ஏற்றுக் கொள்பவன் என்று அர்த்தம் அல்ல.  உலகின் மதிப்பீடுகளைக் கேள்வி கேட்க வேண்டும்.  தி. ஜானகிராமன் கேட்டார்.  எம்.வி. வெங்கட்ராம் கேட்டார்.  லா.ச.ரா. கேட்டார்.  (கேட்டது போல் தோன்றாது, ஆனால் கேட்டார்.  ஜனனி, பாற்கடல் எல்லாம் அப்படிப்பட்டதுதான்.  சோ. தர்மனைப் படிக்கும் நீங்கள் இவர்களையெல்லாம் படித்ததுண்டா?) சி.சு. செல்லப்பா கேட்டார்.  (ஜீவனாம்சம்) நகுலன் கேட்டார்.  கு.ப.ரா. கேட்டார்.  கரிச்சான் குஞ்சு கேட்டார். க.நா.சு. கேட்டார்.  தஞ்சை ப்ரகாஷின் பொறா ஷோக்கு, கரமுண்டார் வூடு போன்ற படைப்புகளில் பிறழ்வெழுத்தின் சுவடுகள் உண்டு.  மேலே குறிப்பிட்ட எல்லா எழுத்தாளர்களை விடவும் தஞ்சை ப்ரகாஷிடம் வீரியம் உண்டு.  அசோகமித்திரன் நேரடியாகக் கேட்கவில்லை.  இந்த அவலங்களைச் சுட்டினார்.  அசோகமித்திரனின் கேள்வி சூக்ஷ்மமானது. 

அப்படியானால், எது இலக்கியம்?

மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விவாதிக்கும் எழுத்து மட்டுமே இலக்கியம். 

ஒரே ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.  மனித இருப்பின் அர்த்தமின்மை மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவுதான் அராத்துவின் ஓப்பன் பண்ணா என்ற நாவல்.  அந்த வகையில் இந்த நாவலை நான் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்லுவேன்.  அதன் வடிவம் பின்நவீனத்துவப் பாணியில் இருந்தாலும் அது ஒரு பின்நவீனத்துவ நாவல் அல்ல.  அதில் வரும் உப பாத்திரமான உதவி இயக்குனரின் காதலி இந்த நாவலைப் பின்நவீனத்துவத்துக்கு எடுத்துக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.  ஆனால் அவளுடைய குரல் நாவலில் இல்லை என்பதால் நாவல் நவீனத்துவத்திலேயே தங்கி விட்டது. 

இங்கே இன்னொரு விஷயம்.  அராத்துவின் பொண்டாட்டி ஒரு அச்சு அசலான பின்நவீனத்துவ நாவல்.  ஆனால் அதை நான் க்ளாஸிக் என்று சொல்ல மாட்டேன்.  பொண்டாட்டி நாவல் நமக்கு காலப்போக்கில் மறந்து கூடப் போகலாம்.  காரணம், பின்நவீனத்துவ க்ளாஸிக் என்பது oxymoron.  பின்நவீனத்துவத்தில் க்ளாஸிக்குகள் இல்லை.  பின்நவீனத்துவ சிந்தனையே க்ளாஸிக்குக்கு எதிரானது.  ஆனால் ஓப்பன் பண்ணா ஒரு துயர காவியத்துக்கான எல்லா மூலகங்களையும் கொண்ட ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக்.  இந்த நாவலைப் படித்தவர்கள் ஸ்ரீனிவாசனையும் அறிவானந்தத்தையும் மறக்கவே இயலாது.   

ஓப்பன் பண்ணா எப்படி ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் நாவல் ஆகிறது?  எக்ஸிஸ்டென்ஷியலிஸத் தத்துவத்தின் மூன்று கருதுகோள்கள்: அபத்தம் (absurdity), பயம் (angst), ennui.  இதில் மூன்றாவது விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது ஓப்பன் பண்ணா நாவல். 

தமிழில் நான் வாசித்த அளவில் ஒப்பன் பண்ணாவில் பேசப்பட்ட அளவுக்கு ennui என்ற விஷயம் வேறு எந்த நாவலிலும் பேசப்பட்டது இல்லை.  சொல்லப் போனால், ’ஆன்வி’ என்ற விஷயமே தமிழ் இலக்கியத்தில் இல்லை.  ஏனென்றால், ’ஆன்வி’ என்ற உணர்வே தமிழ் வாழ்க்கையில் இல்லை.  இத்தனை சிறிய நிலப்பரப்பில் ஒன்பது கோடி மக்கள் வசித்தால் எப்படி ‘ஆன்வி’ வரும்? 

Ennui என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தையின் பொருள் boredom.  பாருங்கள், போர்டம் என்ற வார்த்தைக்கே தமிழில் வார்த்தை இல்லை.  ஏனென்றால், அந்த உணர்வே இங்கு புதிது.  ஓப்பன் பண்ணாவின் கதையை அராத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் – முழு இரவும் பேசிக் கொண்டிருந்தோம் – சொன்னபோது இதை எழுதினால் இது மிக நிச்சயமாக ஒரு கிளாஸிக்காக அமையும் என்றேன்.  அதேபோல் வந்திருக்கிறது.  நாவலில் ஒரு கட்டம், கதை நாயகன் இயக்குனர் ஸ்ரீனிவாசன் மூன்று தினங்கள் ஒரே அறையில், ஒரே இடத்தில் அமர்ந்தபடி குடித்துக் கொண்டே இருப்பான்.  சாப்பிடக் கூட மாட்டான்.  சிகரெட்டும் உண்டு.  தூக்கம்?  அப்படியே நாற்காலியில் சாய்ந்தபடி சிறிது நேர உறக்கம்.  பின்னர் குடி.  இத்தனைக்கும் அதே அறையில் அவனுடைய காதலி – பேரழகியான ஒரு நடிகை – கூடவே இருப்பாள்.  அவள் பாட்டுக்கு அவள் வேலையைப் பார்த்துக் கொண்டு இவனைப் பார்த்து அதிசயித்தபடி, துயரம் மேலெழ – அது துயரமாக இருக்கலாம் என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும் – போய் வந்து கொண்டு இருப்பாள்.  அந்த மூன்று தினங்கள் நாவலில் வரும் இடம், உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று. 

ஆல்பெர் கம்யூவின் அந்நியன் நாவலை ஆன்வியின் உதாரணமாகச் சொல்கிறார்கள்.  ஆனால் அந்நியனே எனக்கு ‘போர்’ அடித்தது. 

‘ஆன்வி’ என்ற வார்த்தை அராத்துவுக்குத் தெரியாது.  கதை நாயகன் ஸ்ரீனிவாசனுக்குத் தெரியாது.  தேவையும் இல்லை.  ஏனென்றால், பின்நவீனத்துவக் கதைகளை எழுதிய போர்ஹெஸ் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையை அறிந்திருக்க மாட்டார்.    

சரி, இப்போது நீங்கள் குறிப்பிடும் அந்த இரண்டு எதார்த்த வகை எழுத்தாளர்களுக்கு வருவோம்.  அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவம் போல் காண்பவர்கள்.  மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது.  அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும். 

எதார்த்தவாதக் கதைகள் பற்றி நான் ஒரு உரையில் குறிப்பிட்டேன்.  வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம்.  ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கதைதான்.  ஆனால் சொல்லுகின்ற வடிவத்தை மாற்றியாக வேண்டும்.  இலக்கியத்தில், பிளாஸ்டிக் குவளைகளைப் போல் கலரை மட்டும் மாற்றி மாற்றி ஒரே அச்சில் குவளை குவளையாகப் போட்டுக் கொண்டிருக்க முடியாது. 

என்னை ஐயா என விளித்திருக்கிறீர்கள்.  நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.  எங்கள் ஊரில் பண்ணையார்களைத்தான் ஐயா என அழைப்பார்கள்.  பண்ணையார் என்றால் எனக்கு ஞாபகம் வருவது கீழ வெண்மணி.  தாராளமாக நீங்கள் என்னை சாரு என்றே அழைக்கலாம். 

சாரு  

***

இந்த அக்டோபர் மாதம் வழக்கமாக அனுப்பும் ஐந்தாறு நண்பர்களே சந்தா அனுப்பியிருந்தனர். மற்றவர்கள் கவனிக்கவும்.

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai